இது ரொம்ப அல்பதனம்”
“புத்தி ஏன் இப்படி அல்பதனமா போகிறது”
“சரியான அல்பம்”
சிறுமையாக,சின்னத்தனமாக நடப்பவர்களை இவ்வாறு விளிப்பார்கள்.வடிகட்டின கஞ்சதனத்தைக்கூட இவ்வாறு அழைக்கப்படுகிறது.அல்பம் இழிவு, அற்பம்,சிறுமை,சின்னத்தனம்.கஞ்சத்தனம் அனைத்துக்கு இந்த அல்பம் நாமகரணம் சூட்டப்படுகிறது.ஆங்கிலத்தில் அல்பத்திற்ககான சொற்கள் insignificant, trifle, silly எனப்படும்.
சரி எதை எல்லாம் அல்பம் என்று வசைப்பாடுகின்றனர் என்று சிலஅல்பவகைகளை லிஸ்ட் போடுவோம் .
1.நொறுக்ஸை கொறித்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு நட்பு உள்ளே நுழையும் போது நொறுக்ஸ் டப்பாவை மறைத்து வைப்பது.
2.கணவரின் பாக்கெட்டில் இருந்து நூறு இருநூறை எடுத்து விட்டு அதை சொல்லாமல் இருப்பது.
3.டிபன் பாக்சில் லஞ்சை கட்டிக்கொடுத்துவிட்டு பிள்ளையிடம்”டேய்..உனக்காக நிறைய நெய் விட்டு பிரியாணி பண்ணி இருக்கேன்.யாருக்கும் கொடுத்து உன் வயிற்றை காயப்போடாதே,சமர்த்தா நீயே அத்தனையும் சாப்பிட்டுடணும்”பையனுக்கு அட்வைஸ் பண்ணுவது.
4.கெட்டுப்போன உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டாமல் வாசலுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது.
5.காய்ச்சலில் படுத்து மூன்று நாள் லீவு போட்டு விட்டு வரும் வேலைக்காரியிடம் “இந்த மூன்று நாள் சம்பளத்தையும் பிடித்துக்கொண்டுதான் தருவேன்”என்று மல்லுக்கு நிற்பது.
6.வீட்டுக்கு வரும் விருந்தினரை வாயற வாங்க வாங்க என்று அழைத்து விட்டு மனதார “இதுக எதுக்கு வந்து தொலைக்கணும்”என்று நினைப்பது.
7.உறவினர்,நட்பு வீடுகளுக்கு சென்று விட்டு “இவளா..சரியான வடிகட்டின கஞ்சம்.கழுநீர் ரேஞ்சில் ஒரு ஆறிப்போன காபியைத்தர்ரா.தராதரம் தெரியாதவள்”என்று புலம்புவது.
8.மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய மனதில்லாமல் பிறருக்கு மிஸ்டு கால் கொடுப்பது.அல்லது ஒரு ரிங் அடிக்கக்கூட அவகாசம் கொடுக்காது கட் செய்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து இருந்து கால் வரும் வரை காத்திருந்து “காலையில் போன் செய்தேனே.எடுக்கவே இல்லை”என்று புழுகுவது அல்லது கால் செய்து அழைத்துவிட்டு “போனில் பைசா முடியும் தருவாயில் உள்ளது.நீ கால் பண்ணு”என்று உடான்ஸ் விடுவது.
9.வீட்டுக்காரரிடம்”என்னது இந்த சண்டே உங்க பிரண்ட் குருமூர்த்தி வீட்டுக்கு நீங்களும் உங்கள் பிரண்ட்ஸும் டின்னருக்கு போகப்போறீங்களா.பேஷா போய்ட்டு வாங்க.கூடவே நம்ம குட்டி கிரீஷையும் கூட்டிட்டு போய்டுங்க.ஆனால் அதுக்கு அடுத்த வாரம் எல்லாப்படைகளையும் இங்கே அழைசுட்டுப் வந்துடாதீங்க.ஆழாக்கு அரிசி சமைக்கறத்துக்குள் எனக்கு டங்குவார் அறுந்து போறது.அத்தனைக்கும் விருந்து பண்ண நம்மால் முடியாதுப்பா.”
