July 10, 2014

நோன்பு நினைவலைகள்



சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் தருணம்) ஆரம்பிப்பதும் வழக்கமாகி வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த ஊரில் இருந்து கொண்டு நோன்பு கடமையை நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் தருணத்தில் எங்கள் ஊரின் நோன்புகால மகிழ்ச்சி தருணங்களை ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைக்கின்றது.

நோன்புகாலம் என்றாலே மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்.முதல் நோன்பன்று பிறை கண்டுவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் அமைத்து இருக்கும் சைரன் ஒலி வந்து விடும்.வீதி தோறும் உற்சாகம்.புத்தாடை தரித்து உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்து பெண்களும் சிறுமிகளும் ஆண்களும் சிறுவர்களும் அவரவர்களுக்குறிய பள்ளிகளில் சென்று இரவுத்தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

இரவுத்தொழுகை முடிந்த பின் அங்கே விநியோகம் செய்யும் பேரீச்சம்பழம் சர்பத் பிஸ்கட் பொட்டலம் இவற்றை பெறுவதற்கு சிறார்கள் கூட்டம் அலை மோதும்.

வீதிக்கு வீதி தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து இருக்கும் சஹர் நேர அறிவிப்பு ஸ்பீக்கர் வாயிலாக உறங்கும் ஒவ்வொரு இல்லத்து உறுப்பினர்களையும் தட்டி எழுப்பி விடும்.குர் ஆன் வசனங்கள்,இஸ்லாமியப்பாடல்கள் போன்றவற்றை ஒலிபரப்பி இடைக்கிடையே சஹர் முடிய இன்னும் இவ்வளவு நேரம் இருக்கின்றது என்ற அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.அந்த அறிவிப்பை செவிமடுத்த படி பெற்றோர்கள் பிள்ளைகளை “நேரமாச்சு சீக்கிரம் எழுந்து சஹர் செய்” என்று எழுப்பி விட படாதபாடு பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்களும் சஹர் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். பள்ளிவாசல்கள் தவிர வீதிக்கு வீதி இலவசமாக சாப்பாடு பறிமாறப்படும்.இதனை செய்து இறை அருளைப்பெற ஓவ்வொருவரும் போட்டிபோடுவார்கள்.

மாலை நேரத்தொழுகைக்கு பின்னர் மசூதிகள் தனியார் தொண்டு நிறுவனங்களில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு நோன்புக்கஞ்சி மத வேறுபாடின்றி விநியோகம் நடைபெறும்.தமிழ்நாடு முழுதும் அரிசி பருப்பு காய்கறிகளால் செய்யப்பட்ட நோன்புக்கஞ்சி ஒரு முழு உணவாக சத்துநிறைந்ததாக தயாரிக்கப்பட்ட நோன்புக்கஞ்சியை சாப்பிட்டே  பெரும்பாலோர் நோன்பு திறப்பார்கள்.நோன்பினால் ஏற்பட்ட உடல் சூட்டை குறைக்கும் வகையில் பூண்டு வெந்தயம் போனறவற்றால் சமைக்கப்படும் இந்தக்கஞ்சி நோன்பை முடித்து அருந்தும் பொழுது தெம்பும் சக்தியும் அளித்து விடும்.தமிழக நோன்பாளிகள் பிற நாடுகளில் வாழ்ந்தாலும் வீட்டிலேயே இதனை தயாரித்து அருந்துவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபட்டாலும்  கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் ஒரே விதமான  அபார சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கும்.

கீழக்கரையில்  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடி இருக்கும் . அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு வீதிகளிலும்  முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே,  களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது. 

இங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை,போண்டா வகைகள் பஜ்ஜி வகைகள் போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறும்.

நோன்பு 30 நாட்களும் கஞ்சி வழங்குதல், நோன்பாளிகள் பள்ளியில் நோன்பு திறக்க இப்தார் விருந்து ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு இலவச சஹர் உணவினை வீடு தேடி சென்று கொடுத்து உதவுதல் போன்ற சிறப்பான சேவைகள் கண்ணியமான முறையில் தொண்டு நிறுவனங்கள் ஊர்வாசிகளின் ஒத்துழைப்போடு  செய்துவருவது பாராட்டத்தக்கது.

இப்படியாக முப்பது நாட்களும் பசித்திருந்து நோன்பு வைத்து பெருநாள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாலும் நோன்பு முடியப்போகும் கடைசிநாளன்று அனைத்து நோன்பாளிகளின் மனங்களும் இவ்வருடத்திற்கான  இத்தனை சிறப்பான மாதம் இன்றுடன் முடியப்போகின்றதே என்ற ஏக்கம் மனதின் ஒரு மூலையில் நிறைந்து இருக்கும்.


பெரும் பெரும் களரி சட்டிகளில் நோன்புகஞ்சி காய்ச்சப்படுகிறது.



நோன்புக்கஞ்சி விநியோகத்திற்காக காத்திருக்கும் சிறார் கூட்டம்.



தினந்தோறும் நோன்பாளிகளுக்கு நடை பெற்று வரும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி. 

ஒவ்வொரு பகுதிகளிலும் மசூதிகள் தொண்டு நிறுவங்கள நடத்தும் இஃப்தார் விருந்தில்  நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர். 



சிறுவர்கள் ஆர்வமுடன் இப்தாரில் கலந்து கொள்ளும் காட்சி.



எளியோர்கள் வீடு தேடிசென்று சஹர் சாப்பாட்டை விநியோகம் செய்வதற்காக சாப்பாடு பார்சல் கட்டும் வேலை மும்முரமாக நடை பெற்று வருகிறது.





