February 28, 2012

அன்றும் இன்றும்.


1.அந்த நாள் உணவென்றால் கம்பங்கூழ்,கேப்பைக்கூழ்.அதனையும் தாண்டி இட்லி தோசை.இப்பொழுது கூழை காட்டி நம் இளைய தலை முறையினரிடம் கேட்டால் “வாட் திஸ் நான் சென்ஸ்” என்று முகம் சுளிப்பார்கள்.பிஸ்ஸா,பர்கர் என்று அயல் நாடு உள் நாட்டினுள் நுழைந்து அமர்க்களம் பண்ணிக்கொண்டுள்ளது.



2.அந்த நாளில் சிறுமிகள் விளையாடுவது மரப்பாச்சி பொம்மைகளைக்கொண்டும்,துணியினால் செய்யப்பட்ட சீலைப்பொண்ணு என்று செல்லமாக அழைக்கும் பொம்மைகளும்தான்.இப்பொழுதுஆயிரக்கணக்கில் செலவு செய்து தன் பிள்ளைகளுக்கு ஹைடெக்கான பார்பி போன்ற பொம்மை வகைகளை வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கின்றனர் இக்கால பெற்றோர்கள்.




3.அந்நாளில் அழுக்குத்துணிகளை மூட்டையில் கட்டிக்கொண்டு குளக்கரைக்கு கூட்டமாக போய் அரட்டை அடித்த படி துவைப்பார்கள்.அரட்டை அடிக்கும் சுவாரஸ்யத்தில் மூட்டை மூட்டையாக துவைத்தாலும் அலுப்பு தெரியாமல் இருக்குமாம். சில வீடுகளில் கொல்லைப்புறம் கிணற்றடியில் துவைக்கும் கல் கண்டிப்பாக இருக்கும்.நின்று கொண்டே துவைத்து பிழிந்து உலரப்போட்டது போக இன்று வாஷிங் மெஷினில் துணியைப்போட்டு கூடவே சலவைத்தூளும் போட்டு ஸ்விட்சை ஆன் பண்ணி விட்டு குஷாலாக ஹாண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இல்லத்தரசிகள் ஷாப்பிங் போய் விட்டு ஆற அமர வீட்டுக்கு திரும்பி துவைத்த துணிகளை உலரப்போடும் இக்கால இல்லத்தரசிகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தானே?



4.வெட்டி வேர் அல்லது நன்னாரி வேரை நசுக்கி துணியில் பொட்டலமாக கட்டி மண்பானையில் போட்டு காய்ச்சிய நீரை பானையில் நிரப்பி, புதுமணலை குவித்து வைத்து அதன் மீது மண்பானையில் வைத்த நீரை சொம்பில் மொண்டு குடித்தால் ஆஹாஹா..இப்பொழுதுள்ள இளையதலை முறையினர் இதனை ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.தென்மாவட்டங்களில் `தணல் அடுப்பில் நெல் உமியை தூவி கிளம்பும் புகை மீது பானையை கவிழ்த்து வைத்து அதனுள் இருந்து வரும் நறுமணத்துடன் கூடிய நீரை இப்பொழுதும் நினைத்துக்கொண்டாலும் நாவில் நீர் ஊறும்.இப்பொழுதோ டிஸ்பென்சரில் பபுள்டாப் கேனை கவிழ்த்து சில்லென்று செயற்கைகுளிர் நீரை குடிக்கும் நிலைமை.



5.அந்நாளில் வீட்டு வாசலிலேயே மரநிழலில் உரலை வைத்து நெல் குத்துவார்கள்.இரண்டு பெண்கள் மாறி மாறி ஹ்ம்ம்..ஹ்ம்ம் என்ற சப்தத்தை வெளிப்படுத்திய படி நெல் குத்துவதை கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு வியர்த்துப்போகும்.இப்பொழுதோ அரிசி ஆலைகள் பெருகி நெல்மணிகளை படத்தில் பார்த்தால்தான் உண்டு.






