Showing posts with label என் ஆக்கங்கள். Show all posts
Showing posts with label என் ஆக்கங்கள். Show all posts

August 4, 2011

அதிர்ஷ்டக்காரி


இவள் புதியவளில் எனது அதிர்ஷ்டக்காரி என்ற சிறுகதை ஆகஸ்ட் இதழில் வந்துள்ளது.படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.



அதிர்ஷ்டக்காரி

கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.

ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.

உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.

”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”

“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”

“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”

“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”

“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”

“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”

“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”

அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.

முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.

“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”

“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”

“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”

”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”

“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”

“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.

ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.

பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”

“எதுக்கு அத்தே திருஷ்டி..”

“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”

“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”

“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.

ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”

“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”

“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”

“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”

அலமேலு வாயடைத்து நின்றாள்.

இவள் புதியவள் இதழுக்கு இனிய நன்றிகள்


April 18, 2011

லைஃப் டைம் ஹேப்பி டூர்



லைஃப் டைம் ஹேப்பி டூர்

டூரை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.ஒன்று செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்.மற்றொன்று பேக்கேஜ் டூர்.

செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்:

1.நீங்களாகவே திட்டமிட்டு டூர் செல்வதென்றால் பக்காவாக திட்டமிட்டு ஒவ்வொரு சிறு திட்டங்களையும் டைரி ஒன்றில் குறிப்பெழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
2.செலவுக்கான தொகையை அனைத்தும் பணமாக வைத்திராமல்,குடும்ப உறுப்பினரகள் அனைவரது டெபிட்,கிரடிட் கார்டுகளை அவ்வப்பொழுது உபயோகித்துக்கொள்ளுங்கள்.

3.குழந்தைகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் தங்கி இருக்கும் ஹோட்டல் முகவரி.போன் நம்பர்,கைபேசி நம்பர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4.மலிவாக கிடைக்கின்றதே என்று கண்ட உணவகங்களில் சாப்பிட்டு வயிற்றை அப்செட் செய்து கொள்ளாதீர்கள்.

5.குறிப்பிட்ட இடத்துக்கு தங்கி இருக்கும் இடத்தில் இருந்து செல்வதென்றால் அந்த இடத்தைப்பற்றி முன்னரே அறிந்து கொள்வதோடு தங்கி இருக்கும் இடத்திற்கும் ,செல்லக்கூடிய ஸ்பாட்டுக்குமான தூரம்,ஆட்டோ டாக்ஸி கட்டணம் ஆகியவற்றை கேட்டு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

6.செல்லும் இடத்தில் தரமான உணவு எங்கு கிடைக்கும் என்று தங்கி இருக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டாலும் உதவுவார்கள்.

7.செலவுகளை சிக்கனம் செய்ய ஒரு வேளைக்கு டிப் டீ,ஒட்ஸ்,கப் ஓ நூடுல்ஸ்,பிரட் பட்டர் ஜாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய அமவுண்ட் மிச்சமாகும்.தயாரிப்பதும் சுலபம்.

8.உறவினர் வீடுகளில் தங்குவதென்றால் அவர்களுக்கு துளியும் சிரமம் தராமல் கவனத்துடன் செயல்படுங்கள்.அவர்கள் வீட்டில் இருந்து சோப்,பேஸ்ட்,ஷாம்பூ,சீப்பு,எண்ணெய்,டவல் என்று எதிர்பர்க்காமல் அனைத்தையும் நீங்களே எடுத்து சென்றுவிடுங்கள்.

9.ஊரில் இருந்து எடுத்து வந்தேன் என்று ஒரு கிலோ ஸ்வீட் பாக்கெட்டும்,அரைகிலோ மிக்சர் பாக்கெட்டையும் கொடுத்து கடமை முடிந்தது என்றிராமல் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பால் பாக்கெட்டுகள்,பிரட் பாக்கெட்டுகள்,பட்டர்,நெய்,காய்கறிகள்,அசைவ உணவுவகைகள் சாப்பிடுபவர்கள் என்றால் சிக்கன்.மட்டன்.முட்டைகள் போன்றவற்றை வாங்கி வந்து கொடுத்தால் தயக்கத்துடன்,லஜ்ஜையுடன் அவர்கள் பெற்றுக்கொண்டாலும்,கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.