தொண்டு நிறுவனங்கள் அதிகாலையில் சஹர் விருந்தை ஏற்பாடு செய்து இருக்கும் காட்சிகள்




மாலை வேளைகளில் வடை கடைகளில் வடை மும்முரமாக விற்பனைஆகும் காட்சி.


மத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதற்காக இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் பங்கேற்ற நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி




படங்கள் உதவி கீழை இளையவன்

May 7, 2014

அறிவீர்களா இவரை - 3



வல்லிம்மா


வல்லிம்மாவை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது.சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.

2006 ல் இருந்து நாச்சியார்  , புகைப்படப்பயணங்கள் என்ற வலைப்பூக்களில் எழுதி வருகின்றார்.அவரது வலைப்பூக்கள் அவருக்கு ஒரு டைரி.வாழ்வின் இனியதருணங்களையும் சோக தருணங்களையும் பரிமாறி வாசிப்பவர்களை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக்கி விடுவது வல்லிம்மாவுக்கு கை வந்த கலை.இனிய அனுபவங்களை பகிரும் பொழுது ஒரு எழுத்து விடாமல் படிக்கத்தோன்றுமளவுக்கு சுவாரஸ்யமும் படிப்பினையும் கொட்டிக்கிடக்கும்.

இவருடனான முதல் சந்திப்பு 2012 ஆகஸ்ட் மாதம்  சென்னை மேற்கு மாம்பலம் புண்ணியகோடி திருமணமண்டபத்தில் நடைபெற்ற பதிவர் மாநாட்டில் நிகழ்ந்தது.

பளிச்சென்ற கம்பீரத்தோற்றம், இவருக்கு கன்னம் வலிக்காதா என்று தோன்றுமளவுக்கு எப்பொழுதும் புன்னகை ததும்பும் மிகவும் சாந்தமான முகம்,அனைவரையும் கைகளைப்பிடித்துக்கொண்டு மிக வாஞ்சையுடன் பேசும் பாங்கு,..இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஈர்ப்பு என்னை திரும்பிப்பார்க்க வைத்தாலும் நானாக போய் பேச தயக்கம் காட்டிக்கொண்டு இருந்த பொழுது பெரியவராக இருந்தாலும் அவராகவே தன்னை  என்னிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்த பொழுது அவரது உயரிய பண்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது.என்னிடம் மட்டுமல்ல வயது வித்தியாசமின்றி அனைத்துப்பதிவர்களிடமும் நெடு நாள் பழகியது போல் நட்புகொள்ள ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது.தொலை பேசியில் உரையாடும் பொழுது கூட இதே பாணிதான்.வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப்போல் என்பார்களே அதனை இவரிடம் தான் கண்டேன்.

ஒரு பை நிறைய மல்லிகைப்பூவை கொண்டு வந்து பெண் பதிவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்தது அனைவரையும் புன்னகைக்க வைத்தது.



வல்லிமாவின் எண்ணங்களை பத்து கேள்விகளில் அடக்க முடியாவிட்டாலும் அனுபவசாலியின் இந்த பதில்கள் நல்லதொரு அறிவுரைகளாக இருக்கும். என் கேள்விகளுக்கு வல்லிம்மா அளித்த பதில்கள் இதோ...

1.பெண்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன?

முதலில் பொறுமை.  அதிக அளவில்   கோபம் வரும்போது  பொறுமை இல்லாவிடில்  செய்ய வேண்டிய   வேலைகளில் கவனம்  குறையும். சினம் மட்டும் எஞ்சி இருக்கும். சினம் எப்போது வருகிறது. வேறு யாராவது நம்   அபிப்பிராயத்துக்கு எதிராகப் பேசும்போது. அதனால் அந்த வேளையில் அமைதியாக இருந்துவிட்டால் போதும்.   வாக்குவாதங்கள் குறையும். எதிராளியும் நம் பேச்சைக் கேட்க தயாராக   இருப்பார். இது என் அபிப்பிராயம்

2.உங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை எது?

ம்ம்ம்  அவர்கள்   பெரியவர்கள் ஆகி ரொம்பநாட்கள் ஆகிறது. இருந்தாலும்  என் அம்மா எனக்குச் சொன்னதை அவர்களிடம்   சொல்வேன். வாழ்க்கையில் பாதிக் குழப்பங்கள்      மற்றவர்களின்  பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் போவதுதான். நீங்கள் அவர்கள்   நிலைமையில் இருந்து யோசிக்கணும். அப்போழுது உங்களுடைய ரீஆக்ஷன் எப்படி இருக்கும்  என்று  யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான்  புரியும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு விஷயத்தையும் செய்யக் கூடாது.                                      இதை அவர்கள்     நன்றாகவே  கடைப்பிடிக்கிறார்கள்.என்னைவிட நல்ல  மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

3.அப்பா - மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

இரண்டு பக்கமும் பாசமும் அதைத் தொடர்ந்து புரிதலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.  எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளின்   சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை   .  அவர்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள். அதற்கு   வேண்டும் என்கிற    உதவியை நாங்கள் செய்தோம். மணமாகும் வயது  வந்தபோதும் அவர்கள் தேர்ந்தெடுத்த     பெண்களையே  மணம் முடித்து வைத்தோம். அவர்களும்  கட்டுப்பாடு மீறாமலயே    எங்கள் கலாச்சாரப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்.....இறைவன் காக்க வேண்டும்.  தந்தை மகன் உறவுக்கு எடுத்துக்காட்டு என் கணவரும் பிள்ளைகளும்.

4.வாழ்வில் சோகமயமான சூழ்நிலை ஏற்படும் பொழுது நம்பிக்கை கொள்ளச்செய்யும் செயல்கள் எது என்று நினைக்கின்றீர்கள்.

