April 15, 2013

ஞாபகம் வருதே...

நினைவுகளை விட்டு நீங்காத மனதில் பசுமரத்தாணியாக பதிந்து போன வாழ்வில் அவ்வப்பொழுது ரீவைண்டு செய்து பார்த்து மகிழக்கூடிய  நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த இளம் பருவம்.   இறுதிவரை சிறுமியாகவே இருக்க முடியாது தான்.ஆனால் அப்போதைய வாழ்வின்  வர்ண ஜாலங்களை ,மத்தாப்பூ நிகழ்வுகளை,வருடங்கள் எத்தனை கடந்து போனாலும் நினைவில் கொள்ளும் பொழுது மனசெல்லாம் சீனி மிட்டாய் சாப்பிட்ட தித்திப்பு அப்படியே கவ்வுகிறது. கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதென்றால் அனைவருக்குமே இளம் பனி காலத்தில் ஏகாந்தமாக அமர்ந்து கொண்டு சில்லென்ற காற்று உடலை தடவ,வாசலில் பூத்துக்குலுங்கும் ரோஜாவும் நந்தியாவட்டையும் முல்லையும் போட்டிக்கொண்டு இதமான நறுமணத்தை நாசிக்கு செலுத்த ,பூத்திருக்கும் ரோஜா செடியின் ஓர் கிளையை பிடித்து இழுத்தால் அதில் பூத்திருக்கும்  மலரில் பரவிநிற்கும் பனித்துளிகள் முகத்தில் சிலீரிரென  பட்டு தெறிக்கும் பொழுது மனதில் எழும் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும் பால்ய பருவ நினைவுகள்.

நீங்கள் இவற்றை அனைத்தும் சாப்பிடாவிட்டாலும்,பெருமளவில் சாப்பிட்டு மகிழ்ந்திருப்பீர்கள் தானே?அள்ளித்தெளியுங்கள் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாக.

தேன்மிட்டாய்


ஐந்துக்கு ஐந்து சைஸ் பொட்டிக்கடையில் கடைகாரர் உள்ளே நிற்பது கூட தெரியாமல் சரம் சரமாக தொங்கவிடப்பட்டு இருக்கும் இனிப்புகள் அடங்கிய பைகள்.வாகாக கை விட்டு பொருளை எடுப்பதற்கு வசதியாக பையின் ஓரத்தில் ஓட்டை போடப்பட்டு  50 காசை கொடுத்தால் கை நிறைய தேன் மிட்டாய்களை அள்ளித்தந்த காலமெல்லாம் மலை ஏறிபோயாச்சு.அக்கால பசங்களுக்கு பாகில் ஊறிய தேன் மிட்டாய் சாப்பிட்டால் தேன் குடித்த நரியாகி விடுவார்கள்.இப்போதுள்ள குட்டீஸோ விதம்விதமான சாக்லேட் சுவைப்பதில் நாட்டம் காட்டுகின்றனர்.


குருவிரொட்டி

பறவைகள்,மிருகங்கள் உருவத்தில் வடிவமைத்து இருக்கும் பிஸ்கட்டுகளே குருவி ரொட்டி.இதனை ஏதோ ஒரு படத்தில் வடிவேலு குருவி ரொட்டி என்ற நாமத்தைக்காட்டித்தந்தார்.கிராமப்புறங்களில் பிஸ்கட்டை ரொட்டி என்பர்.குருவிகள் உருவத்தில் வருவதால் குருவி ரொட்டி ஆனது போலும்.சிறுமியாக இருந்த பொழுது என் தந்தையார் வாங்கி வரும் இந்த குருவி ரொட்டிகளை ஒவ்வொரு உருவங்களாக வரிசைபடுத்தி தம்பி,தங்கைகளுக்கு அதன் பெயரை ஆங்கிலத்திலும்,தமிழிலும் சொல்லிக்காட்டி “இப்ப நீ மங்கியை சாப்பிட்டுக்கோ,இப்ப நீ லயனை சாப்பிடலாம்.நீ க்ரொவை சாப்பிடு “இப்படி சொல்லிக்காட்டி விளையாடி குருவி ரொட்டிகளை காலி பண்ணியதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

கமர்கட்டு


கருப்பு நிறத்தில் வாயில் போட்டு மென்றால் வலிக்கும் ஒரு வஸ்துதான் கமர்கட்டு.பெட்டிக்கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் குட்டீஸை ஈர்க்கும் ஒரு இனிப்பு .கல் போன்று கடினமாக இருப்பதால் கல்கோணா என்றும் கூறுவார்கள்.இப்போதும் தி நகர் பக்கம் சென்றால் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பளபளக்கும் கமர்கட்டுகள் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுவதை பார்க்கலாம்.

பவுனு மிட்டாய்


ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்டவடிவமாக்கி அதனை அழகாக பொன்னிற சரிகை பேப்பரில் சுற்றி பார்க்க பவுன் போன்று தோற்றமளிக்கும் .சுவை எண்ணவோ பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் தங்க மிட்டாய் என்று சிறுவர்கள் அள்ளிக்கொள்வார்கள்.


