November 27, 2009

எனக்கு கிடைத்த விருதுகள்

தங்கை சுஸ்ரீ கொடுத்த விருது.இவ்விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு நான் வழங்குகின்றேன்.

சோனகன்
ஹைஷ்
இலா
கருவாச்சி
மேனகா
ஜலீலா
கீதா ஆச்சல்
ஹுசைனம்மா
நாஸியா
மலிக்கா
தமீமுல் அன்ஷாரி
எம்.எம்.அப்துல்லாஹ்
சரவணக்குமார்
செல்வனூரான்


தங்கை மேனகா கொடுத்த விருது







தங்கை ஜலீலா கொடுத்த விருது.


November 26, 2009

தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.


குர்பானியின் சட்டங்கள் இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)

நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

November 21, 2009

பெருநாள் - நினைவலைகள்...



பெருநாள் என்றதும் என் சிறுவயது பெருநாள் ஞாபகம் வருகின்றது.பெருநாளைக்கு முதல் நாளே வீட்டில் இருக்கும் வேலைஆட்கள் போதாது என்று தோட்டங்களில் வேலை செய்யும் தொட்டக்கார அம்மாக்கள் ஆஜாராகி விடுவார்கள்.

காதில் நீளமாக தொங்கும் பம்படம் அழகாக நடனமாட அவர்கள் அம்மியில் மசாலா அரைக்கும் அழகே தனிதான்.நிமிடத்திற்கு எத்தனை முறை அநத பம்படம் 'சொய்ங்க்..சொய்ங்க்' என்று ஆடும் என்று நான் அருகில் இருந்து கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு விரல் விட்டு எண்ணுவதை இப்போது நினைத்துக்கொண்டாலும் சிரிப்பு வருகின்றது.

வீடு முழுக்க மசாலா மணம்.சர்..சர்.. என்று தேங்காய் துருவும் ஓசை,பாத்திரம் உருளும் ஓசை,சூடான சட்டியில் எண்ணெய் தெரிக்கும் ஓசை அத்தனை ஓசைகளும் வெளியே இருந்து வரும் பட்டாசு ஓசையை மீறி வரும். இதெல்லாம் ஓய இரவு பணிரெண்டு மணிக்கு மேலாகி விடும்.மறுநாள் விடிகாலை 4 மணிக்கே வீடு களை கட்டிவிடும்

அந்த இருட்டான அதிகாலையிலே வெளியே"பூ..பூ..மல்லிப்பூ..கதம்பப்பூ..கனகாம்பரப்பூ"பூக்காரர் கூவும் சப்தம் கேட்டு விழிப்பு வரும்.எழுந்ததுமே பூ வாங்குவதுதான் முதற்கண் வேலை.

அடுக்களையில் வீட்டுக்கு வரும் ஆட்களுக்கு கொடுப்பதற்காக பரோட்டாவும்,இடியாப்பமும் அம்பாரமாக குவிந்து இருக்கும்.பரோட்டவை எடுத்து ஒரு விள்ளல் சாப்பிட்டால்..அந்த சுவையே அலாதிதான்.

ஹஜ்ஜுபெருநாள் என்றால் இறைச்சியை சுடுவார்கள்.அதுவும் அந்த அதிகாலை நேரத்திலேயே நடக்கும்.குர்பான் கொடுக்க விருக்கு ஆடுகள் "மே..மே.." என்ற அபயக்குரம் எழுப்புவதை பார்க்கும் பொழுது பாவமாக இருக்கும்."சே..இனி மட்டன் பக்கமே தலை வைத்துபடுக்கக்கூடாது "என்ற வைராக்கியம் அடுத்த ஒரு மணி நேரத்தில் டைனிங்க் டேபிளில் பரப்பி வைக்கப்படும் பதார்த்தங்களை பார்த்தும் பறந்து விடும்.

தூரத்தில்"அல்லாஹுஅக்பர்..அல்லாஹு அக்பர்"என்ற தக்பீர் ஒலி செவிகளில் வந்து மோதும் போது கேட்பவர்களின் வாயும் அதனை உச்சரிக்கும்.