சோகம் தாக்கும் போது  முதலில் பிரமிப்பு.அதிர்ச்சி.பிறகு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்ற முடிவு.  இந்த மாதிரி சூழ்நிலைகள் நான்கு தடவை வந்துவிட்டன. எல்லாச் சூழ்நிலைகளிலும்   இறைவனையே  பிடித்துக் கொண்டேன்.   அவன் நாமம்தான் உதவியது.    உதவி  செய்யும்    உறவினர்கள், அரவணைக்கும்  மகளும் மகன்களும்.  இதை இறைவன் கொடுத்தார். அதையும் மீறி இழப்பு என்னைப் பாதிக்கும் நேரம் மனம் கொண்ட மட்டும் அழுதுதீர்த்துவிடுவேன். தெளிவு கிடைத்ததும்   கடிதங்களாக  எழுதுவேன்.  இப்போது பதிவுலகில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும்  பாக்கியம் கிடைக்கிறது. இந்த நட்புகளையும் கொடுத்தவன் இறைவனே.    

5.உங்கள் கணவரை குறிப்பிடும் பொழுது சிங்கமென்ற கம்பீரமான பெயரை உபயோகின்றீர்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

பதிவுகள் ஆரம்பித்த போது  பெயரைச் சொல்வதில் தயக்கம். பிறகு  தெளிவு. அவர் பெயரிலேயே  சிங்கம் இருப்பதால் ,அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது   வீட்டு எஜமானர் என்றோ சிங்கம் என்றோஓ குறிப்பிடுவது வழக்கமாகி  விட்டது. இப்போது எல்லோருக்கும் சிங்கமாகி விட்டார்.     என்னைப் பொறுத்தவரையில் அவருடைய குணநலன்களுக்கு அந்தப் பெயர்தான் சரி. சிங்கமாகவே இருந்தார்.சிங்கமாகவே மறைந்தார்.

6.கலாச்சாரம் என்பது என்ன?

என்னைப் பொறுத்தவரை    அன்புதான்   கலாச்சாரம். கலாச்சாரப் போர்வையில்  மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான கொள்கை இல்லை.   வாழு வாழவிடு  என்று இருக்க வேண்டும்.   எல்லோரும் இதை மதித்தால் போதும். கலாச்சாரம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.

7.பல நாடுகள் சென்று வந்து இருக்கின்றீர்கள்.உங்களுக்கு பிடித்த நாடு ஒன்றினை குறிப்பிடுங்களேன்.காரணம் என்ன?

நம்நாடுதான் முதல். இங்கே இருக்கிற சுதந்திரம் வேறெங்கும் கிடைக்காது.    அதைவிட்டால்  அரபு நாடுகளில் துபாய்.  .  கைகள் நிறையப் பணமும்  மற்றவர்களிடம் மரியாதையும் இருந்தால் எந்த நாட்டிலும் சுகமாக இருக்கலாம்.நட்பு மனம் வேண்டும்.      

8.உங்களின் முக்க்ய பொழுது போக்கு?

இசை. படிப்பு,  இணையம்.வாழ்க்கை  குழந்தைகளோடு......                                                            

9.இணையத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்.எப்போதாவது சலிப்பு ஏற்பட்டுள்ளதா?

இல்லை. சலிப்பு என்பதே இல்லை.   என்  எழுத்து இல்லாவிடில்  எப்போதோ  முடங்கி இருப்பேன்.   பிரமாதமான எழுத்துக்குச்  சொந்தம் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய   மறுபாகமாக  எழுத்து இருந்து வருகிறது.     சலிப்பும் வராது.அருமை நட்புகளின் பதிவுகள் கூட வருகையில் நேரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறேன்.

10.இறுதியாக உங்கள் சிங்கம் பற்றிக்கூறுங்களேன்.

என்னவென்று சொல்வது. 47 வருட தாம்பத்தியம். எத்தனையோ மேடுகள் பள்ளங்கள்.  அவர் ஒருவர் இருந்ததால்  தாண்டி வந்தேன். என்  காவலர், கணவர்,அன்பர். எந்த நிலைமையையும்  சமாளிக்கும் திறமை கொண்டவர். யாருக்கும் பயந்ததில்லை. யாரையும் துன்புறுத்தியதில்லை.. நிறைய  சொல்லலாம்.  மீண்டும் இழப்பு என்னை உறுத்த ஆரம்பிக்கும்.

அன்பு ஸாதிகா எனக்குப் பேச ஒரு  ஆரம்பம் கொடுத்தீர்கள்.  உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவுலக அன்பு நட்புகளுக்கும் என்   நன்றி. இனி வெளியுலக வாழ்க்கையில் என் தூண்கள் அவர்கள் தான்.

மிக்க அன்புடன்,வாழ்த்துகளுடன்,
வல்லிம்மா என்கிற ரேவதி நரசிம்ஹன்              

May 5, 2014

அறிவீர்களா இவரை - 2


துளசி கோபால்

நான் துளசிம்மாவை அறிமுகப்படுத்துவது பூக்கடைக்கு  விளம்பரம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.(இனி நிறைய பூக்கடைகளுக்கு விளம்பரம் கொடுக்கவுள்ளேன்.)