10.இறுதியாக உறவினரிடம் அதிக எதிர்பார்பின்றி,கிடைக்கும் உபசரணைகளில் முழு திருப்தியுற்று, குறைகளை களைத்தெரிந்து விட்டு இன்பமுடன் பிரியாவிடை பெறுங்கள்.அந்த அனுபவம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும்.

பேக்கேஜ் டூர்:

1.குழுக்களோடு சேர்ந்து செல்லும் டூரில் சகிப்புத்தன்மையும்,பொறுமை உணர்வும்,விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமிருந்தால் அந்த டூர் இன்பகரமாக அமையும்.

2.ஓய்வென்பது சொற்ப கால அவகாசத்தில்த்தான் குழு சுற்றுலாவில் கிடைப்பதால் ரெஃப்ரஷ் செய்து கொள்ள ஜுஸ்,க்ளுகோஸ் போன்றவற்றை கையோடு எடுத்து செல்லுங்கள்.வலி நிவாரண மருந்துகள்,தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.

3.மற்ற பயணிகளுடன் உங்களை கம்பேர் பண்ணாமல் இருந்தாலே டூர் சுகமாக அமையும்.

4.வாகனங்களில் செல்லும் பொழுது வசதியான இருக்கை,ஜன்னலோர இருக்கை,என்று அடம் பிடிக்காதீர்கள்.அதே போல் தங்கி இருக்கும் அறை ரோட்டை பார்த்தாற்போல் வேண்டும்,ரூம் சர்வீஸ் சரி இல்லை,சாப்பாடு சூடு இல்லை என்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போங்கள்.

5.சுற்றிப்பார்க்கும் பொழுது கூட வந்த பயணிகளை விட்டும் தனித்து சென்று விடாதீர்கள்.சக பயணிகளுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அவர்களுடனான கைபேசி நம்பரை வாங்கி சேமித்துக்கொள்ளுங்கள்.அவசரத்திற்கு உதவலாம்.

6.இப்பொழுது டிஜிட்டல் கேமரா இல்லாத வீடுகளே இல்லை எனலாம்..இயன்றவரை ,புகைபடங்களும்,வீடியோவும் எடுக்க கூச்சப்படாதீர்கள்.டூர் முடிந்து போனாலும் காலாகாலத்திற்கும் வைத்து பார்த்து மகிழலாம்.படங்களை வெறும் பென்டிரைவிலும்,பி சியிலும்,சிடிக்களிலும் சேமித்து வைப்பதை விட பிரிண்டுகள் போட்டு ஆல்பமாக வைத்துக்கொள்ளலாம்.

7.சுற்றுலா நிர்வாகத்தினரே சாப்பாடு தருவதானாலும்,நொறுக்குத்தீனிகளை கையுடன் எடுத்துச்செல்வதின் மூலம் குழந்தைகளின் பிடுங்கள்களில் இருந்து தப்பிக்கலாம்.கையுடன் எப்பொழுது தண்ணீர் பாட்டில்கள் இருக்கட்டும்.

8.பெரிய பாலித்தீன் பேக்குகள் எடுத்துச்சென்று அழுக்குத்துணிகளை அதில் போட்டு வைத்து டூரை முடித்துக்கொண்டு திரும்பும் பொழுது அந்த பைகளுடன் சூட்கேஸ்களில் திணித்துக்கொண்டு ஊர் திரும்பலாம்.

9.கோபத்தில் சப்தமிட்டு பேசுவது,மனைவியிடமோ அல்லது கணவரிடமோ குழந்தைகளிடமோ கோபம் வந்தால் அதை நாண்கு பேர்களுக்கு முன்பு வெளிப்படுதுவது,குடும்ப விஷயங்களை,குறைநிறைகளை சக பயணிகளின் முன்பு அலசுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.ஏனெனில் உங்களின் பால் சகபயணிகள் வைத்திருக்கும் மதிப்பும் அன்பும் தடாலென்று சரிந்து போகலாம்.

10.குழந்தைகளை அழவைத்து பார்த்துக்கொண்டிராதீர்கள்.சட் என்று அழுகையை அடக்கி சமாதானப்படுத்துங்கள்.அது சக பயணிகளுக்கு இம்சையாக இருக்கும்.

