November 15, 2013

மூடாத பொக்கிஷம்
“வாப்பா..இந்த சம்மை எப்படிப்போடணும்” சமீரின் 10 வயது மகள் திரும்பத்திரும்ப கேட்டும் சமீரின் காதில் வார்த்தைகள் விழுந்தாலும் மூளையில் பதியாமல் போனது.

“வாப்ப்ப்ப்ப்பா”மகள் அழுத்தி சப்தமாக கேட்டதும் சுதாரித்துக்கொண்டான்.

மகளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.காலையில்  வங்கியில் போட்ட செக் பவுன்ஸ் ஆனதில் இருந்து சமீரின் மனது நிலை கொள்ளாமல் துடித்தது.கடந்த ஆறு மாதம் முன்பு வரை நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரம் எதிரே பிருமாண்டமான ரெடிமேட் ஷாப் திறந்ததும் சமீரின் கடையில் நடக்கும் வியாபாரம் படிப்படியாக குறைந்து போனது.வியாபாரம் ஓஹோ என்றுஇருந்தவனுக்கு இப்போது கஷ்டமான சூழ்நிலை.நன்றாக இருந்த சூழ்நிலையில் வருடா வருடம் முப்பது நாள் நோன்பில் ஒரு நாள் சஹருக்கு பள்ளிவாசலில் இவனது செலவில் சாப்பாடு நடக்கும்.வரும் வெள்ளியன்று சமீரின் செலவில் சாப்பாடு.

சாப்பாட்டுக்குழுவினர் நோன்பு ஆரம்பத்திலேயே “இந்த வருடமும் வழக்கம் போல் ஒருநாள் உங்கள் செலவில் சஹர் உணவு உண்டுதானே லிஸ்டில் சேர்த்துக்கொள்ளட்டுமா உங்கள் பெயரை?”என்று கேட்டபோது மனதார பெயர் கொடுத்து விட்டான்.இப்போது போய் முடியாது என்று எப்படி சொல்ல இயலும் .யா அல்லாஹ் நான் என்ன செய்வேன்?”மனம் கலங்கிப்போனது.

200 பொட்டலம் சாப்பாடு ஆர்டர் செய்வதாக இருந்தால் குறைந்தது 10000 தேவைப்படும்.அந்த பத்தாயிரத்தை புரட்டத்தான் இரண்டு நாட்களாக அலைச்சல்.கஸ்டமர் கொடுத்த  செக்கை நம்பி இருந்தவனுக்கு செக் பவுன்ஸ் ஆனதில் திகைத்துப்போய் விட்டான்.கைமாற்று வாங்கலாம் என்று பார்த்தால் உதவுபவர் யாரும் இல்லை.

“தப்பா நினைச்சுக்காதீங்க பாய்.பெருநாள் நெருங்குது பாருங்க நமக்கு கொஞ்சம் டைட்”

“அல்லாஹ்வே..நேற்றே கேட்டு இருக்கக்கூடாது.”

“மன்னிச்சுக்குங்க பாய்.என்னாலே உதவ முடியாததற்கு”

இப்படியான பதில்களில் நொந்து போனான் சமீர்.

உணவக உரிமையாளர் மதார் போன் செய்துவிட்டார்,”சமீம் பாய்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தானே நான் பொருட்கள் வாங்க முடியும்,இன்னும் ஒரே நாள்தானே உள்ளது?”

இஃப்தாருக்கு தயார் செய்து கொண்டிருந்த சமீரின் மனைவி நிஷா கணவரின் சோகமுகம் கண்டு ”ஏங்க..ஹபீப் காக்காவிடம் கேட்கலாம் என்று போனீர்களே என்ன ஆச்சு “என்றாள்.

“அவர் ஊருக்கு போய்விட்டார்.அவர் இருந்தால் இத்தனை திண்டாட்டம் இல்லை.தாத்தா,வாப்பா காலத்தில் இருந்து வருடாவருடம் தொடர்ந்து செய்து வந்த காரியம்.இந்த வருடம் முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது”

”கவலைப்படாதீங்க.அல்லாஹ் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டான்.இஃப்தாருக்கு நேரம் ஆகுது.கைகால் அலம்பிட்டு வாங்க”

“மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளதும்மா.என்ன பண்ணுறது என்று புரியவே இல்லை”புலம்பியபடி எழுந்தான்.