6.உத்தரத்தில் கயிறு கட்டி அதனுள் சமைத்து வைத்த பொருட்களை ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி பிராணிகளிடம் இருந்தும்,பூச்சிவகைகளிடம் இருந்தும்,வீட்டில் இருக்கும் வாண்டுகளிடம் இருந்தும் பாதுகாத்தார்கள்.இன்றோ அழகுற கப்போர்டுகள் அமைத்து பாத்திரங்களை பாங்காக அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றனர்.



7.மரவேலைப்பாடுகள் கொண்ட கலை நயமிக்க ஓட்டைகள் உள்ள பலகை தயாரித்து இதனையும் உத்தரத்தில் கயிற்றினால் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள்.இதில் உள்ள ஓட்டைகளில் மர கரண்டிகள்,மத்து போன்றவற்றை மாட்டி வைக்கலாம்.இப்பொழுதோ குட்டியூண்டு ஸ்டாண்டில் டசன் கணக்கில் ஸ்பூன்களை மாட்டி வைத்து ஒரு ஓரமாக அடக்கமாக அமர்ந்து இருக்கின்றது இந்நாளைய ஸ்பூன்ஸ்டாண்ட்.




8.தானியங்களை தோலெடுக்க கல்லால் ஆன எந்திரம் அதன் கைப்பிடி மரத்தில் இருக்கும்.எந்திரத்தின் உச்சியில் உள்ள பள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களை போட்டு மரக்கைபிடியை பிடித்துக்கொண்டு சுற்றும் பொழுது தானியங்களின் தோல் அகலும்.திரித்த தானியங்களை முறத்தால் புடைத்து பயறு வேறு தோல் வேறு என்று பிரிப்பார்கள்.இன்றோ தோலெடுத்து பள பளக்க பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து வரும் பொழுது திரிகை காணாமல் போவது நியாயம்தானே?




9.மண்பானையில் தயிரை வைத்து மத்தால் கடைந்தால் வெண்ணெய் வரும்.
மண்பாணையை இரண்டு பாதங்களுக்கும் இடையில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் திரட்டுவார்கள்.மரத்தினால் செய்யப்பட்ட வித விதமான மத்துகள் பார்க்க கலை நயத்துடன் இருக்கும்.இப்பொழுதோ பித்தானை அழுத்தினால் சடுதியில் மோரும் வெண்ணையும் பிரிந்து வேலையை சுலபமாக்கி விட்டது.





10.மாலை வேளை வேலைகள் ஓய்ந்து அக்கடா என்று ஓய்வு எடுக்க முடியாமல் ஊற வைத்த உளுந்தையும் அரிசியையும் கை கையாக நீர் தெளித்து அரைத்து எடுத்தால்த்தான் மறுநாள் காலை டிபன் செய்ய முடியும்.இடது கையால் குழவியை ஆட்டிகொண்டே வலதுகையால் லாவகமாக அரிசியைத்தள்ளிக்கொண்டே அரைக்கும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இப்பொழுதோ அடுப்பில் குக்கர் இருக்க,தவாவில் சப்பாத்தி சுட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் ஓடும் கிரைண்டரை கவனித்தால் போதும்.மறுநாள் சுடச்சுட மல்லிகை இட்லி கெட்டி சட்னியுடன் பேஷாக சாப்பிடலாம்.


11.செய்த பதார்த்தங்கள் சூடாகவும்,மொறுமொறுப்பு குறையாமலும் இருக்க பனை ஓலைகளால் ஆன பெட்டிகளை தயாரித்து உணவுப்பொருட்களை வைத்திருப்பார்கள்.வெள்ளை நிற பனை ஓலையில் கலர் கலராக வண்ணம் தோய்த்து அழகுற டிஸைன் போட்டு இருப்பார்கள்.இன்னும் கொஞ்சம் ரிச் ஆக வேண்டுமென்றால் ஜரிகைகளால் பொட்டு போல் செய்து பதித்து இருப்பது கண்களைக்கவரும்.ஹாட்பாக்ஸ் தோன்றியதும் பனைஓலைப்பெட்டிகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.பெட்டி முடைபவர்களும் காணாமல் போய் விட்டனர்.