சூடமிட்டாய் (அ )சுத்துற மிட்டாய்

வட்டவடிவ வெள்ளை நிற பட்டன் போன்ற வில்லையில் இரண்டு ஓட்டைகள் போட்டு அதில் நூல் கட்டி விற்பனைக்கு வரும் சூடமிட்டாயில் கட்டப்பட்டு இருக்கும் நூலை  இரண்டு ஆட்காட்டி விரல்களால் பிடித்து சுற்றி இழுத்தால் சொய்ங் என்று சுற்றும் அழகை ரசித்து ரசித்து  விளையாடி மகிழ்ந்து களைத்துபோனதற்கு அப்புறமாக நூலை அப்புறப்படுத்திவிட்டு சூடமிட்டாயை வாயில் போட்டால் ஒரு வித விறுவிறுப்புடன் கூடிய இனிப்புசுவையை இன்னுமும் மறக்க முடியாது.


காக்காய் மிட்டாய்

படத்தில் இருப்பது சிறிய சைஸாக உள்ளது.காக்காய் முட்டை அளவில் வண்ண வண்ணமாக கல் போன்ற ஒரு மிட்டாய்தான் காக்காய் மிட்டாய்.பல்லில்வைத்து கடித்து சாப்பிடுவதற்கு பிராணன் போய் வந்துவிடும்.அம்மாவிடம் கொடுத்து பாக்கு வெட்டியால் நறுக்கி சாப்பிட்ட ஞாபகம்.பெரிசுகளோ இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.சமீபத்தில் ஒரு சூப்பர் மார்கெட்டில் காக்காய் மிட்டாய்கள் அடங்கிய பை கண்ணை கவர பாக்குவெட்டி இருக்க பயம் ஏன் என்று ஒரு பாக்கெட் வாக்கினேன்.வீட்டிற்கு வந்து பார்த்தால் பாக்கு வெட்டி தேவையே படவில்லை.ஷாஃப்டாக இருந்தது.கடித்தால் உள்ளுக்குள் ஒரு முழு பாதாம் பருப்பு.அந்தக்காலத்து காக்காய் மிட்டாயின் சுவையே தனிதான்.

இலந்தவடை

இனிப்பு,புளிப்பு,காரம், இப்படி அருஞ்சுவைகளில் அநேகசுவைகள் உள்ளடங்கியதுதான் இலந்தை வடை .கருப்பு நிறத்தில் களிம்பு போல் உள்ளவஸ்தை பார்த்த மாத்திரத்தில் இது சாப்பிடும் பொருள்தான் என்று ஒப்புக்கொள்ளத்தோன்றாத ஒரு உருவம் இந்த இலந்தை வடைக்கு உண்டு.வாயில் போட்டு மென்றால் ஆஹா..உடை பட்ட இலந்தைக்கொட்டை நரநரக்க சுவை அள்ளிக்கொண்டு போகும்.சின்ன சின்ன பாக்கெட்டுகளில் பத்துகிராம் அளவில் உள்ளதை வழித்து எடுத்து சாப்பிட சோம்பேறித்தனமாக இருந்தாலும்,சுவைக்கு பஞ்சம் இருக்காது.

குச்சி ஐஸ்


கோரனோட்டா,கசட்டா,சாக்சிப்,சாக்அண்ட்நட் இப்படி வகை வகையான பெயர்களில் விதவிதமான சுவைகளில் இப்பொழுது ஐஸ்கிரீம்கள் கிடைத்தாலும்,அந்தக்கால குச்சி ஐசும் அவ்வப்பொழுது ஞாபகத்திற்கு வந்து செல்லத்தான் செய்கின்றன.துருபிடித்த சைக்கிள் கேரியரில் வண்ணம் போன சதுர மரப்பெட்டியினுள் ஐஸை வைத்து ஐஸ்காரர் வண்டியைத்தள்ளிக்கொண்டு சாலையில் நடந்து கொண்டே “ஐஐஐஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..பாலைஸ்,சேமியாஐஸ்,திராட்சை மேங்கோ”என்று கூவும் ஒலி குட்டீஸுக்கு குதுகலத்தை ஏற்படுத்தும்.விதவிதமான ஐஸ் க்ரீமை சுவைத்தாலும் சேமியா ஐஸின் சுவை இன்னும் நாவை விட்டு போக மறுக்கிறதே.

தூள் ஐஸ்


தள்ளு வண்டியில் ஐஸ் பார்களை ஓரமாக அடுக்கி,கலர் கலரான சர்பத் பாட்டில்களையும் ஏகத்துக்கும் அடுக்கி வைத்து மணி அடித்து கல்லா கட்டுவார்கள்.ஐஸ்துண்டு ஒன்றினை எடுத்து துருவலாக சீவி,கண்ணாடி கிளாசில் நிரப்பி,அங்கிருக்கும் அனைத்து சர்பத் பாட்டில்களில் உள்ளவற்றை எல்லாம் குலுக்கி குலுக்கி துள்ளித்துளியாக விட்டு ஐஸ் துகள்கள் மீது தெளித்து  இனிப்பாகவும் கலர்கலராகவும் ஆக்கி சிறுவர் கைகளில் தருவார்கள் பாருங்கள்.ஐஸை சீவுவதை வைத்த கண் வாங்காமல் பார்ர்த்துக்கொண்டுஇருக்கும் குட்டீஸ் ஐஸ் கிளாஸ் கையில் கிடைத்ததும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே.அப்பப்பா..இப்பொழுது அதுவே பெரிய ரெஸ்டாரெண்டுகளில் ஐஸ் கச்சாங் என்று சொல்லி விற்பனை செய்கின்றனர்.


