April 27, 2012

வாசிப்பு என்னும் சுவாசிப்பு






அந்தக்காலத்தில் குழந்தை அழுதால் தாலாட்டு பாடி குழந்தையின் அழுகையை நிறுத்துவார்கள்.இப்பொழுதோ ரிமோட்டை கையில் கொடுத்து விட்டால் குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டாற் போல் நின்று விடுகின்றது. வாசிப்புதன்மை சமூகத்தில் அருகி வருவதற்கு இதுதான் ஆரம்பகாரணம்.

நான்கு மாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நாம் டிவி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் டிவி திரையை பார்க்க ஆரம்பிக்கின்றது.குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.

வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும்,ஞாபகசக்தியும்,கருத்தாழமும்,சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் ,பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.பிற்காலத்தில் அறிவு செறிந்த மாணாக்கனாக தெளிவான கருத்துடையவனாக அவனது வாழ்கை மேம்பட துணை நிற்கும்.

வாசிப்புத்திறமை பெற்ற மாணவனுடைய செயல்களும்,சிந்தனையும் ஞாபகசக்தியும் வாசிப்புத்திறன் இல்லாத மாணவனில் இருந்து வித்தியாசப்படும்.வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமின்றி,சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.

வாசிப்பின் மூலமே மனிதன் சிறப்படைகின்றான்.இந்த வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.நான்கு மாதக் குழந்தை டிவி திரையை நோக்க ஆரம்பித்தால் அதனை அணைத்து விட்டு கலர் கலர் படங்கள்,பூக்கள் போட்ட புத்தகத்தை விரித்து காட்டுங்கள்.குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக்கொடுங்கள்.குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது புத்தகத்தைகாட்டி கற்றுக்கொடுத்தலை ஆரம்பியுங்கள்.வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.

குழந்தைக்கு பிறந்த நாளா?வீட்டில் விஷேஷமா?பொம்மை,வீடியோ கேம்,விளையாட்டு சாதனங்கள் என்று வாங்கி பரிசளிப்பதில் காட்டும் ஆர்வம் புத்தகம் வாங்கி பரிசளிப்பதில் இல்லை என்பது கவலை தரும் உண்மை.

ஒரு வீட்டை பற்பல கற்பனைகோட்டைகள் அடுக்கடுக்கடுக்காய் மின்ன பார்த்து பார்த்து கட்டுகின்றோம்.துணிவகைகள் வைக்க அலமாரி,நகைகள் வைக்க,மளிகை வைக்க,பொம்மைகள் வைக்க,பாத்திரங்கள் வைக்க,டப்பாக்கள் அடுக்க என்று ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து செய்கின்றோம்.எத்தனை வீட்டில் புத்தகங்களை பாதுகாத்து வைக்க என்று புக் செல்ஃப் அமைக்கின்றோம்?இதுவும் கவலை தரக்கூடிய உண்மையே.

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகள்,பஸ்ஸில்ஸ்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களில் இளைய தலைமுறைகள் மிக மிக குறைவு என்பது கவலைக்குறிய விடயம்.குறுக்கெழுத்துப்போட்டியை பதினைந்து நிமிடங்களில் முழுமையாக நிரப்பி விடும் திறன் பள்ளிப்படிப்பை தாண்டாத தாய்க்கு அமையப்பெற்று இருந்தால், பல்கலைகழகம் படிக்கும் அவளது மகனுக்கு 4 கட்டங்களைக்கூட நிரப்ப இயலாத அளவிற்கு அவர்களது திறமை வேறு பக்கம் சிதறி இருக்கின்றது.

ஒரு புத்தகத்தை முழுதாக படிக்கும் நேரத்தில் கம்பியூட்டரில் டவுன் லோட் செய்து முழுதாக ஒரு படத்தினை பார்த்துவிடுவது இக்காலத்தின் கோலம்.இணையத்தில் தேவையற்ற தளங்களோ,சமூக தளங்களோ ஆற்றலை முழுமையாக தந்து விட இயலாது.ஒரு மாணவனை பரிபூரணமானவானாக,சிறப்பான மாணவனாக,அறிவான மாணவனாக இணையதளங்கள் உருவாகுவதை விட அம்மாணவனின் வாசிப்புதன்மை அவனது சிறப்பை வளப்படுத்துகின்றது.

