
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆவின் பால் கார்டு மூலம் விநியோகிக்கப்படுகின்றது.கார்டு மூலம் பெறப்படும் பால் லிட்டர்18 என்றால் கடைகளில் விற்கப்படும் அதே பால் லிட்டர் 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இவ்வாறாக விற்கும் ஆவின் பாலை வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்கள் ஒரு லிட்டர் பாலுக்கு குறிப்பிட்ட தொகையை கூலியாக பெற்று விநியோகம் செய்கின்றனர்.இவர்களிடமே பால் கார்டு புதுப்பிக்கும் சமயம் பணத்தைத்தந்து புதுப்பித்துக்கொள்வது வாடிக்கையாளர்களின் வாடிக்கை.நூற்றுக்கணக்கான வீடுகளில் பால் கார்டு வாங்குவதற்காக பணத்தை ஆயிரக்கணக்கில் வசூலித்துக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுபவர்களும் உண்டு.
இதே பால்க்கார ஆயாக்கள்,ஐயாக்கள் தாங்கள் விநியோகம் செய்யும் சில வீடுகளுக்கு விநியோகிக்கும் பாலை திடுமென நிறுத்தி கார்டு தொலைந்து விட்டது என்று முழு பூசணிக்காயை சோற்றினுள் மறைத்து ஏமாற்றி,நமது கார்டுக்கே பால் வாங்கி டீக்கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து காசு பார்க்கின்றனர்.
இன்னும் சிலர் சில நாட்களில் பால் பாக்கெட்டை வைக்காமல் ஏமாற்றி விடுகின்றனர்.கேட்டால் உங்களுக்குறிய பால் பாக்கெட்டுகளை வைத்து விட்டேன் என்று அடித்து கூறுவதுமட்டுமில்லாமல் பேப்பர் போடுபவர் எடுத்துக்கொண்டு போய் இருப்பார் என்று ஒரே போடாக போட்டு தப்பித்து விடுவார்கள்.
இப்படி பால்க்கார ஆயாக்களால் பாதிக்கப்பட்டு,நஷ்டமாகி இருக்கும் ஆயிர்க்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி.ஆவின் வட்டார அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தால் ”பால் தான் வாங்கிசெல்ல வர மாட்டீர்கள்.அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது அருகில் இருக்கும் பூத்தில் கார்டை புதுப்பித்துக்கொள்ளவாவது நேரில் செல்லலாமே” என்று நியாயமான கேள்வியை கேட்டனர்.
“கார்டு வாங்கியதும்,பூத் நம்பர்,கார்டு நம்பரை குறித்துக்கொள்வதோடு,கார்டுகளில் பெயர் முகவரியை குறிப்பிட்டு எழுதி விடுங்கள்”என்று அட்வைஸ் செய்ததோடு வெகு சிம்பிளாக இன்னொரு அட்வைஸும் செய்தார்.
“அதிகாலையில் எழுந்து வாக்கிங் போய் திரும்பி வரும்பொழுது ஏரியா பால் பூத்களில் பாலை வாங்கிக்கொண்டு திரும்பினால் பணத்துக்கு பணமும் மிச்சம்,பால்க்கார ஆயாக்களின் ஏம்மாற்றல்களில் இருந்தும் தப்பிக்கலாம்,நடைப்பயிற்சியினால் உடம்புக்கும் நல்லது” என்றார்.
அட இது கூட நல்ல ஐடியாவாக உள்ளதே என்று செயல் படுத்த ஆரம்பிக்கையில்தான் தெரிகின்றது நிறைய பேர் வாக்கிங் செல்பவர்கள் வீடு திரும்பும் பொழுது கைகளில் பால் பாக்கெட்டுகளுடன் திரும்புவது.
| Tweet |