ஜவ்வு மிட்டாய்
நீண்ட மூங்கில் கழிமீது அலங்கரிக்கப்பட்ட பொம்மை உருவத்தை வைத்து,கீழே தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இரண்டு கையும் ஒன்று சேர அடித்து எழும் சப்தம் குட்டீஸுக்கு கொண்டாட்டம்தான்.பொம்மைக்கு கீழே பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட ஜவ்வுமிட்டாய் நொடிபொழுதில் வாட்சாக,மோதிரமாக,வளையலாக செயினாக,நெக்லஸாக பரிமாணிக்கும்.கையில் அணிந்து அழகு பார்த்து விட்டு வியர்வை கசப்புடன் மிட்டாயை சுவைத்தது அந்தக்காலம்.


ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு சுளை வடிவத்தில் கலர்கலராக புளிப்புசுவையுடன் இருக்கும் மிட்டாய்தான் ஆரஞ்ச் மிட்டாய்.கிராமங்களில் சாக்லேட் வகைகள் அறிமுகம் இல்லாத காலகட்டத்தில் குட்டீஸுக்கு இது காணக்கிடைக்காத பேறு.

கடலை உருண்டை
பொட்டிக்கடைகளில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து கடைக்கு கடைக்கு விற்றாலும் கூட எங்கள் ஊரில் ஒரு வீட்டில் இந்த கடலை உருண்டை செய்து விற்பனை செய்வார்கள்.கெட்டி வெல்லப்பாகில் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி எண்ணெய் தேய்த்த பல்லாங்குழியில் ஊற்றி ஆற விட்டு தருவார்கள்.அவர்கள் கடலை உருண்டைகான பாகு செய்து கடலையை கலந்து பல்லாங்குழியில் நிரப்பி,சூடு ஆறுவரை காத்திருந்து வாங்கி பிரஷாக சாப்பிட்ட சுவை கடைகளில் கிடைக்காது.

சவுக்கு மிட்டாய்
எனக்கு ஆரம்பத்தில் ஜவ்வுமிட்டாய் சவுக்கு மிட்டாய்க்கு உள்ள பெயர் வித்தியாசம் தெரியாது.கடித்து மென்று சாப்பிடும் பக்குவத்தில் ஒரு இழுவை மிட்டாய்.அதில் சர்க்கரை தூள் தூவப்பட்டு மென்று சாப்பிடவே இதமாக இருக்கும்.இப்போது பல்லி பாச்சான் யானை பூனை உருவங்களில் ஜெல்லி மிட்டாய் என்று பெயரிட்டு பார்க்கவே டெரர் காட்டுகிறது.


அரிசி மிட்டாய்குட்டியான சீரகத்தில் உள்ள மினி மிட்டாய் அரிசி சைஸில். அப்படியே வாயில் அள்ளிப்போட்டால் கடுக் மொடுக் சப்தத்துடன் சுவைக்கலாம்.இதனை எங்களூரில் குழந்தைகளுக்கு பல் முளைத்து விட்டால் பல்லரிசி என்ற ஒரு தின்பண்டத்துடன் இந்த அரிசிமிட்டாயையும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

மாங்காகீத்து


கிளி மூக்கு மாங்காயை நீள வடிவில் மெலிதாக சீவி உப்பு மிளகாய் தூவி விற்பனை செய்யப்படும்.ஸ்கூல் வாசலில் உச் கொட்டிக்கொண்டே சாப்பிட்டது இன்றும்  நினைவில் உள்ளது. மாங்காய்கீத்து இப்போதும் கூட அழகாக பாலித்தீன் கவர்களில் போட்டு விற்பனை செய்கின்றனர்.இருந்தாலும் தெருவில் வைத்து மாங்காயை நறுக்கும் பெண்ணை பார்க்கும் பொழுது மாங்காயை கழுவினார்களா இல்லையா என்ற சந்தேகம் மாங்காகீத்து சாப்பிடவே தயக்கமாக உள்ளது.

கடலை அச்சுஇதனை அச்சுவடிவில் செய்வதால் கடலை அச்சு.உருண்டை வடிவமானால் வேர்க்கடலை உருண்டை.இது பெருமளவில் தயாரிப்பது கோவில் பட்டி என்றாலும் எந்த ஊரிலும் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கும்.என் கணவருக்கு இன்று வரை வித விதமான முந்திரி,பாதாம் ஸ்வீட்டுடன்,இந்த கடலை மிட்டாயை பக்கத்தில் வைத்தால் மற்றவற்றை சீந்தக்கூடமாட்டார்.

கொடுக்காப்புளி

அக்காலக் கிராமகுட்டிஸுடன் இது நெருங்கிய தொடர்புடையது.சுருள் சுருளான சிவப்பான காயும் பழங்களை உண்ண சிறுவர்கள் போட்டி போடுவார்கள் சில ரகங்கள் துவர்ப்பாகவும் சிலரகங்கள் இனிப்பாகவும் இருக்கும்.

59 comments:

Radha rani said...

சுவையான பதிவு.. படிக்க படிக்க பள்ளி பருவ நினைவுகள் கண் முன் நிழலாடுகிறது. குருவி ரொட்டி சொல்லிட்டீங்க ... குச்சி மிட்டாய் விட்டுட்டீங்களே..இதுக்கு சிகரெட் மிட்டாய்னு ஒரு பேர் இருக்கு..:)

Jaleela Kamal said...

