
பதினெட்டு,பதினாறில் என் செல்வங்கள் அவர்களை நான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் வளர்ந்திருந்தாலும்,இறைஅச்சமும்,படிப்பும்,கணினியும்,வாழ்க்கைமுறையும் , அவர்களுக்கு நான் அறியாதவைகளை எல்லாம் கற்றுத்தந்திருந்தாலும்,பெற்ற எனக்கே யோசனைகளும்,கருத்துக்களும் கூறி என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் எனதருமைசெல்லங்கள் இன்றுவரை என்கதைகள் கேட்டு மகிழ்வார்கள்.நற்கதைகளும்,நீதிக்கதைகளும் கூறி அவர்களை புடம் போடுவதென்பது என்னின் மகிழ்ச்சி.சகோதரர் ஸ்டார்ஜன் தொடர் பதிவின் அழைப்பிற்கிணங்க என் பிள்ளைகள் கேட்டு மகிழ்ந்த கதை இங்கே..
செம்பவழநாட்டில் செம்பவழன் என்றொரு மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான்.தன் மக்களுக்கு நல்லது செய்யும் தயாளகுணம் கொண்ட மன்னனாகினும் கண்டிப்பும்,கறாரும் மிகுதியானவன்.இது தலைமைக்கு அழகுதானே?
அதே நாட்டில் அஹ்மத் என்றொரு ஏழை வாழ்ந்து வந்தான்.அவன் வாழ்க்கையே பசியும்,பட்டினியினாலும் பின்னிபிணையப்பட்டவை.தன் தரித்திரம் தாங்க முடியாமல் மன்னனிடம் சென்று தன் ஏழ்மைபற்றி முறையிட்டு வறுமை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டான்.
மன்னன் அவனது வேண்டுகோளை ஏற்று விலை மதிப்புள்ள ஒரு வைரக்கல்லை வழங்கினான்.அஹ்மத் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கும் பொழுது ஒரு குளம் கண்டு தன் தாகம் தீர்க்க குளக்கரையில் அமர்ந்து கைகளால் நீரை அள்ளி பருக ஆரம்பித்தான்.
தன் தாகம் தீர்ந்த பின்தான் தெரிந்தது.சட்டைப்பையில் பத்திரமாக வைத்திருந்த வைரக்கல் குளத்தோடு போய் விட்டதென்று.அழுதும,புலம்பி இருட்டும் வரை குளக்கரையில் தேடி ஓய்ந்து கவலையுடன் வீடு திரும்பினான்.
மறுநாள் மீண்டும் அரசனிடம் சென்று முறையிட்டான்.அரசரோ அவனது அலட்சியத்தை கடிந்து விட்டு இன்னொரு வைரக்கல்லை கொடுத்து "இதுதான் கடைசி"என்று எச்சரித்து அனுப்பினார்.
இப்பொழுது வைரக்கல்லை துணியால் சுற்றி பத்திரமாக தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மகிழ்வுடன் வீடு திரும்பிய பொழுது மீண்டும் அதே குளம்,அதே தண்ணீர் தாகம்.இந்த முறை முன்னெச்சரிக்கையாக துணியில் சுற்றப்பட்ட வைரத்தை பத்திரமாக குளத்தடியில் வைத்து விட்டு நீர் அருந்திவிட்டு வந்து பார்த்தால்..ஒரு காகம் துணியுடன் சேர்த்து வைரகற்களை கவ்விய படி பறந்து மறைந்து விட்டது.
அதிர்ச்சியில் சிலையாகிப்போன அஹ்மத் அழுதபடி வீடு திரும்பினான்.அரசரை மீண்டும் சந்தித்து பேச பயந்தவன் பசியும் பட்டினியுமாக வாழ்ந்த பொழுது அரசனிடம் இருந்து மறு அழைப்பு.
பயந்தபடி சென்றவனிடம் அரசன் கேட்க,நடந்தவைகள் அனைத்தையும் அழுதபடி கூறினான்."இதற்கு மேல் நான் உதவி செய்ய முடியாது.எல்லாம்வல்ல இறைவனிடம் கேள்.அவன் உனக்கு உதவி செய்வான்"என்று கூறி அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்தததும் இறைவனிடம் அழுது,புலம்பி தனக்கேற்பட்ட இன்னல்களை கூறி உதவி கேடவனாக இருந்தான்.

அஹ்மதின் மனைவி பல நாள் பட்டினியுடன் வாடியவள் அன்று தன் வீட்டு கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கீரைகள் பறித்து கட்டுகளாக கட்டி விற்ற பணத்தை அஹ்மதிடம் கொடுத்து"இன்றாவது பிள்ளைகளுக்கு மீன் குழம்பு வைத்துக்கொடுப்போம்.மீன் வாங்கி வாருங்கள்"என்றாள்.
அஹ்மதும் பணத்தை வாங்கிச்சென்று மீன்கள் வாங்கி வந்தான்.
மீன் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ காகம் வந்து மீனை கவ்விக்கொண்டு போய் விட்டது.
அஹ்மத் காகம் சென்ற திக்கில் போனபொழுது அது முருங்கை மரத்தில் கட்டி இருந்த கூட்டினுள் போய் உட்கார்ந்ததை பார்த்த பொழுது அவசரமாக முருங்கை மரம் ஏறி மீனை எடுத்து விடலாம்.இன்றொருநாளாவது பிள்ளைகள் வயிறார மீன் சாப்பாடு சாப்பிடட்டும் என்ற நோக்கில் மரம் ஏறி காகத்தை விரட்டி மீனை கையால் எடுத்த பொழுது கூட்டினுள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம் கண்டு அதனையும் மீனுடன் சேர்த்து எடுத்து வந்தான்.
அந்த பொட்டலம் அவன் வைரம் வைத்து சுற்றபட்ட பொட்டலம்.வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி கூறி வைரத்தை பத்திரப்படுத்தினான்.
கணவனால் மீட்கப்பட்ட மீன் திரும்ப கிடைத்ததும் அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தவள் மீன் வயிற்றினுள் இருந்து ஒரு வைரகல்லைப்பார்த்து கணவரிடம் கூற அது அரசனால தனக்கு வழங்கப்பட்ட வைரம்தான் என்பதனை அறிந்து இறைவனின் கருணையை,அளப்பறிய ஆற்றலை,கேட்டதும் உதவிய தயாளத்தை எண்ணி வியந்து தரையில் நெற்றி பதித்து இறைவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான்.
நீதி:
இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
ஈ எம் ஹனீஃபா அவர்களின் கணீர் குரலில் இந்த வைரவரிப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் உடல் புல்லரிக்கும்.மனம் சிலிர்த்துப்போகும்,கண்களில் கண்ணீர் ததும்பும்,இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் இன்னுமும் அதிகரிக்கும் போலுள்ள பிரம்மையை ஏற்படுத்தும்.நீங்களும் ரசியுங்கள்.
Tweet |