May 7, 2014

அறிவீர்களா இவரை - 3வல்லிம்மா


வல்லிம்மாவை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது.சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.

2006 ல் இருந்து நாச்சியார்  , புகைப்படப்பயணங்கள் என்ற வலைப்பூக்களில் எழுதி வருகின்றார்.அவரது வலைப்பூக்கள் அவருக்கு ஒரு டைரி.வாழ்வின் இனியதருணங்களையும் சோக தருணங்களையும் பரிமாறி வாசிப்பவர்களை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக்கி விடுவது வல்லிம்மாவுக்கு கை வந்த கலை.இனிய அனுபவங்களை பகிரும் பொழுது ஒரு எழுத்து விடாமல் படிக்கத்தோன்றுமளவுக்கு சுவாரஸ்யமும் படிப்பினையும் கொட்டிக்கிடக்கும்.

இவருடனான முதல் சந்திப்பு 2012 ஆகஸ்ட் மாதம்  சென்னை மேற்கு மாம்பலம் புண்ணியகோடி திருமணமண்டபத்தில் நடைபெற்ற பதிவர் மாநாட்டில் நிகழ்ந்தது.

பளிச்சென்ற கம்பீரத்தோற்றம், இவருக்கு கன்னம் வலிக்காதா என்று தோன்றுமளவுக்கு எப்பொழுதும் புன்னகை ததும்பும் மிகவும் சாந்தமான முகம்,அனைவரையும் கைகளைப்பிடித்துக்கொண்டு மிக வாஞ்சையுடன் பேசும் பாங்கு,..இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஈர்ப்பு என்னை திரும்பிப்பார்க்க வைத்தாலும் நானாக போய் பேச தயக்கம் காட்டிக்கொண்டு இருந்த பொழுது பெரியவராக இருந்தாலும் அவராகவே தன்னை  என்னிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்த பொழுது அவரது உயரிய பண்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது.என்னிடம் மட்டுமல்ல வயது வித்தியாசமின்றி அனைத்துப்பதிவர்களிடமும் நெடு நாள் பழகியது போல் நட்புகொள்ள ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது.தொலை பேசியில் உரையாடும் பொழுது கூட இதே பாணிதான்.வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப்போல் என்பார்களே அதனை இவரிடம் தான் கண்டேன்.

ஒரு பை நிறைய மல்லிகைப்பூவை கொண்டு வந்து பெண் பதிவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்தது அனைவரையும் புன்னகைக்க வைத்தது.வல்லிமாவின் எண்ணங்களை பத்து கேள்விகளில் அடக்க முடியாவிட்டாலும் அனுபவசாலியின் இந்த பதில்கள் நல்லதொரு அறிவுரைகளாக இருக்கும். என் கேள்விகளுக்கு வல்லிம்மா அளித்த பதில்கள் இதோ...

1.பெண்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன?

முதலில் பொறுமை.  அதிக அளவில்   கோபம் வரும்போது  பொறுமை இல்லாவிடில்  செய்ய வேண்டிய   வேலைகளில் கவனம்  குறையும். சினம் மட்டும் எஞ்சி இருக்கும். சினம் எப்போது வருகிறது. வேறு யாராவது நம்   அபிப்பிராயத்துக்கு எதிராகப் பேசும்போது. அதனால் அந்த வேளையில் அமைதியாக இருந்துவிட்டால் போதும்.   வாக்குவாதங்கள் குறையும். எதிராளியும் நம் பேச்சைக் கேட்க தயாராக   இருப்பார். இது என் அபிப்பிராயம்

2.உங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை எது?

ம்ம்ம்  அவர்கள்   பெரியவர்கள் ஆகி ரொம்பநாட்கள் ஆகிறது. இருந்தாலும்  என் அம்மா எனக்குச் சொன்னதை அவர்களிடம்   சொல்வேன். வாழ்க்கையில் பாதிக் குழப்பங்கள்      மற்றவர்களின்  பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் போவதுதான். நீங்கள் அவர்கள்   நிலைமையில் இருந்து யோசிக்கணும். அப்போழுது உங்களுடைய ரீஆக்ஷன் எப்படி இருக்கும்  என்று  யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான்  புரியும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு விஷயத்தையும் செய்யக் கூடாது.                                      இதை அவர்கள்     நன்றாகவே  கடைப்பிடிக்கிறார்கள்.என்னைவிட நல்ல  மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