குளித்து,பட்டுப்பாவாடை தரித்து,"நகைங்க..பத்திரம்..கவனமாஇருக்கணும்"என்று சொல்லுவதை வலதுகாதில் வாங்கி இடது காது வழியே விட்டு ,பட்டுப்பாவாடை மிணுங்க,நகைகள் ஜொலிக்க காலி பர்சுடன் வீட்டில் உள்ள வ்ர்கள் முன்னாலே போய் நின்றாலே கனிசமான பைசா (அதுதான் பெருநாள் பண்ம்)தேத்திவிடுவோம்.எதிர்பார்த்த பைசா கிடைக்கவில்லையா?அடாவடி செய்தாவது அந்த தொகையை பெற்றுவிடுவோம்.

பர்சுடன் சேர்ந்து மனதும் நிறைந்தவுடன் இனி வயிறு அலாரம் அடிக்கும்.அப்புறம் என்ன?நேரே டைனிங் அறைதான்.ஜால்ரா ஆப்பம்,வெள்ளடை,பரோட்டா,இடியாப்பபிரியாணி,பொரித்த இறைச்சி,மட்டன் குருமா,சிக்கன் பிரை,வட்டலாப்பம்,பொட்டீஸ்,மஞ்சப்பம்,பாயாசம்..என்று வெளுத்துக்கட்ட வேண்டியதுதான்.

அப்புறம் நேரே தொழுகைப்பள்ளி..இரண்டு ரக அத் ஈத் தொழுகை முடித்த பின் முஅத்தீன் முழங்கும் தக்பீரை சப்தமாக,கோரசாக அப்படியே வழி மொழிவோம் பாருங்கள்.இதில் யார் குரல் உச்சஸ்தாயியில் இருக்கும் என்ற பட்டிமன்றமே ஸ்நேகிதிகளுக்குள் நடக்கும்.


பள்ளியில் தரும் சாக்லேட்டை மென்ற படி பர்ஸில் இருக்கு தொகையில் இருந்து ஒரு பத்துரூபாய் கூட எடுத்து தர மனதில்லாமல் 'அதெல்லாம் பெரியவங்க பார்த்துப்பாங்க " என்ற எண்ணத்தில் 'பள்ளிக்கு வெளியில் கழற்றி வைத்திருக்கும் புது செருப்பு பத்திரமாக இருக்கா"என்ற பதைபதைப்போடு வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு ஈத்மைதானத்திற்கு ஒடுவோம் பாருங்கள்.குச்சிஐஸ்,கமர்கட்,அச்சார்,சுண்டல்,தம்பிமார்களுக்கு கிளுகிளுப்பை,பொம்மைக்கிளி,பலூன் ,ஊதி,விசில்,பைனாக்குலர்,பாம்புவெடி என்றுகை நிறைய வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பொழுது உறவினர் வீடுகளில் இருந்து பார்சல்,பார்சலாக வந்திருக்கும் குர்பான் கறி கவுச்சி வாசனை முகத்தை சுளிக்க வைக்கும் .

மதியம் செய்து வைத்திருக்கும் சாப்பாடை சாப்பிட பிடிக்காமல் ஒருகண் தூக்கம் போட்டுவிட்டு ஸ்நேகிதப்பட்டாளம் சூழ இன்னொரு பெரிய ஈத் மைதானத்திற்கு சென்று விடுவோம்.மெலிந்து போய் இருக்கும் பர்சை வீட்டில் பார்த்து விசனப்பட்டுக்கொண்டே அம்மாவிடம் கெஞ்சி,கூத்தாடி இன்னொரு தொகையை பெறுவது அவரவ்ர் சாமர்த்தியம்.

ரங்க ராட்டிணம்,குடை ராட்டிணம்,மேஜிக் ஷோ,மொட்டார் சைக்கிள்ஷோ,கடல்கண்ணி ,பொம்மலாட்டம்,பெரிய அப்பளம்,மிளகாய்பஜ்ஜி,மசால் வடை ரோஸ்மில்க் இப்படி பர்சை காலி செய்து விட்டு பொடி நடையாக நடந்தால் நேரே ஐயர் ஹோட்டல்தான்.

பர்சைதான் காலி பண்ணியாச்சே!அப்புறம் ஹோட்டலில் சாப்பிட எங்கே போவாய் என்று கேட்காதீர்கள்.ஸ்நேகிதிகளுக்குள் அட்ஜஸ்ட்மெண்ட்தான்.சொரசொரப்பான சிமிண்ட் தரை,காலருகே ஓடும் கரப்பான்,எச்சில்தெரிக்க பேசும் சர்வர்,"ரெண்டு..பூரீஈஈஈ மசாலேய்ய்ய்ய்.."என்று கூவும் கூக்குரம்,காலையில் வைத்த ஊசிப்போன சாம்பார்,புளித்துப்போன சட்னி,சூடாக இருந்தாலும் புளியங்காயை கடித்தாற்போல் இருக்கும் தோசை..இத்யாதி..இத்யாதி..இதெல்லாம் பொருட்டே இல்லை.தோழிகளுடன் ஜாலியாக ஹோட்டலில் சாப்பிடுகிறோம் ..அவ்வளவுதான்.