குடும்பத்தில் விஷேஷமா?உடனே ரெஸ்டாரெண்டுக்கு குடும்பத்துடன் சென்று கற்றையாக பணத்தை கொடுத்து உண்டு மகிழ்கின்றோம்.ஒரு முறை சற்றே வித்தியாசமாக ஒரு புத்தகக்கடைக்கு அழைத்துச்செல்லுங்களேன்.வயிறு நிரம்புவதை விட மூளை நிரம்புவது நன்றல்லவா?

ஸ்விம்மிங்க் கிளப்பில் மெம்பராக,டென்னின்ஸ் கிளப்பில் மெம்பராக.கிரிகெட் கிளப்பில் மெம்பராக குழந்தைகளை சேர்த்து விடும் ஆர்வம் ஏன் நூலகத்தில் சேர்த்து விடுவதில் இல்லை?சிந்தியுங்கள்.சிறப்படைவீர்கள்.

குழந்தைகள் இன்னாள் விதைகள்.பின்னாள் விருட்சங்கள்.எதிர்காலத்தில் விருட்சங்கள் மரச்சட்டங்களாகவும்,அடுப்பெறிக்க உதவும் விறகுக்கட்டைகளாகவும் ஆகாமல் நல் விருட்சங்களாக,நிழல் தந்து உதவும் விருட்சங்களாக,காற்றினை சுத்தப்படுத்தும் ஊக்கிகளாகவும் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய விருட்சங்களாகவும் ஆற்றல் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து வாசிப்புத்திறனை நலவே வளர்த்து வாழ்க்கையெனும் இனிய பயணத்தை சீருடன்,சிறப்புடன்,பயனுள்ள வகையில் கழிப்போம்.


April 19, 2012

குர் ஆன் ரீடிங் பேனா





குர் ஆனை எடுத்து வேண்டிய சூராவின் தலைப்பில் பேனாவின் முனையை வைத்தால் போதும்.பேனாவினுள் இருக்கும் ஸ்பீக்கர் வழியே அந்த தலைப்புக்குரிய சூரா அழகிய கம்பீர குரலில் ஒலிக்கும்.

இந்த குர் ஆன் ரீடிங் பென் கிட்டில்
1.புனித குர் ஆன்
2.பேனா
3.USB கேபிள்
4.ஹெட் செட்
5.பயனர் கையேடு
6.Noorani Qaida (குழந்தைகள் கற்றுக்கொள்ளக்கூடியது).
மேற்கண்டவை அடக்கம்.

மட்டுமல்லாமல் வேண்டிய மொழியினை தெரிவு செய்த குர் ஆனை வாங்கி இருந்தால் குறிப்பிட்ட ஆயத்தில் பேனா முனையை வைத்தால் அதற்குறிய அர்த்தத்துடன் குர் ஆன் வசனங்கள் கம்பீரமாக தெளிவாக ஒலிக்கும்.

அது போக வெளியிடங்களுக்கு எடுத்துசெல்லத்தக்கவாறு குர் ஆனுக்கு பதிலாக சிறிய அட்டை ஒன்றும் வழங்குகின்றனர்.

குர் ஆனில் உள்ள எல்லா ஆஃப்ஷன்களும் இந்த அட்டையிலும் உண்டு.

குறிப்பிட்ட வசனத்திற்கு அர்த்தம் தேவைப்படின் அந்த வரிகளில் வைத்தால் வசனத்தின் அர்த்தம் ஒலிக்கும்.

படங்களும்,ஒலி ஒளிக்காட்சியும் உங்கள் பார்வைக்கு.

மேலதிக தகவல்களுக்கு

இங்கு, இங்கே, இங்கேயும் கிளிக் செய்யவும்.








