May 3, 2010

அந்த நாள் இனிய நாள்



எனது அமீரகவிஜயத்தின் பொழுது இத்தனை சந்தோஷங்கள் கிட்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,என் உற்றவர்களின்,இரத்தபந்தங்களின் அன்பு மழையில் ந‌னைந்த நான் என் அன்பு சக வலைப்பூ சகோதரிகளின் அன்புவெள்ளத்திலும் நனைவேன் என்று நினைக்கவில்லை.ஏதோ தமது வீட்டு விஷேஷத்திற்கு அழைத்து நான் வந்து இருந்தது போல் அனைவரும் கைபேசியில் அழைத்து அன்பை வெளிப்படுத்தி திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

விமானநிலையத்தில் இருந்து வந்ததில் இருந்து மீண்டும் விமானநிலையம் செல்லும் வரை என் செல்பேசிக்கு ஓய்வே இல்லை.அன்பு மனோ அக்காவின் வருகை ,நீண்ட நாள் ஸ்நேகிதிபோல் எளிமையுடன் பழகி பொழுதை மகிழ்ச்சிகரமாக்கினார்.ஜலீலா என் வருகையால் சிறு குழந்தையாவே மாறி என்னை பரவசப்படுத்துவிட்டார்.,தினமும் காலையிலும்,மதியத்திலும்,இரவிலும் போன் செய்து அளவளாவும் நேசம்,தங்கை ஹுசைனம்மா பதிவர் சந்திப்பு நிகழ்ந்தே தீரவேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் பட்டு நிகழவும் வைத்து விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று குறிப்பிட்ட பகுதிக்கு நெருங்கி போன் செய்தால் திரும்பி பாருங்கள் என்று சொன்ன திக்கில் திரும்பினால் அங்கு மூன்று பேர்.ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா...பார்த்ததுமே பேச்சே வராமல் பரவசத்தில் மூழ்கிவிட்டோம்.

ஜலீலாவை ஏற்கனவே புகைப்படத்தின் மூலம் பார்த்து இருக்கிறேன்.ஹுசைனம்மா,மலிக்காவைப்பார்த்து இருக்காததால் அவர்களை என்னால் யூகிக்க இயலவில்லை.ஒரு வழியாக அவர்தான் ஹுசைனம்மா என்று கண்டுபிடித்து நான் சொன்னதும் எங்களிடம் இருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்.

ஏற்கனவே திட்டமிட்டபடி பார்க்கிற்கு அழைத்து சென்றனர்.அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி.நான் சற்றும் எதிர்பாராத தோழி ஆசியா.அத்தனை தூரத்தில் இருந்து வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.என்னைகண்டதும் அவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.இன்முகத்துடன் "ஸாதிகா" என்று அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.அவரின் அன்பயும்,மென்மையான ஸ்நேகிதத்தையும் மின்னஞ்சல் மூலமாக அறிந்திருந்த நான் அன்று நேரிலும் பார்த்த்து பரவசப்பட்டேன்.

சாதரணமாகவே ஸாதிகா அக்கா,ஸாதிகா அக்கா என்று என்னையே மெயிலில் சுற்றிவராத குறையாக வரும் என் தங்கை ஜலீலா நான் அமீரகம் வரப்போவதை அறிந்ததுமே அவர் கொண்ட உற்சாகம் குழந்தைபருவத்தை நினைவு கொள்ள வைத்தது.அவரின் தொடர் அலுவலுக்கிடையே அடிக்கடி போன் செய்து அன்பை வெளிப்படுத்தியவர் நேரில் பார்த்தும் ...சொல்லவும் வேண்டுமோ...?

டிரங்கு பொட்டி ஹுசைனம்மா..பதிவில் பட்டாசாக இருந்தாலும் நேரில் மத்தாப்பூவாக இருந்தார்.அக்கா..அக்கா..என்று பாசத்தைக்குழைத்து பழகியவிதம் என்னை பரவசப்படுத்தியது."பதிவிலும்,நேரிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது"என்று என் கணிப்பை சொன்னால் "நீங்களும் அப்படித்தான் இருக்கீங்க"என்றார்.உண்மைதான்.அன்று அந்த பார்க் பட்ட பாடு..."கெட் டு கெதரா?" என்று வேடிக்கைப்பார்த்த ஒருசிலரை புறந்தள்ளிவிட்டு எங்கள் உற்சாகத்தை குறைத்துக்கொள்ளாமலே இருந்தோம்.


