March 25, 2011

நிறம் என்னடா நிறம் நிறம்



பத்திரிகைகளில் பார்க்கிறோம்.மணமகள் தேவை விளம்பரத்தில்.”நன்கு படித்த,வேலைக்கு செல்லும்,நல்ல கலர் உள்ள மணமகள் தேவை.”படித்த..சரி..வேலைக்கு செல்லும் சரி..அதென்ன நல்ல கலர் உள்ள..?

மார்கெட் போகும் பங்கஜம் மற்ற காய்கறி வகையறாக்களை கால் கிலோவிலும்,அரைக்கிலோவிலும் வாங்கி விட்டு கேரட்டை மட்டும் 3 கிலோ வாங்குகின்றாள்.கூடவே சென்ற பரிமளம் “ஏண்டி மூன்று கிலோ கேரட் வாங்கி என்னடி செய்யப்போறே?” என்று கேட்டால் பதில் தடாலென்று வரும்.
“தினமும் கேரட் ஜூஸ் சாப்பிட்டால்தான் நல்ல கலர் கிடைக்கும்.பொண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறோமே.இதெல்லாம் பண்ணித்தான் ஆகணும்”

துபையில் இருக்கும் சீனு மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று டப்பா,டப்பாவாக குங்குமப்பூ வாங்கி பார்சல் போடுகிறான்.ஏன் என்றால் பிறக்கப்போகின்ற குழந்தை நன்கு சிகப்பாக பிறக்க வேண்டுமாம்.

“அம்மா,வெளியில் போய்ட்டு வர்ரேன்மா”சொல்லி விட்டு கிளம்பும் பையனிடம் ”டேய்..தெருவுலே அடிக்கற வெயிலை பூரா உடம்பிலே வாங்கிக்காதே.வெயில்லெ சுற்றினால் உடம்பு கருத்துப்போகும்.”பதைபதைக்கும் பெற்றவள்.

”ஒரே வாரத்தில் பளபளக்கும் வெண்மை’தொலைகாட்சி விளம்பரம் கண்டு பர்ஸை பறிகொடுப்பவர்கள் எத்தனை?

பிரசவவார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினரகள் பிரசவ அறையினுள் இருந்து வெளிப்படும் நர்ஸின் வருகையில் ஆர்வமாகி “என்ன குழந்தை”என்று கேட்டு தெரிந்து கொண்ட அடுத்த நொடி”பிள்ளை நல்ல கலராக இருக்கா”என்ற கேள்விதான் எழுகின்றது.’குறை இல்லாமல் இருக்கின்றதா’ என்ற கேள்விக்கே இடமில்லை.

கருப்பாக இருப்பவர்களைப்பார்த்து கவுண்டமணி ஸ்டைலில் ”அமாவாசையில் பொறந்தவனே”என்று கிண்டல் பண்ணுகின்றார்களே?ஏன் சிகப்பா இருப்பவர்களை “பவுர்ணமியில் பொறந்தவனே”என்று கிண்டல் பண்ணுவதில்லை?

சமீபத்திய நாளிதழ் செய்தி.’பெண் கருப்பாக இருக்கிறாள் என்று திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை ஓட்டம்’

ஆறு வயது சிறுமி தாயின் மடியில் படுத்துக்கொண்டு”அம்மா,அண்ணாவையும்,தங்கச்சியையும் நல்ல கலராக பெற்றுவிட்டு என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெற்றே?”

“ஹும்..இந்த கருப்புத்தோலை வச்சிண்டே புருஷனை இப்படி கைக்குள் போட்டுட்டாளே.கொஞ்சம் செவப்புத்தோலா இருந்தா கேட்கவே வேணாம்”முகவாய் கட்டையை தோளில் இடித்துக்கொள்ளும் நாத்தனார்.

வயதுக்கு வந்த பெண்ணிற்கு குங்குமப்பூவும்,பாதாமும்,பிஸ்தாவும் கொடுப்பதைப்பார்த்து சரி சத்துக்குத்தான் கொடுக்கிறார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.இந்த சமயத்தில் இப்படி ஐட்டங்கள் கொடுத்தால்தான் பிற்காலத்தில் நல்ல நிறம் கிடைக்குமாம்.