பதிவுலகில் துளசி கோபாலை அறியாதவர்கள் இருக்க முடியாது.சுமார் 10 ஆண்டுகளாக 2004-இல் இருந்து துளசிதளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகளை எழுதிவருபவர்.இவரது ஸ்பெஷாலிட்டி நாட்டுக்கு நாடு சென்று அதனை அழகாக படமாக்கி பதிவாக எழுதி படிப்பவர்களை அந்த இடத்துக்கே அழைத்து செல்லக்கூடிய திறமை இவரது எழுத்துக்கும்,இவரது கேமராவுக்கும் உண்டு என்றால் மிகை ஆகாது.நியூஸிலாந்தில் வசித்தாலும் சென்னையின் மீதுள்ள அதீத காதல் என்னை வியக்க வைக்கும்.



பதிவுகளில் பின்னூட்டங்களில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு பின்னூட்டம் வழியே என் மின்னஞ்சல் கேட்டு இருந்தார்.
கணவருக்கு மணிவிழா சென்னையில் வந்து  நடத்துவதால் அவசியம் கலந்து கொள்ளும் படி ஒரு வித்தியாசமான அழைப்பையும் இணைத்து இருந்தார்.அவர் அன்புடன் அழைத்த விதம் மிகவும் பிடித்துப்போனதால் அந்த நிமிடமே விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

விழா நாளன்று அங்கு சென்று இருந்தேன்.என்னை பார்த்த மாத்திரத்தில் அத்தனை கூட்டத்திலும் என்னை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்ற உபசரிப்பை என்னால் மறக்க முடியாது.எதிர்பாராத அளவு பதிவர்களின் வருகை,இனிமையான கொண்டாட்டம் மனம் நிறைந்த உபசரிப்பு,புதிய அறிமுகங்கள்,மகிழ்ச்சியான இன்முகங்கள்.நாவிற்கினிய விருந்து என்று அந்த நாள் மகிழ்ச்சிகரமாக இருந்தது.



அன்றிலிருந்து துளசிம்மாவும் நானும் ஒரு ஈடுப்பாட்டுடனான நட்பு கொள்ள ஆரம்பித்தோம்.அறிவீர்களா இவரை என்ற பதிவுக்கு பல மாதங்களுக்கு முன்னர் கேள்விகள் அனுப்பி இருந்தேன்.அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பதில் எழுத மறந்து இருந்தார்.இன்று ஞாபகம் ஊட்டி நான் மெயில் போட்ட சில மணி நேரங்களுக்குள் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் பதில் அளித்து இருப்பது இதோ....

1.உங்களின் மகத்தான சாதனை எது என்று நினைக்கின்றீர்கள்.

பசங்களை வேணாம் வேணாமுன்னு  வாய் சொன்னாலும், அவன்கள்(!) வந்தவுடன் செல்லம் கொஞ்சி மடிமீது எடுத்து வச்சுக்கும்படி கோபாலைப் பழக்குனதுதான்  என் வாழ்வில் மகத்தான சாதனை.

2.சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?

பூஜை அறைக்கு ஓடிப்போய், வீட்டுலே இருக்கும் எம்பெருமானுக்கு நன்றி சொல்வேன். அடுத்து....?
வேறென்ன உல்லாசமா பதிவு எழுத ஆரம்பிப்பதுதான்:-)

3.சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?

இல்லாமல் என்ன?   இந்தியா என்றால் ஏன் நம்ம மக்கள்ஸ்க்கு  சுத்தமா இருக்கணும். சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சுக்கணும் என்ற அடிப்படை சுகாதாரம் தெரியலைன்னு மனம் நொந்து கொள்வேன்.
அதேபோல அரசியல் வியாதிகளின் நடவடிக்கையும் மனம் வெறுத்துப்போகும் சமாச்சாரம்.

4.மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?

மனித  வாழ்க்கையே  பலசமயம் சுமை போல  இருக்கும்.   ஆனால்....   கண்களால் கண்டு மகிழ எத்தனை கோடி இயற்கை அழகை வைத்தாய் இறைவா   என்று  போற்றி ரசிக்கத் தோணும்.

5.விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

எழுத்தைப் பற்றிய  நியாயமான விமரிசனம் என்றால், குட்டு வாங்கிக்க என் தலை ரெடி. ஆனால் விமரிசனம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல், அருவருப்பான  சொற்களில் வசவு  எல்லாம் மனவேதனையைத் தரும்:(

6.முதன் முதல் வலைப்பூவுக்கு எப்படி வந்தீர்கள்.வலைப்பூ எப்படி எப்போது அறிமுகமானது?

முறுக்கைத் தேடிப்போய்  எழுத்தில் வீழ்ந்தவள் நான்!  ஒரு சமயம்.... ( அப்போதுதான்  இணையத்தில் தமிழ் இருப்பதைக் கண்டுபிடித்து(!!) அதில் திளைத்துக் கொண்டுஇருந்த நேரம்) முறுக்கு என்ற சிறுகதையை சிலாகித்து ஒரு அன்பர் எழுதி இருந்தார். இது மரத்தடி குழுமத்து சமாச்சாரம்.  முறுக்கு கிடைக்கலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தவள்,  இதற்காகவே யாஹூ ஐடி எடுத்து, அங்கே மரத்தாண்டை போய் விசாரிச்சேன்.  பிரபு ராஜதுரை என்பவர்  முறுக்கை அனுப்பி வைத்தார்.  புது உலகம் என் முன் விரிந்தது!  மரத்தடி  குழுமத்தில் அங்கமாகி  வெறும் கருத்துப் பரிமாற்றங்களோடு  என் பொழுதுகள் போயின.

சாம்பாரைப் பற்றிய ஒரு மடலில்  என்னுடைய சாம்பார் விஸ்தரிப்பை ( ஐயோ...சுருக்கமா எழுத எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறேனோ?)  எழுதப்போக,  அப்போ மரத்தடி ஓனரா இருந்த மதி .கந்தசாமி அவர்களால் , மரத்தடி .காம் என்ற தொகுப்பில் அது வெளிவந்ததும் எனக்குத் தலைகால் புரியலை.  இதுலே குழும  நண்பர்கள் எல்லோரும் எனக்கு எழுத வருதுன்னு சொல்லிட்டாங்க!!!!

