




3.அந்நாளில் அழுக்குத்துணிகளை மூட்டையில் கட்டிக்கொண்டு குளக்கரைக்கு கூட்டமாக போய் அரட்டை அடித்த படி துவைப்பார்கள்.அரட்டை அடிக்கும் சுவாரஸ்யத்தில் மூட்டை மூட்டையாக துவைத்தாலும் அலுப்பு தெரியாமல் இருக்குமாம். சில வீடுகளில் கொல்லைப்புறம் கிணற்றடியில் துவைக்கும் கல் கண்டிப்பாக இருக்கும்.நின்று கொண்டே துவைத்து பிழிந்து உலரப்போட்டது போக இன்று வாஷிங் மெஷினில் துணியைப்போட்டு கூடவே சலவைத்தூளும் போட்டு ஸ்விட்சை ஆன் பண்ணி விட்டு குஷாலாக ஹாண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இல்லத்தரசிகள் ஷாப்பிங் போய் விட்டு ஆற அமர வீட்டுக்கு திரும்பி துவைத்த துணிகளை உலரப்போடும் இக்கால இல்லத்தரசிகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தானே?




5.அந்நாளில் வீட்டு வாசலிலேயே மரநிழலில் உரலை வைத்து நெல் குத்துவார்கள்.இரண்டு பெண்கள் மாறி மாறி ஹ்ம்ம்..ஹ்ம்ம் என்ற சப்தத்தை வெளிப்படுத்திய படி நெல் குத்துவதை கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு வியர்த்துப்போகும்.இப்பொழுதோ அரிசி ஆலைகள் பெருகி நெல்மணிகளை படத்தில் பார்த்தால்தான் உண்டு.



8.தானியங்களை தோலெடுக்க கல்லால் ஆன எந்திரம் அதன் கைப்பிடி மரத்தில் இருக்கும்.எந்திரத்தின் உச்சியில் உள்ள பள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களை போட்டு மரக்கைபிடியை பிடித்துக்கொண்டு சுற்றும் பொழுது தானியங்களின் தோல் அகலும்.திரித்த தானியங்களை முறத்தால் புடைத்து பயறு வேறு தோல் வேறு என்று பிரிப்பார்கள்.இன்றோ தோலெடுத்து பள பளக்க பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து வரும் பொழுது திரிகை காணாமல் போவது நியாயம்தானே?


9.மண்பானையில் தயிரை வைத்து மத்தால் கடைந்தால் வெண்ணெய் வரும்.
மண்பாணையை இரண்டு பாதங்களுக்கும் இடையில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் திரட்டுவார்கள்.மரத்தினால் செய்யப்பட்ட வித விதமான மத்துகள் பார்க்க கலை நயத்துடன் இருக்கும்.இப்பொழுதோ பித்தானை அழுத்தினால் சடுதியில் மோரும் வெண்ணையும் பிரிந்து வேலையை சுலபமாக்கி விட்டது.


10.மாலை வேளை வேலைகள் ஓய்ந்து அக்கடா என்று ஓய்வு எடுக்க முடியாமல் ஊற வைத்த உளுந்தையும் அரிசியையும் கை கையாக நீர் தெளித்து அரைத்து எடுத்தால்த்தான் மறுநாள் காலை டிபன் செய்ய முடியும்.இடது கையால் குழவியை ஆட்டிகொண்டே வலதுகையால் லாவகமாக அரிசியைத்தள்ளிக்கொண்டே அரைக்கும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இப்பொழுதோ அடுப்பில் குக்கர் இருக்க,தவாவில் சப்பாத்தி சுட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் ஓடும் கிரைண்டரை கவனித்தால் போதும்.மறுநாள் சுடச்சுட மல்லிகை இட்லி கெட்டி சட்னியுடன் பேஷாக சாப்பிடலாம்.





13.தாத்தா,தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் மனிதர்கள் நடக்கும் பொழுது சரட்சரட் என்று சப்தம் ஒலிக்கும்.நல்ல பர்மா தேக்கினால் செருப்பு வடிவில் செய்யப்பட்ட மிதியடியில் நடுவே வசதிக்கேற்ப செம்பு பித்தளை,வெள்ளி பிடிகளால் அலங்காரம் செய்து இருக்கும்.வெள்ளிப்பிடி போட்ட மிதியடி அணிந்தவர்கள் மேல்மட்டத்தினர் என்று கொள்ளலாம்.அந்த செருப்பை இப்பொழுது அணிந்து கொண்டு நடப்பதென்றால் அது சர்க்கஸ் வித்தையாகிவிடும்.
தோட்டத்தொழிலாளிகள் பனை மட்டையை செருப்பு வடிவில் கத்தரித்து பனை நாரினால் செருப்பின் வாரை செய்து அணிந்து இருப்பார்கள்.கண்ணாடி பெட்டியினுள் கண்களை கவர உட்கார்ந்திருக்கும் அலங்கார செருப்பு வகைகளை வாங்கி அணியும் நமக்கு பலங்கால செருப்புகள் வியப்பை தரும்.



15.நாண்கு ஐந்து மனிதர்கள் கூட தாராளமாக உள்ளே அமரும் விசாலமான பெட்டகங்களில் இருந்து சிறிய சைஸ் பெட்டகங்கள் வரை அந்த காலத்தில் பிரசித்தம்.பெரிய பெட்டகங்களின்சாவியே அரை அடி நீளம் இருக்கும்.
கனமான அந்த பெட்டகத்தை கில்லாடி திருடர்கள் கூட எளிதில் திறக்க இயலாதவாறு உறுதித்தன்மையுடன் இருக்கும்.இதில்தான் ஆடை,அணிகலன்கள்,விலை உயர்ந்த பொருட்களை வைத்து பாதுகாத்தனர் நம் முன்னோர்கள்.இன்றோ பில்ட் இன் கப்போர்டுகள் வலம் வந்து எளிதாக்கி விட்டன.

16.மூன்று கற்களை முக்கோண வடிவில் வைத்து அதன் மீது பானை வைத்து சுள்ளிகளை வைத்து எரித்து சமைத்தார்கள்.பிறகு மண் அடுப்பை புதைத்து விறகால் சமைத்தார்கள்.காலத்தின் பரிமாணம் இன்று வழவழப்பான கிரானைட் மேடையில் ஹாப்ஸ் பொறுத்தி இது அடுக்களைதானா என்று வியக்கும் அளவிற்கு மாற்றங்கள் புகுந்து விட்டன.




Tweet |