எல்லா ஞாபகத்தையும் இப்படி ஒரேடியாக ஞாபகப்படுத்தி நாவூறவைத்து வீட்டீங்களே

கடலை முட்டாய் நேற்று சாப்பிடாச்சு, மாங்காயும் ஒகே இப்ப சீசன் தான்

Jaleela Kamal said...

இன்று மதியம் மாங்காய் தான் உப்பு மொளாக படி போட்டு சாப்பிட்டேன்

குச்சி ஐஸ்,சோம்பு மிட்டாய் , மாத்திரை மிட்டாய் என் பெரிய பையனின் பேவரிட்

Jaleela Kamal said...

கொடுக்காப்புளி இங்கு துபாயில் முன்பு இருந்த வீட்டில் பால்கனியில் அந்த மரம் கிளைகளில் இருந்து அடிக்கடி நல்ல பழமாக எடுத்து சாப்பிடுவோம் என் கணவருக்கு ரொம்ப் பிடிக்கும்

Jaleela Kamal said...

கொடுக்காப்புளி இங்கு துபாயில் முன்பு இருந்த வீட்டில் பால்கனியில் அந்த மரம் கிளைகளில் இருந்து அடிக்கடி நல்ல பழமாக எடுத்து சாப்பிடுவோம் என் கணவருக்கு ரொம்ப் பிடிக்கும்

Jaleela Kamal said...

கடலை முட்டாய் , கடலை பர்ஃபி, எங்க வாப்பாவின் ஞாபகம் தான் வருகிறது
மீன் சாப்பாடு சாப்பிட்டால் கண்டிப்பாக நாங்க எல்லோரும் பர்ஃபி சாப்பிடுவோம்.

எப்போதும் கம்ண்ட் பாக்ஸ் எனக்கு ஓப்பன் ஆக ரொம்ப நேரம் எடுக்கும் , இன்று தான் உங்கள் பக்கம் உடனே ஓப்பன் ஆச்சு.

Jaleela Kamal said...

ஆரஞ்சு மிட்டாய் வகைகள் என் பெரிய பையன் உண்டாகி இருந்த போது மசக்கையின் போது சாப்பிட்டது. இங்கு அழகான டப்பாக்களில் போட்டு வித விதமாக கிடைக்கும்.

Jaleela Kamal said...

குச்சி ஐஸ் பள்ளி காலத்தில் நாங்க ஐந்து தோழிகள் , பீ டீ கிளாஸ் முடிந்ததும் வாரம் ஒருவர் டீரீட்டில் வாங்கி சாப்பிடுவோம்

கோமதி அரசு said...

இளமைக் கால நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.
பள்ளி பருவத்தில் இது அத்தனையும் சுவைத்து மகிழ்ந்து இருக்கிறேன்,

கோவையில் கிளிமூக்கு மாங்கையை அழகாய் வளையம் போல் வெட்டி மிள்காய் தூள் போட்டு தருவார்கள்.
விளாங்காய், கலாக்காய், இலந்தை பழம், அரிநெல்லிக்காய், ராதாராணி சொன்னது குச்சி மிட்டாய்
குழந்தைகள் சிகரெட் பிடிப்பது போல் பாவனைக் காட்டி சாப்பிடுவார்கள்.

நீங்கள் சொல்லும் காக்கா மிட்டாய் என்பதை நாங்கள் கோழி முட்டை மிட்டாய் என்போம். கமர்கட் , தேங்காய் மிட்டாய் எல்லாம் சாப்பிட்ட நினைவுகள் மனதில் வந்து விட்டது.
நன்றி ஸாதிகா .

Jaleela Kamal said...

லாலி பாப், குச்சி மிட்டாய்,

எப்பவுமே எல்லா பிள்ளைகளுக்கும் வாங்கி கொடுப்பேன்.

இங்கு விற்கும் பெரிய பாட்டிலோடு வாங்கி போய் இஷ்டம் போல எல்லா பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்.

ஊரில் எல்லா பிள்ளைகளுக்கும் ஜலீலா ஆண்டி என்றால், லாலி பாப் மிட்டாய், கோன் ஐஸ், வளையல் ஞாபகம் வரும்

ஸாதிகா said...

குச்சி மிட்டாய் நீங்கள் சொன்னதும்தான் ஞாபகத்திற்கு வருது ராதா ராணி.கூகுளில் படம் தேடினேன் கிடைக்க வில்லை.ரசித்தமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

என் பதிவு ஜலீலாவை பழைய ஞாபகங்களை கிளறச்செய்து விட்டது குறித்து மகிழ்சியே.

//இன்று மதியம் மாங்காய் தான் உப்பு மொளாக படி போட்டு சாப்பிட்டேன்// துபாயில் இருந்து கொண்டு ஒன்றையும் விட்டு வைக்கவில்லை ஹா ஹா..மாமரம் நிறைந்த எங்கள் தெருவில் இருந்து கொண்டே இதுவரை இந்த சீசனுக்\கு ஒரு மாங்காயைக்கூட கண்ணால் பார்க்கவில்லை.எல்லா மரத்திலும் பூக்கள்தான்.

தொடர் கருத்துக்கு நன்றி ஜலி.

ஸாதிகா said...

கலாக்காய்//கேள்விப்பட்டதில்லை கோமதிம்மா.நீங்கள் இதனை தனிப்பதிவாகவே போடலாம்.:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சுவாரஸ்யமான ருசியான பதிவு. பாராட்டுக்கள்.