என்ன டூர் கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?ஹாப்பி ஜர்ணி!

April 16, 2011

செயற்கைத்தோட்டம்





இம்மாத இவள் புதியவள் இதழில் எனது “இயற்கையாய் ஒரு செயற்கைத்தோட்டம்”என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.படத்தினை ஜூம் செய்து பார்க்கவும். இவள் புதியவள் இதழ் நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

பச்சை பசேலென்ற புல் தரை,கை தேர்ந்த தோட்டக்காரரால் அமைக்கப்பட்டது போன்றஅழகாக அமைத்த வேலி,பசுமை கொஞ்சும் செடிகொடிகள்,வெள்ளை,சிகப்பு,மஞ்சள்,பிங்க் வர்ண ரோஜாப்பூக்கள் பூத்துக்குலுங்கும் ரோஜாசெடி வகைகள்,மெலிதாய் சிரிக்கும் செம்பருத்திப்பூக்கள்,உயர்ந்து நிற்கும் பாம் செடிகள்,கண்ணைக்கவரும் மேப்பல்ஸ் இலைகள்,நாவூரவைக்கும் ஆஸ்த்ரேலியன் திராட்சைக் குலைகள் வகை வகையான கருத்தை கவரும் வண்ணம் குரோட்டன்ஸ் வகைகள்,ஆங்காங்கே துக்கணாங்குருவிக்கூட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்கணாங்குருவிகள்,மலர்களை முகர்ந்த படி படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்,மேலே தொங்கும் ஹரிக்கோன் விளக்கு இத்யாதி..இத்யாதி..

தோட்டத்தினுள் நுழையும் பொழுதே நிஜத்தோட்டத்தினுள் நுழைந்துவிட்டோம் என்ற பரவசத்தை ஏற்படுத்தும் உயிரோட்டம் அந்த செயற்கைத்தோட்டத்தில் நிரம்பி வழிகின்றது என்பது நான் அங்கு கண்ட நிஜம்.

சென்னை எக்மோரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெஹருன்னிஷா சலீம் கான் ரசனையுடன் தனது மொட்டைமாடியில் இந்த அழகிய தோட்டத்தினை உருவாக்கி உள்ளார்.இதற்காக இவர் கரன்ஸிகள் மட்டுமின்றி,தனது நேரத்தையும்,ரசனையையும்,கற்பனை வளத்தையும் நிறையவே செலவு செய்து இருக்கின்றார்.

"எப்படி இந்த செயற்கைத்தோட்டம் அமைக்கும் எண்ணம் வந்தது?இயற்கையாக தோட்டம் அமைத்தால் செலவும்,பராமரிப்பு சிரமுமும் குறைவுதானே?"எனக்கேட்ட பொழுது சிரித்த வண்ணம்"இயற்கை தோட்டம் அமைக்கும் எண்ணம் இருந்தாலும் அடிக்கடி ஊருக்கு சென்று விடுவதால் பராமரிப்பில் சிக்கல் ஆகி விடுகின்றது.ஆகவே என் தோட்டக் கனவை இந்த செயற்கைத்தோட்டம் பூர்த்தி செய்து வைக்கின்றது"என்றார்.

தோட்டம் அமைக்க தேவையான மரங்கள்,இலைகள்,கொடிகள் புற்தரை அனைத்தும் சைனா,சிங்கப்பூர்,கொழும்பு மற்றும் சென்னையில் உள்ள பாரீஸ்கார்னரில் இருந்து கொள்முதல் செய்து தோட்டத்தினை அமைத்து இருக்கின்றார்.

வாரம் ஒரு முறை ஒரு பகல் தினத்தை முழுக்க தோட்டத்தை சுத்தம் செய்வதிலும்,ஸ்ப்ரேயர்,ஹோஸ் பைப் மூலம் தண்ணீர் அடித்து,துணிகள் கொண்டு துடைத்து உதிர்ந்த இலைகளை சரி செய்து மிக கவனத்துடன் பராமரித்து வருகின்றார்.

