February 6, 2010

தொ(ல்)லை காட்சி மனிதர்கள்


சி() வீடுகளில் காண்கிறோம்.எப்பொழுது பார்த்தாலும் தொலைக்காட்சியின் ஒலி காது ஜவ்வைக்கிழிக்கும். ஒரு ஷாப்பிங்கோ,கோவிலுக்கோ,மசூதிக்கோ,சர்ச்சுக்கோ சென்றாலும் 'அட,எட்டு மணிக்கு திருமதி செல்வம்' போட்டு விடுவானே என்ற பதைபதைப்புடன் ஓடி வருவார்கள்.விருந்தினர் வருகையில் கூட கண்கள் தொலைக்காட்சியிலேயே லயித்திருக்கும்.வந்திருப்பவர் இவரைப்போலவே ஆளாக இருந்தால் ஒகே.அல்லாவிடில் ஏன் தான் வந்தோமோ என்றாகிவிடுவது இந்த தொலைகாட்சி மனிதர்கள் இதனை புரிந்திருக்க மாட்டார்கள்.எதோ நகமும்,சதையும் போல் இந்த காட்சி பெட்டியுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிப்பார்கள்.

படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் தேய்த்து விட்டு நேரே டிவி ஸ்விட்சில் தான் கை நீளும். மனைவி தரும் காபியை மனைவி முகம் பாராமல் வாங்கி தந்திருப்பது காபியா,ஹார்லிக்சா என்பது கூட உணர்ந்திருக்காமல் ஆறவிட்டு பருகி முடித்து குளிக்க செல்பவர்,அலுவலக உடுப்புடன் மீண்டும் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ரிமோட்டில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.இல்லத்தரசி காலை டென்ஷனுடன் பரபர வென்று டிபனை செய்து முடித்து,லஞ்சை பாக்ஸில் அடைத்து,பிள்ளைகளை தயார் செய்யும் வேளையில் இவர் ஹாயாக தமிழகத்திற்கு வணக்கம் போட்டுக்கொண்டிருப்பார்.

'அனு,இன்னிக்கு என்ன டிபன்?"

"பொங்கல்"எங்கோயோ தூரமாக மங்கையின் குரல்.

அப்படியே பொங்கலை ஒருதட்டில் வச்சித்தாயேன்.அப்படியே ஸ்பூனும்.."

மனதில் ஓடுவதை முகத்தில் வாசிக்காமல் அங்ஙனமே செய்வாள் பதிவிரதை.

காமெடிடைமில் வடிவேலு கதைப்பதை வாயெல்லாம் பல்லாக பார்த்துக்கொண்டிருந்தவாறே டிபன் வயிற்றினுள் சென்றுவிடும்.

தொலைகாட்சியே கண்ணாக ஷு லேஸ் வரை முடிந்து "அனு வர்ரேன்"ஐயா கிளம்பியும் டிவி ஓசை இறக்காது.

பிள்ளைகள் ஸ்கூல் சென்று,இல்லாளும் உணவருந்தி அதற்கு பின்னாவது ஓசை போகுமா என்று பார்த்தால்..

ம்ஹும்.."தொட்டால் பூ மலரும்,தொடாமல் நான் மலர்ந்தேன்"எம் ஜி ஆரும் சரோஜா தேவியும் ஆடும் பாடலின் மலர்ந்த பூவின் தேனை (கிண்ணத்தில் எடுத்து)அருந்த உட்கார்ந்து விடுவாள் நம்ம இல்லாள் .

ம்ம்..அதற்கப்புறம் என்னத்தை சொல்வது?ராணிமகாராணியின் ஆட்சிதான் ஹாலில்.அலுக்கும் வரை பார்த்து விட்டு பெட்டியை அணைத்தாலும் திரும்ப மதியம் தூக்கம் போட்டால் உடல் பெருத்துவிடும் என்ற காரணத்தால் மீண்டும் இந்தியத்தொலைக்காட்சியிலே முதல்முறையாக வந்த படத்தை வாய் மூடாமல் பார்க்கும் பொழுது உள்ளே எத்தனை கொசு,,பூச்சி நுழைந்ததோ..இறைவனுக்கே வெளிச்சம்.