இதில் உள்ள 17 பொருட்களில் 12 பொருட்களை நானே சாப்பிட்டுள்ளேன்.

2 பொருட்கள் பற்றி எனக்குத்தெரியும். ஆனாலும் சாப்பிடப்பிடிப்பது இல்லை,
அதாவது இலந்த வடையும், ஜவ்வு மிட்டாயும். சாப்பிட்டது இல்லை.

மீதி மூன்று கேள்விப்பட்டதே இல்லை. அதாவது பவனு மிட்டாய், காக்காய் மிட்டாய் + சவுக்கு மிட்டாய் அகிய மூன்றும்.

அந்தக்காலத்தில், இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது குச்சி ஐஸ் + தூள் ஐஸ்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான ரசிக்க வைக்கும் பதிவு...

அந்தக்கால இனிமையான நினைவுகளை மீட்டியதென்பதோ உண்மை...

தொடர வாழ்த்துக்கள்...

Angel said...

ஸாதிகா :))) இப்படியா எங்களை அந்த காலத்துக்கு ஒட்டு மொத்தமாக கூட்டீட்டு போறது :))
.அழுகாச்சியா வருது ..தேன் மிட்டாய் ரெண்டு வருட முன் சென்னை போனப்ப சூப்பர் மார்கெட்டில் பிளாஸ்டிக் பாகில் விற்றாங்க ..ஆனாலும் பெட்டிக்கடை சுவை அபாரம் .
களாக்காய் ..நீங்க சாப்பிட்டதில்லையா ..ஊறுகாய் கூட போடுவாங்க ..உப்பில் ஊரபோட்டு கூட சாப்பிடலாம் அல்லது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்தும் சும்மா சாப்பிடலாம் .
உடுப்பி பக்கம் போனா அங்கெல்லாம் இது பேமஸ் .களாக்காய் படம் எனது பதிவில் இருக்கு லிங்க் தரேன்

Angel said...
This comment has been removed by the author.
Angel said...

முன்பு கமர்க்கட்டில் பத்து பைசா 25 பைசா வெல்லாம் வைத்து விப்பாங்க ..அதை வாங்க செம போட்டி .
அப்புறம் ஒரு கலர் மிட்டாய் இருக்கும் வாயில் போட்டதும் அந்த மிட்டாயில் ஓட்டைகள் விழுந்திடும் வெள்ளை மற்றும் சிவப்பு வரி வரியாக இருக்கும் .
எனக்கு ரோஸ்மில்க் ஐஸ் தான் பிடிக்கும்
மாங்காய் பற்றி நேற்றுதான் பேசிக்கொண்டிருந்தேன் ..,,அதை ஒரு கத்தி பல்லு பல்லா இருக்கும் அதில் வெட்டி வளைத்து வைத்து டிஸ்ப்ளே செய்திருப்பாங்க ..ரோட்டோர கடைல பீச்ல தான் :))
இலந்தை ஆடை தட்டு போல தட்டினதும் விற்பாங்க .
எனக்கு எப்படி இவ்ளோ விவரம் தெரியும்னா ..அப்பா கும்ப கோணம் ,திருவாரூர் தஞ்சைன்னு நிறைய ஊர்களில் வேலை செய்தார் அந்த ஊர் இனிப்புகள் எங்களுக்கு வரும்

Angel said...


இந்த குருவி ரொட்டி நாங்க சின்ன வயதில் zoo பிஸ்கட்ஸ் என்போம் :))
வாச் மிட்டாய் நானும் சாப்பிட்டிருக்கேன் ..அரிசி மிட்டாய் நாங்க பல்லி மிட்டாய்ன்னு சொல்வோம் .
இன்னொரு பிஸ்கட் குட்டி குட்டியா டாலர் பிஸ்கத்னு னு இருக்கும் அதன் மேல் ஒரு துளி ஐசிங் க்ரீம் இருக்கும் அதுவும் சூப்பர் டேஸ்டி ..


சரி நான் மத்தவங்களுக்கு வழி விடறேன் ..

Angel said...

ஸாதிகா நாவற்பழம் கூட தள்ளு வண்டி ஸ்பெஷல் தானே திருட்டுத்தனமா வாங்கி சாப்பிட்டாலும் வாய் காட்டி கொடுத்திடும் .என் பதிவில் களாக்காய் படம் இனைதிருக்கேன் வந்து பாருங்க .indraya post

இளமதி said...

நல்ல ,நினைவுப் பதிப்பு ஸாதிகா...

எனக்கும் எங்க ஊரில் அஞ்சு சொன்ன அதே பல்லிமிட்டாய்,
//குட்டி குட்டியா டாலர் பிஸ்கத்னு னு இருக்கும் அதன் மேல் ஒரு துளி ஐசிங் க்ரீம் இருக்கும் // இதே பிஸ்கட் ரொம்பப் பிடிக்கும்.

இன்னும் கடலை உருண்டை, வேர்க்க்டலை அச்சு - உருண்டை, எள்ளுருண்டை, ஐஸ் இதெல்லாம் ரொம்பவே இஷ்டமானதுதான்.

உங்க நினைவுகளும் அருமையா இருக்கு. பகிர்வுக்கு நன்றி ஸாதிகா...:)

Avargal Unmaigal said...

உங்க இந்த பதிவை படித்ததும் யாராவது இதையெல்லாம் பார்க்கவே இல்லையென்று சொல்லுவார்கள் என்று பார்த்தால் ஒருத்தரும் இல்லை. அத்ற்கு பதிலாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாடிச் சென்று இருக்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வயசானவங்க நிறைய பேர் இப்போ நிறைய படிக்க வாராங்க என்று.