ஒரு மாதத்தில் சிவப்பாக மாறுவது எப்படி என்ற புத்தகத்தினை வெளியிட்டு விற்பனை செய்யும் பதிப்பகங்கள் ஏன் நாலு மாதத்தில் கருப்பாக மாறுவது எப்படி என்ற நூல்கள் வெளியிடுவதில்லை?

கருப்பாகவோ,வெளுப்பாகவோ,மாநிறமாகவோ இருப்பது மனித சருமம் பெற்ற இயற்கை.அமெரிக்கன் வெளுப்பாகவும்,ஆப்ரிக்கன் கருப்பாகவும்,இந்தியன் மாநிறமாகவும் இருப்பது இயல்பு.இதில் நம்மவர்கள் இந்த சிகப்புக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதும்,பிரயத்தனப்படுவதும் வியப்பாகவும்,புதிராகவும் தான் உள்ளது.


சமீபத்தில் எங்கள் ஆங்கிலோ இந்தியன் டெனண்ட் வீட்டிற்கு அவரது உறவினர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்.படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் எக்கசக்க டாலரில் சம்பளம் வாங்குகின்றாராம்.அவருக்கு இந்தியாவில் பெண் பார்க்க வேண்டுமாம்.”ஏன்?”என்று கேட்டால் “நல்ல காபி கலரில் பொண்ணு வேண்டுமாம்”
ஹ்ம்ம்ம்..இக்கரைக்கு அக்கரைப்பச்சை.

March 15, 2011

பெண் எழுத்து





தோழி மதுமிதா என்னை தொடர் பதிவெழுத அழைத்திருக்கின்றார்.என் வேண்டுக்கோளை ஏற்று இனி பதிவுலகில் அடிக்கடி தன் பகிர்வுகள் வரும் என்று கூறி என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருக்கும் கவிதாயினி மதுமிதாவுக்கு மிக்க நன்றி.

மதுமிதா சொல்லி இருப்பதுப்போல் உயிர்,ஆறறிவு என்னும் அளவீடில் பார்த்தால் ஆணும்,பெண்ணும் சமம்தான் .இதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.ஆனால் எழுத்தென்னும் வடிவில் தன் உணர்வுகளை பலர் அறிய ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொழுது ஒரு கோட்டுக்குள்,வரைமுறைக்கு உட்பட்டுத் தான் பெண் எழுத்து புலப்படுகின்றது.புலப்படவேண்டும்.அதுதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.அதுதான் நாகரீகமும் கூட.பெண் எழுத்துக்களுக்கான மரியாதை.

இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் தவிர இணைய தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது என்பது பெருமைப்படத்தக்க செய்தி.சமையல்,வீட்டுக்குறிப்புகள்,மருத்துவக்குறிப்புகள்,குழந்தை வளர்ப்பு என்பதோடு நின்று விடாமல் பற்பல துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு அணிவகுத்து நிற்க வேண்டும்.

பெண்களின் எழுத்துக்களில் புரட்சியைவிட புத்துணர்ச்சி அதிகம் இருக்கவேண்டும் என்பது அநேகரின் ஒரு மித்த கருத்து.அந்த புத்துணர்ச்சியானது கலாச்சாரம்,நன்முறை,நற்செயல்,நல்லொழுக்கம்,மற்றவர் போற்றத்தக்கதான அறவுரைகள்,ஆற்றலான புலமை,பண்பாடு,நல்லுறவு,நட்புவளர்த்தல்,நல்லறிவு வளர்த்தல்,இனிய நடைமுறை போன்ற பல்கலவை கொண்டதாக இருத்தலே பெண்ணின் எழுத்துக்கு பெருமைத்தரக்கூடியது.

என்னைப்பொருத்தவரை ஆண் எழுதுவதற்கும்,பெண் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஆணின் எழுத்து சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் வேலி அமைக்கவில்லை.ஆனால் பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்.