12.வீடென்றால் ஒரு கொல்லைப்புரம் இருக்கும்.கொல்லைப்புறம் இருந்தால் அங்கு பாய்லர் அடுப்பு இருக்கும்.அதிகாலையிலேயே தண்ணீர் கொதிக்க வைத்து நீரை விளாவி வைத்து வீட்டினர் குளிக்க வெந்நீர் தயாரிப்பதுதான் இல்லத்தரசிகளின் முதல் வேலை.இப்பொழுதோ கொட்டாவி விட்டு கொண்டே ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்து விட்டு மேலும் பத்து நிமிடம் இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் உள்ளதே...!



13.தாத்தா,தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் மனிதர்கள் நடக்கும் பொழுது சரட்சரட் என்று சப்தம் ஒலிக்கும்.நல்ல பர்மா தேக்கினால் செருப்பு வடிவில் செய்யப்பட்ட மிதியடியில் நடுவே வசதிக்கேற்ப செம்பு பித்தளை,வெள்ளி பிடிகளால் அலங்காரம் செய்து இருக்கும்.வெள்ளிப்பிடி போட்ட மிதியடி அணிந்தவர்கள் மேல்மட்டத்தினர் என்று கொள்ளலாம்.அந்த செருப்பை இப்பொழுது அணிந்து கொண்டு நடப்பதென்றால் அது சர்க்கஸ் வித்தையாகிவிடும்.
தோட்டத்தொழிலாளிகள் பனை மட்டையை செருப்பு வடிவில் கத்தரித்து பனை நாரினால் செருப்பின் வாரை செய்து அணிந்து இருப்பார்கள்.கண்ணாடி பெட்டியினுள் கண்களை கவர உட்கார்ந்திருக்கும் அலங்கார செருப்பு வகைகளை வாங்கி அணியும் நமக்கு பலங்கால செருப்புகள் வியப்பை தரும்.



14.விருந்தினர்கள் வந்து விட்டால் அழகாக சுருட்டி மூலையில் நிறக வைத்திருக்கும் பாயை உதறிப்போட்டு ,விரித்து விருந்தினர்களை அமரச்செய்வார்கள்.வண்ணம் தீட்டி டிஸைன் செய்யப்பட்ட கோரைப்பாய்கள்.ஓலைப்பாய்கள் என்று விதம் விதமாக வலம் வந்த காலம் போய் ,உட்கார்ந்ததும் மனுஷனை உள்வாங்கிக்கொள்ளும் ஷோபாக்களை வரவேற்பு அறைகளை அலங்கரிக்கும் காலம் காலத்தின் வண்ணக்கோலம்தானே?



15.நாண்கு ஐந்து மனிதர்கள் கூட தாராளமாக உள்ளே அமரும் விசாலமான பெட்டகங்களில் இருந்து சிறிய சைஸ் பெட்டகங்கள் வரை அந்த காலத்தில் பிரசித்தம்.பெரிய பெட்டகங்களின்சாவியே அரை அடி நீளம் இருக்கும்.
கனமான அந்த பெட்டகத்தை கில்லாடி திருடர்கள் கூட எளிதில் திறக்க இயலாதவாறு உறுதித்தன்மையுடன் இருக்கும்.இதில்தான் ஆடை,அணிகலன்கள்,விலை உயர்ந்த பொருட்களை வைத்து பாதுகாத்தனர் நம் முன்னோர்கள்.இன்றோ பில்ட் இன் கப்போர்டுகள் வலம் வந்து எளிதாக்கி விட்டன.



16.மூன்று கற்களை முக்கோண வடிவில் வைத்து அதன் மீது பானை வைத்து சுள்ளிகளை வைத்து எரித்து சமைத்தார்கள்.பிறகு மண் அடுப்பை புதைத்து விறகால் சமைத்தார்கள்.காலத்தின் பரிமாணம் இன்று வழவழப்பான கிரானைட் மேடையில் ஹாப்ஸ் பொறுத்தி இது அடுக்களைதானா என்று வியக்கும் அளவிற்கு மாற்றங்கள் புகுந்து விட்டன.