3.அப்பா - மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

இரண்டு பக்கமும் பாசமும் அதைத் தொடர்ந்து புரிதலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.  எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளின்   சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை   .  அவர்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள். அதற்கு   வேண்டும் என்கிற    உதவியை நாங்கள் செய்தோம். மணமாகும் வயது  வந்தபோதும் அவர்கள் தேர்ந்தெடுத்த     பெண்களையே  மணம் முடித்து வைத்தோம். அவர்களும்  கட்டுப்பாடு மீறாமலயே    எங்கள் கலாச்சாரப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்.....இறைவன் காக்க வேண்டும்.  தந்தை மகன் உறவுக்கு எடுத்துக்காட்டு என் கணவரும் பிள்ளைகளும்.

4.வாழ்வில் சோகமயமான சூழ்நிலை ஏற்படும் பொழுது நம்பிக்கை கொள்ளச்செய்யும் செயல்கள் எது என்று நினைக்கின்றீர்கள்.

சோகம் தாக்கும் போது  முதலில் பிரமிப்பு.அதிர்ச்சி.பிறகு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்ற முடிவு.  இந்த மாதிரி சூழ்நிலைகள் நான்கு தடவை வந்துவிட்டன. எல்லாச் சூழ்நிலைகளிலும்   இறைவனையே  பிடித்துக் கொண்டேன்.   அவன் நாமம்தான் உதவியது.    உதவி  செய்யும்    உறவினர்கள், அரவணைக்கும்  மகளும் மகன்களும்.  இதை இறைவன் கொடுத்தார். அதையும் மீறி இழப்பு என்னைப் பாதிக்கும் நேரம் மனம் கொண்ட மட்டும் அழுதுதீர்த்துவிடுவேன். தெளிவு கிடைத்ததும்   கடிதங்களாக  எழுதுவேன்.  இப்போது பதிவுலகில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும்  பாக்கியம் கிடைக்கிறது. இந்த நட்புகளையும் கொடுத்தவன் இறைவனே.    

5.உங்கள் கணவரை குறிப்பிடும் பொழுது சிங்கமென்ற கம்பீரமான பெயரை உபயோகின்றீர்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

பதிவுகள் ஆரம்பித்த போது  பெயரைச் சொல்வதில் தயக்கம். பிறகு  தெளிவு. அவர் பெயரிலேயே  சிங்கம் இருப்பதால் ,அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது   வீட்டு எஜமானர் என்றோ சிங்கம் என்றோஓ குறிப்பிடுவது வழக்கமாகி  விட்டது. இப்போது எல்லோருக்கும் சிங்கமாகி விட்டார்.     என்னைப் பொறுத்தவரையில் அவருடைய குணநலன்களுக்கு அந்தப் பெயர்தான் சரி. சிங்கமாகவே இருந்தார்.சிங்கமாகவே மறைந்தார்.

6.கலாச்சாரம் என்பது என்ன?

என்னைப் பொறுத்தவரை    அன்புதான்   கலாச்சாரம். கலாச்சாரப் போர்வையில்  மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான கொள்கை இல்லை.   வாழு வாழவிடு  என்று இருக்க வேண்டும்.   எல்லோரும் இதை மதித்தால் போதும். கலாச்சாரம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.

7.பல நாடுகள் சென்று வந்து இருக்கின்றீர்கள்.உங்களுக்கு பிடித்த நாடு ஒன்றினை குறிப்பிடுங்களேன்.காரணம் என்ன?

நம்நாடுதான் முதல். இங்கே இருக்கிற சுதந்திரம் வேறெங்கும் கிடைக்காது.    அதைவிட்டால்  அரபு நாடுகளில் துபாய்.  .  கைகள் நிறையப் பணமும்  மற்றவர்களிடம் மரியாதையும் இருந்தால் எந்த நாட்டிலும் சுகமாக இருக்கலாம்.நட்பு மனம் வேண்டும்.      

8.உங்களின் முக்க்ய பொழுது போக்கு?