மணி ஐந்தானால் வரிசைக்கட்டிக்கொண்டு கொண்டவனும்,பெற்றதுகளும் வர அரசனுக்கே முதல் உரிமை. அலுவலக ஆடையுடன் அமர்ந்து விடுவார்.காபி வித் அனுவாக மனைவி முன்னால் காபி டம்ளருடன் நிற்பதை ஒரு நிமிஷகாலம் சென்றுதான் கணித்து கை நீட்டி வாங்குவார்.

"அப்பா..சுட்டி டிவிபார்க்கணும்"

"சிக்ஸ் தேர்ட்டிக்கு எல்லாம் போய்டணும்.மிட்டெர்ம் வருதே சரியா செல்லமே"போனால் போகிறது என்று பெரிய மனதுடன்(வேறொன்றுமில்லை பெற்றமணம் பித்து) ரிமோட்டை மக்கள் கைகளில் வழங்கி விட்டு ஆஃபீஸ் உடையை மாற்ற அப்பொழுதுதான் சோஃபாவைவிட்டே எழுவார்.

இப்படியாக டிவியின் வாய் மூடும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும்,பெரிய முள்ளும் ஒன்றிணைந்து நடுவாக நிற்கும்.

அந்த வீட்டு சோஃபாக்களை பார்க்கவேண்டுமே..?உட்கார்ந்து உட்கார்ந்து ஐயோ பாவமாக அழுதுவடிக்கும்.விருந்தினர்கள் வருவதாக் தெரிந்தால் அவசரஅவசரமாக சோஃபா மீது பெட்ஷீட்டை விரித்து மேக் அப் பண்ணும் கூத்தும் நடக்கும்.அந்தளவுக்கு சோஃபாவை தேய்த்து இருப்பார்கள்.

பிள்ளைகள் படிக்கும் நேரம் அறைக்குள் தள்ளி கதவை மூடி விட்டு ஐயாவும்,அம்மாவும் ஜோடி நம்பர் ஒன் ஆக தம்பதி சகிதம் அமர்ந்து கொண்டு சீரியல் பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது?

ஒரு ஓட்டை பிரிஜ்ஜை வைத்து பத்து வருஷமாக ஓட்டிக்கொண்டு புதிதாக வாங்க நூறு முறை யோசிக்கும் இந்த தொலைக்காட்சி மனிதர்கள் டிவி ரிப்பேர் ஆனவுடனேயே ஒரு தடவை கூட யோசிக்காமல் ஆயிரங்களை அள்ளியோ,கிள்ளியோ கொடுத்து பிளாஆஆஆஆஆஆஆட் (அதாங்க பெரீய ஸ்க்ரீன்)வாங்கி பரவசப்படும் கொண்டாட்டம் பார்த்தால் என்னவென்று சொல்லுவது?

போன் பில்லை பற்றி யோசிக்காமல் ஊரில் இருக்கும் அக்காவிடம் "தங்கத்தை" பற்றி பேசி உச் கொட்டுவது.அட..தங்கநகையை சொல்ல வரவில்லை."தங்கம்"சீரியலை சொல்லுகின்றேன்.

தொல்லை காட்சியை பார்த்து பார்த்து அசத்தப்போவது யாரு?அவங்க இல்லேங்க.இப்படிப்பார்க்கிறார்களே என்று பார்ப்பவர்களை அசத்திப்போட்டு விடுவார்கள்.

பசங்களை இப்படி ரூமுக்குள்ளார தள்ளிவிட்டு படிக்கிறாங்களா?இல்லையா?உள்ளே நடந்தது என்ன?பரிட்சையில் நல்ல மார்க் வாங்கனுமே?இப்படி அணு அளவும் பயமில்லை.

அது இதுஎது என்று எந்தக்கவலையும் இல்லாமல் பூதக்கண்ணாடி போடாத குறையாக கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்க்கும் பரவசத்தை என்னவென்று இயம்ப?