மலிக்காவின் கலகலப்பான ,நகைச்சுவைமிளிரும் பேச்சு.அந்த இடத்திற்கு மேலும் மெருகூட்டியதுஜலீலாவும் மலிக்காவும் சமைத்துக்கொண்டு வந்திருந்த பதார்த்தங்களை சுறுசுறுப்பாக பறிமாறி அந்த இடத்துக்கு களைக்கட்டிக்கொண்டுஇருந்தார்.நெடுநாள் பழகியதுபோல் சிரிக்கவைத்து பேசுவதில் வல்லவர் என்பதை புரிந்துகொண்டேன்.எங்கு நகைசுவைமிக்க உரையாடல் இருந்தாலும் அந்த இடம் என்னையும் கவர்ந்துவிடும்.அந்த விஷயத்தில் மலிக்காவின் பேச்சு வழக்கு என்னை ரொம்பவுமே கட்டிப்போட்டு விட்டது.

அத்தனை பிசியான நேரத்திலும் மனோ அக்கா கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.வழக்கம் போல் அமைதியும்,மென்மையுமாக அனைவரது கொட்டத்தையும் ஆழ்ந்து ரசிக்கத்துவங்கியது மட்டுமில்லாமல் அந்த கலகலப்பில் கலந்துகொண்டது தோழியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

அநன்யா மகாதேவன்..ஆஹா..எனது கலகலப்பிற்கு ஏற்ற அருமையான இணை.அவரை சுற்றி எப்பொழுதும் சரவெடி ஒலித்துக்கொண்டே இருக்கும்.அவரது பதிவைப்போலவே.பார்த்தமாத்திரத்தில் பிடித்துப்போய் நிறைய பேசிக்கொண்டிருந்தேன்.

எங்களிடையே இளையவர் பிரியாணி நாஸியா.அவர் பார்க்கினுள் நுழைந்ததுமே "ஆ..பிரியாணி"என்ற ஆராவாரமாக கூச்சல்தான் அவரை வரவேற்றது.

மலர்.பெமிலியரான முகம்,குரல்.எங்கோ பார்த்து போல் இருந்தது.பிறகுதான் தெரிந்தது.என் ஆருயிர் தோழியான ஒரு பத்திகையாளர் இவருக்கு உறவு என்று.இஸ்லாமிய பேச்சு வழக்கைப்பற்றி அநன்யா இவரிடமும்,பிரமணாள் பேச்சு வழக்கைப்பற்றி மலர் அநன்யாவிடம் கேட்டு இருவரும் விளக்கம் சொன்னதை சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறுதிவரை இருந்து என்னையும் என் தங்கையையும் வழியனுப்பிவைத்த ஜலீலா,ஹுசைனம்மாவின் அன்பு மெய்சிலிர்க்கவைத்து.எங்களை அழைத்து வந்த எங்கள் வீட்டு ஆண்களும் பொறுமை காத்து ஆங்காங்கே அமர்ந்திருத்தும்,நின்றுகொண்டிருந்தும்,காரில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டும் ,அருகில் இருந்த மால்களில் சுற்றிக்கொண்டும் எங்கள் நட்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு பொறுமை காத்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது.

மறுநாள் அல் ஐன் சென்ற பொழுது ஸ்நேகிதி ஆசியா விடாப்பிடியாக தொலைபேசியில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து எங்களை அவரது இல்லத்திற்கு காந்தமாக அழை(இழு)த்துவிட்டார்.

ஆசியாவின் பரந்த மனதினைப்போல் அவரது வில்லாவும் பரந்து விரிந்து இருந்தது அழக்காக இருந்தது.அமைதியான அந்த சூழ்நிலையை விட்டும்,ஆசியாவின் அன்புபிடியினை விட்டு அகலவே மனமில்லை. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே உபசரித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டது.நாங்கள் கிளம்ப ஆயத்தமாகி விட்டாலும் எங்கள் வீட்டு ஆண்கள் ஆசியாவின் கணவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

மறக்காமல் ஆசியா வைத்த போட்டியில் நான் வென்று அவர் பரிசாக அறிவித்த திருநெல் வேலி அல்வாவையும் மறக்காமல் தந்து விட்டார்.இதிலிருந்து ஆசியா வாக்கு மாறாதவர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அய்மான் சங்கத்தலைவர் சகோதரர் ஷாகுல்ஹமீது அவர்கள் குடும்பத்தினரின் உபசரிப்பு,அபுதாபி ஷேக் ஜைத் பள்ளி வளாகத்தில் எதிர்பாராவிதமாக சகபதிவர் சோனகனின் சந்திப்பு,நான் துபை வந்தது பற்றி சகபதிவர் மூலமாக அறிந்து சகோதரர் கிளியனூர் இஸ்மத் அவர்களின் கைபேசி மூலமாக அழைத்து தன் குடும்பத்தினரை வந்து பார்த்து செல்லுமாறு அழைப்பு,அறுசுவை இணையதளஸ்நேகிதிகள்அன்புள்ளங்கள் தளிகா மற்றும் ரேணுகாவின் தொலைபேசி அழைப்பு ,என் இரத்தபந்தங்களின் மறக்கமுடியாத உபசாரங்கள் அனைத்தையும் அசைப்போட்டபடி விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.