ஆஹா.... சும்மா ஆடுன குரங்குக்குக் காலில் சலங்கை கட்டிவிட்டது போல் ஆச்சு. ஊக்குவித்த நண்பர்களைக் கதறடிச்சிட்டேனாக்கும், என் தொடர் எழுத்தால்:-) இது நடந்தது  2004 மார்ச் மாதம் தொடங்கி!  எழுத்துரு எல்லாம் திஸ்கியில்.  நம்ம  முத்து நெடுமாறன்  அவர்கள் முரசு அஞ்சல் என்ற எழுத்துருவை அளித்து உதவினார்.

அப்போதான் சிலமாதங்கள் கழிச்சு, நம்ம காசி ஆறுமுகம்,  தமிழ்மணம் தொடங்கினார்.  ஓடிப்போய்ப் பார்த்தேன்:-)  கூட்டுக்குடும்பமான  மரத்தடியில் இருந்து  தனிக்குடித்தனமா  ஆரம்பிச்சதுதான் துளசிதளம். 2004  செப்டம்பர். அப்போ  என்  எழுத்துக்கு வயசு அரை!   காசி ஆறுமுகம் அவர்களின் உயிரை வாங்கி கலப்பையைப் பிடிக்கக் கற்றது முதல் புதுப்  பிறவியானேன்:-)

7.இதுவரை எந்த ஒரு பிளாக்கரும் செல்லாத அளவுக்கு நாடுகள் பல கண்டு விரிவாக கட்டுரைகளும் படங்களுடன் வலைப்பூவில் பகிர்ந்து விட்டீர்கள். சென்ற நாடுகளில் பிடித்த நாடு.செல்வதற்கு ஆசைப்படும் நாடு?

கண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்பதே உண்மை.  அதிலும் இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்  காணாதது  இமயமலை அளவு!   விடுமுறை, பயணம் என்று  நினைத்தவுடன், சென்னைதான் மனசில் முதலில் வந்து வரிசையில் நிற்கிறது.  சென்னைக்கும் எனக்கும் ஒரு லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப்  எப்போதும் உண்டு:-)

செல்வதற்கு ஆசைப்படும் நாடு..........  இந்தியாதான்.  முணங்கிக்கொண்டே  சுற்றிப் பார்ப்பேன்:-) இந்தியாவைப் பொறுத்தவரை,  எத்தனை  மாநிலங்களோ.... அத்தனை நாடுகள் என்ற கணக்குதான். வெறும் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் மக்களுடைய உணவுப்பழக்கம், உடை, மொழி, கோவில்களின் அமைப்புகள்,  நடனம் நாட்டியம் என்ற கலைசம்பந்தப்பட்டவைகள் எல்லாம்  அடியோடு வேறாக அல்லவா இருக்கிறது!!!!

8.வலைப்பூவில் உங்கள் எழுத்துக்களை கணவர் படித்து விமர்சனம் செய்வாரா?

ஆரம்பகாலத்தில் என்னவோ கிறுக்குகிறாள் (கிறுக்கி) என்றுதான் இருந்தார். தலை நீட்டுவதில்லை. எனக்கும் நல்லதாப்போச்சு. நான் உண்டு என் எழுத்து உண்டுன்னு இருந்தேன்.   2006 ஆறாம் ஆண்டு சென்னையில்  உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் (இப்போது அது செம்மொழிப் பூங்கா!) பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.  கணவர் கோபாலும் உடன் வந்தார்.  அப்போது அங்குவந்த பதிவுலக நண்பர்கள்,  துளசிதளம் வாசிப்பீர்களா என்று கேட்டதும்  இவர்  'ஙே'  !!!

அதன்பின்  நியூஸி திரும்பி வந்தபின்  சில பதிவுகளை வாசித்தவர், தனக்கு  பதிவு வெளியிடுமுன் ப்ரீவ்யூ  வேணும்  என்று ஆசைப்பட்டார். ஆஹா.... நம் எழுத்தின் சுவை ஆளை இழுக்குதேன்னு மகிழ்ந்து போய்  வெளியிடுமுன் வாசிக்கக் கொடுத்தேன்.  ஆனால்......  இது ஏனிப்படி? அது ஏன் இப்படின்னு  ஆரம்பிச்சவுடன், முழிச்சுக்கிட்டேன். இது வேலைக்காகாது. இனிமேல்பதிவு வெளியிட்டவுடன், மற்ற வாசகர்களில் நீங்களும் ஒருவராக இருந்து 'கொல்லுங்கள்'  என்றேன்:-)

இப்போதும்  பதிவுகளை வாசிக்கிறார். ஆனால்............  காலையில் வாசிச்சது,மாலையில் நினைவு இருக்காது:(


இன்னும் ஏதாவது உங்களை பற்றி..

சொல்லிக்கொள்ள ஒன்றும் பெருசா இல்லை.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நாலாவது அநேகமா இந்த புத்தக விழா சமயம் வரலாம்.  எழுத்து இல்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற உணர்வே எப்போதும் இருக்கிறது.  காலை எழுந்தவுடன் கணினி என்றுதான் விடியல்.
எழுதவந்தபின் நான் பெற்ற இன்பங்களைப் பட்டியல் இட்டால்...முதலில் வருவது  சகபதிவாளர்களாகிய நண்பர்கள். அடுத்தும் அவர்களே . அதற்கடுத்தும்  அவர்களே. நட்பு வட்டம் நாளொரு பொழுதும் விரிந்து வருவது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது என்பதே உண்மை!