இசை. படிப்பு,  இணையம்.வாழ்க்கை  குழந்தைகளோடு......                                                            

9.இணையத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்.எப்போதாவது சலிப்பு ஏற்பட்டுள்ளதா?

இல்லை. சலிப்பு என்பதே இல்லை.   என்  எழுத்து இல்லாவிடில்  எப்போதோ  முடங்கி இருப்பேன்.   பிரமாதமான எழுத்துக்குச்  சொந்தம் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய   மறுபாகமாக  எழுத்து இருந்து வருகிறது.     சலிப்பும் வராது.அருமை நட்புகளின் பதிவுகள் கூட வருகையில் நேரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறேன்.

10.இறுதியாக உங்கள் சிங்கம் பற்றிக்கூறுங்களேன்.

என்னவென்று சொல்வது. 47 வருட தாம்பத்தியம். எத்தனையோ மேடுகள் பள்ளங்கள்.  அவர் ஒருவர் இருந்ததால்  தாண்டி வந்தேன். என்  காவலர், கணவர்,அன்பர். எந்த நிலைமையையும்  சமாளிக்கும் திறமை கொண்டவர். யாருக்கும் பயந்ததில்லை. யாரையும் துன்புறுத்தியதில்லை.. நிறைய  சொல்லலாம்.  மீண்டும் இழப்பு என்னை உறுத்த ஆரம்பிக்கும்.

அன்பு ஸாதிகா எனக்குப் பேச ஒரு  ஆரம்பம் கொடுத்தீர்கள்.  உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவுலக அன்பு நட்புகளுக்கும் என்   நன்றி. இனி வெளியுலக வாழ்க்கையில் என் தூண்கள் அவர்கள் தான்.

மிக்க அன்புடன்,வாழ்த்துகளுடன்,
வல்லிம்மா என்கிற ரேவதி நரசிம்ஹன்              

21 comments:

பால கணேஷ் said...

வல்லிம்மா... நட்பின் நெருக்கத்தையும், தாய்மையின் கனிவையும் ஒரே சமயத்தில் என்னை உணர வைத்தவர். பதிவர் திருவிழாவில் அவரை கௌரவிக்க ஆசைப்பட்டுப் பேசியபோது ‘நான் எதாவது செய்யணுமே... பெண் பதிவர்களுக்காக பூக் கொண்டு வர்றேனே...’ என்று உற்சாகமாக முன்வந்து அனைவருடனும் பழகியவர். இன்னும்... இன்னும்... சொல்லிட்டே போலாம். பதிவுலக்த் தோழமைகளும் எழுத்தும்தான் என்னை இயங்க வைக்குதுன்னு சொல்றாங்க வல்லிம்மா... நாங்க எப்பவும் உங்களோடதான் இருப்போம்மா...

பால கணேஷ் said...

சிங்கம் ஸார்... வல்லிம்மா அளவுக்கு இவரிடம் அதிகம் பேசலை நான் என்றாலும் சிங்கம்போல கர்ஜிக்காமல் மான் போல மிருதுவாக மிக நன்றாகப் பழகக் கூடியவர். அவரின் கைத்திறனில் விளைந்த படைப்புகளைப் பார்வையிட்ட பிரமிப்பு இன்னும் மனதில்...! என்றும் மனங்களில் வாழ்கிற ஒருவரல்லவா அவர்.

Jaleela Kamal said...


வல்லியம்மா வலைப்பூவை நானும் அடிக்கடி வலம் வந்திருக்கிறேன்.
நாம் துபாயில் சந்திக்கும் போது அவர்கள் துபாயில் தான் இந்தார்கள், சந்திக்கனும் என்று சொல்லி கொண்டு இருந்ததாகவும் , வர நேரமில்லாமல் போனது குறித்து வருத்த பட்டத்தாகவும் ஹுஸைன்னாம்மா சொன்னார்கள்.


//வாழு வாழவிடு என்று இருக்க வேண்டும்//

மிக அருமை வல்லியம்மா

Menaga Sathia said...

வல்லிம்மாவை இப்போதான் புகைப்படத்தில் பார்க்கிறேன்..இந்த பதிவுகளை படிகும் போதே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தோன்றுகிறது..

Menaga Sathia said...