அநியாயத்திற்கு வயிற்றைக்கெடுத்துக்கொண்டு ,வீடு வந்து சேர்ந்தால் அம்மாவிடம் கொஞ்சம் வாங்கிக்கட்டிகொள்வோம் பாருங்கள்.அதிலும் தனி சுகம்தான்.

"மா..ஈத் முபாரக்.வீட்டில் பிரேக் பாஸ்ட் வேண்டாம்.ரெஸ்டாரெண்ட் போவோமா,ஈவினிங் சிட்டி செண்டர் போய் லேண்ட்மார்கை அலசிவிட்டு கே எஃப் சியில் டின்னரை முடிக்கலாமா"இப்படிக்கேட்கும் பிள்ளைகளை பார்க்கும் பொழுது எனக்கு பாவமாக இருக்கும்,இதெல்லாம் இப்ப ரொம்ப மிஸ் பண்ணுவதை நினைக்கும் பொழுது...


பி.கு: பதிவுலகில் உள்ள உடன் பிறப்புகள் அநேகர் டிஸ்கி என்று போட்டுக்கொள்கின்றாகள்.என்னையும் அந்த மேனியா தொற்றிக்கொண்டுவிட்டது.நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். பதிவில் வராத பிரியாணி படத்தில் வந்துள்ளதே என்கின்றீர்களா?பிரியாணி இல்லாமல் பெருநாள் எப்படி?அதுதான் பிரமாண்டமான பிரியாணிசஹன் படத்தைபோட்டு கண்களுக்கு விருந்தளித்திருக்கின்றேன்.சஹனில் தோரயமாக எத்தனை கிலோ இறைச்சி போட்டு இருப்பார்கள் என்று பார்க்க விரும்பினால் படத்தை சொடுக்குங்கள்





November 17, 2009

கதா பாத்திரங்கள்-2


சாமர்த்திய சங்கீதா
***************************

சென்ற முறை நான் ஸ்டாப் ஆக பேசும் பார்வதி மாமியை சந்தித்தீர்கள்.இம்முறை அதி சாமர்த்தியசாலி சங்கீதாவைப்பார்க்கலாமா?
கெச்சலான உருவம். மைதா மாவை பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாதீரி பளீர் என்ற நிறம்,அப்படியே ஆப்பிளை சீராக நறுக்கி ஒட்டிய மாதிரி இருக்கும் கூர் மூக்கிலும்,சதா சுழன்று கொண்டே இருக்கும் கண்களிலும் சாமர்த்தியம் அப்படியே சாணி அடித்தார்ப்போல் ஓட்டிக்கொண்டு இருக்கும் பாருங்கள் அதுதான் நம்ம சங்கீதா.

காலை நேரம்,பரபரப்பாக இருப்பார்களே என்று லஜ்ஜை சிறிதும் இன்றி திறந்த வீட்டினுள் எதுவோ நுழைந்த மாதிரி எதிர் வீடு,பக்கத்து வீடு,அண்டை வீடு,இந்தண்டை வீடு என்று சலிப்பில்லாமல் புகுந்து வருவதில் அவளுக்கு நிகர் யாருமில்லை.அப்படித்தான் ஒரு காலைப்பொழுதில் எதிர்வீட்டு இந்திரா இவளிடம் மாட்டிக்கொண்டாள்.

"இந்தூஊஊஊ.."பேச்சில் தேனும்,பாலும் குழைந்து பிராவகம் எடுக்கும்.
"இந்து, டிபன் ஆச்சா?நீதான் டிபனுக்கு முன்னேயே சாப்பாட்டை ரெடி பண்ணிடுவியே"
"வாங்கக்கா..என்ன இது காலங்காத்தாலே"
"என்னப்பா இதுவா காலங்காத்தாலே?உச்சி வெயில் எட்டிப்பார்க்கப்போறது.என்ன டிபன் பண்ணே?நான் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே கமகமன்னு வாசனை பிச்சிக்கொண்டு போனதே?"
"ஆமாக்கா,வீட்டுக்காரரோட கொலீக் சம்சாரம் இன்னிக்கு ஊரில் இல்லை என்றார்.அவருக்கும் சேர்த்து சாப்பாடு கட்டிக்கொடு என்றார்.அதுதான் கொஞ்சம் ஸ்பெஷல்.."
"அதானே பார்த்தேன்..இந்துவா கொக்காவா?அப்படியே அசத்திப்போட்டுடுவியே?சும்மா சொல்லாக்கூடாது உன் கைமணத்துக்கே தனி டேஸ்ட் தான்.."