சீரியல் பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்காப்படாமல் பால் ஆடைபடிந்து கிடக்கும்,ஹார்லிக்ஸை கலக்க்ப்போவது யாரு?


இருங்க..மேலே சொல்லிட்டே போனால் எழுந்து போய்டுவீங்க.எனக்குத்தெரிந்ததை அடுத்த பதிவுக்கு வாங்க பேசலாம்.

"என்னடா இவள் தொடரும் போட்டுட்டு ஓடுகிறாளே. டீவியில் ஓடும்
கருத்து யுத்தம் பார்க்கவா?"என்று கேட்கிறீர்களா?

"அட..ஆமாங்க..நிஜம்.கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!!"
டிஸ்கி:கடைசியே கடைசி வரி மட்டும் சும்மாஆஆஆஆஆ பொய்
எல்லாமே சிரிப்புதான்.

34 comments:

Unknown said...

யக்கோவ்..டிவி பொட்டி மேலே அக்காவுக்கு என்னா காண்டு!ஆனாலும் ரெம்பவும் சிரிக்க,சிந்திக்கவும் வச்சிட்டீங்க.சீக்கிரமா தொடருமுக்கு தொறப்பு விழா கொடுத்துட்டு அப்பாலே மாப்பிள்ளை வீட்டு சீர்செனத்தியையும் போடுங்கோ.பார்க்க ஆவலா இருக்கோம்.

நட்புடன் ஜமால் said...

டிஸ்கில போட்டிருப்பதே டிஸ்கி

-------------------

பல வீடுகள்ல நடக்குது தான் இப்படி

வருந்த தக்க விடயம் தான்.

அண்ணாமலையான் said...

உண்மைதான்

ஹுஸைனம்மா said...

அக்கா, அப்ப இவ்ளோ சீரியல்கள் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, அப்படினா...?

;-)

ஆனா, நீங்க சொன்னமாதிரி பல வீடுகள்ல நாம போனா நம்மகிட்ட பேசிகிட்டிருக்கது அந்த டி.வி. மட்டும்தான். சில சமயம் சாபமும்!! :-)

Asiya Omar said...

ஸாதிகா யாராவது டிவி பார்த்தால் எட்டி பார்ப்பதோடு சரி.பொழுது போகலைன்னால் நெட் தான்,ஒரு சமயம் அடுத்து நெட் மனிதர்கள் பற்றி இருக்குமோ.

தாஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹாஹாஹா இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் புரியுது தாங்களும் ஒன்று விடாமல் பார்க்குறீங்க போல

படிக்க நல்ல சுவராஸ்யமா இருந்தது
எங்க வீட்டுல இதெல்லாம் நடக்காது.

SUFFIX said...

இம்பூட்டுமா ஒரு நாளைக்குள்ள பாக்குதிய, ஹி ஹி. சிந்திக்க வேண்டிய பதிவு, நல்ல வேளை எங்க வீட்டில பெரும்பாலான பிரபல சேனல்கள் வருவதில்லை!!

டவுசர் பாண்டி said...

//"அட..ஆமாங்க..நிஜம்.கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!!"//

பீ கேர்புல் !!!! ---------- நா என்னச் சொன்னேன் !! நல்லா தானே கீது !! .

டவுசர் பாண்டி said...

//மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//


super

செ.சரவணக்குமார் said...

//எதோ நகமும்,சதையும் போல் இந்த காட்சி பெட்டியுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிப்பார்கள்.//

மிகச் சரியாக சொன்னீர்கள்.

அக்கா உங்களுக்குள் இவ்வளவு நகைச்சுவை இருக்கிறதா?

அருமையான பகிர்வு.

ஹைஷ்126 said...

நல்லவேளை என் வட்டத்தில் யாருக்கும் இந்த வியாதி இல்லை :)

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

உங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையோடு சொல்லிருக்கிங்க.பல வீடுகளில் அப்படிதான் நடக்குது...

ஜெய்லானி said...