நீங்களும் அந்த வயசான லீஸ்டில் இருக்கிறீங்களா என்று கேட்க வருவது எனக்கு கேட்கிறது. நான் வயசானவன் இல்லை எனக்கு வயசே கூடுவதில்லை என்றும் 16 தான்..அடுத்த பதிவில் இங்கு நீங்கள் சொல்லியவையெல்லாம் இன்னும் தமிழ்நாட்டில் எங்காவது கிடைக்கிறதா அப்படி கிடைத்தால் எங்கே கிடைக்கிறது என்று எழுதினால் அடுத்த தடவை இந்தியா வரும் போது வாங்கி சாப்பிடலாம் என்று ஆசை

Anonymous said...

அருமையான பதிவு என்பதைவிட சுவையான பதிவு என்பதுதான் பொருத்தம்..பத்து பைசாவிற்கு உப்புகடலை வாங்கி சாப்பிட்ட நினைவுகள் வருகிறது தோழி..

பால கணேஷ் said...

இந்த எல்லாத்தையுமே நான் ரசிச்சு சுவைசசிருக்கேன் தங்கையே! இப்ப வர்ற தேன் மிட்டாய்லாம் வெறும் வெல்லப் பாகா வருது. எப்படித் தெரியும்னுல்லாம் கேட்டு மானத்த வாங்கப்படாது. போன வாரம்தான் சபலத்துல ஒண்ணு வாங்கி சாப்பிட்டுப் பாத்தேன். அந்த கலர்கலர் ஐஸ்...! இப்ப கிடைக்குமான்னு தெரியல. என் வயசைத் தொலைச்சு சின்னப் பையனாக்கியதுக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!

பூ விழி said...

எல்லாத்தையும் முக்காவாசி சொல்லிடீங்க பழைய நினைவுகள் வந்து அலைமோதுகிறது
நல்ல பதிவு

Asiya Omar said...

ஸாதிகா நீங்கள் பகிர்ந்த அனைத்தும் ரசித்து ருசித்த காலம் ஞாபகம் வருது.இன்னமும் சிலதை நான் வாங்கி ஆசை ஆசையாய் ருசிப்பதுண்டு..

அஜீமும்அற்புதவிளக்கும் said...

நன்றி , நன்றி ,நன்றி , நன்றி , நன்றி பழைய நியாபகங்களை மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு

ஸாதிகா said...

உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும்,தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதற்கும் மிக்க நன்றி திண்டுக்கல்தனபாலன்.

ஸாதிகா said...

ஸாதிகா :))) இப்படியா எங்களை அந்த காலத்துக்கு ஒட்டு மொத்தமாக கூட்டீட்டு போறது :))//இந்த வரிகளில் மகிழ்ச்சி ஏஞ்சலின்.

அதை ஒரு கத்தி பல்லு பல்லா இருக்கும் அதில் வெட்டி வளைத்து வைத்து டிஸ்ப்ளே செய்திருப்பாங்க ..ரோட்டோர கடைல பீச்ல தான் :))//ஆமாம் இங்கே உள்ள பீச்சில்தானே சொல்லுறீங்க.மிகவும் நேர்த்தியாக வெட்டி வைத்து டிஸ்ப்ளே செய்து இருப்பங்க.

பதிவைபடித்துவிட்டு உற்சாகத்துடன் வந்து தொடர் பின்னூட்டம் அளித்த ஏஞ்சலினுக்கு நன்றி

ஸாதிகா said...

என் நினைவுகளைப்படித்துவிட்டு உங்களுகும் பழைய ஞாபகங்களை வரவழைத்ததில் மிக்க மகிழ்சி இளமதி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரிசி மிட்டாயை சீரக மிட்டாய் என்று சொல்லுவோம். ஒவ்வொன்றில் உள்ளேயும் சீரகம் இருக்கும்.

கடலை மிட்டாய், கடலை உருண்டைகள் இன்றும் எங்கும் கிடைக்கின்றன.

குருவி ரொட்டி என்பதை முன்பு Brittania Biscuits Company - Zoological Biscuits என்ற பெயரில் வெளியிட்டார்கள். அரைத்திதிப்பாக மட்டுமே இருக்கும்.

எல்லாப்பறவைகள் + விலங்குகள் வடிவத்தில் இருக்கும்.

>>>>

ஸாதிகா said...

. நான் வயசானவன் இல்லை எனக்கு வயசே கூடுவதில்லை என்றும் 16 தான்..//ஹா ஹா..அ.உண்மைகள் என்றும் 16 ஆக இருந்து கின்னஸில் வந்ஹுடுங்க.ஒகேவா?பின்னூட்டம் ரசித்து சிரிக்க வைத்தது.

ஸாதிகா said...

அருமையான பதிவு என்பதைவிட சுவையான பதிவு //மகிழ்ச்சி நன்றி புதுச்சேரி கலியபெருமாள்.

ஸாதிகா said...

என் வயசைத் தொலைச்சு சின்னப் பையனாக்கியதுக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!//அண்ணே நீங்க எப்பதான் வயசை தொலைத்தீங்க?:)ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பூவிழி

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

அஜீமும்அற்புதவிளக்கும் //பெயர் வித்தியாசமாக உள்ளதே.முதல் வருகைக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாங்காய் கீத்து, கொடுக்காப்புள்ளி போன்றவைகள் எப்போதாவது, இப்போதும் ஆங்காங்கெ கிடைக்கின்றன.