இந்த தொடரை கண்டிப்பாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில்

அக்கா மனோ சுவாமிநாதன்

தோழி ஆசியா உமர்

தங்கை மலிக்கா

தங்கை அப்சரா



ஐவரையும் அழைக்கின்றேன்.

March 9, 2011

வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்



பெப்ருவரி 20 ஆம்தேதி கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் இவள் புதியவள் மகளிர் மாத இதழுக்காக பதிவர்கள் சந்தித்து கருத்தரங்கம் நடைபெற்றது.சகோதரி தேனம்மை லட்சுமணன் ஏற்பாடு செய்ய இவள் புதியவள் ஆசிரியர் மை.பாரதிராஜா,கவிமணி,மற்றும் ஆ.முத்துக்குமார் ஆகியோருடன் பதிவர்கள் நான் உட்பட









அனைவரும் சந்தித்து அளவளாவியது அன்றைய மாலைப்பொழுதை மிகவும் இனிமையாக்கியது.ஒவ்வொரு பதிவரும் தங்கள் திறமைகளை வலைப்பூவில் வெளிப்படுத்தியது போன்று பேச்சிலும் வெளிப்படுத்தி என்னை வியக்க வைத்தனர்.ஒவ்வொரு பதிவரும் தன் எண்ணங்களை அழகு பட,மற்றவர்களின் புரிதல்களுடன் விளக்கமாகவும்,ஆர்வமாகவும்,அறிவுப்பூர்வமாகவும் மாலையில் இருந்து இரவு வரை கலந்துரையாடியது பங்கு கொண்ட அனைவருக்குமே உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

இவள் புதியவள் மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.இன்றைய பெண்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், அதை எதிர்கொள்ளும் விதங்கள் பற்றி தங்களின் கருத்துக்களை மிகவும் தெளிவோடும்,திறமையோடும் பெண் பதிவர்கள் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் சபாஷ் போட வைத்தது.


“என்னுடைய பார்வையில் ஆணைவிட பெண் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.பிறர் நம்மைப்பற்றி என்ன நினைகின்றார்கள் என்பதில் அக்கறைகொள்ளாமல்,தன் சுய பிம்பத்தை மதிப்பிட தெரிந்து கொள்ள வேண்டும்.பெண்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன் படுத்திக்கொள்ளக் கூடாது.முக்கியமாக சுயக்கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம்.எந்த பிரச்சினைகளுக்கும் தானே முடிவெடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் குடும்பத்திற்கும்,நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் இன்றி சந்தோஷமாக வாழலாம்.பிரிவினை இன்றி பெண்கள் கலாச்சாரத்துடன் வாழ்வதில்த்தான் பெண்களின் வெற்றி அடங்கி உள்ளது”என்ற என் கருத்துக்கு ராமசந்திரன் உஷா ”இந்த கலாச்சாரம் ஆண்களுக்கும் உண்டு.ஆனால் அதனை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை”என்றார்.

கல்லூரி காலங்களில் இருந்தே எழுத்துக்களில் அதீத ஆர்வமுள்ள சகோதரி தேனம்மை வலையுலகிலும்,பத்திரிகை உலகிலும் தான் பவனி வருவதற்கு அவரது தமிழ் பேராசியை எம். ஏ சுசீலா அவர்கள் காரணகர்த்தா என்பதினை நினைவு கூர்ந்து அழகிய,அர்த்தமுள்ள கருத்துக்களை மடை திறந்த வெள்ளமென கொட்டித்தீர்த்ததை நான் விழி அகல கேட்டு ரசித்தேன்.


“கருத்து சுதந்திரம்ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்.ஆனால் அதனை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.ஆனால் எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி பெண்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றோம்”என்று பேசினார் தோழி மதுமிதா.உற்சாகமான,அழுத்தமான பேச்சுக்கு சொந்தக்காரர்.தான் சொல்ல வந்ததை தெளிவாகவும்,உறுதிபடவும் பேசி பிறரை புருவம் ஏறவைத்தவர்.

“பெண்களுக்கே உரித்தான வேலைகளை அவர்கள் தான் செய்து தீர வேண்டும்” என்ற கருத்தினை உறுதியாக உரைத்தார் அமுதவல்லி.