Add Image

April 11, 2012

அடாவடி அலமு

”கீரைக்காரம்மா,நேற்று தந்த கீரை ஒரே கசப்பு.கீரை கூட்டுக்கு போட்ட எண்ணையும் தேங்காயும் தண்டம்.இத்தனை காலம் கீரை தர்ரீங்க பக்குவமா தரத்தெரியலே”பிலு பிலு வென்று கீரைக்கார அம்மாவை பிடித்துக்கொண்டாள் அலமு.

அலமுவுடன் மல்லுக்கு நின்றால் வேலைக்கு ஆகாது என்பது கீரைக்கார அம்மாவுக்கு தெரியும்.
வழக்கம் போல் ஒரு பெரிய கீரைக்கட்டை இலவச இணைப்பாக கொடுத்து விட்டு நடையைக்கட்டினாள் கீரைக்கார அம்மா.

கீரைக்காரி என்றில்லை பால்காரர்,காய்காரர்,தையல்காரர்,மளிகைக்கடை,பழைய துணிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் தருபவரில் இருந்து அனைவரிடமும் அடாவடி செய்தே சாதிப்பதில் மகா கில்லாடி அலமு.சாதித்து விட்டு அவளது முகத்தில் பொங்கும் சிரிப்பை பார்க்க வேண்டுமே.காண கண் கோடி வேண்டும்.

மணி ஆர்டர் கொண்டு வந்து தரும் தபால்காரர் பணத்தைக்கொடுத்துவிட்டு தலையை சொறிந்து கொண்டு நின்றால் ”என்ன என்ன என்ன..?”என்று கே பி சுந்தராம்பாள் ஆகி விடுவாள்.”

“இப்ப என்னத்துக்கு நிக்கறீங்க.இப்படி தலையை சொறிந்து கொண்டு..?இருக்கற ஒண்ணு ரெண்டு முடியும் போய்டப்போகுது.உங்கள் டியூட்டி.முடிச்சுட்டீங்க.அதுக்குத்தான் கவர்மெண்ட் சம்பளம் தருதில்லை..”இப்படி நீட்டி முழங்கியதுமே தபால்காரர் தடாலடியாக எஸ்கேப்தான்.

இவ்வளவு ஏன்?அலமு பாஸ்போர்டுக்கு அப்ளை பண்ணி,போலீஸில் இருந்து என்கொயரி வரும்பொழுது போலீஸ் காரருக்கு அன்பளிப்பு தராமல் “ஹி..ஹி..மாசக்கடைசியா வந்துட்டீங்க சார்.இல்லேன்னே இருநூறென்னா முன்னூறாகவே தந்திருப்பேன்”என்று கூறி அரை டம்ளர் நீர் மோரை பாசமாக கொடுத்து அனுப்பிவைத்தவளாயிற்றே!

போன மாதம் அப்படித்தான்.அலமுவின் உத்தம புத்திரன் புத்தகங்கள் வைக்க அலமாரி வேண்டும் என்று ஒற்றைக்காலில் பலிகிடக்க போனால் போகிறது என்று ஒரு கார்பெண்டரை அழைத்து நாலடி உயரத்தில் ஒரு புக் செல்ஃப் செய்ய பத்தாயிரத்தில் ஆரம்பித்த பேரம் ஆறாயிரத்து ஐநூற்றில் முடித்து அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

அப்பாவி கார்பெண்டரும் சொன்ன நாளில் மினி லாரியில் புத்தக அலமாரியை கொண்டு வந்து இறக்கினார்.

புத்தக அலமாரியை தடவி,நுணுக்கமாக பரீசீலித்த அலமு ”என்ன இது பழைய சாமான் விக்கற கடையில் இருந்து தூக்கி வந்த மாதிரி இருக்கு.நான் கேட்ட மெட்டீரியல் ,டிசைன் ஒன்றுமே இல்லை.சரியான பித்தலாட்டக்காரானா இருப்பே..”

