November 21, 2009

பெருநாள் - நினைவலைகள்...பெருநாள் என்றதும் என் சிறுவயது பெருநாள் ஞாபகம் வருகின்றது.பெருநாளைக்கு முதல் நாளே வீட்டில் இருக்கும் வேலைஆட்கள் போதாது என்று தோட்டங்களில் வேலை செய்யும் தொட்டக்கார அம்மாக்கள் ஆஜாராகி விடுவார்கள்.

காதில் நீளமாக தொங்கும் பம்படம் அழகாக நடனமாட அவர்கள் அம்மியில் மசாலா அரைக்கும் அழகே தனிதான்.நிமிடத்திற்கு எத்தனை முறை அநத பம்படம் 'சொய்ங்க்..சொய்ங்க்' என்று ஆடும் என்று நான் அருகில் இருந்து கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு விரல் விட்டு எண்ணுவதை இப்போது நினைத்துக்கொண்டாலும் சிரிப்பு வருகின்றது.

வீடு முழுக்க மசாலா மணம்.சர்..சர்.. என்று தேங்காய் துருவும் ஓசை,பாத்திரம் உருளும் ஓசை,சூடான சட்டியில் எண்ணெய் தெரிக்கும் ஓசை அத்தனை ஓசைகளும் வெளியே இருந்து வரும் பட்டாசு ஓசையை மீறி வரும். இதெல்லாம் ஓய இரவு பணிரெண்டு மணிக்கு மேலாகி விடும்.மறுநாள் விடிகாலை 4 மணிக்கே வீடு களை கட்டிவிடும்

அந்த இருட்டான அதிகாலையிலே வெளியே"பூ..பூ..மல்லிப்பூ..கதம்பப்பூ..கனகாம்பரப்பூ"பூக்காரர் கூவும் சப்தம் கேட்டு விழிப்பு வரும்.எழுந்ததுமே பூ வாங்குவதுதான் முதற்கண் வேலை.

அடுக்களையில் வீட்டுக்கு வரும் ஆட்களுக்கு கொடுப்பதற்காக பரோட்டாவும்,இடியாப்பமும் அம்பாரமாக குவிந்து இருக்கும்.பரோட்டவை எடுத்து ஒரு விள்ளல் சாப்பிட்டால்..அந்த சுவையே அலாதிதான்.

ஹஜ்ஜுபெருநாள் என்றால் இறைச்சியை சுடுவார்கள்.அதுவும் அந்த அதிகாலை நேரத்திலேயே நடக்கும்.குர்பான் கொடுக்க விருக்கு ஆடுகள் "மே..மே.." என்ற அபயக்குரம் எழுப்புவதை பார்க்கும் பொழுது பாவமாக இருக்கும்."சே..இனி மட்டன் பக்கமே தலை வைத்துபடுக்கக்கூடாது "என்ற வைராக்கியம் அடுத்த ஒரு மணி நேரத்தில் டைனிங்க் டேபிளில் பரப்பி வைக்கப்படும் பதார்த்தங்களை பார்த்தும் பறந்து விடும்.

தூரத்தில்"அல்லாஹுஅக்பர்..அல்லாஹு அக்பர்"என்ற தக்பீர் ஒலி செவிகளில் வந்து மோதும் போது கேட்பவர்களின் வாயும் அதனை உச்சரிக்கும்.

குளித்து,பட்டுப்பாவாடை தரித்து,"நகைங்க..பத்திரம்..கவனமாஇருக்கணும்"என்று சொல்லுவதை வலதுகாதில் வாங்கி இடது காது வழியே விட்டு ,பட்டுப்பாவாடை மிணுங்க,நகைகள் ஜொலிக்க காலி பர்சுடன் வீட்டில் உள்ள வ்ர்கள் முன்னாலே போய் நின்றாலே கனிசமான பைசா (அதுதான் பெருநாள் பண்ம்)தேத்திவிடுவோம்.எதிர்பார்த்த பைசா கிடைக்கவில்லையா?அடாவடி செய்தாவது அந்த தொகையை பெற்றுவிடுவோம்.