”பிளாக்கில் எழுதுவதன் மூலம் அதிகமானோரின் அறிமுகம் கிடைத்துள்ளது” என்ற உண்மையைக் கூறினார் வசுமதி வாசன்.

“ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர்களின் தகுதியை நிர்ணயம் செய்து விடக்கூடாது” என்று தனது அனுபவத்தில் கண்ட உண்மையை தெளிவாக விளக்கினார் அமிதவர்ஷிணி அம்மா.தனது மகளின் பெயரில் இவர் வலையுலகில் வலம் வருவதால் உண்மைபெயரை மட்டிலுமே அறிந்திருந்த சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான அவரை நேரில் கண்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

“ஜர்னலிஸ்டான வாணி ஜெயா இலங்கைத்தமிழில் இனிக்க இனிக்க பேசினார்.தனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நிறைய எதிர்ப்புகளும் வரும் .அதனை தைரியமாக ஏற்று வெளியிடுவேன்.நமக்கு வரும் விமர்சனங்கள் நம்மை வளர்க்க உதவுகின்றன”என்று முடித்தார்

இது போன்ற கருத்துரைகளும்,கருத்தரங்களும் கண்டிப்பாக நல்லதொரு விழிப்புணர்வை தருகின்றது என்று அன்று மாலை நடந்த அந்த இனிய சந்திப்பின் மூலம் அனுபவித்து அறிந்து கொண்டேன்.இதற்கு ஏற்பாடு செய்த தோழி தேனம்மைக்கும்,வாய்ப்பளித்த இவள் புதியவள் மாத இதழ் ஆசிரியர் குழுவினருக்கும்,அளவளாவ அழகிய இடம் தந்து உதவிய கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர்களுக்கும் என் நன்றிகள்.

March 8, 2011

எத்தனை முகம் பெண்களுக்கு



மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.

முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.

1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.

2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.

3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.

4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.

5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்‌ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.

6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.

7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.

8.டைம் மேனேஜ்மெண்ட்:
காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.

9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.

10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.

தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.

March 6, 2011

லேடீஸ் ஸ்பெஷலில் நான்



இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் நான்

ஒவ்வொரு மாதமும் வலைப்பூவில் தேனெடுத்து சுவையூட்டும் ஒவ்வொரு பெண்பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் பணி மகத்தானது.இம்மாத வலைப்பூதாரர் அறிமுகத்தில் என்னை அறிமுகப்படுத்திய லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் ஆசிரியை கிரிஜா ராகவன் மேமுக்கும் ,காரணகர்த்தவான அருமை தோழி தேனம்மை லெக்ஷ்மணனுக்கும் அன்பின் நன்றிகள் உரித்தாகட்டும்.

எண்ணம் போல் வாழ்வு

மனதின் எண்ணத்தைப்போல் வாழ்வு அமைவது என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லிச்சென்றார்கள்?எதனைப்பற்றி அடிக்கடி நினைக்கின்றோமோ அதுவே வாழ்க்கையில் நிஜமும் ஆகிப்போகின்றது என்பது பலர் அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை.

நம்மால் முடியும் என்ற தன்நம்பிக்கை,தன்னைப்பற்றிய அசாத்திய சுய நம்பிக்கை மனதில் நிறைந்து நின்றால் உண்மையில் நம்மால் எல்லாம் முடியும்.

நாம் கவனக்குறைவாக,அசுவாரஸ்யமாக இருக்கும் பொழுது,மனதில் உள்ள தன்னம்பிக்கை குறையும்.உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் செயல் பட்டால் நாடிய விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.நமக்கு செல்வம் வேண்டுமா?உடல் ஆரோக்கியம் வேண்டுமா?நல்ல கல்வி வேண்டுமா?மகபேறு வேண்டுமா?சந்தோஷம் வேண்டுமா?பத்திரிகையில் எழுத வேண்டுமா?எது தேவையோ அதனை முதலில் நினைவு முழுக்க கொண்டு வாருங்கள்.முயற்சித்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதின் ஆழத்தில் இறுத்திக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக அது நடக்கும்.