ஸூப்பர் .நல்லா யோசித்து எழுதி இருக்கிறீங்க..

malar said...

ஆமா!எல்லா சீரியலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்கிரீர்கள் எப்படி?
நீங்கள் சொல்லி இருக்கும் சீரியல் எந்த சானல் என்றே தெரியாது .டிவி இருக்கு ஆனால் செய்தி மட்டும் தான் பார்போம்...இப்படி எத்தனை வீடுகளோ?


மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!


இது இன்று தான் படிதேன் .ரொம்ப நல்ல கருத்து.

Mohamed G said...

வெளிநாடு வாழ் பிள்ளைகளுக்கு தமிழ் பேச, புரிய தாய்நாட்டு நடப்புகள் தெரிய அவசியமாகிறது.

ஸாதிகா said...

அனைவரும் ஒருமித்த கருத்தாக அத்தனை சீரியல் பெயர்களும் எப்படி தெரிந்தது என்று கேட்கின்றார்கள்.அந்த ரகசியத்தை சொல்லிவிடுகிறேன்.

இந்த இடுகையை பதியும் பொழுது சினித்திரை.காம் ஐ பார்த்துத்தான் சீரியல் பெயர்களை தொகுத்தேன்.மற்ற படி நான் ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட மொத்தத்தில் தொலைகாட்சியின் முன் அமர்வது அபூர்வம்.

ஓரிரு சீரியல்கள் பார்த்த நேரத்தில் கூட முழுதாக அரை மணிநேரம் டிவியின் முன் உட்காரப்பிடிக்காமல் 30 நிமிடம் ஓடும் சீரியலை 12 நிமிடத்தில் நெட்டில் பார்த்தும் இருக்கிறேன்,இப்பொழுது அதுவும் இல்லை.தொலைகாட்சி பார்ப்பது சரி தவறு என்று விவாதிப்பது இந்த இடுகையின் நோக்கமல்ல.நகைச்சுவை ஒன்றே பிரதானம்.ஆனால் அடுத்த இடுகை 'அளவுக்கு அதிகமாக' தொலைகாட்சியில் நேரத்தை செலவுபண்ணுவதால் உண்டாகும் விளைவுகளை எடுத்து சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

என்னவென்று தெரியவில்லை.இப்பொழுதெல்லாம் எந்த இடுகை போட்டாலும் அது விவாதமாகவே கருத்துக்கள் இழுத்து சென்று விடுகின்றன.:-)

ஸாதிகா said...

சகோதரர் செய்யத்,
கருத்துக்கு நன்றி.உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

சகோதரர் ஜமால்,
//டிஸ்கில போட்டிருப்பதே டிஸ்கி// அடடா வரிகளில் கவித்துவம் மிளிர்கிறதே.புதிதாக கவிதைக்கென பிளாக் ஆரம்பித்து விடுங்கள்.கருத்துக்கு நன்றி.

சகோதரர் அண்ணாமலையான்,
தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

தங்கை ஹுசைனம்மா,
உங்கள் வினாவுக்கு முதலிலேயே பதில் போட்டு விட்டேன்.இப்போ புரிந்ததோ?கருத்துக்கு மிக்க நன்றி.

தோழி ஆசியா,
கருத்துக்கு நன்றி,நானும் உங்களைப்போல்தான்.யாராவது டிவி பார்த்தால் அப்ப்டியே எட்டிப்பார்த்து விட்டு நடையை கட்டுவதுதான் என் வழக்கமும்.

ஸாதிகா said...

வஸ்ஸலாம் தாஜ்!
கருத்துக்கு மிக்க நன்றி.இந்த இடுகை உங்களை சிரிக்க வைத்தமைக்கு எனக்கு சந்தோசம்.
சகோதரர் ஷஃபி,
//இம்பூட்டுமா ஒரு நாளைக்குள்ள பாக்குதிய//இந்த வினாவுக்கு நான் மேலேயே பதில் கொடுத்துள்ளேன்.மிக்க நன்றி கருத்துக்கு.