மறுநாள்...

வழக்கம் போல் கடையை திறந்து விட்டு கல்லாவில் அமர்ந்த மறு நிமிடமே கேட்டரிங் மதாரிடம் இருந்து போன்.

“பாய்..என்ன சப்தத்தையே காணோம்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தான் நான் சாமான்கள் எல்லாம் வாங்க முடியும்.”

“பாய்..நான் மதியம் போன் செய்கிறேன்.கொஞ்சம் பொறுங்க”இப்படி சொல்லி விட்டானே தவிர மதியம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி சமீரை சுற்றி வளைத்தது.

மதியமும் போய் மாலையும் வந்தது.எந்நேரமும் மீண்டும் கேட்டரிங் மதாரிடம் இருந்து போன் வந்து விடுமோ என்ற நினைவு சமீரை சங்கடப்படுத்தியது.

“நிஷா...பேசாமல் மதார் பாயிடம் இந்த வருடம் பண்ணவில்லை என்று சொல்லி விட்டு பள்ளிவாசல் ஆட்களிடமும் சொல்லி விடலாமா?”

“எப்படிங்க..கடைசி நேரத்தில் சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள்”

“யா அல்லாஹ் இப்ப நான் என்ன செய்யப்போகிறேன்”அவர் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே காலிங் பெல் சப்தம்.

“நிசா,யாரென்று போய் பாரு”

வாசலில் காதர் பாய்.”அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்கும்சலாம் .உள்ளே வாங்கண்ணா”

“சமீர் பாய் இல்லையா”கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே சமீர் வந்து விட்டார்.”வாங்கண்ணா..என்ன அதிசயமாக வீட்டு பக்கம்..”

“உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”

”சொல்லுங்கண்ணா”

“வழக்கம் போல் எங்கள் வீட்டில்  நண்பர்கள்,உறவினர்கள்,தொழில் நட்புக்கள், என்று 200 பேருக்கு சஹர் சாப்பாடு போடுவோம்.நாளைக்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கும் பொழுது ஊரில் இருக்கும் என் பாட்டிக்கு சீரியஸ் என்று போன் வந்தது.நாங்கள் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறோம்.ஏற்பாடெல்லாம் நடந்து விட்டது.நீங்கள்தான் பள்ளி வாசலில் நாளைய சஹருக்கு அரேஞ்ச் பண்ணுவீர்களே.இதனை நீங்கள் எடுத்து செய்யுங்கள் பணவிபரம் எல்லாவற்றையும் மெதுவா செட்டில் பண்ணிக்கலாம்.நான் அவசரமாக கிளம்பணும்.வரட்டுமா”

சமீர் திகைத்துப்போய் நின்று இருந்தான்.வீட்டில் எங்கேயோ “பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”என்ற பாடல் வரிகள் காற்றில் மெதுவே தவழ்ந்து செவியில் விழுந்து இதயத்தை நிறைத்தது.

30 comments:

ஸ்ரீராம். said...

இறைவன் ஒன்றை தாமதப் படுத்தினால் அதைவிடச் சிறப்பானதாக ஒன்றைத் தரப் போகிறான் என்று அர்த்தம் என்று சொல்வார்கள். "பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்.." ஆம். உண்மைதான். அவன் இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன். ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

super shadiqa akka.

http://www.chennaiplazaik.com/2013/11/latest-type-mini-hand-bag.html

http://samaiyalattakaasam.blogspot.com/

RajalakshmiParamasivam said...

கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதை உங்கள்
பதிவு நன்கு விளக்குகிறது.
பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூடாத பொக்கிஷம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான நம்பிக்கைக் கதை
படித்து மிகவும் மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Asiya Omar said...

//பொறுமையோடு கேட்டுப் பாருங்கள்,அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை//
உண்மை. உருக்கமான கதை.முடிவு எதுவாக இருக்கும் என்று விறுவிறுப்பாக கதையை வாசிக்க வைத்தது கதாசிரியரின் திறமை.மிக அருமை ஸாதிகா.வெல்கம் பேக்.

Menaga Sathia said...

அருமை அக்கா,ஏனோ தெரியவில்லை நான் இருக்கும் இன்றைய மனநிலையில் இந்த கதையை படிக்கும் போதே அழுதுவிட்டேன்....இறைவனை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.

