January 19, 2012

அஞ்சறைப்பெட்டி -7

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் எண்ணி முன்றே மூன்று வீல் சேர் மட்டிலுமே.அதிலும் இரண்டு ரிப்பேர்.மற்றொன்று விரைவில் ரிப்பேர் ஆகும் நிலைமை.முதிய பயணிகளை லக்கேஜ் வைத்து செல்லும் டிராலியில் உட்கார வைத்து இழுத்து செல்வது பார்க்க பரிதாபமாக உள்ளது.ஆபத்தானதாகவும் உள்ளது.வீல் சேர் இல்லாததால் டிராலியில் வைத்து முதியோர்களை அழைத்துச்செல்லும் போர்ட்டர்கள் இஷ்டத்திற்கு சார்ஜ் பண்ணி பயணிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுகின்றனர்.ரெயில்வே நிர்வாகம் கவனிக்குமா?


22 வருடங்கள் காணாத அளவிற்கு பனிப்பொழிவு சென்னையில்.காலையில் ஏழுமணிக்கே வெளிச்சம் சரியாக வருவதில்லை.போர்வைக்குள் சுருண்டு இருக்கும் பிள்ளைகளை தட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.எப்பொழுதடா வெயில்காலம் பிறக்கும் என்று சென்னை வாசிகள் வழி மீது விழி வைத்து காத்து இருக்கின்றனர்.ம்ம்ம்ம்...இக்கரைக்கு அக்கரை பச்சை.

பிரபலமான பிராண்ட் செருப்பு.இந்த செருப்பு வாங்குவதென்றால் சேல்ஸ் போடும் பொழுது வாங்கினால்தான் பர்ஸ் பழுக்காது.அந்த பிரபலமான மாலில் உள்ள ஷோ ரூமில் சேல்ஸ் நடைபெற்றுவருகின்றது என்று பத்திரிகை வாயிலாக அறிந்து அங்கு சென்றால் கடை வாசலிலேயே பிரமாதமாக விளம்பரம்.flat 40% off என்ற கொட்டை எழுத்துக்கள்.டிஸ்ப்ளே செய்து இருந்த செருப்புகளை செலக்ட் செய்து பில் போடும் பொழுதுதான் செருப்புகளுக்கு டிஸ்கவுண்டே போட வில்லை.கேட்டால் ஷோகேசினுள் உள்ள செருப்புகளுக்கு தள்ளுபடி கிடையாது.நடுவில் போடப்பட்டு இருக்கும் பெரிய மேஜையில் குவிந்து கிடக்கும் செருப்புகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்றார்களே பார்க்கலாம்.எனக்கு வந்த கோபத்தில் செருப்புகளை அங்கேயே கடாசிவிட்டு வந்துவிட்டேன்.

சென்றவாரம் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன்.எதிரில் பெட்ஷீட் விரித்து கூடை பிளாஸ்க் சகிதமாக ஒரு குடும்பத்தினர்.உடன் வந்திருந்த ஒரு ஆறு ஏழு வயது குழந்தை ஒரு கேரி பேக்கை வைத்துக்கொண்டு மிஞ்சிய உணவுப்பொருட்கள்,உபயோகித்த பேப்பர் கப் ,பிளேட்,கடலை தோல் போன்றவற்றை எல்லாம் சேகரித்து அந்த கேரிப்பேக்கினுள் நிரப்பிய வண்ணம் இருந்தாள்.அவர்கள் எழுந்து செல்லும் பொழுது குப்பை கூடை எங்கே உள்ளது என்று தேடி கண்டு பிடித்துப் அதில் போட்டு விட்டு சென்றாள்.இதே போல் அனைவரும் இருந்து விட்டால் இந்திய சாலைகளும் பொது இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.
சமீபத்தில் இறந்து போன வடகொரியா 2-ஆவது கிம் ஜோங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும்,கலந்து கொண்டும் வாய் விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று அந்த நாட்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.இதற்காக யார் அதிக அளவில் அழுதது?யார் அதிக அளவு துக்கத்தை வெளிப்படுத்தியது ?என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.சிம்பிள் மெட்டருக்கே கொல வெறி என்று நாமகரணம் சூட்டுகின்றோம்.இதை எதில் சேர்ப்பது?