எனக்கு உங்களையெல்லாம் விட்டா...யாரிருக்கா? நேக்கு யாரைத்  தெரியும்?

வாய்ப்பு அளித்ததோழி ஸாதிகாவுக்கு என்  அன்பும் நன்றியும்.

வணக்கம்.

May 4, 2014

கத்திரி வெயில்




அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டது.கோடை ஆரம்பித்த உடனே கத்திரி வெயிலை நினைத்து மக்கள் பயம் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள்  என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21-ந்தேதி முதல் வைகாசி மாதம் 14-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரிவெயில் காலம்.இன்றிலிருந்து வரும் 28 ஆம் தேதி வரை தொடங்கி முடிந்தாலும் பருவ நிலை மாறுதலால்,சில ஆண்டுகளாகவே  கத்திரி வெயில் சீஸன் ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்த சீஸனில் வெயில் 114 டிகிரி வரை இருக்கும் என்று கருதுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் அதிகளவு வெப்பம் பதிவு செய்யப்படும் இடம் வேலூர் என்று கூறுகின்றனர்.சென்னை நகரில் காலை 10 மணிக்கு மேல் வெளியில் சென்றால் அனல் காற்று சுட்டெரிக்கின்றது.கட்டித்தொழிலாளிகள் நடைபாதை கடை உரிமையாளர்கள்,போக்கு வரத்து காவலர்கள் இரண்டுசக்கரவாகனப்பயணிகள் நிலை கொடூரமானது.

இந்தக்காலகட்டங்களில் நடுத்தரவர்கத்துக்கும் கீழுள்ளவர்கள் வீடுகளில் குளிர்சாதனவசதி செய்ய முடியாதவர்கள் மொட்டை மாடியையே படுக்கைஅறையாக மாற்றிகொள்வது வழக்கம்.புழுக்கத்தின் காரணமாக வீட்டினுள் உறங்கமுடியாத நிலை.

வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தென் தமிழ்நாட்டில் லேசான மழையும்,சென்னையில் மேகமூட்டத்துடன் வெப்பம் தணிந்தும் உள்ளது இன்றைய நிலை மக்களுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியது.

தொலைக்காட்சியில் ரமணன் தோன்றி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் 48 மணி நேரத்தில் மழை  பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து இருப்பது நிஜமாக வேண்டும் என்பதே  சென்னை மக்களின் இன்றைய  பிரார்த்தனை.

வீதி தோறும் தர்பூசணிபழங்களும் இளநீரும் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.கரும்புச்சாறு மிஷின் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கும்.ஆங்காங்கே ஜூஸ்கடைகள் வண்டிகளில் முளைத்து இருக்கும்.அதுமட்டுமல்லாது தீபாவளி சீஸனில் பட்டாசு கடை முளைப்பது போல் மசாலா மோர் , ராகிக்கூழ் விற்பனைகளும் முளைத்து இருக்கும்.கிர்ணிப்பழங்களும்,வெள்ளரிக்காயும்.பனை நுங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.ஜுஸ் விற்பனை செய்யப்படும் வண்டிக்கடைகளிலும் சிறிய கடை வாயில்களிலும் டூவீலர்கள் கும்மி அடித்துக்கொண்டு இருந்தால் ஹாஜிஅலி ,ஃபுரூட் ஷாப் போன்ற கடைவாசல்களில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.பீச்சில் வண்டி பார்க் செய்ய இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறிகொண்டு இருப்பார்கள்.தூரத்தில் இருந்து பார்த்தால் கடலை விட மனித தலைகள்தான் அதிகளவில் காணப்படும்.இவை எல்லாம் கோடையின் அத்தாட்சிகள்.

குளிபானங்களை தவிர்த்து கனிச்சாறுகளை,அருந்தி,சுத்தமான நீரை அதிகளவு பருகி,நார்சத்து ,நீர்ச்சத்து மிக்க காய்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அதிகளவு நீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.இதனால் ஈரப்பதம் உடலில் இருந்து ஆவியாக வெளியாவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

காலரா,சின்னம்மை,மஞ்சள்காமாலை,பற்பல தொற்று நோய்கள் அணுகாதிருக்க ஆரோக்கியமாக குளிர்ச்சியாக உடலைபேணி ,ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு,வெயிலில் அதிகம் அலையாமல் அலையும் நேரத்துக்கு லேப்டாப் முன் அமர்ந்து நாலு பதிவை தேத்த ,கோடையை ஆரோக்கியமாக கழிக்க பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி: கிட்டதட்ட மூன்று மாதகாலம் என் வலைப்பக்கம் வராமல் கோடைகாலத்தில் ஜூஸ் கடை எட்டிப்பார்ப்பது போல் நானும் வலைப்பக்கம் எட்டி பார்த்து இருக்கிறேன்.

ஹாட்டான நேரத்தில் ஒரு கூலான டவுட்: டிவி லேப்டாப்,ஸ்டவ்,மிக்ஸி,கிரைண்டர்,ஃபேன்,பொங்கல் பொருட்கள்,வேட்டி இவைகளை எல்லாம் இலவசமாக விநியோகம் செய்தது போல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் இலவச ஏசி விநியோகம் செய்யப்படுமா???


February 11, 2014

charisma 14


தேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்
charisma 14 திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு நெருங்கிய நட்பு ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.



குவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது

 டீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள்  துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.



ஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழ‌த்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி  வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள்  என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி  அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.




வீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.


ஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.


க்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது  அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க‌  என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது ந‌மது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன்  ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான  க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.