17.முன்பெல்லாம் மதிய உணவு உண்ட பின் சிறு தூக்கத்திற்கு பிறகு முதல் வேலையாக வீட்டில் இருக்கும்கெரஸின் விளக்குகளை சுத்தப்படுத்தி திரியை நெம்பி விட்டு,கெரஸின் நிரப்பி தயாராக வைத்திருப்பார்கள்.இருட்ட ஆரம்பித்ததும்,விளக்குகளை எல்லாம் நெருப்பிட்டு எரியச் செய்து வீட்டு திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு அறையாக வைத்து வெளிச்சத்தை உண்டாக்குவார்கள்.இந்த வெளிச்சத்தில்த்தான் படிப்பு,சமையல் எல்லாம்.இப்பொழுதோ ஸ்விட்ச் போர்டுக்கு போய் ஸ்விட்சை ஆன் செய்யக்கூட பொழுதில்லாமல் இருந்த இடத்தில் உட்கார்ந்த படி ரிமோட் மூலம் விளக்குகளை ஆன் செய்து இருப்பிடத்தை ஜகஜோதியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றோம்.



18.பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகள் விதிக்கு வீதி கிடைக்கும்.வியர்க்கும் பொழுது முகத்திற்கு எதிரே விசிறியை வைத்து வீசி காற்று வாங்கிக்கொள்வார்கள்.கணவர் தூங்கும்வரை வீசி விட வேண்டியது எழுதப்படாத சட்டம்.அதே போல் குழந்தைகளை தூங்க வைக்க அக்கால இல்லத்தரசிகள் கை வலி எடுக்கும் வரை விசிறிக்கொண்டே இருப்பார்களாம்.இப்பொழுதோ பொத்தானை தட்டினால் ஏஸியின் ஜில்லிப்பு அறை முழுக்க பரவி பரவசப்படுத்துகின்றதே.


February 27, 2012

தக்ஷின் சித்ரா - 1


உரல் என்றால் என்ன? திரிகை என்றால் என்ன?என்று வியப்பாக கேட்கின்றனர் இளையதலைமுறையினர். பழமையின் அடையாளங்கள் மாறி,மறைந்து வருவது வருந்ததக்க உண்மை.பழமையான அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாத்து,மறைந்து வரும் இந்தக் காலத்தில் தக்ஷின் சித்ரா, சென்னையில் ஒரு பாரம்பரிய மையமாக,சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

பழமை வாய்ந்த வீடுகள்,பொருட்கள் என்று குவிந்து இருக்கும் தக்ஷின் சித்ராவில் தென்னிந்தியாவின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, தொழில் ஆகியவற்றை பழமை மாறாமல் அப்படியே பிரதிபலித்து பார்ப்பவர்களை வியப்பூட்டி பரவசம் அளிக்கின்றது.

அந்தக்காலத்திலேயே ஆக்கப்பூர்வமாக யோசித்து கலைநயமாக பிரமிக்க தக்க வகையில் நகாசு வேலையுடன்
அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களும் ,பொருட்களும் வியப்பை தருபவை.

நாட்டரசங்கோட்டை செட்டியார்கள் வீடு,அக்ரஹார வீடுகள்,விவசாயிகள் வீடு,குயவர்கள் வீடு,பாய் முடைபவர்கள் வீடு,கூடை முடைபவர்கள் வீடு,நெசவாளர்கள் வீடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா வீடுகள் என்று தத்ரூபமாக வீடுகள் அமைத்து பொருட்களையும்,உருவங்களையும் வைத்து நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்து செல்கின்றனர்.

தக்ஷின் சித்ராவில் எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு.


அக்ரஹாரத்து பிரமாணாள் இல்லம்.

நாட்டுக்கோட்டை செட்டியார் இல்லம்
காஞ்சிபுரம் நெசவாளர் வீடு
சாத்தனூர் வீடு
சாத்தனூர் வீடு இன்னொரு கோணம்.
மாயவரம் மாவட்ட விவசாயி வீடு


பாய் முடைபவர் வீடு
செங்கல்பட்டு குயவர் வீடு
கூடை முடைபவர் வீடு
சிரியன் கிருத்துவ வீடு.
சிரியன் கிருத்துவ வீடு இன்னொரு கோணம்
கேரளா கூடத்துக்குளம் இல்லம்
கேரளா கோலிக்கோடு இல்லம்.