10.மற்றவர்களுக்கு வரும் மெயில்,கடிதம் ,போன்றவற்றை பார்ப்பது.
11.”யாரு..மாலதியா..எப்படிப்பா இருக்கே.என்னது..வீட்டுக்கு வர்ரயா..பிள்ளக்களையும் அழைச்சுட்டு வர்ரியா.வேண்டாம் வேண்டாம்...நானும் பக்கத்துவீட்டு அம்மாவும் ஷாப்பிங் போகணும்ன்னு ஏற்கனவே பிளான் போட்டாச்சு.எதுக்கு நீ கஷ்டப்படணும்.அடுத்த வாரம் நானே வர்ரேன் சரியா”என்று போனில் சொல்வது.
12.”காய்க்காரம்மா..ரெகுலராக உன் கிட்டேதான் காய் வாங்கறேன்.என்ன விலை விற்றாலும் இந்த கருவேப்பிலையும் கொத்துமல்லியும் கொசுறா கொடுத்துத்தான் ஆகணும்.இதுகளை நான் பைசா தந்து வாங்கவே மாட்டேன்.ஆமா சொல்லிட்டேன்.”
இப்படி சின்னத்தனமான காரியங்கள் அல்பத்தனம் என்று கூறப்பட்டால் குட்டியூண்டு சந்தோஷம்,கப்பில் இருந்து ஒரு விள்ளல் ஐஸ் க்ரீமை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டால் சிலீரென்று தோன்றும் ஒரு இதமான உணர்வைப்போல் குட்டியூண்டான சந்தோஷத்தை அல்ப சந்தோஷம் என்கிறோம்.அல்ப சந்தோஷங்களை கொஞ்சம் அலசலாமா?
1.அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கும் போது கூடவே ஃபிரீயாக ஒரு கண்டய்னரை கடைக்காரர் தூக்கித்தரும் போது.
2.தோசை மாவு தீர்ந்து போச்சு.கோதுமை மாவு டப்பாவை கழுகி காயவைத்து ஆச்சு இரண்டுநாள்.வீட்டில் ரவை,நூடுல்ஸ் கூட இல்லையே .இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணலாம். என்று மூளையை கசக்கிக்கொண்டிருக்கும் போது வாக்கிங் போய் திரும்பிய கணவரது கையில் தெரு முனை மெஸ்ஸில் இருந்து வாங்கி வரும் டிபன் பார்சலை பார்க்கும் பொழுது.
3.முன் பதிவு செய்த பொழுது அப்பர் பெர்த் கிடைத்து பயணம் செய்யும் பொழுது லோவர் பர்த் பயணி தனது சீட்டை தாரளாமாக நீங்க இங்கே இருங்கள் “என்று தாரள மனதுடன் தரும் போது.
4.ஏழு வயது மகனுக்கு டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதனை செய்பவர் வரும் பொழுது ”ஆறு வயதுதான் சார்” என்று கூறி டிக்கெட் பரிசோதனை செய்பவரும் சரி என்று போய்விடும் போது.
5.ஆஃபீஸில் இன்னிக்கு பவுண்டர்டே செலிப்ரேஷன் பண்ணினார்கள்.எல்லாம் ஸ்டாஃபுக்கும் கிஃப்ட் கொடுத்தாங்க என்று கணவர் குட்டியாக கிஃப்ட் பார்சல் ஒன்றை நீட்டும் போழுது.
6.”என்னது இந்த முறை அபிலாஷை ரேஸ் பண்ணிட்டியா?வெரிகுட் “என்று குட்டி மகனிடம் சொல்லும் பொழுது.