வானத்துக்கும்,பூமிக்கும் அலமு குதித்த குதியில் சுனாமியே வந்து விடும் போல் இருந்தது.

கார்பெண்டர் சொன்ன எதுவும் அலமுவின் முன்னால் எடுபடவே இல்லை.

“நான் பேலன்ஸ் தரப்போறதில்லை.இந்த அலமாரி இப்படியே ஓரமா இருக்கட்டும், மெட்டீரியல எடுத்துட்டு வந்து எங்க வீட்டு காம்பவுண்டுக்குள் வைத்து என் கண் முன்னாடி செய்து தந்துட்டு,பேலன்ஸை வாங்கிக்கொண்டு,இந்த பாடாவதி அலமாரியையும் எடுத்துட்டு போ.நான் அப்பவே சொன்னேன்.வீட்டிலே வைத்து செய்.அதான் இத்தனாம் பெரிய காம்பவுண்ட் இருக்கேன்னு.இல்லை மேடம் நொள்ளை மேடம் என்று சல்ஜாப்பு சொல்லிட்டு அலமாரின்ன பேரிலே குப்பையை கொண்டு வந்து போட்டு இருக்கியே..கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?”

கார்பெண்டர் மானஸ்தன்.அடுத்த வாரமே அலமுவின் காம்பவுண்டுக்குள் மெட்டீரியல் கொண்டு வந்து இறக்கினான்.இரண்டு நாட்கள் வேலை பார்த்து அலமாரி வேலையை முடித்துக்கொடுத்து விட்டு பேலன்ஸ் பணத்திற்காக காத்திருந்தவனிடன்”ஓரமாக இருந்த அலமாரியைக்காட்டி எற்கனவே பண்ணிய இந்த குப்பை அலமாரியை என்ன பண்ணப்போறே”மெதுவாக கேட்டாள்.

“வேறென்னம்மா பண்ண..வீட்டுக்குத்தான் தூக்கிட்டு போகணும்”

“அதுக்கு வேற லாரி வாடகை கொடுக்கணும்.உன் பத்துக்கு பத்து வீட்டுக்குள்ளே இதைப்போய் எங்கே கொண்டு வைப்பே.போனாப்போகுது.செருப்பு வைக்கும் கப்போர்டா யூஸ் பண்ணிக்கறேன்.ஒரு விலை போட்டுக்கொடுத்துட்டு போ.”

ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் அலமாரி வெறும் ஆயிரத்து ஐநூறுக்கு முடிக்கப்பட்டது.

இதில் ஹைலைட் என்னவென்றால் அடுத்த நாளே பக்கத்து தெரு காமாட்சி வீட்டு கூடத்தை அலமாரி அலங்கரித்துக்கொண்டிருந்தது.

காமாட்சியிடம் சாதுர்யமாக பேசி ஆறாயிரத்து சொச்சத்துக்கு அவளது தலையில் கட்டி விட்ட அலமுவின் சாமர்த்தியத்தை சொல்லவும் வேண்டுமோ.?

அலமுவின் சின்னப்பொண்ணுக்கு அன்று பிறந்த நாள்.குடும்பத்துடன் பிரபலமான உணவகத்துக்கு பஃபே சென்றனர்.

முதலில் பறிமாறப்பட்ட ஸ்டார்டர்களை சர்வரின் காதில் விழுவது போல் குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

“ஏய்..மானத்தை வாங்காதேடீ.நீ சொல்லுறாப்போல் அவ்வளவு மோசமில்லை.வாயை மூடிட்டு சாப்பிடு”பற்களை கடித்து கடுகடுத்த கணவரை சட்டை செய்யாமல் “வாயை மூடிக்கொண்டு எப்படி சாப்பிடுறதாம்” என்று ஜோக் அடித்தவள் சாப்பாட்டை இஷ்டத்திற்கு ஒரு வெட்டு வெட்டி விட்டு சரவரிடம்”எங்கே உங்கள் மேனஜர்.கூப்பிடு அவரை..”அலமுவின் அதிகாரத்தைப்பார்த்து அரண்டு போய் மேனஜர் ஓடி வந்து விட்டார்.

