கடந்த அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெஸண்ட் நகர் பீச்சுக்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு திண்டாட்டம்தான்.வாகனங்களும்,மக்கள் கூட்டமுமமாக தெருக்களில் நடக்க முடியாமல்,வாகனங்கள் பார்க் செய்ய முடியாமல் .ஏன்...வாகனங்கள் நுழையவே இடம் இல்லாமல் ஏரியாவே தத்தளித்தது.அறுசுவை திருவிழாவால்.
திருவிழா என்றதும் ஆட்டம் பாட்டம் குடைராட்டினம்,விளையாட்டு ரயில், இதெல்லாம் இல்லை.எலியட்ஸ் பீச் மணலில் ஷாமியானா போடபட்டு வகை வகையான உணவுகளின் வாசனை மூக்கை துளைக்க மக்கள்ஸ் வாய்க்கும் கைக்கும் போராட்டமே நடத்திகொண்டிருந்தனர் அவசரகதியில்.
சாலையோரக்கடைகளில் வாங்கி சாப்பிட ஆசைபட்டும் செயல் படுத்த இயலாமல் லஜ்ஜை கொள்ளும் மக்களுக்கு அன்றைக்குகொண்டாட்டம்தான்.
தமிழ் நாட்டு உணவு மட்டுமின்றி ,கேரளா.ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா,பஞ்சாப்,பெங்கால்.குஜராத்,ராஜஸ்தான்,காஷ்மீர் மாநில உணவுவகைகள் அத்தனையும் சுடசுட கிடைத்தன.
நுழைவு வாசலில் குறைந்தது 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.ஆனால் கண்டிப்பாக ஒருவருக்கு அந்த 100 ரூபாய் டோக்கன் போதவே போதாது.ஏனெனில் விலை அத்தனை அதிகம்.
வகை வகையான பிரியாணி வகைகள்,சிக்கன் வகைகள்,கபாப் வகைகள்,வடை போண்டா பஜ்ஜி வகைகள்,சாட் ஐட்டம்,பாயச வகைகள்,சூடான,குளிர் பான வகைகள் என்று எண்ணிலடங்கா உணவு வகைகள்.என்ன ஒன்று,விரும்பிய உணவை வாங்க பெரிய கியூவில் நிற்க வேண்டும்.
முதல் நாள் உணவு வகைகளின் விலை சற்றே குறைவாக இருந்தது.அடுத்த நாளே விலையை உயர்த்தி விட்டார்கள்."எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாங்களும் வந்து சாப்பிடுவோம்ல"என்பதை மக்கள் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது.
இரண்டு கீரை வடை 40 ரூபாய்.
ரோட்டோரக்கடையில் தாளத்துடன் டொடய்ங் டொடய்ங் என்ற மியூஸிக்குடன் கொத்து பரோட்டோ கொத்தும் ஓசையைத்தான் கேட்டு இருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை.நீண்ட நாள் ஆசை .ஆரம்பம் முதல் இறுதிவரை கொத்துபரோட்டோ கொத்துவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.மின்னல் வேகத்தில் எண்ணி பத்தே நிமிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிளேட் கொத்துபரோட்டா செய்து விடுகிறார் கொ.ப மாஸ்டர்.சூடான கொத்து பரோட்டாவை ஒரு விள்ளல் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்...ம்ஹும்..நான் செய்யும் கொ.ப வுக்கு அடிக்காது.
சுடச்சுட கொ.ப
பெரிய பெரிய அடுப்புகளில் கிரில் கம்பிகளில் மாட்டி சிக்கன் கபாப் தயாரித்து குவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.உடனுக்குடன் விற்றும் தீர்ந்து விடுகிறது.
பிராஸ்டட் சிக்கன்.பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க எக்கசக்க கலர் பவுடர் போட்டு சாப்பிட தயங்க வைத்து விட்டனர்.
சூடான திருநெல்வேலி அல்வா.அதெப்படி எந்நேரமும் சூடாக கொடுக்கின்றார்கள்?இரண்டே ஸ்பூன் அல்வா 40 ரூபாய்.
ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு மூங் தால் அல்வா.இதுவும் 40 ரூபாய்.
வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி.
கூட்டத்தின் இன்னொரு பகுதி.
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ஸ் 3230 என்ற அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்கத்தினர் அமைத்துள்ள மகிழ்ச்சியான கிராமம் என்ற திட்டத்துக்காக வசூல் ஆகும் தொகையை அவர்கள் தத்து எடுத்த
118 கிராமங்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்து மேலும் கிராம முன்னேற்றத்துக்கான நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளிய மக்களின் கண்ணீரை போக்குவதே இத்திருவிழாவின் நோக்கம்.
நல்லதொரு நோக்கம்.வரவேற்ககூடிய திட்டம்.
சிறப்பான இத்தொண்டு செய்யும் இந்த அமைப்பை பாராட்டவும் வேண்டும்.விலையைப்பற்றி கவலை கொள்ளாமல் எவ்வளவு விலை கொடுத்தாயினும் வாங்கி சாப்பிட்டு ஆதரவு கொடுக்கும் சென்னை மக்கள் ஃபுட்டீஸ் மட்டுமல்ல இரக்க சுபாவமும் உள்ளவர்கள் தான் :)
| Tweet |