இதுவும் க்வில்லிங் அணிகலன்கள்தான்.


 இதுதான் நமது நெருங்கிய தோஸ்துவின் ஸ்டால்.precious கற்கள்கோர்த்து அழகாக ரிச் ஆக தனது அதீத கற்பனை திற‌னை வைத்து வித விதமான நகைகள்.பர்சுக்கள்,மொபைல் பவுச்,சுவர் ஓவியங்கள்.செருப்பு கைவினைப்பொருட்கள்  செயற்கை மலர்கள் என்று செய்வதில் கில்லாடி



மாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.


இவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.



 சாதரண செப்பலில் அவரது கைத்திறன் மிளிகின்றது.


 அழகான பற‌வைகளும் அது இடாத முட்டைகளும்.இவைகள் எல்லாம் என் நண்பியின் ஸ்டாலில் கிடைக்கின்றது.நாளைதான் கடைசி நாள்.



கடைசியாக திரும்பும் பொழுது இந்த பாப்பா என் கண்களை விட்டு அகல மறுத்து விட்டது.அழகாக ஸ்கார்ஃப் போட்டு பவ்யமாக சிரித்துக்கொண்டு இருந்த பாங்கு எல்லோரையும் கொள்ளை கொண்டு விட்டது.கடைகளை பார்க்காமல் சிலர் இந்த குழந்தையின் சுட்டியை ரசித்துக்கொண்டு இருந்தனர்,அதன் தாயிடம் அனுமதி பெற்று க்ளிக் செய்தேன்.

January 23, 2014

வீடு வாடகைக்கு....



வீட்டு உரிமயாளர்கள் என்பது இங்கு சென்னையைப்பொருத்தவரை வாடகைதாரர்களுக்கு ஹிட்லர்கள் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில பல வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது.

வீட்டு வாடகைக்கு என்று போனால் எங்கே வேலை பார்க்கறீங்க?வயசானவர்கள் இருக்காங்களா?சின்ன குழந்தைகள் இருக்கா?எத்தனை பேர் இருக்கீங்க?கவுச்சி சாப்பிடுவீர்களா?அடிக்கடி சொந்தக்காரங்க வந்து தங்குவார்களா?ராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களா?அம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதா?வாடகைக்கு ரசீது கேட்பீர்களா?உங்கள் பொருட்கள் எல்லாம் ஒரு டெம்போவில் அடங்கி விடுமா? மலை அளவு பொறுமை சாலிகளையே புரட்டிப்போடும் அளவுக்கு தேவை அற்ற எரிச்சலூட்டும் கேள்விகளை எல்லாம் சமாளித்து எதிர் பாராத அளவு வாடகையையும்,அட்வான்சையும் கேட்டு வாய் பிளந்து வேறு வழி இல்லாமல் கெஞ்சி கூத்தாடி குறைத்து வாடகைக்கு குடி வந்தால் அதற்கப்புறமாவது நிம்மதி இருக்குமா?

“யாரைக்கேட்டுட்டு டிரில் போடுறீங்க..முதல்லே அதை நிறுத்துங்க..”

“கவுச்சி சாப்பிடுவீங்கன்னு சொன்னீங்கதான்.நானும் ஒத்துக்கொண்டேன்தான்.அதுக்காக நாள் கிழமை கூட பார்க்காமல் சமைக்கிறதா?”

“உங்க சொந்தக்காரங்க வந்து ரெண்டு நாளைக்கும் மேலாகுது இன்னும் போகலியா?ரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதே?”

“என்னது... டமால்ன்னு சப்தம்? எவர்சில்வர் பாத்திரம் கீழே விழுந்து விட்டதா?மண்டைக்குள் வந்து எதோ விழுந்த மாதிரி ..இனியாவது ஜாக்கிரதையாக இருங்க”

“பாப்பா நொய் நொய்ன்னு அழுதுட்டே இருந்ததே.ராத்திரி பூரா தூக்கமே இல்லை.கொஞ்சம் அழாமல் பார்த்துக்கக்கூடாது”

இப்படி எக்குதப்பான கேள்விகளை எல்லம் சகித்து,பொறுமையாக பதில் சொல்லியாக வேண்டும் என்பது வாடகை தாரர்களின் தலைவிதி.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்படும் தரகர்கள் எக்கசக்க வாடகையை உயர்த்தி விடுகின்றனர்.சென்ற வருடம் ஒரு குடித்தனக்காரரை வாடகைக்கு அமர்த்தித்தந்த தரகர் மறு வருடம் வீட்டு உரிமையாளரிடம் சென்று அவர்களை காலி செய்யுங்கள்.நான் அதைவிட அதிக வாடகையில் இன்னொருவரை அழைத்து வருகிறேன் என்று கமிஷனுக்கு ஆசைப்பட,வாடகை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய முனைகிறார்..இனி என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சாமான் சட்டிகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்துக்கு மாறும் அவலத்துக்கு உள்ளாகின்றனர்.

20 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்கும் வாடகைதாரகள் படும் அவலத்தை விட குறைந்த அளவு வாடகையில் பட்ஜெட் வீடுகளில் இருப்பவர்கள் படும் அவலம் இன்னும் அதிகமே.

வீட்டு வாடகை 4000 என்று எடுத்துக்கொண்டால் மின்சாரக்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.முறைவாசல்,தண்ணீர்,கோலப்பொடி,துடைப்பம்,பினாயில்,பிளீச்சிங் பவுடர் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு போட்டு காசு பறிக்கின்றனர்.