பர்சுடன் சேர்ந்து மனதும் நிறைந்தவுடன் இனி வயிறு அலாரம் அடிக்கும்.அப்புறம் என்ன?நேரே டைனிங் அறைதான்.ஜால்ரா ஆப்பம்,வெள்ளடை,பரோட்டா,இடியாப்பபிரியாணி,பொரித்த இறைச்சி,மட்டன் குருமா,சிக்கன் பிரை,வட்டலாப்பம்,பொட்டீஸ்,மஞ்சப்பம்,பாயாசம்..என்று வெளுத்துக்கட்ட வேண்டியதுதான்.

அப்புறம் நேரே தொழுகைப்பள்ளி..இரண்டு ரக அத் ஈத் தொழுகை முடித்த பின் முஅத்தீன் முழங்கும் தக்பீரை சப்தமாக,கோரசாக அப்படியே வழி மொழிவோம் பாருங்கள்.இதில் யார் குரல் உச்சஸ்தாயியில் இருக்கும் என்ற பட்டிமன்றமே ஸ்நேகிதிகளுக்குள் நடக்கும்.


பள்ளியில் தரும் சாக்லேட்டை மென்ற படி பர்ஸில் இருக்கு தொகையில் இருந்து ஒரு பத்துரூபாய் கூட எடுத்து தர மனதில்லாமல் 'அதெல்லாம் பெரியவங்க பார்த்துப்பாங்க " என்ற எண்ணத்தில் 'பள்ளிக்கு வெளியில் கழற்றி வைத்திருக்கும் புது செருப்பு பத்திரமாக இருக்கா"என்ற பதைபதைப்போடு வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு ஈத்மைதானத்திற்கு ஒடுவோம் பாருங்கள்.குச்சிஐஸ்,கமர்கட்,அச்சார்,சுண்டல்,தம்பிமார்களுக்கு கிளுகிளுப்பை,பொம்மைக்கிளி,பலூன் ,ஊதி,விசில்,பைனாக்குலர்,பாம்புவெடி என்றுகை நிறைய வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பொழுது உறவினர் வீடுகளில் இருந்து பார்சல்,பார்சலாக வந்திருக்கும் குர்பான் கறி கவுச்சி வாசனை முகத்தை சுளிக்க வைக்கும் .

மதியம் செய்து வைத்திருக்கும் சாப்பாடை சாப்பிட பிடிக்காமல் ஒருகண் தூக்கம் போட்டுவிட்டு ஸ்நேகிதப்பட்டாளம் சூழ இன்னொரு பெரிய ஈத் மைதானத்திற்கு சென்று விடுவோம்.மெலிந்து போய் இருக்கும் பர்சை வீட்டில் பார்த்து விசனப்பட்டுக்கொண்டே அம்மாவிடம் கெஞ்சி,கூத்தாடி இன்னொரு தொகையை பெறுவது அவரவ்ர் சாமர்த்தியம்.

ரங்க ராட்டிணம்,குடை ராட்டிணம்,மேஜிக் ஷோ,மொட்டார் சைக்கிள்ஷோ,கடல்கண்ணி ,பொம்மலாட்டம்,பெரிய அப்பளம்,மிளகாய்பஜ்ஜி,மசால் வடை ரோஸ்மில்க் இப்படி பர்சை காலி செய்து விட்டு பொடி நடையாக நடந்தால் நேரே ஐயர் ஹோட்டல்தான்.

பர்சைதான் காலி பண்ணியாச்சே!அப்புறம் ஹோட்டலில் சாப்பிட எங்கே போவாய் என்று கேட்காதீர்கள்.ஸ்நேகிதிகளுக்குள் அட்ஜஸ்ட்மெண்ட்தான்.சொரசொரப்பான சிமிண்ட் தரை,காலருகே ஓடும் கரப்பான்,எச்சில்தெரிக்க பேசும் சர்வர்,"ரெண்டு..பூரீஈஈஈ மசாலேய்ய்ய்ய்.."என்று கூவும் கூக்குரம்,காலையில் வைத்த ஊசிப்போன சாம்பார்,புளித்துப்போன சட்னி,சூடாக இருந்தாலும் புளியங்காயை கடித்தாற்போல் இருக்கும் தோசை..இத்யாதி..இத்யாதி..இதெல்லாம் பொருட்டே இல்லை.தோழிகளுடன் ஜாலியாக ஹோட்டலில் சாப்பிடுகிறோம் ..அவ்வளவுதான்.