சகோதரர் டவுசர் பாண்டி,
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்மிக்க நன்றி.சென்னைத்தமிழில் ஹைடெக்கான விஷயங்களை அள்ளித்தருகின்றீர்கள்.உங்கள் தளம் இப்போதுதான் பார்த்தேன்.அது சரி வடபழனி நூறடி சாலையில் உங்கள் பெயரில் ஒரு ரெஸ்டாரெண்ட் இருந்தது.அது உங்களுடையதா?

சகோதரர் சரவணக்குமார்,
கருத்துக்கு மிக்க நன்றி//அக்கா உங்களுக்குள் இவ்வளவு நகைச்சுவை இருக்கிறதா?//என்ன தம்பி இப்படிக்கேடுவிட்டீர்கள்?

சகோதரர் ஹைஷ்,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

தங்கை மேனகா,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சகோதரர் ஜெய்லானி,
கருத்துக்கு மிக்க நன்றி.

சகோதரி மலர்,
கருத்துக்கு மிக்க நன்றி.

சகோதரர் முஹம்மத் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நாஸியா said...

ஹிஹிஹி.. ஒரே சிரிப்பு தான் போங்க.. இப்பல்லாம் சன் டிவியில காலையிலயும் இரவுலயும் காமெடி, மீதி நேரமெல்லாம் சீரியல் தான் ஓடிட்டு இருக்கு..

நிச்சயமா உங்க க்ரியேட்டிவிட்டிய பாராட்டியே ஆகனும்.. ரொம்ப நல்லா இருந்தது படிக்க.. :)

நானு வீட்டுல தனியா இருக்குறதால ஒரு மாதிரி பயமா இருக்கும்.. ஏதாச்சும் ஒரு சேனல ஓட விட்டுட்டே இருப்பேன்.செய்தி சேனல்களை போட்டுவிட்டுட்டா யாரோ பேசிட்டே இருக்கறது போல ஒரு ஃபீலிங். முன்ன எஃப் எம் போட்டுட்டு இருந்தேன்.. ஆனா சிஸ்டம் ரொம்ப ஸ்லோவாகுதுன்னு இப்ப டிவி தான்..

Jaleela Kamal said...

நாஸியா நீங்கள் சொலவ்து நினைத்து சிரிப்பு வருது, நானும் முன்பு தனியா இருந்த காலத்தில் பயநது டீவிய ஓட விடுவது அப்ப தமிழ் சேனல் கூட கிடையாது.

அந்த ஹிந்தி தான் புரியுதோ புரியலையோ கேட்டு கொண்டு இருப்பது

Jaleela Kamal said...

இதனால் சென்னையில் ரெடெல்லாம் மாலை நேரம் திருடனுக்கு வசதியா போவுது, எல்லாம் சீரியலில் லயத்து விடுகிறார்கள்.

Jaleela Kamal said...

ஊரில் பெண்கள், ஆனால் வெளி நாடுகளில் ஆண்கள் தான் அதிக சீரியல் பார்க்கிறார்கள்,

prabhadamu said...

ஸாதிகா அக்கா நானும் வந்துட்டேன். நலமா?

பித்தனின் வாக்கு said...

அக்கா உங்க பதிவைப் பார்த்ததும் தான் வீட்டுக்கு வீடு வாசப்படின்னு ஞாபகம் வருது. நன்றி.

R.Gopi said...

வணக்கம் ஸாதிகா... என் வலையில் உங்களின் கமெண்ட் பார்த்தேன்... மிக்க நன்றி... இதோ உடனே உங்களின் வலைக்கு முதல் விஜயம்... இப்போது தான் உங்களின் வலை அறிமுகம் கிடைத்தது...உடன் வந்தேன்... தோழமைக்கு நன்றி...

//ஒரு ஷாப்பிங்கோ,கோவிலுக்கோ,மசூதிக்கோ,சர்ச்சுக்கோ சென்றாலும் 'அட,எட்டு மணிக்கு திருமதி செல்வம்' போட்டு விடுவானே என்ற பதைபதைப்புடன் ஓடி வருவார்கள் //

ஆஹா.... நடப்பை அப்படியே நிதர்சனமாக விளக்கி உள்ளீர்கள்...