இரவு பத்து மணி ஆகிவிட்டால் வீட்டு உரிமையாளர்களால் கேட் பூட்டப்பட்டு விடுகிறது.அதன் பிறகு வருபவர்கள் கெஞ்சி,கூத்தாடி வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டுதான் உள்ளே அனுமதிக்கப்படுன்றனர்.

பல இடங்களில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்தும் வாடகையாளர்களின் கார்களை காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . கார் விட தனியாக வாடகை கேட்கின்றனர்.அல்லது குடித்தனம் இல்லாத ஒருவரின் காரை உள்ளே விட அனுமதித்து அதற்கு தனி வாடகை பெற்று வருகின்றனர்.

காசோலையை வாடகைக்கு வாங்கிக்கொள்ளாதவர்களும்,வாடகைக்கு ரசீது கேட்டால் கூட 1000 தந்தால் ரசீது தருவேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.

மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக காணப்பட்டாலும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடும் பெரிய மனதுக்கார வீட்டு உரிமையாளர்கள் எண்ணிலடாங்காது.

தேவைக்கு ஆணி அடித்தால் ஆப்பு வைக்கும் உரிமையாளர்,பக்கத்திலேயே வீட்டு உரிமையாளர் குடி இருந்து விட்டால் பல்லை காட்டியே பல் சுளுக்கிக்கொள்ளும் வாடகை தாரர், உரிமையாளர்களின் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து அடங்கிப்போகும் வாடகையாளர்களின் குழந்தைகள்,அவ்வப்பொழுது உரிமையாளர்கள் ஏவும் வேலைகளையும் செய்வது.குழந்தைகளைப்பார்த்து ”டிவி வால்யூமை கம்மி பண்ணுடா.வீட்டு ஓனர் சப்தம் போடப்போகிறார்” என்று குழந்தைகளை அதட்டுவது இதெல்லாம் சகஜமாக நிகழும் நிகழ்வுகள்.

காலி செய்யும் பொழுது அட்வான்சை முழுதாக கொடுப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது.வீட்டை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து விட்டு ஒவ்வொரு குறைகளையும் கண்டு பிடித்து அதற்கெல்லாம் பணத்தைப்பிடித்துக்கொண்டு ஒரு சிறிய தொகையை தருவார்கள்.

இன்னும் சிலர் நாங்கள் தரும் பொழுது பெயிண்ட் அடித்து தந்தோம் அதே போல் திருப்பித்தரவேண்டும் என்ற் அடாவடி செய்பவர்களும் உண்டு.

அவை அனைத்திலும் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் ஆனதும் பலர் பெண்ணுக்கு கல்யாணம் மகனுக்கு கல்யாணம் தம்பி குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று கூசாமல் பொய் சொல்லி காலி செய்து அதிக வாடகைக்கு வேறொரு குடும்பத்தினரை அமர்த்துவது.

வாடகைதாரர்கள் வாழ்வில்  இத்தனை கஷ்டங்களும் வருடத்திற்கு ஒரு முறை நடக்குமென்றால்..யோசித்துப்பாருங்கள்...!

அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா?

இதனை இன்னுமொரு  ஒரு பதிவினில் அலசுவோம்.



January 16, 2014

இமாவின் ஃபீஜோவா ரெலிஷ்



சென்னை இண்டர்நேஷனல்  ஏர்போர்டில் டிராலியைத்தள்ளிக்கொண்டே வந்த இமா - க்றிஸ்  தம்பதிகள் நான் ”ஹலோ இமா”என்று சப்தமாக அழைத்ததை சற்றும் எதிர் பார்க்கவில்லை.எங்கேயோ பார்த்துக்கொண்டு,யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தவர்கள் அங்கே என்னைப்பார்த்ததில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி.தான் ஊர் வரப்போவதைப்பற்றி எனக்கு அறிவிக்காமலேயே நான் ஏர்போர்ட் சென்று அழைக்க வந்திருக்கும் பொழுது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லைதானே?

இமாவின் உறவினர்கள் இவ்வாண்டு விடுமுறைக்காக இமா தம்பதிகளை கனடா அழைத்தும்,கனடா செல்லாமல் இந்தியா வந்தது நட்புக்களைக்கண்டு மகிழ்வதற்காக மட்டுமே என்ற காரணத்துக்காகத்தான்  என்பதைப்பார்க்கும் பொழுது நட்புக்கு எத்தனை முக்கியத்துவம் தருகின்றார் என்பதை அறிய முடிகிறது.

பக்கத்து நாட்டில்(கொழும்பு) இருந்து கொண்டே அருகே இருக்கும் இந்தியாவுக்கு வராமல்,மிக தூர தேசத்துக்கு (நியுஸிலாந்த்)சென்று குடி அமர்ந்த பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக இந்தியா  வந்து சென்றார்.இந்திய நட்புக்களின் அன்பும்,நேசமும் மிக சீக்கிரமாக இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.இந்தியாவில் தான் பெற்ற இனிமையான அனுபவங்கள்,சந்தோஷமான தருணங்கள் தாம் இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.

பொதுவாக சமையல் குறிப்புக்கள் கொடுக்கும் நட்புக்களுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் என்று விளையாட்டாக பின்னூட்டம் கொடுப்பார்கள்.அப்படியே நானும் அவரது ஃபீஜோவா ரோல் அப்  சமையல் குறிப்புக்கு //ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:) //இப்படி விளையாட்டாக பின்னூட்டினேன்.இதனை என்றோ மறந்தும் விட்டேன்.

ஆனால் இமா ஃபீஜோவா தயாரிப்பான ஃபீஜோவா ரெலிஷ் பாட்டில் ஒன்றினை என்னிடம் கொடுத்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அவரது மென் சிரிப்பில்தான் எனக்கு மெள்ளமாக புரிந்தது.

ஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.