Anonymous said...

வணக்கம்

கதையின் நகர்வும் முடிவும் அருமை லாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பினோர்
கைவிடப்படுவதில்லை

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான அற்புதமான கதை ஸாதிகா அக்கா

Thenammai Lakshmanan said...

அருமையான கதை ஸாதிகா..

ராமலக்ஷ்மி said...

உண்மை. மிக நன்று, ஸாதிகா.

ஸாதிகா said...

பின்னூட்ட வரிகள் மனதிற்கு மகிழ்ச்சி தருவனவாக இருந்தது ஸ்ரீராம் சார். உடன் கருத்துக்கும்,தொடர்வ் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

அவசியம் லின்கை பார்க்கிறேன் ஜலி நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றிசகோ ராஜலக்‌ஷ்மி பரமசிவம்

ஸாதிகா said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

அற்புதமான நம்பிக்கைக் கதை
படித்து மிகவும் மகிழ்ந்தேன்//வரிகளில் மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

ஆசியா கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

இன்றைய மனநிலையில் இந்த கதையை படிக்கும் போதே அழுதுவிட்டேன்....இறைவனை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.//இறைவன் உதவியால் உங்கள் மனநிலை இன்று சகஜத்திற்கு வந்து மகிழ்வாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் மேனகா.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ரூபன்.

ஸாதிகா said...

நம்பினோர்
கைவிடப்படுவதில்லை//உண்மை சகோ கரந்தை ஜெயக்குமார்.நன்ரி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

மிக்க நன்றி தேனு.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.

சாந்தி மாரியப்பன் said...

சிறுகதை நிறைவாயிருக்குது..

ஸாதிகா said...

மிக்க நன்றி அமைதிச்சாரல்.

ஹுஸைனம்மா said...

வழக்கம்போல உங்கள் அபார நடையில் கதை அருமையாக வந்திருக்கிறது அக்கா.

இருப்பினும், எனக்கு ஒரு மாற்றுக் கருத்து உண்டு. இஸ்லாம், தனக்குப் போய்த்தானே தானதருமங்கள் செய்யச் சொல்கிறது. கடன் வாங்கிச் செய்வதை வலியுறுத்தவில்லையே அக்கா.

ஏனெனில் இதேபோன்ற ஒரு சம்பவம் இந்த நோன்பில் என் உறவினருக்கு நடந்தது. சொந்தத் தொழில் நஷடத்தால், கடன் மேல் கடன். என்ற போதிலும், குடும்பம் & சமூகத்தில் தன் ஸ்டேட்டஸை மெயிண்டெய்ன் செய்ய மேலும் கடன் தொடர்கிறது. அந்த வருத்தம்தான். :-( :-)

ஸாதிகா said...

கதை என்பது கதாசிரியர்களின் சொந்த கருத்தாக கருதிவிடக்கூடாது என்பது கதை எழுதும் உங்களுக்கும் தெரியும்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும் என்பதும் அனைவரும் அறிந்ததுதுதான்.

இந்தக்கதை எழுதக்காரணம் திடீரென்று என் ஞாபகத்தில் வந்த அந்நாளில் என் பாட்டி சொன்ன ஒரு செய்தி.எங்களூரில் மிகவும் பாரம்பர்யமான பிரபலமான குடும்பம்.அவர்களும் இதே போல் வருடந்தோறும் செய்யும் ஒரு நல்ல காரியத்தை செய்ய இயலாமல் போகும் அளவுக்கு பொருளாதார சூழ்நிலை ஏற்பட்ட பொழுது அந்தகுடும்பத்தின் தலைவி தன் நகைகளை எல்லாம் எடுத்து வந்து அந்த நல்ல காரியத்தை செயல் படுத்தும் படி கூறினாராம்.இன்றைக்கும் அந்த குடும்பத்தின் நிலை அந்நாளை விட பன்னூறு மடங்குகள் அதீத செல்வாக்கு,மேம்பட்ட பொருளாதாரவசதியுடன் சிறப்பாக ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளித்துக்கொண்டுதான் உள்ளது.அல்லாஹுஅக்பர்.நன்றி ஹுசைனம்மா.

shameeskitchen said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,
மனதை நெகிழ வைத்து விட்டது உங்கள் கதை..
வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...


“பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”

சத்தியமான நித்திய வரிகள்..!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html