வாய்பேசிக்கொண்டிருந்தாலும் கால்கள் வண்டிமாடு போல் அப்படியே கிச்சனில் போய் சேர்ந்துவிடும்.
அப்புறம் என்ன நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு பிரிஞ்சி சாதத்தையும் ,காலிபிளவ்ர் மசாலாவையும் ஒரு விளாசு விளாசி விடுவாள்,
"இந்து ,சும்மா சொல்லாக்கூடாதுடி,இந்த மணமும் ,பக்குவமும் எனக்கு சுட்டுப்போட்டாலும் வரவே வராது.வரட்டு வரட்டு என்று ரெண்டு தோசை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு,இப்ப உன் சாப்பாடையும் மிஸ் பண்ண முடியாமல் சாப்பிட்டுட்டேன்.நீதான் எப்பவும் பிரிஜ்ஜில் பெப்ஸி வச்சிருப்பியே.அரை டம்ளர் கொடு..யப்பா..ஹேவ்.."

சவாதானமாக சோஃபாவில் அமர்ந்து உத்தரவு போடாத குறையாக கேட்டு அரை டம்ளர் பெப்சி வாங்கி குடித்துவிடுவாள்.
"இந்து,சாப்பிட்டதில் எதுக்கு உன் வீட்டுக்கு வந்தேன் என்று மறந்து போய்விடப்போறேன்.கொஞ்சம் தயிர் இருந்தால் கொடென்.நேற்று என் ஓர்ப்படி குடும்பத்தோடு வந்துட்டாள்.காபிக்கே பால் தீர்ந்து போச்சு"
"எங்கள் வீட்டிலும் இன்னிக்கு பால் சார்ட்டேஜ்தான்க்கா.கொஞ்சமா தர்ரேன்"
"போதும்,போதும்..இருந்தாலும் உன் தாரள மனசு யாருக்கும் வராதுடி.அதான் பகவான் உன்னை இந்தளவுக்கு வைத்துஇருக்கான்"


சங்கீதாவின் ஐஸில் மெழுகாய்,ஐஸாய் உருகிவிடுவாள் இந்திரா.
"உன் புருஷனுக்கும் நல்ல மனசுடி,தேடி,தேடி உதவி பண்ணுவதில் அவருக்குநிகர் யாருமில்லை"
இந்து நெளிவதை கண்டுகொள்ளாமல் பேச்சு ஜெட் வேகத்தில் போய்க்கொண்டே இருக்கும்.
"உன் புருஷனுக்கு ஆஃபீஸிலே நல்ல உத்யோகம்.ஆளு,அம்புன்ன்னு ஏகப்பட்டவங்களோட உதவி இருக்குமே"
"ஆங்..சொல்ல மறந்துட்டேன்.உன் வீட்டு டெலிபோன் பில்லும்,ஈபி பில்லும் இன்னும் கட்டலியே?
"இல்லேக்கா"
"கட்டும் பொழுது என் கிட்டேயும் வாங்கிட்டு போயிடு.செக் போட்டு வைத்து இருக்கேன்.நீங்களா கியூவில் நிக்காப்போகிறீர்கள்?ஆஃபீஸ் பியூன் தானே போவான்?"
"ஆ..மா.."
இந்துவின் இறங்கும் சுதியை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவாள் நொடிப்பொழுதில்.
"இப்படி யெல்லாம் மனசார உதவி செய்வதால்த்தான் உன் வீட்டுக்காரருக்கு புரமோஷனுக்குமேலே புரமோஷன் வர்ரது.பகவானுக்கு யார்யருக்கு எப்படிஎப்படி கொடுக்கணும்ன்னு தெரியாதா என்ன்?
"அதுகென்னக்கா?உங்களுக்காகவா தனியா பில் கட்டாப்போறோம்.எங்கள் வீட்டு பில்லோட சேர்த்துதானே கட்டப்போறோம்.செக்கை கொடுங்க.கட்டசொல்லிடுறேன்."
"சரி நான் கிளம்பறேன்.நான் என் அக்காவுடம் மிண்ட்டுக்கு போறேன்.உனக்கு ஏதாவது வேணுமா?"
"ஒன்னும் வேண்டாங்க்கா"
"பூனம் சேலை நம்ம ஏரியாவுக்குள்ளே ஐநூறுக்கு குறைச்சலாக கிடைக்காது.அங்கே முன்னூறுக்கே கிடைக்கும்.அதிலும் உன் உடம்புவாகுக்கு அந்த புடவைங்க ரொம்ப பாந்தமாக இருக்கும்.எதுக்கு யோசிக்கறே.பணம் வேணும்ன்னா சாயங்காலம் வந்து வாங்கிக்கறேன்.நாலுபுடவை எடுத்துட்டுவரவா?"
கூடவே இதயும் சேர்த்து சொல்லுவாள்"பத்தாம் நம்பர் பாக்கியத்தம்மா மருமகள் ராணி 10 பொடவை எடுக்கசொல்லி பணம் தந்தாள்."ப்ர்சை திறந்து பணத்தை விரித்து காட்டியதுமே நம்ம இந்திரா அம்பேல்தான்.