சூடமிட்டாய் என்பது பெரியதாக இருக்கும். வாயில் அடக்கிக்கொண்டால் கமகமன்னு வாசனையுடன் விறுவிறுப்பாக இருக்கும்.

எல்லாமே அழகான நினைவலைகள் தான்.

கமர்கட் நினைத்தாலே அதன் சுவை இனிக்கிறது. வெல்லப்பாகு + தேங்காய் துருவல் + ஏலக்காய் ருசியுடன், கடிக்க மிருதுவாக இருக்கும். இப்போதெல்லாம் முன்புபோல அதிகமாக பெட்டிக்கடைகளில் இல்லாமல் போய் விட்டது.

ooooo

ஸாதிகா said...

மேலதிகத்தவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

மேற்சொன்ன பொருட்கள் இங்கும் கிடைக்கின்றன சார்.கொடுக்காபுளி கூட கூறு கட்டி விற்கின்றனர்.மிக்க நன்றி வி ஜி கே சார்

மனோ சாமிநாதன் said...

ஆகா! ருசிகரமான பதிவை அந்த நாள் ஞாபகத்துடன் கொடுத்து விட்டீர்கள் ஸாதிகா! தேன் மிட்டாய் ருசி இன்னும் ஞாப‌கத்தில் உள்ள‌து! அதன் ருசி இன்னும் நாவில் உள்ளது. கமர்கட் கடலூரில் மிகவும் பிரசித்தம். அங்கு தான் விசேஷமாக தயாரிக்கிறார்கள். மிகவும் ருசியாக, மிருதுவாக இருக்கும். குருவி ரொட்டி ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய பாக்கெட்டில் இங்கும் கிடைக்கிறது! கொடுக்காப்புள்ளி தான் சாப்பிட்டு நாளாகிறது. தஞ்சை பக்கம் எப்போதாவது கிடைக்கிறது. சென்னையில் எங்கே கிடைக்கிறது என்று சொல்லுங்கள். அங்கு வரும்போது அள்ளிக்கொண்டு வந்து விடலாம்!
ருசிகரமான பதிவிற்கும் சின்ன வயது ஞாபகங்களை சிறிது நேரம் அசை போட வைததற்கும் அனு நன்றி ஸாதிகா!!

ஸாதிகா said...

மிக்க நன்றி மனோ அக்கா.பதிவு மனோஅக்காவை ஈர்த்து நீண்ட கருத்தெழுத வைத்துவிட்டதில் மகிழ்ச்சி.இங்கு கொடுக்காப்புளி மாம்பலத்திலெயே கிடைக்கிறது அக்கா.சிவா விஷ்ணு கோவில் வாசல் நெடுக வைத்து விற்கின்றனர்.நன்றிக்கா.

Mahi said...

ஸாதிகாக்கா, உங்களுக்கு ஞாபகம் வந்த ஐட்டங்களில் பவுனு மிட்டாய், காக்கா மிட்டாய் ரெண்டும்தான் புதுசு! மத்தவை எல்லாமே நானும் சுவைத்திருக்கேன்.

தேன் மிட்டாயில் தேன் கலரிலேயே கூட இன்னொரு வெரைட்டி வரும், அதுவும் சூப்பரா ஜூஸியா இருக்கும். நீங்க குருவி ரொட்டி என்பதை நாங்க "பொம்மை பிஸ்கட்" என்போம். :)

எலந்தவடை, எலந்தப்பொடி எப்ப ஊருக்குப் போனாலும் வாங்கி ருசிப்போம்! என்னவருக்கும் இது பேவரிட்!

கொடுக்காப்புளி = சீனிப் புளியங்காய் என்போம்! சித்தி ஊருக்குப் போகையில் ஆத்தோரம் இருக்கும் மரங்களில் பறிச்சு சாப்பிடுவோம், சூப்பரா இருக்கும். இப்பல்லாம் பழமுதிர் நிலையங்களிலேயே கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.

ஜவ்வு மிட்டாய் பார்த்திருக்கேன், வாட்ச் எல்லாம் கட்டியும் இருக்கேன், ஆனா சாப்பிட்டதா பெரிதா நினைவு வரல்ல.

இதிலே "நியூட்ரின்" சாக்லட் என்று ஒரு வஸ்து-வை விட்டுட்டீங்களே? பத்துக்காசுக்கு ஒரு சாக்லட் கிடைக்கும், ப்ரவுன் கலர் பேப்பரில் சுற்றி ப்ரவுன் கலர் சாக்லட். ஈஸியா கரையாம கடிச்சு சாப்பிடற பக்குவத்தில் இருக்கும்.
ஹ்ம்ம்ம்...நல்லாத்தான் கிளப்புறாங்கய்யா பழைய நினைவுகளை! :)))

ஸ்ரீராம். said...

போங்க மேடம்.... எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டு பின்னூட்டத்தில் நீங்களும் சொல்லுங்க என்றால் எப்படி!! :))

தேங்காய் மிட்டாய், வெல்ல மிட்டாய் போன்றவை நீங்கள் சொன்ன மிட்டாய் வகைகளுடனும், ஐஸ் வகையில் பால் ஐஸ் இன்று கிடைக்காத சோகமும் நினைவுக்கு வருகின்றன.