அநியாயத்திற்கு வயிற்றைக்கெடுத்துக்கொண்டு ,வீடு வந்து சேர்ந்தால் அம்மாவிடம் கொஞ்சம் வாங்கிக்கட்டிகொள்வோம் பாருங்கள்.அதிலும் தனி சுகம்தான்.

"மா..ஈத் முபாரக்.வீட்டில் பிரேக் பாஸ்ட் வேண்டாம்.ரெஸ்டாரெண்ட் போவோமா,ஈவினிங் சிட்டி செண்டர் போய் லேண்ட்மார்கை அலசிவிட்டு கே எஃப் சியில் டின்னரை முடிக்கலாமா"இப்படிக்கேட்கும் பிள்ளைகளை பார்க்கும் பொழுது எனக்கு பாவமாக இருக்கும்,இதெல்லாம் இப்ப ரொம்ப மிஸ் பண்ணுவதை நினைக்கும் பொழுது...


பி.கு: பதிவுலகில் உள்ள உடன் பிறப்புகள் அநேகர் டிஸ்கி என்று போட்டுக்கொள்கின்றாகள்.என்னையும் அந்த மேனியா தொற்றிக்கொண்டுவிட்டது.நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். பதிவில் வராத பிரியாணி படத்தில் வந்துள்ளதே என்கின்றீர்களா?பிரியாணி இல்லாமல் பெருநாள் எப்படி?அதுதான் பிரமாண்டமான பிரியாணிசஹன் படத்தைபோட்டு கண்களுக்கு விருந்தளித்திருக்கின்றேன்.சஹனில் தோரயமாக எத்தனை கிலோ இறைச்சி போட்டு இருப்பார்கள் என்று பார்க்க விரும்பினால் படத்தை சொடுக்குங்கள்

30 comments:

சோனகன் said...

பெரு நாள் நினைவுகளை அற்புதமாக விளக்கி, பெரு நாள் வெட்டை, மணல் மேடு, லலிதா அய்யர் ஹோட்டல் என வழக்கில் மறந்து போன மற்றும் தேய்ந்து கொண்டிருக்கும் வட்டார வழக்கத்தினை கண் முன் நிறுத்தி விட்டீர்கள். தங்களின் நினைவலைகள் தொடர வாழ்துக்கள்

Menaga Sathia said...

//நேரே டைனிங் அறைதான்.ஜால்ரா ஆப்பம்,வெள்ளடை,பரோட்டா,இடியாப்பபிரியாணி,பொரித்த இறைச்சி,மட்டன் குருமா,சிக்கன் பிரை,வட்டலாப்பம்,பொட்டீஸ்,மஞ்சப்பம்,பாயாசம்..என்று வெளுத்துக்கட்ட வேண்டியதுதான்.// ஐயோ நாக்குல நீர் ஊறுதே....

எனக்கும் இதெல்லாம் செய்து கொடுங்க அக்கா.

பொட்டீஸ் என்ன டிபன் அக்கா?

அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்!!

என்னன்ன செய்தீங்கன்னு அப்புறமா சொல்லுங்க.நல்லா எஞ்சாய் பண்ணுங்க..

பாவா ஷரீப் said...

அழகா யதார்த்தமா எழுதுரீங்கக்கா அருமை

ஹுஸைனம்மா said...

நல்லதொரு மலரும் நினைவுகள் அக்கா.

நாஸியா said...

ரொம்ப சுவையா இருந்துச்சு, படிக்க.. ஈத் முபாரக் லாத்தா.. எனக்கும் வீட்டை தேடுது.. உங்க அளவுக்கு பெருநாளை நானும் கொண்டாடுனது இல்லை.. ஆமா பொட்டீஸ்னா பெட்டீஸா? எங்க ஊருல சமொசா மாதிரி இருக்குறதை பெட்டீஸ்னு சொல்லுவோம்..

ஸாதிகா said...

ஆமாம் சோனகன்,நானே பதிவிட்டு விட்டு பல முறை திரும்ப,திரும்ப படித்து பார்த்து சிலாகித்தேன்.மறுமொழிக்கு மிக்க நன்றி

செ.சரவணக்குமார் said...

பெருநாள் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு நன்றி மேனகா.பொட்டீஸ் என்பது மைதாவில் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு உள்ளே பூரணமாக இறைச்சி,வெங்காயம்,காரம் கலந்த பூரணத்தை வைத்து நான்காக மடித்து தவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுப்பது.அருமையாக இருக்கும்.உங்களுக்காக யாரும் சமைக்கலாமில் போடுகின்றேன்.

