
வீடு முழுக்க புளிக்காய்ச்சலின் மணம் ஊரைக்கூட்டியது.அப்பளங்களை பொரித்து பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்த ருக்கு பூசணிக்காய் உண்டியலினுள் கத்தியை விட்டு உள்ளே இருக்கும் காசை எடுத்துக்கொண்டிருந்த மகியிடம்
“ஏண்டி இப்ப சேர்த்து வைத்த காசை எடுக்கறே”என்று அதட்டல் போட்டாள்.
“டூர் போறோமில்லே.கடையில் போய் புதுசா கண்ணாடி வளையல்,ரப்பர் பாண்ட்,ஸ்டிக்கர் பொட்டு,பாசி மணி எல்லாம் வாங்கப்போறேன்”
மாமியார் ரயிலில் வைத்து சாப்பிட மந்தாரை இலைகளை அடுக்கி கட்டிக்கொண்டிருந்தாள்.
”அத்தே..ராமேஸ்வரம் வெயில் ஜாஸ்தியா இருந்தாலும் எதற்கும் போர்வை எடுத்து வச்சிக்குங்க.உங்கள் மருந்து மாத்திரைகளை மறக்காமல் எடுத்து வச்சிக்கோங்க”
“அதெல்லாம் அப்பவே ஆச்சு..எட்டு மணிக்கு டிரெய்ன் என்றான்.இன்னும் சாப்பாட்டுக்கு வரவே இல்லையே பட்டாபி”
“தூரமா சவாரி போய் இருப்பாரோ என்னவோ.இப்பதானே அஞ்சு மணி.வந்துடுவார் அத்தே”மாமியாருக்கு பதில் சொல்லிக்கொண்டே மூட்டை முடிச்சுகளை ரெடிபண்ணிக்கொண்டிருந்தாள் ருக்கு.
வெளியில் இருந்து வேகமாக ஓடி வந்த சிவா கையில் இருந்த டிஜிட்டல் கேமராவை தாயிடம் காட்டி மகிழ்ந்தான்.
”அம்மா..நம்ம ரங்கு இல்லை.நான் ரொம்ப கேட்டுக்கொண்டதால் அவனுடைய அம்மாவிடம் கேட்டு கேமரா தந்திருக்கான்மா.பிலிம் வாங்கிப்போடுற செலவெல்லாம் இல்லை.சார்ஜ் போட்டு எடுத்தால் போதும்.படம் பளிச்சுன்னு வந்துடும்.”
மகனின் கையில் இருந்த கேமராவை வாங்கி ஆராய்ந்து விட்டு திருப்பித்தந்தவள்”பத்திரமா உபயோகிச்சுட்டு பத்திரமா திருப்பி சேர்த்துடு.விலையுயர்ந்த பொருளாஇருக்கும்”
திருமணமான இந்த 17 வருட காலத்தில் இப்பொழுதுதான் முதன் முறையாக வெளியூர் போகின்ற உற்சாகம்.குழந்தைகள் சிவாவும்,மகியும் கற்பனை கோட்டை கட்டி மகிழ்ந்தனர்.
வெளியூருக்கு சுற்றுலா செல்வதில் ஏக சந்தோஷம்.கூடப்படிப்பவர்கள்,அக்கம்பக்க சிநேகிதர்களிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தனர்.வாழ்க்கையில் முதல் முதலாக நெடுந்தூரப்பயணம்.பள்ளியில் எக்ஸ்கர்ஷன் செல்லும் பொழுது கூட பொருளாதாரம் ஈடு கொடுக்காததால் அதனை எல்லாம் தவிர்த்து ஏமாற்றத்தை விழுங்கி வாழப்பழகிய அடித்தட்டு மக்கள்.
”ராமேஸ்வரத்தில் பெரிசா பாலம் இருக்காமே.டிரைனில் மட்டுமில்லை பஸ்ஸிலும் அந்த பாலத்தில் போகணும்மா.”
“ம்ம்..போகலாம்”
“நந்தா படம்,அண்ணாமலை நாடகத்திலே வர்ர தனுஸ் கோடியையும் பார்த்துடணும்.நிறைய போட்டோ எல்லாம் எடுத்து என் பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் காட்டணும்”
“ம்ம்..அப்பா எல்லாத்துக்கும் கூட்டிட்டு போவார்”
“அம்மா,டிரைனில் ராமேஸ்வரம் போய்ட்டு அப்படியே மதுரை போவோமில்ல?”
“ஆமா”
“ஏன் மதுரைக்கு டிக்கட் எடுக்கலே”
“மதுரைக்கு பஸ்ஸிலேயே போய்டலாம்”
“அங்கே சித்திரை பொருட்காட்சி நடக்குதாம்.கோவிலுக்கு போய்ட்டு அங்கேயும் போகணும்மா”
“அப்படியே அதிசயம் போகணும்மா”
வலமும்,இடமும் இருவரும் இருந்து கொண்டு தாயிடம் கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டு வரும் பதிலில் திருப்திபட்டுக்கொண்டிருந்தனர் மகியும்,சிவாவும்.
”ஏடீ ருக்கு..என்னமோ போ.கடைசி காலத்திலேயாவது பிள்ளையாண்டான் கூட்டிட்டு போக சம்மத்தித்தானே,கடைவரை காசி ராமேஸ்வரம் பார்க்காமலே போய் சேர்ந்துடுவேனோன்னு இருந்தது.பகவான் பாக்கியத்தை தந்துட்டான்”
“உங்களை ராமேஸ்வரம் கூட்டிட்டு போகணும் என்பதற்காகத்தானே அத்தே பிள்ளைகள் ஆசைப்பட்ட கொடைக்காணலுக்கு போகாமல் ராமேஸ்வரம் போறோம்”
மணி ஆறாகி விட்டது.இன்னும் பட்டாபியைக்காணோம்.பிள்ளைகள் இருவரும் அப்பாவின் வரவுக்காக வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்தனர்.
