"தம்பி மகேஷ்.."அப்பாவின் குரல் கேட்டு திரும்பினான்.
"என்னப்பா..மாடியில் இருந்து கீழே ஆளையே காணோம்"
"இல்லேப்பா..பால்கனியில் அமர்ந்து வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.ரம்யமாக பொழுது போச்சு"
கீழே இருந்து பாகீரதியும் வந்து சேர்ந்துகொள்ள பேச்சு களைக்கட்டியது."என்னங்க..கம்பியூட்டர் வந்ததில் இருந்து இந்தபக்கம்,அந்தப்பக்கம் அசையாமல் இருப்பீர்களே.இப்ப அதிசயமாக மகனோட பேச பால்கனிக்கு வந்து விட்டிர்களே"கணவரை வம்புக்கு இழுத்தாள்.
பின்னே என்ன?மகேஷ் கம்பியூட்டர் வாங்கி,நெட் கனெக்ஷன் கொடுத்த இந்த நாண்கு நாளில் மனைவியின் பேச்சை காது கொடுத்துக்கேட்காதவராயிற்றே.
"என்னங்க..நாளைக்கு ஈ பி பில் கட்ற கடைசி தேதி.."
"நம்ம மகேஷுக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும்,முள்ளங்கி சாம்பார்ன்னா மகா இஷ்டம்.அரைகிலோ சேப்பங்கிழங்கும்.சாம்பார்வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுறீங்களா?"
"நம்ம விசாலினி போன் போட்டாள்.என்ன ஆச்சுன்னா.."
இப்படி எதற்குமே பதில் சொல்லாமல் அவரை கம்பியூட்டரே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துஇருக்கும்.பேசி,பேசி அலுத்துப்போகும் பாகீரதி கடைசியில் வெறுத்துப்போய் பையை தூக்கிக்கொண்டு வெளியில் நடையைக்கட்டுவாள்.
சாயங்காலம் ஆச்சுன்னா நாண்கு தெருவையும் வேக நடையில் நடந்து நடைபயிற்சியும்.மார்க்கெட்,ஈபி பில்,போன் பில்,கோவில் ,நண்பர்கள்,உறவினர்கள்,அவ்வப்பொழுது சீட்டுக்கட்டு,என்று சுறுசுறுப்பாக இருந்த அவரது வாழ்க்கை முறை இந்த கம்பியூட்டர் வந்த இந்த நாண்கு நாட்களாக வாழ்கை முறையையே அப்படியே மாற்றிப்போட்டு விட்டது.இதனால் பாகீரதிக்கு மூக்கு முட்ட மனக்குறை.
"அடியே ..பாகீ..ரிடயர்ட் ஆனப்புறம் பொழுதை போக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.ஏதோ என் பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து வந்தான்.அப்பன் கேட்டதுமே ஏன்னு மறு வார்த்தை கேட்காமல் வாங்கிகொடுத்திருக்கான்.நீ குறுக்கே பேசப்படாது."செல்லமாக மனைவியை கடிந்துவிட்டு
"மகேஷ் நல்லதா ஒரு பேரு செலக்ட் பண்ணிக்கொடுப்பா?"
"எதற்கப்பா"
"நான் பிளாக் ஆரம்பிக்கப்போறேன்."
"அட்றா சக்கை..பிசி வாங்கிய நாலே நாளில் பிளாக் எழுதுற அளவுக்கு ஆச்சா?"
"இது என்னோட ரொம்ப நாள் கனவு.அப்பப்ப பிரவுசிங் செண்டர் போய் மற்றவங்களோட பிளாக் படிச்சதில் இருந்து நாமும் ஒரு பி சி வாங்கி பிளாக் ஆரம்பிக்கணும்ன்னு ஆசை"
"கொட்டுமுரசு..பெயர் நல்லா இருக்காப்பா"
"அட..ரொம்ப சீரியஸான பெயரா இருக்கு மகேஷ்"
"வண்ணத்துப்பூச்சி,வாசமலர்,வாடாமலர்.."
மகேஷ் அடுக்கிக்கொண்டே போனான்
"இல்லேப்பா..உனக்கு பிளாக் உலகம் பற்றித்தெரியலே.இப்படி எல்லாம் பெயர் வச்சால் ஒரு பய வரமாட்டான்..நான் ஒரு பெயர் மனசுலே வச்சி இருக்கேன்"
"ம்ம்"
"பிய்ந்த பொட்டி பீதாம்பரம்"
"ஐயே..என்ன பெயருப்பா இது"
"இப்படி தடாலடியா பெயர் வச்சேன்னா பாரு எண்ணி ஒரே மாசத்திலே ஒருசதத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வந்துடுவாங்க.இதே ரீதியில் பதிவு போட்டேன்னா பின்னூட்டமும் வந்து குமிஞ்சுடும்."