“என்ன சார் சிட்டியிலேயே எவ்வளவு பேமசான ரெஸ்டாரெண்ட் இது.இப்படி மட்டமான புட் ஐட்டங்களை போட்டு கடுப்பேத்தறீங்களே.என் பொண்ணு பர்த்டேயை சந்தோஷமாக செலிபரேட் பண்ண உங்கள் ஹோட்டலில் கையை நனைத்து வயிற்றை நோக வைத்துதுதான் மிச்சம்..”நீட்டி முழங்கி பேச ஆரம்பித்ததுமே அலமுவின் ஆத்துக்காரர் எங்கேயோ எஸ்கேப் ஆகி விட,பிள்ளைகள் எல்லாம் தர்ம சங்கடத்துடன் அம்மாவை கோபப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மேடம் ,மேடம்..கஸ்டமர் நிறைய இருக்காங்க..சப்தம் போட்டு பேசாதீங்க..அசிங்கமா போய்டும்.இனி இப்படி குறை வராத அளவு கவனமாக இருக்கோம்.”

“இப்படி என் பொண்ணு பிறந்த நாள் அதுவுமா அப்செட் பண்ணிட்டீங்களே.அதான் வருத்தமாக உள்ளது.நாலு பேரிடம் உங்கள் ரெஸ்டாரெண்ட் பற்றி எப்படி பெருமையா சொல்லிக்கறது.”

“ஓ..இவளுக்குத்தானா பர்த்டே..ஹேப்பி பர்த்டேடா செல்லம்.மேடம் நீங்கள் சாப்பிட்டதுக்கு பணமே தர வேண்டாம் போய்ட்டு வாங்க”கும்பிடாத குறையாக அவர்களை அனுப்பி வைப்பதில் மும்முரமானார் உணவக மேலாளர்.

இப்படித்தான் அன்று தினசரி பேப்பரினுள் வைத்து வந்த பிட் நோட்டீஸில் புதிய கேக் ஷாப் திறப்புவிழா பற்றி விளம்பரம் இருந்தது.ஒரு பிளாக் பாரஸ்ட் கேக் பீஸ் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று.

அலமுவுக்கு கேக் ஷாப்புக்கு ஆஜர் ஆகாமல் இருக்க முடியாதே.பேப்பர் பிளேட்டில் வைத்துதந்த கேக்கை சப்புக்கொட்டிக்கொண்டு திவ்யமாக சாப்பிட்டு விட்டு,வீட்டிற்கு நான்கு பீஸ் பார்சல் வாங்கிக்கொண்டு கடைக்காரர் கொடுத்த பில்லை பார்த்து இவள் போட்ட கத்தலில் கேக் ஷாப்பில் எரியாமல் இருந்த ஓவன் பற்றிக்கொண்டு எரிந்து இருக்கும்.

“ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ஃபிரீ விளம்பரம் போட்டுட்டு இதென்ன பிராடுத்தனம்?”

“மேடம்,அது வாரத்துக்கு மட்டும்தான் மாசம் முழுக்க இல்லை”

“அதென்ன..காலக்கெடு எதுவும் போட்டு இருந்தீங்களா?இப்படி பிராடுத்தனம் பண்ணினால் எப்படி?”குரலை உயர்த்தியவளை அடக்கி பில்லில் பாதித்தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு கை எடுத்து கும்பிடாத குறையாக அனுப்பி வைத்தார் அந்த கேக் ஷாப்காரர்.

இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அலமேலு அன்று மயில் கழுத்துப்பச்சை காஞ்சிபுரப்பட்டு படபடக்க,தலைகொள்ளாமல் பிச்சுப்பூவும்,கழுத்தில் தாம்பு கயிராட்டம் ரூபி எமரால்ட் கற்கள் பதித்து மோப்பு வைத்த காப்பிக்கொட்டை செயினும்.தோளில் ஹேண்ட்பேக் சகிதமாக கிளம்பி விட்டாள்.

