February 10, 2013

என் பொக்கிஷம்





இந்த மோதிரத்துக்கு வயது நூறுக்கும் மேல் என்றால் நம்பமுடிகின்றதா?அதற்குள் “அக்கா..உங்களுக்கு நூறுவயதுக்கும் மேல் ஆச்சா?பாட்டி,நிஜமாலுமே உங்களுக்கு நூறு வயதுக்கு மேலாச்சா?சொல்லவே இல்லையே?”என்று முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு கேள்விகள் கேட்ககூடாது:)பொறுமையாக மேலே படியுங்கள்.

சுமார் ஒரு பவுன் எடையுடன் கூடிய மோதிரத்தின் நடுவில் அடர் சாம்பல் நிறத்தில் பெரிய சுண்டைக்காய் அளவில்  சற்று தட்டை வடிவில் கண்களைப்பறிக்கும் இந்த மோதிரம் நான் மட்டுமல்ல வழி வழியாக என் முன்னோர்கள் பத்திரமாக பாதுகாத்து உபயோகித்து வரும் பொக்கிஷம்இது.

இதனை பற்றி எழுத வாய்ப்பளித்த தோழி ஆசியாவுக்கு என் அன்பின் நன்றிகள்.//தமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வும்..!// என்ற முன்னூட்டத்துடன் ஆசியாவின் வரிகள் இத்தொடர்ப்பதிவை ஆர்வத்துடன் எழுதத்தூண்டியது.மேலும் தங்கை வானதியும் அழைத்து இருக்கின்றார்.அவருக்கும் நன்றி.

இம்மோதிரத்தின் மதிப்பு எல்லாம் எனக்குத்தெரியாது.எங்கள் குடும்பத்தில் பாரம்பர்யமாக வழிவழியாக எம்குடும்ப மாந்தர்கள் விரல்களை அலங்கரித்து வந்த மோதிரம் இப்பொழுது என் விரலை அலங்கரித்து வருகின்றது.

என் பாட்டியின் அம்மா தன் கணவரை கரம் பிடித்த தருணத்தில் அணியப்பட்ட இம்மோதிரம்,என் தாத்தாவை பாட்டி கரம் பிடித்த தருணத்திலும் அணியப்பட்டது.பிறகு என் பெற்றோர்களின் திருமணத்திலும் என் தாயார் அணிந்து இருந்தார்கள்.பின்பு என் திருமணத்தில் நான் அணிந்து  அன்றில் இருந்து நான் உபயோகித்து வருகின்றேன்.என் மகள் திருமணத்திலும் இந்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.என் மகளோ மிக மெலிதான மோதிரம் அணியும் பழக்கம் உள்ளவளாக இருப்பதால் இன்றுவரை என்னிடமே உள்ளது.

வருடங்கள் பல ஆனாலும் இன்னும் மெருகு மாறாமல்,அந்தக்காலத்து மாடல் என்ற சுவடில்லாமல் ஏதோ நேற்றுத்தான் நகைக்கடையில் இருந்து வாங்கி வந்தது போல எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அபூர்வ டிஸைன்,அழகிய வேலைப்பாடுடன் கூடிய அருமையானதொரு கண்களை பறிக்கும்,பார்ப்பவர்களை வசீகரிக்கும் விலைமதிப்புள்ள கல் ஒன்றினை பதித்து ஜொலி ஜொலிக்கும்.

இதில் இருக்கும் கல்லை சிக்ஸ் திரட் ஸ்டோன் (six thread stone) என்கின்றனர்.தமிழில் ஆறுநூல் கல்,ஆறிழைக்கல் என்கின்றனர்.கல்லின் மத்தியில் இருந்து ரேகை போன்று ஆறு இழைகள் ஓடுவது நுண்ணியமாக தெரியும்.ஆனால் இக்கல்லை நான் அறிந்ததில்லை.ஒரு தடவை அணிந்து இருந்த பொழுது ஒருவர் மோதிரத்தை உற்று நோக்கி இதில் ஆறு நூற்கள் ஓடுகின்றது.இது அபூர்வக்கல்.பொதுவாக இப்படி ரககற்களில் நான்கு இழை தான் ஓடும் இதில் வித்தியாசமாக ஆறு இழை ஓடுகின்றது என்று சொன்னார்.