பக்கவாட்டில் மூங்கிலிலான வேலியைப்போல் சுவரில் டைல்ஸ் பதித்து இருப்பது தோட்டத்திற்கே மகுடம் வைத்தது போன்ற தோற்றத்தைதருகின்றது.ஆங்காங்கே போகஸ் விளக்குகள் அமைத்து இருப்பது இரவு நேரத்திலும் தோட்டத்தினை பளீரிட செய்கின்றது.வண்ண வண்ண கலர்கள் மாறி மாறிக்காட்டும் வகையிலும் விளக்குகள் அமைத்து அழகு தோட்டத்தினை கலர்ஃபுல் ஆக வைத்து இருப்பது ஹை லைட்.

தூக்கணாங்குருவிகளும்,வண்ணத்துப்பூச்சிகளும் குழந்தைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தி விடும்.சிறிய டீபாயை சுற்றி சேர்கள் போட்டு அமர்ந்து கையில் சூடான தேநீர் கோப்பைகளுடன் இந்த கார்டனில் உட்கார்ந்து அளவாளாவினால் அந்த தருணத்தை மறக்கவே முடியாது.

மேலதிக படங்கள் கீழே.














April 14, 2011

எனது முதல் கட்டுரை






நான் சிறுமியாக இருந்தபொழுது பத்திரிகைகள் படிக்க மட்டுமின்றி பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் நாட்டம் அதிகம் இருந்து வந்தது.பற்பல பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுத ஆரம்பித்து நாளடைவில் குறிப்புகள் கொடுக்கவும் ஆரம்பித்தேன்.நான் அனுப்பும் குறிப்புகள் வெளியான உற்சாகத்தில் என் பதின்ம வயதில் நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.

வரதட்சணை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையைத்தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு தலைப்பிலும் என் கட்டுரைகள் ஜமாஅத்துல் உலமா மாத இதழில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.என் எழுத்தார்வத்திற்கு வித்திட்டு உரம் போட்டு வளர்த்தவர்கள் மறைந்த பெரியவர்,ஜமாஅத்துல் உலமா மாத இதழ் ஆசிரியரும் மர்ஹூம் அல்லாமா அபுல்ஹசன் ஷாதலி சாஹிப் அவர்களை இன்னேரம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றேன். பல வருடங்களுக்கு முன் வெளியான என் முதல் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கட்டுரையைப்படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.



March 8, 2011

எத்தனை முகம் பெண்களுக்கு



மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.

முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.

1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.

2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.

3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.

4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.

5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்‌ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.

6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.

7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.

8.டைம் மேனேஜ்மெண்ட்:
காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.

9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.

10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.

தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.

March 6, 2011

லேடீஸ் ஸ்பெஷலில் நான்



இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் நான்

ஒவ்வொரு மாதமும் வலைப்பூவில் தேனெடுத்து சுவையூட்டும் ஒவ்வொரு பெண்பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் பணி மகத்தானது.இம்மாத வலைப்பூதாரர் அறிமுகத்தில் என்னை அறிமுகப்படுத்திய லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் ஆசிரியை கிரிஜா ராகவன் மேமுக்கும் ,காரணகர்த்தவான அருமை தோழி தேனம்மை லெக்ஷ்மணனுக்கும் அன்பின் நன்றிகள் உரித்தாகட்டும்.

எண்ணம் போல் வாழ்வு

மனதின் எண்ணத்தைப்போல் வாழ்வு அமைவது என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லிச்சென்றார்கள்?எதனைப்பற்றி அடிக்கடி நினைக்கின்றோமோ அதுவே வாழ்க்கையில் நிஜமும் ஆகிப்போகின்றது என்பது பலர் அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை.

நம்மால் முடியும் என்ற தன்நம்பிக்கை,தன்னைப்பற்றிய அசாத்திய சுய நம்பிக்கை மனதில் நிறைந்து நின்றால் உண்மையில் நம்மால் எல்லாம் முடியும்.

நாம் கவனக்குறைவாக,அசுவாரஸ்யமாக இருக்கும் பொழுது,மனதில் உள்ள தன்னம்பிக்கை குறையும்.உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் செயல் பட்டால் நாடிய விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.நமக்கு செல்வம் வேண்டுமா?உடல் ஆரோக்கியம் வேண்டுமா?நல்ல கல்வி வேண்டுமா?மகபேறு வேண்டுமா?சந்தோஷம் வேண்டுமா?பத்திரிகையில் எழுத வேண்டுமா?எது தேவையோ அதனை முதலில் நினைவு முழுக்க கொண்டு வாருங்கள்.முயற்சித்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதின் ஆழத்தில் இறுத்திக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக அது நடக்கும்.