எங்கே என்று கேட்கின்றீர்களா?

அடாவடி பண்ணி சேமித்த பணம் உடனடியாக உண்டியலில் போடப்படும்.எந்த ஒரு அவசரதேவைக்கும் திறக்கப்படாத உண்டியல் ஒரு அட்சய திருதியை அன்று மங்களகரமாக திறக்கப்பட்டு உண்டியல் பணம் முழுக்க நகைகடைக்கு சென்று ஒரு தோடாக மாறி விடும்.

வருடந்தோறும் சாதாரணத்தோடு வாங்கிய நம்ம அலமு இந்த வருடம் வைரத்தோடு வாங்கப்போகின்றாளாக்கும்.அடுத்த வருட டார்கெட் நெக்லெஸாகக்கூட இருக்கலாம்.


April 6, 2012

அன்றும் இன்றும்.2


அரைகிலோவுக்கும் மேலுள்ள எடையில் கருப்பு நிற வஸ்துவை அந்நாளில் தொலைபேசியாக உபயோகித்து வந்தனர்,ஒவ்வொரு எண்ணிலும் ஆட்காட்டி விரலை நுழைத்து டயல் செய்து விரல் நுனி தேய்ந்து போகும்.இதில் ராங் காலகள் வேறு தொல்லை படுத்தும்.தொலைதூர ஊர்கள் நாடுகளுக்கு பேசுவதென்றால் கேட்கவே வேண்டாம்.டிரங்கால் புக் செய்து விட்டு போனுக்கடியில் மணிக்கணக்கில் பலி கிடந்தே ஆகவேண்டும்.இன்றோ கைக்குள் அடங்கும் செல்பேசிகள் நம் விரல் நுனியில் உலகையே சுற்றி வருகின்றதே.




1857 பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டு பிடித்து கொடுத்தது உலகம் முழுக்க மூலை முடுக்கு,பட்டி தொட்டி எல்லாம் புகழ் பாடியது கிராம போன் என்ற பெயரில்.குழல் வடிவ மெகா பெரிய ஸ்பீக்கர். இன்றளவும் செம்பருத்திப்பூவைப் பார்த்தால் ஸ்பீக்கர் பூ என்று அடை மொழியுடன் அழைக்கிறோம்.மொத்தத்தில் ரேடியோ பெட்டி வீட்டையே அடைத்துக்கொள்ளும் அள்வு பெரிதாக இருக்கும்.பாடல்கள் அடங்கிய கருப்பு நிற இசைத்தட்டுகள் வலம் வந்த காலம் போய் சிறிய அளவில் கேஸட் வடிவில் வந்தது.அதுவும் மறைந்து சிடிகள்.டி வி டிக்கள் என்பது போக இன்றோ விரலளவு உபகரணத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பதிவு செய்து கண்களை சிமிட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றன ஐ பாட்கள்.



சார் தந்தி என்றால் அரண்டு விடுவார் அந்நாளில்.எந்த ஒரு செய்தியும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால் தந்திதான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்து வந்தது.இன்றோ குறுந்தகவல்,மின்னஞ்சல்,பேக்ஸ் என்று அந்நாளில் நினைத்துப்பார்க்காத வசதிகள் எல்லாம் நம் முன்னே வலம் வருவது விஞ்ஞான முன்னேற்றம்.


இன்லாண்ட் லெட்டர் போஸ்ட் கார்ட்,கவர் என்று உலா வந்த காலம் அன்று.”சார் போஸ்ட்”என்ற குரலுக்காக காத்திருப்போர் அநேகர்.சிரத்தையாக கடிதம் எழுதி சிகப்புவர்ண பெட்டிக்குள் போட்டு விட்டு வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தது போக இன்றோ உலகம் சிறிதாகி உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது.மெயில் போட்ட அடுத்த நொடி பதில் கிடைத்து பரவசப்படுதும் இன்னாள் பொன்னாள்தானே!