இது நடந்து ஆண்டுகள் பலவாயினும் நான் நவரத்தினக்கல் மதிப்பீட்டாளரிடம் காட்டி இதன் மதிப்பை அறிந்து கொள்ள விழைய வில்லை.ஏனென்றால் விலை மதிப்புள்ளதோ,இல்லாததோ இந்த அரிய பொக்கிஷத்தை,என் குடும்ப சொத்தை,அதற்கொரு விலையை மதிப்பீடு செய்து அறிந்து கொள்ள பிடிக்கவில்லை.

அணிந்திருக்கும் விரலுக்கு ராஜகம்பீரம் கிடைக்கும் அழகிய மோதிரம் .அணிந்தைருக்கையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும்,பரவசத்தையும்,நிறைவையும் அளவிட முடியாது..மிக முக்கியமான விஷேசங்களில் மட்டும் அணிந்து விட்டு பத்திரமாக அதற்குறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து விடுவேன்.வலது கை விரலில் அணிந்து இருந்தால் சாப்பிடும் பொழுது ஜாக்கிரதையாக இடது விரலுக்கு மாற்றி விடுவேன்.நீர் படாமல் பாதுகாப்பேன்.பத்திரமாக டிஷ்யூவில் துடைத்து சுத்தம் செய்வேன்.

யாருக்கும் அணியக்கொடுத்ததில்லை.பல ஆண்டுகளுக்கு முன் தூரத்து உறவினர் இல்லத்திருமணத்திற்கு சென்று இருந்த பொழுது பெண்ணுக்கு அலங்கரித்து நகை அணிவிக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.புதுப்பெண்ணுக்கு பத்து விரல்களிலும் மோதிரம் அணிவிப்பார்கள்.பெண்ணிடம் பத்து மோதிரம் இருந்திருக்கவில்லை.சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் தாங்கள் அணிந்திருந்த மோதிரங்களைக்கழற்றிக்கொடுத்தனர்.என்னிடமும் கேட்ட பொழுது நான் அணிந்திருந்த இன்னொரு மோதிரத்தை கழற்றிக்கொடுத்த பொழுது வலது கை விரலில் இருந்த இந்த மோதிரம் நன்றாக உள்ளது இதனைக்கொடுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு கணம் திணறிவிட்டேன்.வேறு வழி இல்லாமல் கழற்றிக்கொடுத்து விட்டு வீடு திரும்பியும் என்னால் நிம்மதியாக இருக்க இயலவில்லை.

மோதிரம் திரும்பக்கிடைக்க இன்னும் பல நாள் ஆகலாம்.மோதிரத்தை மணப்பெண் விரலில் அணிவித்த பொழுது பெண்ணின் நெருங்கிய உறவினர் யாரும் அருகில் இருந்திருக்கவில்லை.பெண்ணுக்கோ யார் யார் மோதிரம் என்றும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.காலம் காலமாக பாதுகாத்து வந்த மோதிரம் நம்மை விட்டு நழுவி விடுமோ என்ற பயத்தில் இன்னொரு உறவினரிடம் விஷயத்தை சொன்னேன்.அவர் மறுநாளே பத்திரமாக மோதிரத்தை வாங்கி தந்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது.

அரிய பொக்கிஷமான இந்த மோதிரம் இனி எனக்கு வருங்காலத்தில் பேத்தி பிறந்து அவளுக்கு திருமணம் ஆகும் பொழுது அணியப்படவேண்டும் வழி வழியாக இது பின்பற்றப்படவேண்டும் என்பதே என் ஆசை.

48 comments:

Unknown said...

அரிய பொக்கிஷம் அருமை.. அந்த காலத்தில் தங்கத்தின் தரம் எப்படினு எனக்கு தெரியலை..இன்னும் புதுசு போல பளபளனு இருக்கு.

பழைய நகைகளை யாரும் இப்ப அதிகம் பாதுகப்பதில்லை.. காலத்துக்கு தகுந்த மாதிரி பழையதை கொடுத்து மாற்றிவிடுகிறார்கள்.. இன்னும் உங்களின் வருங்கால தலைமுறைகள் இந்த பொக்கிஷத்தினை பாத்திரமாக பாதுகாக்கனும்.. காலம் காலமாக அனைவரும் சந்தோஷமாக போட வாழ்த்துக்கள்

கார்த்திக் சரவணன் said...

