March 20, 2012

சிட்டுக்குருவி




சிட்டுக்குருவி (Sparrow)என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்.யாரையும் துன்புறுத்தாத அதன் அமைதியான சுபாவம்,அதன் சுறு சுறுப்பு,உற்சாகத்துள்ளல்,படு ஜாக்கிரதையான உருட்டும் விழிப்பார்வை,அதன் குட்டியான உருவம்,கீச்சு கீச்சு என்று கத்தும் மெல்லிய சப்தம் ,பெண்குருவியின் மென்மையான உருவம் ,ஆண்குருவியின் கம்பீர உருவம்,பட்டுப்போன்ற மென்மையான உடலைமைப்பு,கையில் பிடித்து தடவினால் குட்டியூண்டு தலையை ஆட்டி சிலிர்த்துகொள்ளும் பாங்கு மொத்ததில் அப்பாவியான தோற்றம் சந்தோஷத்திற்கு அடையாளமாக கருதப்படும் சிட்டுக்குருவியின் தன்மை எது என்னை அதன் பால் ஈர்த்தது என்று கணிக்க இயலவில்லை.

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.தமிழ்நாட்டில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள்,கிணற்றான்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டு காலமாகும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும்.கூடுகட்டத்தெரியாத, மனிதர்களின் செயல் பாட்டை நம்பி வாழும் அப்பாவிப்பறவையினம் என்றால் மிகை ஆகாது.

1.சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

2.சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா

3.சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு

4.சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது

5.ஏ குருவி சிட்டுக்குருவி ஒஞ் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு

6.சிட்டுக்குருவி வெக்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத் தருது

7.சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி

8.சிட்டு சிட்டுக் குருவிக்கு கூடு எதுக்கு அது


இப்படிப்பல பாடல்களை கொண்டு சினிமா உலகம் சிட்டுகுருவியின் அரும் பெருமைகளை பதிவு செய்துள்ளது.சிறுக சிறுக சேமிப்பதனைக்கூட சிட்டுக்குருவி சேர்த்தார்ப்போல் என்றே சிட்டுக்குருவியை முன்னிலைப்படுத்தி உவமானம் கூறுவார்கள்

இந்த சிட்டான குருவியைப்பற்றி தமிழ் இலக்கியமும் பல இடங்களில் பதிவு செய்துள்ளது வரலாறு கூறும் உண்மை.

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டு குருவியைப் போலே எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.

மகாகவி பாரதியாரும் சிட்டுக்குருவி பற்றி மேற்கண்டவாறு பாடி புளங்காகிதப்பட்டுள்ளார்.

இளம் ஜோடிகளை இளம் சிட்டுகள் என்றும்,இளமை பிராயத்தில் சுறு சுறுப்பாக வளைய வரும் யுவன் யுவதிகளையும் சிட்டுகள் என்றும்,வேகமாக ஓடியவனை சிட்டென பறந்து விட்டான் என்றும் படைப்பாளிகள் கட்டியம் கூறுகின்றனர்.

மைனா (maina - Acridotheres tristis) )வல்லூறு(Shaheen Falcon),ஆந்தை(hawk) பொன்னி (indian pitta )போன்று அழிந்து வரும் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகிப்போனதுதான் கவலை தரும் உண்மை.

சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ,சோடியம் விளக்குகளால் அழிகின்றன.வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது.இதனால் குருவிகளுக்கு உணவுப்பற்றாகுறை ஏற்பட்டுவிட்டது.செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன,பறந்து கொண்டிருக்கும் பொழுதே கதிர்வீச்சின் நச்சுத்தன்மையால் செத்து மடிகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.

அந்தக்காலத்தில் வீட்டிற்கு வெளியே உரல் வைத்து நெல் குத்தி அரிசி எடுப்பார்கள்.முறம் வைத்து தானியங்களை புடைப்பார்கள்.ஆனால் இப்பொழுது அது அரிதாகி விட்டது.

சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி அக்காலத்தில் இருந்தது போக இப்பொழுது கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

பொட்டலம் கட்டி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அண்ணாச்சிகளை காணாமல் போகப்போக இந்த அப்பாவி உயிரினமோ உலகை விட்டே காணாமல் போய்க்கொண்டுள்ளது.

நாள்தோறும் தமது வாழ்வுக்காக அந்த சின்னஞ்சிட்டுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அழிந்துகொண்டிருக்கும் பறவை இனமாக சிட்டுக்குருவிகளை காக்க 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் திங்கள் 20 ஆம் நாளை உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூறப்படுகிறது.


யாருக்கும் தீங்கிழைக்காத அந்த சின்னஞ்சிறு உயிரினம் வளரும் தலை முறைகளுக்கு அறியபடாமல் போய் விடக்கூடிய ஆபத்தை தவிர்ப்போம்!தவறினால் இனி வரும் காலங்களில் சிட்டுக்குருவிகள் தினத்தை மட்டிலுமே கொண்டாடுவோமே தவிர சிட்டுக்களை கண்ணால் காண இயலாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் வந்துவிடும்.

சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன என்ற விபரங்களை சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட இயற்கை ஆர்வலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நம்மால் முடிந்தவரை திரட்டப்படும் தகவல்கள் ஆர்வலர் சங்கத்துக்கு தெரியப்படுத்தலாம்.

சிட்டுக்குருவிகள் நின்று கொண்டிருக்கும் காட்சிகள்,அவை தானியங்களை உண்ணும் காட்சிகள்,கூடுகளில் குடித்தனம் நடத்தும் காட்சிகள் போன்ற சிட்டுக்குருவிகள் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படம் உங்களிடம் இருந்தால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.

சிறந்த புகைப்படங்களுக்கும் தகவல்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.

மின்னஞ்சல் முகவரி : MNSsparrow@yahoo.in

அப்பாவிக்குருவிகளை அரவணைப்போம்!
அதன் வாழ்வாதரத்தை உயிர்பிப்போம்!
அழிந்து வரும் இனத்தைக்காப்போம்!
இயற்கை ஆர்வலர்களுக்கு கைகொடுப்போம்!!