"சபாஷ்.சரிப்பா..ஏதோ செய்யுங்க.நானும் அங்கு போனப்புறம் டைம் கிடைக்கும் பொழுது உங்கள் பிளாக் பார்க்கறேன்.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார்ன்னு சொல்லிக்கலாம்"
"படிக்கமட்டும் செய்யாமல் மறக்காமல் பின்னூட்டமும் போட்டுடு.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார் ன்னு சொல்ல மட்டும் செய்யாமல் எல்லோரிடமும் படிச்சுட்டு அவங்களையும் பின்னூட்டமும்,ஓட்டும் மறக்காமல் போட்டுட சொல்லு"
"அது சரி..அதென்ன பிய்ந்த பொட்டி பீதாம்பரம்?பெயரே என்னவோ போல் இருக்கே"
"பிய்ந்த பொட்டின்னா கிழிந்த பொட்டின்னு அர்த்தம்.கிழிந்து போன பொட்டியில் ஒரு பொருட்களும் தங்காது.எல்லாம் கீழே கொட்டிட்டே இருக்கும்.அது மாதிரி என் மூளையில் உதிக்கும் சமாச்சாரங்கள் எல்லாத்தையும் பிளாக்கில் கொட்டிட்டே இருப்பேன்.எப்படி நாம்ம பெயர் வச்சது?"
"அடேங்கப்பா.அசத்துங்க..அசத்துங்க."
அப்புறமென்ன?ஒரு சுபயோக சுபதினத்தன்று "பிய்ந்த பொட்டி பீதாம்பரம்" உதயமாகி விட்டார்.பெயரைப்போலவே பதிவுகளும் இருந்ததால் ஓட்டுகளுக்கும்,பின்னூட்டங்களுக்கும் குறைவில்லை.பீதாம்பரம் எக்கசக்க குஷியாகிவிட்டர்.சாப்பிடும் நேரம்,தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் கம்பியூட்டர் முன்னால் பழி கிடந்தார்.
"அப்பா..மெயில் செக் பண்ணிக்கறேன்"மகேஷ் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.
"தம்பி மகேஷு..நீ டிஜிட்டல் கேமரா வைத்து இருகிறேதானே"
"ஆமாப்பா"
"எனக்கு கொடுத்துட்டு புதுசா ஒண்ணு வாங்கீக்கோயேன்"
"ஏன்ப்பா..பதினைந்து நாள்தானே..எதற்கு எடுத்துட்டு வரன்னு அங்கேயே வைத்துட்டு வந்துட்டேன்ப்பா"
"அச்சச்சோ..பரவா இல்லை.நல்லதா இங்கே ஒண்ணு வாங்கிகொடுத்துடுறியாப்பா"
"எதுக்குப்பா அவசரமா டிஜிட்டல் கேமரா?"
"வேறு ஒண்ணும் இல்லைதம்பி.வெளியிலே போகிறச்சே பிடிச்ச காட்சிகளை போட்டொ எடுத்து பிளாக்கில் போடலாமேன்னுதான்"
விடாப்பிடியாக பேசி,மகனை கையோடு கூட்டி சென்று நல்லதொரு கேமரா வங்கினார்.அத்தோடு மகேஷை சனிபகவான் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.
"தம்பி மகேஷு..ஒரு காரை ஹையருக்கு எடுத்துட்டு அப்படியே முட்டுக்காடு,எம்ஜிஎம்,மகாபலிபுரம் என்று குட்டியா டிரிப் அடிக்கலாமா?"
"என்னப்பா திடீர்ன்னு"
"வேறு ஒண்றுமில்லை.. போய் பார்த்தாப்போலேயும் இருக்கும்.போட்டோ பிடிச்சு பிளாக்கில் போட்டாப்போலேயும் இருக்கும்"
தடுத்து,மறுக்கும் அளவிற்கு மகேஷ் வளர்க்கபடவில்லையாதலால் அப்பாவின் வேண்டுகோளை தட்டாமல் நிறைவேற்றினான்.
"தம்பி மகேஷு..வர்ரியா..ராத்திரிக்கு ஹோட்டலுக்கு போவோம்"
"என்னப்பா ஆச்சரியமாக இருக்கு.ஹோட்டல் சாப்பாடே உங்களுக்கு ஒத்துக்காதே"
"அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்ப்பா...போய் சாப்பிட்டாப்லேயும் இருக்கும்.நம்ம பிளாக்கில் படம் எடுத்து போட்டாப்போலேயும் இருக்கும்..அவனவன்..கையேந்தி பவன் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை போய் டேஸ்ட் பார்த்துட்டு படத்துடன் பிளாக்கில் போட்டு ஹிட்ஸை அள்ளுறான்கள்.நாமும் டிரை பண்ணலாமேன்னுதான்."
மகேஷ் கிளம்பும் வரை சின்னதும் பெரியதுமாக அரை டசன் ஹோட்டலுக்கு சென்று மறக்காமல் போட்டொ எடுத்து மறக்காமல் பதிவும் செய்துவிடுவார் பீதாம்பரம்.
"அடி.. பாகீ..இன்னிக்கு மோர்குழம்பு பண்றியா..நான் படமெடுத்து பிளாக்கில் போடணும்"மனைவியையும் விட்டு வைக்கவில்லை.அதை செய்,இதை செய் என்று பாடாய்படுத்தி போட்டோ தவறாமல் எடுத்துவிட்டுத்தான் மறு வேலைப்பார்ப்பர்.