மோதிரத்தைக் கேட்டபோது நீங்கள் தெளிவாக சொல்லியிருக்கலாம்.. அது என் சென்டிமென்ட் மோதிரம் என்று... அது மீண்டும் வரும்வரை நிம்மதியே இருக்காதே...

மாதேவி said...

அரிய பொக்கிஷம்.

பகிர்ந்துகொண்டு எங்களுக்கும் அறியத் தந்துள்ளீர்கள்.



Radha rani said...

பரம்பரை சொத்தை பார்க்கிறதே ரொம்ப அபூர்வமான இந்த காலத்தில் 100 வயது மோதிரத்தை பார்க்கும் சந்தர்ப்பத்திற்கு மகிழ்ச்சி ஸாதிகா ..மோதிரம் பல்லாயிரம் வருடம் வரலாற்றை பேசட்டும். வாழ்த்துக்கள். என்னிடமும் நான்கு தலைமுறை சங்கு, வெள்ளி சிணுக்கோலி,(கூந்தல் சிக்கு எடுப்பது) அழகான வேலைப்பாடான பாத்திரம் உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அபூர்வ மோதிரம் வைத்துள்ள தங்களின் இந்தப் பதிவைப்படித்ததும், மோதிரக்கையால் குட்டுப்பட்டது போல அல்ல ஷொட்டுக்கிடைத்தது போல உணர்ந்தேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

மிகச்சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

அரிய பொக்கிஷமான இந்த மோதிரம் இனி எனக்கு வருங்காலத்தில் பேத்தி பிறந்து அவளுக்கு திருமணம் ஆகும் பொழுது அணியப்படவேண்டும் வழி வழியாக இது பின்பற்றப்படவேண்டும் என்பதே என் ஆசை.//

உங்கள் பொக்கிஷம் அழகாய் இருக்கிறது.
உங்கள் ஆசை நிறைவேற இறைவன் அருள்புரிவார்.
பதிவு அருமை.
நானும் ஆசியாவின் தொடர் அழைப்புக்கு எழுதி விட்டேன் ஸாதிகா.

RajalakshmiParamasivam said...

ஆண்டுகள் நுறு ஆன பின்பும் பதினெண் வயது பருவ அழகியாய் பளபளக்கிறாளே..

அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.
நீங்கள் மணப்பெண்ணிற்கு கொடுத்து விட்டு வந்துவிட்டிர்களே என்று எழுதியிருந்ததைப் பார்த்தவுடன் சற்றே பயந்து போனேன்.போச்சா.... என்று.
அப்பாடி மறுபடி உங்களை வந்து சேர்ந்தது.

நல்ல அருமையான் பகிர்விற்கு நன்றி,

ஸ்ரீராம். said...

மோதிரமும் அழகு, பதிவும் அழகு. :))

Ranjani Narayanan said...

அன்பு ஸாதிகா,
என் வலைதளத்திலும் ஒரு பொக்கிஷம் பற்றி எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
உங்கள் தொடர் பதிவில் நானும் கலந்து கொள்ள ஆவல்!

உங்கள் பொக்கிஷம் உங்கள் விருப்பபடியே தலைமுறை தலைமுறையாக எல்லோருக்கும் இன்பத்தைக் கொடுக்கட்டும்.

Jaleela Kamal said...

கல்யாண பெண்ணுக்கு கழற்றி போடும் போது ஆமாம் அந்த பொண்ணுக்கு யார் யார் மோதிரம் என்று தெரியாது தான்.


எப்படியோ திரும்ப கிடைத்ததே..


Jaleela Kamal said...

பொக்கிஷங்களை பாது காப்பது பெரிய விஷியம்

Jaleela Kamal said...

நூறு வயது என்றால் கண்டிபாக நம்ப முடியவில்லை.

Seeni said...

மாஷா அல்லா!

நல்ல நினைவான பொக்கிஷம்தான்...
பத்திரம்..!