ஸாதிகா said...

ரொம்ப நன்றி சகோதரரே.கொடி இறக்கு விழாவில் கலந்து படங்களை பதிவில் போட்டு இருக்கின்றீர்கள்.நன்றாக இருந்தது.

ஸாதிகா said...

தங்கச்சி நாஸியா,நன்றி பின்னூட்டத்திற்கு.நீங்கள் குறிப்பிடும் அதே பதார்த்தம் தான்.எங்கள் பக்கம் பொட்டீஸ் என்றும் சதுர பூரி என்றும் குறிப்பிடுவார்கள்.
என்ன தக்கடி செய்த அலுப்பில் தங்கச்சி ரெஸ்ட்டில் இருக்கின்றீர்களா?ஆளையே காணவில்லையே உங்கள் பிரியாணியில்.(ரொம்ப அட்ராக்டிவ் ஆன பெயரை உங்கள் வலைப்பூவிற்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். தலைப்பை பார்த்ததுமே கிளிக் செய்து பார்க்கதூண்டுகின்றது.

ஸாதிகா said...

தங்கை ஹுசைனம்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.உண்மைதான்.மலரும் நினைவுகளை எனக்கே என் பதிவு தூண்டி விட்டுவிட்டது.இப்போது ஊருக்குப்போய் பக்ரீத்தை கொண்டாடினாலும் கடந்தகாலத்தைப்போல் கண்டிப்பாக வராது.

நாஸியா said...

ஆமா.. கொஞ்சம் வெட்டி வேலை அதிகமா இருந்துச்சு அதான்.. :) சொல்லிட்டீங்கல்ல, இதோ வாரேன்

GEETHA ACHAL said...

உங்களுடைய மலரும் நினைவுகள் சூப்பராக இருந்தது..

கண்டிப்பாக இப்பொழுது வள்ரும் குழந்தைகள் பாவம்..நிறைய மிஸ் பன்னுராங்க..

என்ன செய்ய முடியும்...

அன்புடன் மலிக்கா said...

அச்சோ இப்பவே பெருநாளின் கலை கட்டிடிச்சி.. பதிவுகளைத்தும் சூப்பர் அக்கா.. தொடர்ந்து எழுதுங்கள்..

Asiya Omar said...

ஸாதிகா தாங்கள் கைதேர்ந்த எழுத்தாளர் தான் சந்தேகமே இல்லை.என்னவொரு அருமையான நடை.நாங்களும் உங்களைப்போல் எழுபதுகளில் பெருநாள் சமயம் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்த லூட்டியை நினைவு படுத்தி விட்டீங்க.அப்புறம் அந்த பிரியாணி,குழந்தைகள் முலாகத் பண்ணும் போட்டோ அருமை.பெருநாள் வந்திடுச்சு.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா அடேங்கப்பா எவ்வளவு பெரிய லிஸ்ட், சூப்பரான பதிவு.

அரேபிரகளின் சஹன் எத்தனை கிலோ கறி கிடையாது அதில் எத்தனை ஆட்டை அபப்டியே இறக்கினார்கள் என்று தான் பார்க்கனும்.

ஹி ஹி

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

நன்றி மலிக்கா.ஹ்ம்ம்..இப்போதலெல்லாம் எங்கே முன்பு போலவா பெருநாள் நாண்கு நாட்களுக்கு முன்பு களைக்கட்டுகின்றது?

ஸாதிகா said...

தோழிஆசியா,
என் பதிவு உங்களையும்பழைய ஞாபகங்களை கிளறி விட்டுவிட்டதா?பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

suvaiyaana suvai said...

மலரும் நினைவுகள் !!அழகா யதார்த்தமா எழுதுரீங்க நினைவலைகள் தொடர வாழ்துக்கள்
.

Menaga Sathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.ஊக்கம் உற்சாகத்தை அளிக்கின்றது.

ஸாதிகா said...

உண்மைதான் ஜலி,எத்தனை கிலோ இறைச்சி என்பதை விட எத்தனை ஆடு என்று போட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.நன்றி.

ஸாதிகா said...

செ.சரவணக்குமார், என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Menaga Sathia said...

ஈத் முபாரக்!!