பள்ளி விட்டுச் செல்லும் வழியில் புளியம்பழம் உதிர்த்து, பொருக்கி சாப்பிடுவோம் புளியங்காய் டிராயர் பையில் வைத்து வகுப்பின் நடுவே ஒரு கடி கடித்தால் வரும் புளிப்பை எயன்றும் என் நாக்கு 'ஸ்ர்ர்ர்' என்று நினைவு படுத்துகிறது! இன்று அப்படிச் சாப்பிட முடியாது. கொன்றை வேந்தன் பூவை (குல் மொஹர் என்று ஞாபகம்) மொட்டிலிருந்து பிரித்து எடுத்து இதழ்களைச் சாப்பிடுவோம். "அதைச் சாப்பிடாதேடா... மஞ்சக் காமாலை வரும்" என்பார் பாட்டி!

ஸ்ரீராம். said...

கிளாக்காய் நாங்களும் சாப்பிடுவோம். முள்ளுச் செய்தியில் இருக்கும். கையிலேயே இருக்கும் சிறு முல்லை எடுத்து விட்டுச் சாப்பிடுவோம். தஞ்சை பக்கங்களில் இன்னொரு சுவாரஸ்யம் முந்திரிப் பழம்.

சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும் வஸ்து!!

மு. தோட்டக் காவல்காரர், அருகிலேயே எங்கள் வீடு என்பதால் 'தம்பிகளா! பழம் சாப்பிடுங்க! ஆனால் முந்திரிக் கொட்டைகளை மட்டும் அங்கேயே போட்டு விட்டுப் போங்க" என்பார்.

ஷைலஜா said...

இப்படியா எல்லாத்தியும் ஒட்டுமொத்தமாபோடறது ஒரே ஜொள்ளு தான் போங்க:) கொடுக்காப்புளி ஜவ்வுமிட்டாய் கடலை உருண்டையெல்லாம் திருவரங்க நினைவுகளை மீட்டுத்தருகிறது சாதிகா!

Kanchana Radhakrishnan said...

மிகவும் சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுகள்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

அடடா அடடா எத்தனை வகையான இனிப்புக்கள். நீங்கள் அரிசி மிட்டாய் என்பதை நாங்க பல்லி மிட்டாய் என்போம்.

இலந்தை வடை என்பது ஒரு இனிப்போ? நான் நினைத்திருந்தேன், இலந்தைப்பூவில்/காயில் சுடும் வடையாக்கும் என.

துளசி கோபால் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

இந்த வயசிலும் பார்த்தவுடன் எச்சி ஊறுதேப்பா!!!!!

இலந்தவடை மகளுக்கு ரொம்பப் பிடிக்கும்!

சவ்வு மிட்டாய் இதுவரை சாப்பிடக்கொடுத்து வைக்கலை. அட்லீஸ்ட் ஒரு வாட்ச் வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கலாம்:(

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

மரவள்ளி கிழங்கு, நாகப்பழம், நெல்லிக்காய், வேகவைத்த வேர்கடலை

Ranjani Narayanan said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....ஜவ்வு மிட்டாயும், குட்டி குட்டி அனிமல் பிஸ்கட்டும்,கடலை மிட்டாயும், காக்கா கடி கடிச்சு கொடுத்த கமறுகட்டு மிட்டாயும்....
குச்சி ஐஸுக்கு எங்கள் வீட்டில் தடா! டான்சில்ஸ் பிரச்சினை இருந்ததால்...ஆனாலும் அந்த ஐஸை வண்டிக்காரர் துருவும் அழகும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கலரைப் போடும் அழகும்....கண்ணிலேயே நிற்கிறது காட்சி!

சோனகன் said...

நினைவுகளின் தடங்களை மீள்படுத்திய அருமையான பதிவு, 1970 மற்றும் 1980 களில் எங்களின் நாவுகளை அடிமைபடுத்திய சுவையினை, மீண்டும் சுவைமாறாமல் இந்த பதிவின் மூலம் கண் முன்னால் நிறுத்திவிட்டீர்கள். அந்த சமயத்தில் சிறுவர்களின் விருப்ப பொருட்களாக இருந்ததும் மட்டுமின்றி குடிசைத் தொழிலாகவும் இருந்து ஏராளமான குடும்பங்களின் வறுமையையும் இந்த பொருட்கள் போக்கியது, 1990 களில் ஏற்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகளினால் இது போன்ற தொழில்கள் நலிவடைந்து , நம்மைவிட்டு அகன்றுவிட்டது.

மாதேவி said...

எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டு போய்விட்டார்கள் :)))
நான் இப்பொழுதுதான் வந்தேன்.

குச்சிஜஸ்,நிலக்கடலைத்தட்டு,குருவி ரொட்டி, மாங்காய், புளியங்காய் சாப்பிட்டிருக்கின்றேன்.

கொடுக்காய் புளி கண்டதில்லை.
சாய மிட்டாய்களுக்கு வீட்டில் தடா.

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

இராஜராஜேஸ்வரி said...

சுவையான மலரும் நினைவுகளைச் சுமந்த இனிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

Anonymous said...

பல இனிப்புகள் தெரியாதது. சில நாம் சிறு வயதில் சாப்பிட்டு மகிழ்ந்தது.
பழைய நினைவுகள் உருளுகிறது. மிக்க நன்றி.ஸாதிகா
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

miga arputham.