ருக்குவுக்கு மனதில் லேசாக கவலைப்படர ஆரம்பித்தது.
“என்னதிது ..இவ்வளவு நேரமாகியும் வரலே.எட்டு மணி டிரெய்னுக்கு ஆறரை மணிக்கே கிளம்பினால் தான் எக்மோர் ஸ்டேஷன் போய் சேர முடியும் என்று சொன்னாரே?”
இப்பொழுது மாமியார் மருமகளுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னார்.
“வந்துடுவாண்டி..தூரமா சவாரி ஏற்றிட்டு போய் இருப்பான்.அவன் கூட்டாளி கிச்சா கிட்டே வண்டியை கொடுத்துட்டு வர்ரேன்னு சொன்னானே.அங்கே போய்ட்டு வரவேணாமா?”
“இல்லே அத்தே.கிச்சா அண்ணனை கூட்டிக்கொண்டுதான் வருவார்.அவர்தான் நம்மை எக்மோர் ஸ்டேஷனில் கொண்டு வந்து விடப்போறார்.”
“பதறாதே வந்துடுவான்”
பட்டாபி மனசு பூராவும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது,இன்று எதிர்பார்க்காத அளவுக்கு கலெக்ஷன்.கடனாக கேட்டு இருந்த பணத்துக்கு மேலேயே கூட்டாளிகள் இவன் குடும்ப டூர் செல்வதற்கு உதவினார்கள்.
நம்மை திருமணம் செய்து ருக்கு என்ன சந்தோஷத்தைக்கண்டாள்.பிள்ளைகள்தான் ஆசையா ஒரு இடத்திற்கு போய் பார்த்து இருப்பார்களா?இப்பொழுது அதை எல்லாம் நிறைவேற்றப்போகும் உற்சாகத்துடன் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்த்து.
’டூரில் அம்மாவுக்கு நல்லதா பருத்திப்புடவை எடுத்துக்கொடுக்கணும்.ருக்குவுக்கு பூனம் சேலை அவளுக்கு பிடிச்ச சிகப்பு கலரில் எடுத்துத்தரணும்.பசங்க கையில் பணத்தைக்கொடுத்து இஷடப்பட்டதை வாங்கிக்க சொல்லணும்’ஏதேதோ எண்ணங்கள் அலைகளாக மனதில் ஓட அந்த கடையைப்பார்த்தும் சட்டென்று பிரேக் போட்டான்.
கிரில் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு குடிகமகன்கள் டாஷ்மாக் கடையில் நின்று கையை சரக்குக்காக நீட்டியபடி நின்று இருந்தனர்.
’கோவிலுக்கு போகிறோம்.இன்னும் நாலு நாளைக்கு இதன் பக்கமே நெருங்க முடியாது.ஆசை தீர ஒரு ஃபுல்லை போட்டால் என்ன?இன்னும் நேரம் இருக்கிறதுதானே’ மனம் எழுப்பிய வினாவுக்கு உடல் ஒத்துழைக்க ஆட்டோவை பிரேக்கிட்டான்.
பணத்தை நீட்டி ”அண்ணே,ஒரு ஃபுல்லு”
கையில் பளபளத்த பாட்டிலை ஆசை ஆசையாக வருடிகொடுத்து ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆசைதீர குடித்து முடித்தான்.
“ஹப்பா.."
கண்கள் செருகினாலும் உஷாராகிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
‘இன்னேரம் பசங்க ரெடியாகி இருப்பாங்க.ருக்கு மூட்டை முடிச்செல்லாம் கட்டி ரெடியாகி இருப்பாள்.புரசைவாக்கத்தில் இருக்கின்ற கிச்சாவைப்போய் அழைத்துகொண்டு அரைமணி நேரத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம்.அப்புறம் திரும்பி குடுமப்த்தை அழைத்துக்கொண்டு எக்மோர் வரணும்”வேகமாக ஆக்சிலேட்டரை அழுத்தினான். எக்மோர் பூந்தமல்லி ஹை ரோடில் வண்டி ஜிவ்வென்று சென்று கொண்டிருந்தது.
கிரீச்..
பெருத்த சப்தத்துடன் அந்த ஆட்டோ சுழன்றடித்து கவிழ்ந்தது.பின்னால் வந்த வாகனங்கள் சடன் பிரேக் போட்டதால் நிலை குலைந்து நின்றன.எங்கிருந்தோ ஒரு போலிஸ்காரர் விசில் அடித்த படி கூட்டத்தை விலக்கி விட்டார்.
“த்சோ..அடி பலமாக இருக்குமோ”
“சப்தம் மூச்சைக்காணோம்”
“ஹ்ம்ம்..யாரு பெற்ற பிள்ளையோ”
“சீக்கிரம் ஆம்புலன்ஸுக்கு சொல்லுங்கப்பா”
“நல்ல வேளை ஆட்டோவில் சவாரி ஏற்றிட்டு வரலே”
பாங்க்க்க்க்க்..
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சைரன் ஒலித்த படி தனது அன்றைய பயணத்தை எக்மோர் ஸ்டேஷனை விட்டு பயணித்துக்கொண்டிருந்தது.