பதிவுகள் படித்து விட்டு அவரை தட்டியும்,கொட்டியும் வரும் பின்னூட்டங்களை படித்து ரசித்து,சிரித்து சிலாகிப்பதுமில்லாமல்
"அடி..பாகி சித்த வந்து பாரேன்.இந்த பொண்ணு எப்படி பீட் பேக் கொடுத்து இருக்கான்னு..தம்பி மகேஷு..நீ இங்கே வந்து பாரேன்.இந்த பீட்பேகை படிச்சுப்பாரேன்.இதுக்கு நான் எப்படி பதிலடி கொடுக்கறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்"
என்ன வேலையாக இருந்தாலும் அவர் அழைத்ததும் வந்து கம்பியூட்டர் முன் வந்து ஆஜர் ஆகிவிடவேண்டும்.மனைவி.மகனை மட்டுமல்ல அவரது பிரண்ட்ஸ்,உறவினர்களை வேறு போனில் அழைத்து மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடக்கும்.
"இதோ.. பாருடா கிச்சா..'அட்றா மச்சான்' ன்னு நான் நேற்று போட்ட பதிவைப்பார்த்தியா?"
"அந்த ஹோட்டலை பற்றி நான் எழுதியதைப்பார்த்தியா?இந்நேரம் அவனுக்கும்வியாபாரம் பிச்சுக்கிட்டு போகும்"
"கந்தசாமிதெருவுலே இருக்கிற பூக்கடையை பற்றி எழுதினேன் பாரு..அந்த ஓனர் சாட்சாத் கடவுளையே பார்க்கற மாதிரி என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டான் மனுஷன்."
"மெயின் ரோட்டிலே பள்ளம் நோண்டிப்போட்டு பத்து நாளாகுது.போட்டோவுடன் காட்டமா ஒரு பதிவு போட்டேன் பாரு..மனுஷன்னா இப்படி சமுதாயசிந்தனை அவசியம் இருக்கணும்.இப்படி எத்தனைபேருக்கு இருக்கும்?ஹ்ம்ம்ம்"
பேச்சு இந்த ரீதியில் இருக்கும்.
"யப்பா..மகேஷு...நாளைக்கு கிளம்புறே..எத்தனை மணிக்கு டாக்சிக்கு சொல்லட்டும்?"
"நைட்டு பத்து மணிக்கு சொல்லிடுங்கப்பா"
"மகேஷு..மறந்துடப்போறேன்.அடுத்த டிஸம்பரில் மறுபடி ஊர் வர்ரச்சே நல்லதா ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர்ரியா"
"இப்பதானே பி சி வாங்கித்தந்தேன்"
"வயசான காலத்திலே சேரிலே உக்காந்துட்டே இருக்க முடியலேப்பா..அப்பப்ப ஷோபாவிலே காலை நீட்டிட்டு மடியில் வச்சிட்டு வர்க் பண்ணலாம்..பெட்டில் சாய்ந்து கொண்டு வர்க் பண்ணலாம்,காத்தாட பால்கனி,மொட்டைமாடியில் உக்காந்துட்டு வர்க் பண்ணலாம்."
".............நல்லதுப்பா.."மகேஷின்குரலில் சுருதி இறங்கியது
"அப்படியே ஒரு பிரிண்டரும் கொண்டு வந்துட்டால் நல்லது.என் பதிவைபூரா பிரிண்ட் போட்டு பைண்டிங் பண்ணி வச்சிக்கலாம்."
"...."
"என்னப்பா..சப்தத்தைக்காணோம்?"
"ஆகட்டும்ப்பா"
டாக்சி ஏர்போர்ட் நோக்கி போய்க்கொண்டிருந்தது.
"தம்பி மகேஷு..டிஸம்பரில் வர்ரச்சே பிரியாவையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு வருவே இல்லியா"
"ம்ம்ம்"
"சின்னவன் நல்லா வளர்ந்து இருக்கானா?"
"ம்ம்"
"படிப்பெல்லாம் எப்படிப்போகுது"
"நல்லாப்போகுதுப்பா"
"ஹ்ம்ம்...எத்தனை காலத்துக்குத்தான் குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டிட்டு இருக்கறது.நானும் நாலு இடத்தை பார்க்கணும்.போறச்சே அந்த சந்தோஷத்தோட நிம்மதியா போய் சேரணும்"
"என்னப்பா..என்ன ஆச்சு..திடீருன்னு இப்படி பேசறீங்க?"
"நானும் யு எஸ் வந்து சுற்றிப்பார்க்கணும்ன்னு ஆசை வந்துடுச்சுப்பா.அங்கே கூட்டிப்போக ஏற்பாடு பண்றியாப்பா?"
ஆவல் மிளிரகேட்டவரை ஆயாசத்தோடு பார்த்தான்.
"ஏம்ப்பா..அதையும் உங்கள் பிளாக்கில் எழுதனும்னா.."தீனமாக ஒலித்தது மகேஷின் குரல்.
Tweet |