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்.ஆம்,வளரும் குழந்தைகள் நிறைய மிஸ் பண்ணுகின்றார்கள்தான்.இதே வார்த்தையை நம் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் வள்ரும் போது இப்படித்தான் புலம்புவார்கள்.

ஸாதிகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மேனகா

athira said...

ஸாதிகா அக்கா, பிறியாணிப் படத்தைப் போட்டுக்காட்டி ஆசையைத் தூண்டி விட்டீங்கள். எனக்கு எப்பவுமே இஸ்லாமிய, சிங்கள மக்களின் உணவுகள் அதிகம் பிடிக்கும், ஆனால் சாப்பிடும் வாய்ப்புத்தான் அதிகம் கிடைக்கவில்லை.

எங்கள் ஹொஸ்டலுக்கு அருகில் மொஸ்க் இருந்தது, காலையிலே 4 மணிக்கென நினைக்கிறேன்"அல்லாகு அக்பர்" என்ற குரல் ஸ்பீக்கரில் ஒலிக்கும், அதுதான் எங்களுக்கு அலாம்.

நோன்புக்கதை மிக அருமை. முடிந்த காலங்கள் என்றும் பசுமை நினைவுகள்தான்.... தனியே இருந்து சிந்திக்க சுகமாக இருக்கும்.

ஸாதிகா said...

நன்றி அதிரா,பிரியாணியைப்பார்த்ததும் ஆசை வந்து விட்டதா?எனக்கும் இப்படி சஹனை(பெரிய தட்டு)பார்க்க ஆவலாக உள்ளது.

தாஜ் said...

அஸ்ஸாலாமு அலைக்கும்
இந்த பதிவை நான் மிகவும் தாமதமாக படிக்கிறேன் என்ன ஒரு எழுத்து நடை கண்முன்னெ கடந்த காலங்களை அப்படியே நிறுத்திவிட்டது
நானும் அப்படிதான் 13 வருடங்களுக்கு பிறகு ஊரிலே நோன்பு பெருநாள் கொண்டாடலாமென போனால் ஏமாற்றமே .அதிகம் பிள்ளைகள் எல்லாமே டி வி முன்னாடி சிறப்பு நிகழ்சி பார்த்துகொண்டு இருக்காங்க

என் மகள்கள் என்னை பார்த்து ஏம்மா ஊரிலே பெருநாள் அப்படி இருக்கும் இப்படி என்று ஒவ்வொரு பெருநாள் அன்றும் சொல்லுவீன்களே இதுதானா அது? என்றார்கள் [ஏனென்றால் நான் ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும் பிள்ளைகளுக்கு அவ்வளவு ஆச்சரியம் ]

மக்கா ஹரம்ஷரீஃபில் தொழுவதை விட்டுவிட்டு இதற்க்குதான் இங்கு வந்தீங்களா என்று கேட்டகேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியலை

நான் கொண்டாடிய பெருநாள் என்னால் நினைக்கதான் முடிகிறது

இதை என் மகள்களுக்கும் படித்துக்காட்டுவேன்.

அப்ப எல்லாம் ஒரு தெருவில் இரண்டு வீடு வீதம் கொல்லை பக்கம் மரத்தில் ஊஞ்சல் கட்டி பலகை போட்டு நடுவில் நாலு பேர் இருப்பார்கள் இரண்டு பக்கமும் இருவர் உந்தி ஆட்டினால் அந்த ஊஞ்சல் அப்படியே பறக்கும் பாட்டு ரகலைதான்.

தெருவில் விற்க்கும் அத்துனை திண்பண்டங்களும் பெருனாள் கொல்லைக்கு வந்துவிடும்
அவ்வளவு ஜாலியா இருக்கும்

இப்பவெல்லாம் கொல்லையும் கானோம் ஊஞ்சலையும் கானோம்.

நினைவுகள் மட்டும்மே நம்மோடு

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ் .உங்கள் நீளமான பின்னூட்டத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்வைத்தருகின்றது.நன்றி.அந்நாளை விட இப்போது சகல வசதிகளையும் ஒவ்வொருவரும் அனுபவித்தாலும் அனைவருக்கும் அன்னாளின் ஞாபகங்கள் ஏக்கமாகவே உள்ளது.இப்போது 'நினைவுகள் மட்டும்தான் நம்மோடு'உண்மையான் வரிகள்