//எதோ நகமும்,சதையும் போல் இந்த காட்சி பெட்டியுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிப்பார்கள்.//
ஆமா... இல்லேன்னா..... ஒரு சீன் மிஸ் ஆகிடும் இல்ல....

//இல்லத்தரசி காலை டென்ஷனுடன் பரபர வென்று டிபனை செய்து முடித்து,லஞ்சை பாக்ஸில் அடைத்து,பிள்ளைகளை தயார் செய்யும் வேளையில் இவர் ஹாயாக தமிழகத்திற்கு வணக்கம் போட்டுக்கொண்டிருப்பார்.//

ஹா...ஹா...ஹா... சூப்பர் அப்சர்வேஷன் உங்களுக்கு.... அங்க அப்படி நடக்குதா??

//'அனு,இன்னிக்கு என்ன டிபன்?"

"பொங்கல்"எங்கோயோ தூரமாக மங்கையின் குரல்.//
அடி தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்..........

//.."தொட்டால் பூ மலரும்,தொடாமல் நான் மலர்ந்தேன்"எம் ஜி ஆரும் சரோஜா தேவியும் ஆடும் பாடலின் மலர்ந்த பூவின் தேனை (கிண்ணத்தில் எடுத்து)அருந்த உட்கார்ந்து விடுவாள் நம்ம இல்லாள் .//
யப்பா.... சரியா அடிச்சு தான் ஆடறீங்க, வீரேந்தர் சேவாக் போல்.....

//டிவியின் வாய் மூடும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும்,பெரிய முள்ளும் ஒன்றிணைந்து நடுவாக நிற்கும்.//
இப்படி எழுதினா என்னன்னு சொல்றது.... ஒரே கோர்வையா பட்டாசு போல இல்ல இருக்கு இந்த பதிவு....

//ஒரு ஓட்டை பிரிஜ்ஜை வைத்து பத்து வருஷமாக ஓட்டிக்கொண்டு புதிதாக வாங்க நூறு முறை யோசிக்கும் இந்த தொலைக்காட்சி மனிதர்கள் டிவி ரிப்பேர் ஆனவுடனேயே ஒரு தடவை கூட யோசிக்காமல் ஆயிரங்களை அள்ளியோ,கிள்ளியோ கொடுத்து பிளாஆஆஆஆஆஆஆட் (அதாங்க பெரீய ஸ்க்ரீன்)வாங்கி பரவசப்படும் கொண்டாட்டம் பார்த்தால் என்னவென்று சொல்லுவது?//
ம்ஹூம்.... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..... பொரியுது.... படபட..... படிச்சாலோ சிரிப்பில்.....கலகல.....

ஸாதிகா..... சூப்பர்........... ஒரு ஓவரின் 7 பந்திலும் சிக்ஸர் அடித்து கலக்கி விட்டீர்கள்.... (ஒரு ஓவருக்கு 6 பந்து தான்.... அதுல ஒரு நோ பால்... அதையும் சிக்ஸர் அடிச்சுட்டீங்க.....).... வாழ்த்துக்கள்..... இந்த அட்டகாச பதிவை எழுதியதற்கு....

என் கிட்ட மட்டும் சொல்லுங்க..... இந்த பதிவுல ஏதாவது “சீரியல்” பேரு விட்டு போச்சா???

R.Gopi said...

// ஸாதிகா said...


சகோதரர் டவுசர் பாண்டி,
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்மிக்க நன்றி.சென்னைத்தமிழில் ஹைடெக்கான விஷயங்களை அள்ளித்தருகின்றீர்கள்.உங்கள் தளம் இப்போதுதான் பார்த்தேன்.அது சரி வடபழனி நூறடி சாலையில் உங்கள் பெயரில் ஒரு ரெஸ்டாரெண்ட் இருந்தது.அது உங்களுடையதா?//

அது டவுசர் பாண்டி அல்ல... “லொடுக்கு பாண்டி”..... நடிகர் கருணாஸ்க்கு சொந்தமானது.... “லொடுக்கு பாண்டி” என்பது கருணாஸின் கதாபாத்திர பெயர் “நந்தா” படத்தில்.....