உடனே இந்துவிடம் இருந்து குறைந்தது ஐந்துபுடைவைகளுக்காவது ஆர்டர் வந்துவிடும்.
"வர்ரேண்டி இந்து,மொத்தம் 25,30புடவைக்கு ஆர்டர் வந்திருக்கு.வந்ததுமே உன் வீட்டுக்கு முதலே வருவேன்.நீ எடுத்ததுக்கு அப்புறமாத்தான் மத்தவங்க>நீ என்ன எல்லாரும் மாதிரியா?ஸ்பெஷலாச்சே"
இதே டயலாக்கை எல்லா வீட்டிலும் சங்கீதா ஒப்பிப்பது நம்ம இந்துவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
"வர்ரேன்,கதவை இழுத்து சார்திக்கோ.காலம் கெட்டு போயிருக்கு.பேப்பரில் எவ்வளவோ படிக்கறோமே?சாயங்காலம் சூடா டிகிரிகாபி போட்டு வை வர்ரேன்."

அடுத்த நிமிடம் பக்கத்துவீட்டு பாமா வீட்டூக்குள் விடுவிடு என் நுழைந்து விடுவாள் சங்கீதா.
"பாமாஆஆஆவ்"




ஒரு மனைவி!!பல கணவர்கள்??


ஹளரத் அபூ ஹனீஃஃபா அவர்களின் சபைக்குஅந்தக்காலத்திலேயே (புரட்சிகரமான )சில பெண்கள் கூட்டமாக வந்தனர்.அப்பெண்களின் மனதினுள் பல நாட்களாக குடைந்து கொண்டிருதிருந்த வினா இப்படி வெளிபட்டது.

"ஆண்கள் மட்டும் பல பெண்கள் மணந்து கொண்டு வாழ்கின்றார்கள்.ஏன் பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கவில்லை?"

அறிவுசெம்மல் ஹளரத் அபூ ஹனீஃபா அவர்கள் அப்பெண்களை நோக்கி தணிவான குரலில்

"பெண்களே!நீங்கள் அனைவரும் நாளைக்காலை ஆளுக்கு ஒரு சொம்பு பாலை இதே சபைக்கு எடுத்து வாருங்கள்."

என உத்தரவு இட்டார்.அப்பெண்களும் 'என்ன இது?சந்தேகம் கேட்டால் சொம்பில் பால் எடுத்து வரச்சொல்லுகின்றார் ' என்று திகைத்தவ்ர்களாக வீடு திரும்பினர்.

மறு நாள் அந்த பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து சொம்பில் பாலுடன் அபூ ஹனீஃபா அவர்களின் சபைக்கு சென்றனர்.

அங்கு ஒரு பெரிய அண்டா சபைக்கு நடுவில் இருந்தது.பெண்களைப்பார்த்த ஹளரத் அபூ ஹனீஃபா அவர்கள்,

"பெண்களே!நீங்கள் கொண்டுவந்த பாலை இந்த அண்டாவில் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக ஊற்றுங்கள்" என்று உத்தரவு இட்டார்.

பெண்களும் அவ்விதமே செய்தனர்.