வல்லிம்மாவை இப்போதான் புகைப்படத்தில் பார்க்கிறேன்..இந்த பதிவுகளை படிகும் போதே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தோன்றுகிறது..

mohamedali jinnah said...

'சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.' அருமையான விளக்கம் தந்தமைக்கு சகோதரிக்கு வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

ஸ்வீட் லேடி!! (உங்களை இல்லை, வல்லிமாவைச் சொல்றேன் ;-))))) )

// சிங்கமென்ற கம்பீரமான பெயரை//

பலகாலமாக, எங்கே எப்போ சிங்கம் என்ற வார்த்தையைப் படித்தாலும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது வல்லிமாவின் சிங்கம்தான்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாலகணேஷ், நன்றி. நீங்களும் வெங்கட்டும் வந்திருந்தீர்கள் அல்லவா. சரியாக உபசாரம் செய்தேனா என்பது கூட நினைவு இல்லை. மாபெரும் விழாவாக நீங்களும்,மோகன் குமார்,மதுமதி எல்லோரும் சிறப்பித்தீர்கள். அந்த நாளில்தான் அத்தனை பதிவர்களையும் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சி கொடுத்த நாள். உறவுத்திருமணத்தில் கலந்து கொண்ட உற்சாகம். இப்பொழுதும் மனம் சந்தோஷப்படுகிறது. ஸாதிகாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.உங்களுக்கும் சேர்த்துதான்.நலமோடு இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா, மகன் அன்று வேலையிலிருந்து வர நேரமாகிவிட்டது. துபாயில் தனியாகப் போகப் பழக்கம் இல்லை. இவரோ பெண்கள் கூட்டத்திற்கு நான் வருவதாவது என்று விட்டார். மீண்டும் ஒரு காலம் வரும்.நாம் சந்திக்கலாம்.நன்றிமா.

Vijiskitchencreations said...

Super and great. This is the first time I know about Lalliamma. Nalla pathivu kudutha ungaluku en thanks. I will talk to u soon.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கேள்விகள்.
அமைதியான பக்குவமான பதில்கள்.

இருவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

வல்லிம்மாவின் 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' வரிகளில் நானும் மிகக் கவரப்பட்டவன்.

அவர் நம்முடன் பேசும்போது குரலில் தெரியும் தாய்மையும் அன்பும் அவருக்கே பிரத்தியேகமானது.

அவர் ஒவ்வொரு பதிவரையும் உற்சாகப்படுத்துவதும், அனுபவப் பகிர்வுகளும், புகைப்படங்கள் எடுத்துப் பகிர்வதும்... சுறுசுறுப்பான மனுஷி. பௌர்ணமிக்கு மறுநாள் அவர் ப்ளாக்கில் தவறாமல் நிலாப் புகைப்படங்களைக் காணலாம்.

"வல்லிம்மா... உங்கள் பதில்கள் எல்லாமே அருமை...."

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா மிக நன்றி.வார்த்தைகளாலான நம் பதிவுகள் அன்பினால் ஆளப்படுகிறது என்பதற்கு ஸாதிகாவின் இந்த முயற்சி காட்டுகிறது.வாழ்க வளமுடன்/

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மேனகா சத்யா, மீண்டும் முயற்சி எடுத்து உங்கள் பதிவுகளை எல்லாம் படிக்க ஆசைப் படுகிறேன் .நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முஹ்ம்மத் ஜின்னா,மனம் நிறைந்த நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு விஜி,உங்கள் கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபு சார்,உங்கள் கருத்துக்கும் மிக நன்றி.

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். உங்கள் எல்லோரின் அன்பு என்னை மேற்கொண்டு பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. ந்ன்றி அப்பா.

Thenammai Lakshmanan said...

பெண்கள் தினத்தில் மிக அருமையான பகிர்வு. வல்லிம்மா உண்மையிலேயே தாய்மையின் அன்போடு அனைவரிடமும் கனிவாகப் பழகுவார். மிக அருமை ஸாதிகா :) வாழ்த்துகள் வல்லிம்மா :)

துளசி கோபால் said...

வாவ்!!!! அன்பின் மறு உருவம் வல்லியம்மா.

என் இனிய தோழி.

மனம் நெகிழ்ந்துவிட்டது ஸாதிகா.

நன்றி நன்றி நன்றி.