7.நுங்கம் பாக்கம் டு எக்மோர் சென்ற தடவை 100 ரூபாய் சார்ஜ் பண்ணிய ஆட்டோ இந்த முறை 80 ரூபாயை சார்ஜாக கேட்டபோது.
8.ஜஸ்ட் இப்ப தான் நாம் செல்லும் வழித்தட பஸ் போனது.இனி பத்து நிமிடம் கழித்துதான் அடுத்த பஸ் வரும் என்று நினைத்து காத்திருக்கும் மறு நிமிடமே செல்லப்பொகும் வழித்தட பஸ் வந்துவிடும் பொழுது.
9.நகைக்கடை,துணிக்கடையில் இலவசமாக கொடுக்கும் பை காலண்டர் இன்னும் தரமானதாகவும் பெரியதாகவும் இருந்துவிட்டால்.
10.மேட்சிங் பிளவுஸ்பிட் வாங்கும் பொழுது “இது கடைசி பீஸ்.மீட்டருக்கு பத்து ரூபாய் குறைத்து பில் போடுறேன்”என்று கடைக்காரர் கூறும் பொழுது.
11.என்னது நான் ஒரு ஜாம் பாட்டில்தானே வாங்கினேன்.எதற்கு ரெண்டு ஜாம் பாட்டில் என்று பில்லை ஆராய முற்படும்பொழுது கடைக்காரர் “இன்னொன்றுக்கு பில் போடலே..ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் “என்று கடைக்காரர் கூறும் வார்த்தைகளில்.
12.”கல்யாணிம்மா..இன்னிக்கு சண்டே தானே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.லேட்டாகவே நான் காஃபி சாப்பிடுக்கறேன்”என்ற கணவரின் இன்சொல்லில்.
13.பால்காரர் போட்டு விட்டு சென்ற பால்கவரைகாணோமே என்று லேட்டாக எழுந்து விட்டு வாசலில் தொங்கும் பையில் பால் கவரை காணாது விழித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர் பிளாட் அம்மணி”நீங்க பால் எடுக்க லேட் ஆயிடுச்சு.கெட்டு போய்டுமேன்னு நான் தான் எங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து இருந்தேன்:என்று பால் கவரை நீட்டும் பொழுது.
14.என்னது உங்கள் வீட்டுக்கு ஈ பி பில் இந்த மாசம் 2100 தானா?எங்கள் வீட்டுக்கு 2500 வந்துவிட்டதே”பக்கத்து பிளாட் மாமி புலம்பும் பொழுது.
15.”அக்கா.பக்கத்து வீட்டில் முருங்கை மரம் ஒடிந்து விழுந்து விட்டது.ஆளாளுக்கு பறித்துக்கொண்டு போனார்கள்.உங்களுக்குத்தான் முருங்கைக்கீரைன்னா பிடிக்குமே.கொளுந்து கீரையா பறிச்சிட்டு வந்தேன்”வேலைக்காரப்பெண்மணி கீரையை கொடுக்கும் போழுது.
16.விளையாடும் பொழுது குழந்தை தட்டிவிட்டு சென்ற கண்ணாடிப்பொருள் அதிர்ஷடவசமாக உடையாமல் தப்பும் தருணத்தில்...
17.பீரோவை சுத்தம் செய்யும் பொழுது பீரோவில் விரித்து இருக்கும் பேப்பருக்கு அடியில் எப்போதோ வைத்த நூறு ரூபாய்த்தாள் கிடைக்கும் பொழுது..
இதற்கு மேல் லிஸ்ட் போட்டால் யாரவது கொம்பை தூக்கிகொண்டு வந்து விடுவார்களோ என்று எனக்குள் அல்பத்தனமாக பயம் வந்து விட்டது.அதனால் இத்தோடு முடிச்சுக்கறேன்.உங்களுக்கு உதித்த அல்பங்களையும்,அல்பசந்தோஷங்களையும் பின்னூட்டத்தில் நீங்களும்கொஞ்சம் அலசி துவைத்து காயப்போடுங்களேன்.
Tweet |