சந்தோஷம் தேவை என்றால் அது கிட்ட என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டால் பலனளிக்கும் என்று சில நிமிடங்கள் செலவு செய்து ஆராயுங்கள்.சரி என்று பட்டதை செயல் படுத்துங்கள்.சின்ன விஷயத்தினையும் சந்தோஷமாக நினைக்கப்பழகுங்கள்.நிச்சயமாக நீங்கள் விரும்பும் சந்தோஷத்தை வெகு சீக்கிரமாகவே எட்டுவீர்கள்.


மணம் புரிந்து சில வருடங்கள் கழிந்தும் மகபேறு கிடைக்காத ஒரு பெண்இவ்வளவு மருத்துவம் செய்தும் கிட்டவில்லையே?இனி எங்கு நமக்கு அந்தப்பேறு கிட்டப்போகின்றது?” என்று அலுத்துக்கொண்டால் மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் வலிமை குன்றுவாள்.மகபேறு மருத்துவர்இந்த நம்பிக்கையின்மையே உனக்கு முதல் எதிரி.இந்த மனநிலை தொடர்ந்தால் எந்த மருத்துவமும் பலிப்பது கடினம்என்கின்றார்.விஞ்ஞான உண்மையும் இதுதான்.


பரிட்சைக்கு தயார் செய்து மகனையோ மகளையோ அனுப்பும் பொழுது நம்பிக்கை மிளிறும் வார்த்தைகளின்றிடேய்..ஒன் வேர்ட் ஆன்சரை கோட்டை விட்டுடாதேடா?எஸ்ஸே கரெக்டா எழுது.சின்ன தப்புன்னா மிஸ் மார்க்கை குறைத்துடுவாங்க.சூஸ் எழுதறச்சே குழப்பிக்காதேஇந்த ரீதியில் பள்ளி கிளம்பும் மகனை நெகடிவ் அப்ரோச்சால் குழப்பம் செய்து குழந்தையை டென்ஷன் செய்து நாமும் டென்ஷன் ஆவதை விடகண்ணா,நீ நல்லா பிரிப்பேர் பண்ணி இருக்கேடா.குழம்பாமல் எக்ஸாம் எழுது.நல்ல படியா எழுதுவே.கண்டிப்பா இந்த முறை கிளாஸ் பர்ஸ்டா வருவே.”என்று பாஸிடிவ் அப்ரோச்சில் குழந்தைகளை பரிட்சை எழுதி அனுப்பினால் குழந்தைகளுக்கும் இறுக்கம் தீரும்.நாமும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளுடன் நிறைவாக வாழவேண்டும் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது.அந்த நிலை கிட்ட என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அதனை நடைமுறை படுத்துவது மட்டு மின்றி,இப்படி எல்லாம் செயல் பட்டால் நிச்சயம் நாம் எண்ணிய இலக்கை அடைவோம் என்று மனதில் நிறைந்த நம்பிக்கையுடன் செயல் பட்டால் சிகரத்தை அடைவது சுலபம்.அதனை விட்டுஹ்ம்ம்ம்..என்ன செய்து என்ன செய்ய?சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றதுஎன்ற அலுப்பும்,சலிப்பும் மனதில் ஏற்பட்டால் இலக்குக்குறிய பாதை எப்படி கண்களுக்கு புலப்படும்?

தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இருக்க ஆசைத்தான்.அந்த எண்ணம் மனசு முழுக்க உள்ளதுதான்.என்ன இருந்து என்ன செய்வது?வாழ்க்கையில் சருக்கல்கள் மனவலிமையை,தன்னம்பிக்கையை தின்று விடுகின்றதேஎன்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.ஆனால் தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.உறுதியாக இருக்க மனதினை பழக்கிக்கொள்ளுங்கள்.எதிர்நீச்சல் போடுவதற்கும் தயக்கம் கொள்ளாதீர்கள்.சோர்வினை அகற்றி,சுறுசுறுப்பாக்கிகொள்ளுங்கள்.எதனை எண்ணினோமோ அதனை கண்டிப்பாக அடையமுடியும்,நல் விதை விதைத்து நல்லறுவடை செய்வோம்.