உங்களுக்கு இதை பெற்றோர்கள் கொடுத்தார்கள் என்றால்-
உங்களுடன் இன்னும் சில சகோதரிகள் இருந்தால் எப்படி-
யாருக்கு இதை அணிவிப்பார்கள்!
உங்கள் மகளுக்கு கொடுத்தாக சொன்னீர்கள் !இன்னொரு மகள் இருப்பாரேயானால் யாருக்கு
நீங்கள் கொடுப்பீர்கள்...

சும்மா தெரிந்து கொள்ளத்தான் சகோ....

முன்னோர்கள் சொத்தாக கொடுத்திருக்கிறார்கள்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

பழைய நகைகளை யாரும் இப்ப அதிகம் பாதுகப்பதில்லை..//உண்மைதான்.பழைய நகைகள் இப்பொதெல்லாம் யாரும் பாதுக்காபதில்லை.முன்னோர்களின் நகைகளை அழித்து புது வடிவம் கொடுத்து விடுகிறோம்.நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

அது என் சென்டிமென்ட் மோதிரம் என்று... அது மீண்டும் வரும்வரை நிம்மதியே இருக்காதே...//அப்படி சொல்ல மிக தயக்கமாக இருந்தது ஸ்கூல் பையன்.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி மாதேவி.

ஸாதிகா said...

மோதிரம் பல்லாயிரம் வருடம் வரலாற்றை பேசட்டும். வாழ்த்துக்கள்//வாழ்த்துக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் ராதாராணி.

//என்னிடமும் நான்கு தலைமுறை சங்கு, வெள்ளி சிணுக்கோலி,(கூந்தல் சிக்கு எடுப்பது) அழகான வேலைப்பாடான பாத்திரம் உள்ளது.// கண்டிப்பா இது பற்றிய பதிவை நீங்கள் அடுத்த பதிவாக எழுதப்போறீங்க.இதனையே என் அழைப்பாக ஏற்று எழுதவேண்டும் ராதாராணி.

ஸாதிகா said...

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவார்கள்.//விஜிகே சார் நான் யாரையும் குட்ட மாட்டேன் சார்.:)கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

உங்கள் ஆசை நிறைவேற இறைவன் அருள்புரிவார்.
பதிவு அருமை//மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கோமதிம்மா.

Asiya Omar said...

முதலில் என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.
ஜொலிக்கும் மிக அருமையான பகிர்வு.பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வரும் அரிய பொக்கிஷத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி தோழி.

ஸாதிகா said...

உங்கள் பொக்கிஷம் உங்கள் விருப்பபடியே தலைமுறை தலைமுறையாக எல்லோருக்கும் இன்பத்தைக் கொடுக்கட்டும்//பெரியவர்களின் வாழ்த்து மகிழ்ச்சியைத்தருகிறது.மிக்க நன்றி ரஞ்சனிம்மா.அவசியம் உங்கள் பதிவை படிக்கிறேன்.

ஸாதிகா said...

வாங்க ஜலி.வரிசையாக பின்னூட்டி இருக்கிங்க நன்றி.

ஸாதிகா said...

சகோ சீனி என் பாட்டிக்கு உடன் பிறந்த சகோதரி கிடையாது.

என் அம்மா மூத்த பெண்.

அதே போல் நானும் மூத்த பெண்.

எனக்கு ஒரே பெண்.

இனி எதிர் காலத்தில் வரவிருக்கும் முதல் பேத்திக்கு அந்த மோதிரம் .

கணக்கு சரியா போச்சா?நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.இந்த வாய்ப்பை வழங்கியதற்கும் நன்றி.

Anonymous said...

மோதிரத்தின் பரம்பரைக் கதை அருமை.
வந்தபடியால் வாசிக்கக் கிடைத்தது. நன்றி. வாழ்த்து.
'வேதா. இலங்காதிலகம்.

Mahi said...

/வலது கை விரலில் அணிந்து இருந்தால் சாப்பிடும் பொழுது ஜாக்கிரதையாக இடது விரலுக்கு மாற்றி விடுவேன்.நீர் படாமல் பாதுகாப்பேன்./ மீ டூ! :) எனக்கு கையில் எந்த மோதிரம் இருந்தாலும் இதே பழக்கம்தான் ஸாதிகா அக்கா! அதனால் பெரும்பாலும் வீட்டில் இருக்கையில் கைகள் வெறுமையாகவே இருக்கும். :)

நல்ல பதிவு..உங்க மோதிரம் உங்களை வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்குப் பேத்தி பிறந்து உங்கள் குடும்பப் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்!

vanathy said...