ஏதோ, எனக்கு தெரிந்ததை சொன்னேன்..... நன்றி...........

athira said...

ஸாதிகா அக்கா!!!... ரிவி பார்ப்பது அதுவும் எந்நேரமும் பார்ப்பது சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.... அதிராதான் அன்னமாச்சே:), %) கூடாது... உங்கள் நகைச்சுவையைத்தான் ரசித்து ரசித்து.. சிரித்து சிரித்துப் படித்தேன்.... சூப்பராக காமெடி.. பண்ணுறீங்கள்... தொடர வாழ்த்துக்கள்.


//என்னவென்று தெரியவில்லை.இப்பொழுதெல்லாம் எந்த இடுகை போட்டாலும் அது விவாதமாகவே கருத்துக்கள் இழுத்து சென்று விடுகின்றன.:-)// ஸாதிகா அக்கா, ஒருவரியில் நல்லா இருக்கு எனச் சொல்லிப்போவதைவிட, மனதில் எழுவதை சரியோ தப்போ எழுதினால், இடுகையிட்டவருக்கும் அது மகிழ்ச்சியையும் இன்னும் ஊக்கத்தையும் கொடுக்கும்தானே. ஆனால் நகைச்சுவை விவாதமாகவே இருப்பின் நல்லது, இல்லாவிட்டால் மனதுக்கு வேதனையாகிவிடும்.

எங்கள் உறவில் ஒரு மாமி இருக்கிறா, அவவுக்கு முன்னால் ஒரு பேப்பர் துண்டு இருக்கமுடியாது, உடனே வாசிக்கத்தொடங்கிடுவா, அவ வீட்டுக்கு வருகிறா என்றால் நாங்கள் பேப்பர் புத்தகம் மகசின் எல்லாம் ஒளித்துவிடுவோம், அப்போதான் எம்மோடு கதைப்பா, அவவோடு கதைக்க ஆசை, ஆனால் பேப்பர் கண்ணில் பட்டால் அதை படித்து முடிக்கும்வரை கதைக்கமாட்டா. எதுவாயினும் அளவோடிருந்தால் ஓகை!.. உங்கள் அடுத்த நகைச்சுவைகலந்த அர்த்தமுள்ள பதிவுக்காக அதிரா வெயிட்டிங்.

டவுசர் பாண்டி said...

//வடபழனி நூறடி சாலையில் உங்கள் பெயரில் ஒரு ரெஸ்டாரெண்ட் இருந்தது.அது உங்களுடையதா?//

செர்தான் , நம்பளுக்கு நாஸ்ட்டா கட எல்லாம் கெடையாதே !! தோஸ்து கோபி சொன்னா மேரி , அது கருணாசுதா ? , இன்னு எனுக்கு தெரியல !! அவரு லைட்டு மீசிக்கு பார்ட்டி தான் வெச்சிக்கீனு , இருக்காரு இன்னு நெனைக்கறேன் , ஆனா இது அவருதா இன்ற விசியம் கரீக்ட்டா தெரியாது ?

ஸாதிகா said...

சகோதரி நாஸியா,
இடுகை காமெடியாக இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.என்னால் நாஸியா சிறிது நேரம் சிரித்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி!

ஜலி,
கருத்துக்கு நன்றி.நீங்கள் சொல்வதும் சரி.திருடர்கள் அதிகரித்து இருப்பது தொலைக்காட்சியினாலும்தான்.

வாங்க பிரபா,
பேசி நீண்ட நாட்களாகி விட்டது.நான் நலமே.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?வருவது மட்டுமில்லாமல் கருத்தையும் போடுங்கள்.வருகைக்கு நன்றி!

சகோதரர் பித்தனின் வாக்கு,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

சகோதரர் கோபி,
கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கும் சினிமாவைக்கூட இப்படி அக்கு வேறு ஆணி வேறாக அலசி விமர்சனம் செய்ய மாட்டார்கள்.