பண்டைய காலத்தில் பல பல பொருட்களில் இருந்து மைதயாரித்து ஓலைகளில் எழுதி சேமித்து வைப்பர்.அரிசியை வாணலியில் கருப்பாக வறுத்து,நைஸாக பொடித்து வெது வெதுப்பான நீரில் கரைத்து பாட்டிலில் சேமித்து வைத்தால் வருடக்கணக்கில் வரும்.இதனை மூங்கிலில் ஆன எழுதுகலத்தில் தோய்த்து ஓலைகளில் எழுதி வந்தனர்.அதன் பிறகு பேனா பென்ஸில் என்று தோன்றி ஓலைச்சுவடிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.இன்றோ கணினியில் நோட் பேடை திறந்து நோகாமல் பக்கம் பக்கமாக எழுதி ஜமாய்த்து விடுகின்றோம்.தவறாக எழுதியதை அழிக்க இரேசர் தேவை இல்லை,கண் சிமிட்டும் நேரத்தில் அழித்து விடுகிறோம்.இது காலம் நமக்கு கொடுத்த பெரும் கொடை இல்லாமல் வேறென்ன?



அந்தக்காலத்தில் சீமை ஓடு நாட்டு ஓடு என்று வேயப்பட்ட கூரைகளுடன் கூடிய ஓட்டு வீடு இன்று காணாமலே போய் விட்டன.மிகக்குறைந்த பட்ஜெட்டில் குக்கிராமத்தில் கட்டப்படும் வீடு கூட காங்கிரட் கூரையுடன் அமையப்பெற்று இருக்கின்றன.



ஜல் ஜல் என்று சலங்கை ஒலியுடன் கூடிய செவலை மாடு.அலங்கரிக்கப்பட்ட பொட்டுவண்டிகளில் பூட்டி ஆடிக்கொண்டே அன்று சவாரி செய்தனர்.இலவம் பஞ்சால் செய்யப்பட்ட திண்டு அல்லது வைக்கோல் அடைத்து செய்யபட்ட திண்டு,வண்டியில் உபயோகப்படுத்தும் பர்மா தேக்கு பலகை அல்லது வேம்பலகை,வண்டியின் பக்கவாட்டில் தைக்கப்பட்டு இருக்கும் சீட்டி துணி அல்லது சாட்டின் துணி போன்றன வண்டியின் சொந்தக்காரர்களுக்கு மதிப்பை கூட்டும்.பொட்டுவண்டிகளில் செய்யப்படும் அலங்காரங்கள் வண்டிக்கு சொந்தக்காரர்களின் வசதியை பறை சாற்றும்.இன்றோ வித விதமான வாகனங்கள் சர்வ வசதிகளுடன் கூடிய வாகனங்கள் லட்சங்களையும் கோடிகளையும் கொட்டிக்கொடுத்து சாலைகளில் உலா வருகின்றன காரின் சொந்தக்காரர்களின் வசதிவாய்புகளை பறைசாற்றிக்கொண்டு.



அந்த நாட்களில் கூட்டுக்குடும்பம் அதிகம் இருந்த காலம்.வீடுகளில் இருக்கும் பாத்திர பண்டங்கள் இரும்பிலும்,செம்பிலும்,துத்தநாகத்திலும் மெகா சைஸில் இருக்கும்.இன்றுள்ள சிங்குகளில் வைத்து சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு அளவில் பெரிதாக இருக்கும்.பாத்திரங்கள் தேய்ப்பதென்றால் கிணற்றடிக்குத்தான் எடுத்து செல்ல வேண்டும்.இன்றோ கால ஓட்டத்திற்கேற்ப சிறிய அளவுகளில் காப்பர் பாட்டம்,நான் ஸ்டிக்,போரோசில் என்று அடுக்களையை அலங்கரிப்பது காலத்தின் கட்டாயம்.