சூப்பர் மோதிரம். அதன் மதிப்பு தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. சூப்பர் போஸ்ட்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

அழகான பொக்கிஷம் தங்களது. பரம்பரை பரம்பரையாக பாதுகாப்பது பெரிய விஷயம்.

இளமதி said...

அரிய பொக்கிஷம்... பதிவைப் பார்க்கையிலேயே அதன் பெருமை புரிகிறது.

விரைவில் உங்களுக்கு அது மீண்டும் கிடைத்திடவேண்டும்.

நல்ல பதிவு + பகிர்வு ஸாதிகா...

Unknown said...

super post.

ராமலக்ஷ்மி said...

அழகான மோதிரம். //அரிய பொக்கிஷத்தை,என் குடும்ப சொத்தை,அதற்கொரு விலையை மதிப்பீடு செய்து அறிந்து கொள்ள பிடிக்கவில்லை.// ஆம், இங்கே உணர்வுகளே மதிப்பை நிர்ணயிக்கின்றன. அருமையான பகிர்வு ஸாதிகா.

Angel said...

அருமையான பொக்கிஷம் சாதிகா .அழகாக எழுதியுள்ளீர்கள் ..திருமண மண்டபத்தில் மோதிரம் கழட்டி கொடுத்த உங்க நிலைமை எனக்கே திக்குன்னு இருக்கு ..அதுவும் காலம் காலமா பாதுகாத்து வரும் பொக்கிஷம்
நல்லவேளை பத்திரமாக கிடைத்ததே :))

Seeni said...

appadiyaa!

nallathau maasha allah!

allah melum ungal kudupathirkku arulpaalippaanaaka ...

பால கணேஷ் said...

அச்சச்சோ... ரொம்ப லேட்டா வந்துட்டேனே...! முன்னோர்கள் வழங்கிய அந்த மோதிரம் அவர்களின் ஆசிகளையும் உங்களிடம் சுமந்தல்லவா வ்ந்திருக்கிறது. அது அரிய பொக்கிஷமல்லாமல் வேறென்ன? இது பற்றி விரிவாக அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சிம்மா.

Menaga Sathia said...

மோதிரம் அழகா இருக்கு....இன்னும் பலதலைமுறைகள் தொடர வாழ்த்துக்கள்!!..

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

தலை மறைவான அதிரா said...

அச்சச்சோ எனக்கு என்னாச்சோ ஏதாச்சோ தெரியவில்லை ஸாதிகா அக்கா.. எப்பூடி இதை மிஸ் பண்ணினேன்ன்... ஒருவேளை பின்னூட்டி விட்டேனோ எனத் தேடினேன் என் பெயர் இல்லை:(..

ஆஹா தங்க மோதிரக் கதை அருமை.. அப்போ இனி அது மகளுக்குப் போகுமாக்கும்... சூப்பர் பொக்கிஷம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

உங்களுக்குப் பேத்தி பிறந்து உங்கள் குடும்பப் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்!//வரிகளில் நெகிழ்ந்தேன் வானதி,நன்றி.

ஸாதிகா said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆதி.

ஸாதிகா said...

விரைவில் உங்களுக்கு அது மீண்டும் கிடைத்திடவேண்டும்.//இல்லை இளமதி அது இப்பொழுதும் என்னிடமே உள்ளது.பதிவை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

ஸாதிகா said...

ஆம், இங்கே உணர்வுகளே மதிப்பை நிர்ணயிக்கின்றன. //ஆம்.சரியாக சொன்னீர்கள் ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்

ஸாதிகா said...

துஆவுக்கு நன்றி சகோ சீனி.

அப்பாதுரை said...

மிகவும் ரசித்துப் படித்தேன் 
 மதிப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்ற இன்சூரன்சு எடுத்துக் கொள்ளுங்கள் என்ற என் unsolicited ஆலோசனையை. உங்கள் முன்வைக்கிறேன்.
Seeni அவர்களின் கேள்வி சுவாரசியமான கதைக்கரு.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ அப்பாதுரை.ஆலோசனைக்கு மிக்க நன்றி.