பழமை வாய்ந்த இல்லங்களின் வெளிப்புறத்தொற்றத்தை படங்களில் பார்த்தோம்.அடுத்த இடுகையில் உட்புறத்தோற்றங்களைப்பார்ப்போம்.


February 17, 2012

மைமூன்


ஹாட் பாக்ஸ்கள்,தண்ணீர்பாட்டில்கள்,விரிப்பு,ஸ்நாக்ஸ் டப்பாக்கள் என்று அத்தனையையும் கூடைகளில் தனித்தனியாக அடுக்கி கார் டிக்கியில் கொண்டு வந்து கார் ஓடும் பொழுது சாய்ந்து விடாதவாறு படு ஜாக்கிரதையுடன் டிக்கியுனுள் வைத்து மூடினாள் மைமூன்.

குழந்தைகள் பிக்னிக் போகும் உல்லாச மூடில் உற்சாகமாக கார் கிளம்பப்போகும் தருணத்திற்காக காத்திருந்தனர்.

ஜன்னல் கதவுகளை அடைத்து,அறைகதைவுகளை மூடி ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஹாஜரா.

“மைமூன் மோட்டார் ஸ்விட்ச் ஆஃபில் இருக்கா என்று செக் பண்ணிக்க.போன முறை அப்படித்தான்.மோட்டார் ஓவர் ஃபுளோ ஆகி பக்கத்துவிட்டுக்காரர் போன் செய்து சொன்னதும் லபோ லபோ என்று ஓடி வந்தோம்”

“அதெல்லாம் அப்பவே செக் பண்ணிட்டேன் அக்கா”

“டைம் ஆகிறது .எல்லோரும் கிளம்பறீங்களா?”
அஷ்ரப் துரிதப்படுத்தினான்.

அனைவரும்
வண்டியில் ஏறி அமர வண்டி கிளம்பியது.

சொகுசு வண்டியின் ஏஸியின் ஜில்லிப்பு,அங்கு நிலவிய உற்சாகம்,குழந்தைகளின் ஆர்ப்பாட்டம் எதிலுமே நாட்டம் போகாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மைமூன்.

“என்ன மைமூன்....டல்லா இருக்கே.வீட்டு ஞாபகம் வந்து விட்டதா?”

ஹாஜராவின் கேள்விக்கு சிரித்து மழுப்பினாள்.

பழகி சொற்ப நாட்களே ஆனாலும் மைமூனை ஹாஜராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது.சுறுசுறுப்பு,அமைதியான குணம்,ஏவும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்யும் பாங்கு,குழந்தைகள் அக்கறையுடன் கவனிக்கும் நேசம்,வேலைகளில் உள்ள நேர்த்தி இப்படி எல்லா விதத்திலும் பிடித்த வேலைக்காரியாக அமைந்து விட்டது குறித்து மிகவும் சந்தோஷம்.

கணவர் அஷ்ரப் கூட”ஹாஜரா,நீ முன் கோபக்காரி.அவசரப்பட்டு ஏதும் கோபத்தை அந்த பொண்ணு மீது காட்டி விடாதே.அதையே சாக்காக வைத்து நின்று விடப்போகிறாள்”என்று எச்சரித்திருந்தான்.

ஆனால் அதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் ஹாஜராவுக்கு எல்லா விதத்திலும் மைமூன் பிடித்தவளாகிப்போனாள்.

என்னதான் இத்தனை அனுசரனையாக இருந்தாலும் வீட்டில் உள்ள பண்டங்களை ஒரு பாத்திரத்தில் வைத்து “உன் பிள்ளைகளுக்கு போய் கொடு” என்று கொடுத்தால் வலுகட்டாயமாக மறுத்து விடுவாள் மைமூன்.அதுதான் ஹாஜராவுக்கு குறையாக இருந்தது.நமது திருப்திக்காகவாவது வாங்கிக்கொள்ள மறுக்கின்றாளே என்று விசனப்பட்டுக்கொள்வாள்.

பிக்னிக்காக சென்ற பண்ணை வீட்டிற்கு பிளான் செய்த படி இன்னும் இரண்டு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அங்கிருந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் கும்மாளமிட்டனர்.மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தனர்.பெரியவர்கள் ஒன்றுகூடி அமர்ந்து கொண்டுவந்த தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே அரட்டை அடித்தனர்.

இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தானுண்டு தன் வேலை உண்டென்று வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

இருட்டியதும் அவரவர் வாகனத்தில் எறி அமர்ந்தனர்.

“டாடி..இன்னிக்கு பிக்னிக் ஜாலி .அடுத்த வாரமும் வரலாம்பா”

அஷ்ரபின் கடைக்குட்டி விண்ணப்பம் போட்டான்.

“பிள்ளைகளுக்கு நல்லதொரு எண்டர்டெயிண்மெண்ட்.அடிக்கடி இப்படி கூட்டிட்டு வரணும்ங்க”ஹாஜராவும் மகனுக்கு பரிந்து பேசினாள்.

“ஆனால் நம்ம மைமூன் தான் பிக்னிக் வந்து எதிலும் கலந்துகொள்ளாமல் டல் ஆக இருந்தாள்”அஷ்ரப் அனுதாபத்துடன் மைமூனை ஏறிட்டான்.

”நான் எவ்வளவோ சொன்னேன்.உன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டி வா.அதுகளும் பிக்னிக் வரட்டும் என்று.பிடிவாதமாக மறுத்து விட்டாள்”

ஹாஜரா குறைபட்டுக்கொண்டபோழுது வழக்கம் போல் மைமூன் சிரிப்பினையே பதிலாக தந்தாள்.

கார் வீடு வந்து சேர்ந்தது.கொண்டுவந்த பாத்திரங்களை சுத்தப்படுத்தி நேர்த்தி செய்து வைத்து விட்டு”அக்கா..நான் கிளம்பறேன் வீட்டிற்கு”
ஹாஜராவின் உத்தரவுக்காக நின்றாள்.

“கொஞ்சம் இரு”சொல்லிய படி ஃபிரிட்ஜில் அலுமினிய ஃபாயிலில் வைத்து பாக் செய்யப்பட்ட உணவு ஐட்டங்களை ஒரு கவரில் போட்டு கொடுத்தாள்.

“என்னக்கா இது?”

“உன் பிள்ளைகளுக்காக காலையிலே டிபன் பாக்ஸில் வைக்கும் முன் தனியாக எடுத்து வைத்து விட்டேன்.எப்ப எது கொடுத்தாலும் மறுத்து விடுவே.பிக்னிக்காக ஸ்பெஷலா செய்த சாப்பாடு.பிள்ளைகளைத்தான் பிக்னிக் அழைத்து வர மறுத்துட்டே.இதையாவது சாப்பிட கொண்டு போய் கொடு”
பரிவாக நீட்டியவளிடம் வழக்கம் போல் மைமூன் மறுத்ததும் ஹாஜராவுக்கு கோபம் வந்தது.

“என்ன மைமூன்.ஏன் இப்படி இருக்கே.உன் மனசில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கே”

எரிச்சல் மேலிட கேட்டவளை கண்களில் நீர் மல்க பார்த்தாள் மைமூன்.

“அக்கா,என் பிள்ளைகளுக்கு புது உலகத்தை காட்ட வேண்டாம்க்கா.தினுசு தினுசா பண்டங்களை இப்ப போய் கொடுத்தால் தினம் தினம் அதனை எதிர் பார்க்கும்.இதனால் அதுக கவனம் சிதைந்து படிப்பில் நாட்டம் இல்லாமல் போகும்.நீங்க அத்தனை விரும்பியும் நான் பிக்னிக் கூட இந்த காரணத்திற்காகத்தான் அழைத்து வரலே.என் பிள்ளைகள் இப்படியே வளரட்டும்க்கா.கவனம் சிதையாமல் ,குடும்ப கஷ்டம் தெரிந்து நல்லா படித்து முன்னேறனும்.அதற்குத்தான் நான் பாடு படுறேன்.நீங்களும்அல்லாஹ்விடம் என் பிள்ளைகளுக்காக துஆ செய்யுங்க.எனக்கு அது போதும்”

ஹாஜரா விக்கித்து நின்றாள்.பின்னால் நின்று சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்த அஷ்ரபும்தான்.