காலை சாப்பாட்டுக்கு பிறகு முதற்காரியமாக இல்லத்தரசிகள் அமரும் இடம் அம்மியின் முன்புதான்.பகல் வேளைக்குத்தேவையான மசாலா ஐட்டங்களை மாங்கு மாங்கென்று அரைத்து உருண்டை பிடித்து வைப்பார்கள்.முழு விரலி மஞ்சலை நங் நங் என்று அம்மியில் இடித்து அரைக்கும் சப்தம் பக்கத்து வீட்டிற்கே கேட்கும்.இன்றோ பள பள பாக்கெட்டுகளில் மசாலா பொருட்கள் மார்கெட்டில் விறபனைக்கு கிடைப்பது போக மிச்சம் மீதி வேலையை மிக்ஸி செய்து விடுகின்றதே!


சிலு சிலு வென்ற வேப்பமர அரசமர காற்று,சுள் என அடிக்கும் வெயிலை தடை போடும் மரநிழல்,தனது தளவாடங்களை சுற்றிலும் பரப்பி வைத்துகொண்டு மரநிழலில் அமர்ந்து முடியை சீர்திருத்தும் நாவிதர்.வெள்ளைத்துணியை போர்த்திக்கொண்டு கண்களை சுகமாக மூடிக்கொண்டு நாவிதரிடம் தலையை கொடுத்துக்கொண்டு அரசியல் முதல் சினிமா வரை நாவிதர் பேசும் பேச்சினை கேட்டு உம் கொட்டிக்கொண்டு முடிவில் சில்லரையை பொறுக்கி கூலியாக கொடுத்து முடியை திருத்தியது போய் இன்றோ குளிரூட்டப்பட்ட சலூனில் குஷன் சீட்டில் ஜம் என்று சாய்ந்து கொண்டு எதிரே இருக்கும் எல் ஈ டி ஸ்க்ரீனில் ”வாடி வாடி வாடி க்யூட் பெண்டாட்டி”என்று குத்தாட்டம் போடும் சிம்புவின் நடனத்தை ரசித்துக்கொண்டே,”சார்,பேஷியல் பண்ணட்டுமா?முடிக்கு மசாஜ் பண்ணட்டுமா”என்று கேட்கும் சலூன் கடைக்காரரிடம் தலையை ஆட்டி விட்டு இறுதியில் பர்ஸை திறந்து கற்றையாக பணத்தை எடுத்துக்கொடுத்து விட்டு எதிரே இருக்கும் ஜம்போ கண்ணாடியில் முகத்தைப்பார்த்து தலையை கோதிவிட்டுக்கொண்டு வரும் காலம் வந்து பலகாலமாகி விட்டன்.

பெரிய நீள் சதுரமான மர பாக்ஸினுள் மேற்பகுதியில் ரோமன் லெட்டரில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட கடிகார எண்கள்,கனமான முட்கள்.கீழ் பகுதியில் பெண்டுலம் என்று சுவற்றினை அடைத்துக்கொண்டு ஹாலில் கம்பீரமாக வீற்றிருக்கும் கடிகாரம்.ஒவ்வொரு மணி நேரத்திற்கும் முதலில் இனிமையான மியூஸிக் ஒலித்து டொய்ங் டொய்ங் என்று பெண்டுலம் அடிக்கும் நாதம் காதில் இனிமையை நிறைக்கும்.அடிக்கும் பொழுது கடிகாரத்தினை ஏறிட்டு பார்க்கும் கண்கள் அடித்து முடிக்கும் வரை பார்வை நகராமல் இருக்க வைக்கும் ரீங்காரம்.இன்றோ காலஓட்டவெள்ளத்தில் காணாமல் போய் மினியேச்சரில் கடிகாரங்கள் பவனி வருகின்றது.


டிஸ்கி:உங்கள் எண்ணத்தில் உதயமான பொருட்களை பின்னூட்டுங்கள்.அன்றும் இன்றும் மூன்றாம் பாகம் போட்டு விடலாம்.உஷ்..அப்பாடா..அடுத்த பதிவுக்கு தேற்றியாச்சு:)