சந்தோஷம் தேவை என்றால் அது கிட்ட என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டால் பலனளிக்கும் என்று சில நிமிடங்கள் செலவு செய்து ஆராயுங்கள்.சரி என்று பட்டதை செயல் படுத்துங்கள்.சின்ன விஷயத்தினையும் சந்தோஷமாக நினைக்கப்பழகுங்கள்.நிச்சயமாக நீங்கள் விரும்பும் சந்தோஷத்தை வெகு சீக்கிரமாகவே எட்டுவீர்கள்.


மணம் புரிந்து சில வருடங்கள் கழிந்தும் மகபேறு கிடைக்காத ஒரு பெண்இவ்வளவு மருத்துவம் செய்தும் கிட்டவில்லையே?இனி எங்கு நமக்கு அந்தப்பேறு கிட்டப்போகின்றது?” என்று அலுத்துக்கொண்டால் மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் வலிமை குன்றுவாள்.மகபேறு மருத்துவர்இந்த நம்பிக்கையின்மையே உனக்கு முதல் எதிரி.இந்த மனநிலை தொடர்ந்தால் எந்த மருத்துவமும் பலிப்பது கடினம்என்கின்றார்.விஞ்ஞான உண்மையும் இதுதான்.


பரிட்சைக்கு தயார் செய்து மகனையோ மகளையோ அனுப்பும் பொழுது நம்பிக்கை மிளிறும் வார்த்தைகளின்றிடேய்..ஒன் வேர்ட் ஆன்சரை கோட்டை விட்டுடாதேடா?எஸ்ஸே கரெக்டா எழுது.சின்ன தப்புன்னா மிஸ் மார்க்கை குறைத்துடுவாங்க.சூஸ் எழுதறச்சே குழப்பிக்காதேஇந்த ரீதியில் பள்ளி கிளம்பும் மகனை நெகடிவ் அப்ரோச்சால் குழப்பம் செய்து குழந்தையை டென்ஷன் செய்து நாமும் டென்ஷன் ஆவதை விடகண்ணா,நீ நல்லா பிரிப்பேர் பண்ணி இருக்கேடா.குழம்பாமல் எக்ஸாம் எழுது.நல்ல படியா எழுதுவே.கண்டிப்பா இந்த முறை கிளாஸ் பர்ஸ்டா வருவே.”என்று பாஸிடிவ் அப்ரோச்சில் குழந்தைகளை பரிட்சை எழுதி அனுப்பினால் குழந்தைகளுக்கும் இறுக்கம் தீரும்.நாமும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளுடன் நிறைவாக வாழவேண்டும் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது.அந்த நிலை கிட்ட என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அதனை நடைமுறை படுத்துவது மட்டு மின்றி,இப்படி எல்லாம் செயல் பட்டால் நிச்சயம் நாம் எண்ணிய இலக்கை அடைவோம் என்று மனதில் நிறைந்த நம்பிக்கையுடன் செயல் பட்டால் சிகரத்தை அடைவது சுலபம்.அதனை விட்டுஹ்ம்ம்ம்..என்ன செய்து என்ன செய்ய?சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றதுஎன்ற அலுப்பும்,சலிப்பும் மனதில் ஏற்பட்டால் இலக்குக்குறிய பாதை எப்படி கண்களுக்கு புலப்படும்?

தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இருக்க ஆசைத்தான்.அந்த எண்ணம் மனசு முழுக்க உள்ளதுதான்.என்ன இருந்து என்ன செய்வது?வாழ்க்கையில் சருக்கல்கள் மனவலிமையை,தன்னம்பிக்கையை தின்று விடுகின்றதேஎன்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.ஆனால் தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.உறுதியாக இருக்க மனதினை பழக்கிக்கொள்ளுங்கள்.எதிர்நீச்சல் போடுவதற்கும் தயக்கம் கொள்ளாதீர்கள்.சோர்வினை அகற்றி,சுறுசுறுப்பாக்கிகொள்ளுங்கள்.எதனை எண்ணினோமோ அதனை கண்டிப்பாக அடையமுடியும்,நல் விதை விதைத்து நல்லறுவடை செய்வோம்.