நீளமான விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியையும்,ஊக்கத்தையும் தந்தது,இப்படி கருத்து தெரிவிப்பதற்கென்றே உங்களுக்கு அவார்ட் தரலாம் போலும்.நன்றி!நன்றி!!

லொடுக்கு பாண்டி&டவுசர் பாண்டி நான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகி விட்டேன்.சரியான தகவலைத்தான் தந்து இருக்கின்றீர்கள்!

தங்கை அதிரா,
விவரமாக பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள்.நன்றி.

பேப்பர் படிக்கிற மாமி கதை சூப்பர்.இனியாவது விருந்தினர்கள் போனால் டிவியை ஆஃப் பண்ணும் வழக்கத்தை கடைபிடிப்போம்.அதிரா அன்னமாச்சே..புரியலே.மெயிலில் விளக்கம் தாங்க.

ஸாதிகா said...

டவுசர் பாண்டி அண்ணாத்தே,
கோபி சார் சொன்னது கரெக்ட்தான்.

நீங்க ஜூப்பரா மெட்ராஸ் பாஷையில் விளாசித்தள்றீங்க.

என் கதாபாத்திரங்கள் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.உங்கள் இடுகை முழுக்க நன்றக ஸ்டடி பண்ணிக்கொண்டு அடுத்த கதாபாத்திரத்தில் ஒரு ம்னிம்மாவையோ,கிச்சவையோ அறிமுகபடுத்தி விடலாம்.

மெட்ராஸ் பாஷையில் பேசும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் நெடு நாள் ஆசை.டெக்னாலஜி விஷயங்களுக்கு உங்கள் இடுகைகள் உதவுவது போல்,இதற்கும் உதவும்.நன்றி!

இனியன் பாலாஜி said...

நான் கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன் . இத்தனை சீரியல் கள் பெயர்
தெரிந்திருக்கிறதே .ஒன்று விடாமல் பார்பீர்களோ என்று . பிறகுதான் தங்களின் பதிலை
பின்னூட்டத்தில் பார்த்ததும் புரிந்தது. அதற்காகவே டிவி பக்கம் உட்கார்ந்தீர்கள் என்று
மிகவும் அருமையாக இருந்தது.
நானும் கூட மாதத்திற்கு ஒரு அரை மணி நேரம் டிவி முன்பு உட்கார்ந்தால் அதிகம்
அதுகூட யார் வீட்டிற்காவது செல்லும் போது மாட்டிக் கொள்:வேன். மற்றபடி தினமும்
வேலையிலிருந்து வந்ததும் குளித்து விட்டு நான் ,என் மகள், மனைவி,மற்றும்
அக்கா என்று எல்லோரும் உட்கார்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். சில சமயம்
என் தம்பிகளும் அவர்கள் மனைவிகளும் சேர்ந்து பேசுவோம்..
அதிலிருக்கும் சுகம் இந்த டிவி யில் சத்தியமாக கிடையாது. ஆனால் டிவி யிலும்
நல்ல விஷயங்கள் இல்லாமல் இல்லை. சீரியலைத்தவிர எதை வேண்டுமானலும்
பார்க்கலாம். அது ஒரு மனிதனின் வாழ்க்கையையே கெடுத்துவிடும் என்பது என்
அபிப்பிராயம். கோபம் , பொறாமை, குற்றவுணர்வு,காமம், போன்றவற்றைத் தவிர
என்ன இருக்கிறது. தாங்கள் தயவு செய்து சில நாட்கள் டிவி முன்பு அமர்ந்து சில
சீரியல்களை தொடர்ந்து பார்த்து அதன் விளைவுகளைப் பற்றி ஒரு இடுகை எழுதுங்கள்.
ஆனால் அதில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அது ஒரு போதை போன்றது.
நன்றி
வாழ்த்துக்கள்
இனியன் பாலாஜி

சௌந்தர் said...

நீங்கள் அனைவரையும் ஒரு புடி புடித்து உள்ளிர்கள்