"பெண்களே!இப்பொழுது,உங்கள் சந்தேகங்களுக்கு பதில் தருகின்றேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித பாலை அதாவது ஒட்டகப்பால்,ஆட்டின் பால்,பசுமாட்டின்பால்,எருமைப்பால் இப்படி ஒவ்வொரு விதமாக எடுத்து வந்திருப்பீர்கள்.அப்படித்தானே?"

என்ற வினாவிற்கு அனைத்துப்பெண்களும் "ஆம்" என்று தலை அசைத்தனர்.
ஹனீஃபா அவர்கள் மிக மென்மையாக "இப்பொழுது நீங்கள் கொண்டு வந்து அண்டாவில் ஊற்றிய அவரவர்களுக்கு உரிய விலங்குகளின் பாலை அவரவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் "என்று உத்தரவு இட்டார்.

பெண்கள் திகைத்துப்போனார்கள்.

"பெண்களே!ஒரு பெண்ணுக்கு பல கணவர்களை மணம் முடித்தால் இந்த நிலைமைதான்.புரிகின்றதா?சென்று வாருங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

தாம் எழுப்பிய வினாவுக்காக வெட்கப்பட்டு இல்லம் திரும்பினர் அந்தப்பெண்கள்.

November 9, 2009

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?




1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில்
உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.நீங்கள்எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து
சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோமுக்கியமானவிஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் எனநினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் ஹலோவுக்குபதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்றுசொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்சநேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோதிறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்கமுடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில்
பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார்
பேசுவார்கள்?

இது எனக்கு மெயிலில் வந்தது.எனக்கு உபயோகமில்லை.உங்களுக்கு வேண்டுமானால் தாராளமாக உபயோகித்துக்கொள்ளுங்கள்.வர்க் அவுட் ஆகிவிட்டால் மறக்காமல் பின்னூட்டம் போட்டு விடுங்கள்.நான் எஸ்கேப்.

முக்கிய அறிவிப்பு:
----------------------
இந்த பதிவுக்கும்,படத்தில் இருப்பவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை

November 7, 2009

பிடித்த பத்து ..பிடிக்காத பத்து..


இத்தொடரை எழுத அழைத்த தங்கை மேனகாவிற்கு நன்றி.

நிறம்
*****
பிடித்த நிறம் - இளநீலம்
பிடிக்காத நிறம் - கருப்பு

அரசியல்வாதி
***************
பிடித்தவர் - ஜெயலலிதா(எதிர் நீச்சல் துணிச்சலுக்காக)
பிடிக்காதவர் - வைகோ(தடாலடியாக அலுப்பில்லாமல் கட்சி மாறுகின்றாரே)

உணவு
********
பிடித்த உணவு-பிரியாணி
பிடிக்காத உணவு - மீன்

எழுத்தாளர்
***********
பிடித்த எழுத்தாளர் - தேவிபாலா
பிடிக்காத எழுத்தாளர் - ரமணி சந்திரன்(ஒரே மாதிரி எழுத்துநடை இருப்பதால்)

பாடகர்
********
பிடித்தபாடகர் - கே ஜே யேசுதாஸ்(மனைவி அமைவதெல்லாம்)
பிடிக்காத பாடகர் - சொல்லத்தெரியவில்லை

பாடல்
*******
பிடித்த பாடல் - காதோடுதான் நான் பேசுவேன்
பிடிக்காத பாடல் - சமீபத்தில் வருகின்ற டப்பாங்குத்து பாடல்கள்(உ - ம்)எக்ஸ்க்யூஸ்மீ மிஸ்டர் கந்த சாமி)

பூ
**
பிடித்தது - மல்லிகை
பிடிக்காதது - கனகாம்பரம்

சுற்றுலாதலம்
***************
பிடித்தது - பெங்களூர்
பிடிக்காதது - குற்றாலம்

நட்பில்
********
பிடித்தது - எதிர்பார்ப்பில்லாத நட்பு
பிடிக்காதது - எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு

பானம்
*******
பிடித்த பானம் - குளிரூட்டப்பட்ட ஜூஸ்வகைகள்

பிடிக்காதது - டீ


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்


நான் அழைக்கும் பதிவர்கள்.

தம்பி - சோனகன்
தங்கை - ஜலீலா









November 5, 2009

பாத்திரங்கள்..கதா பாத்திரங்கள் - 1

நான் ஸ்டாப் பார்வதிமாமி
****************************
மனிதர்கள் பல விதம்.அதில் இந்த பார்வதி மாமி ஒரு விதம்.அவ்வப்பொழுது என் கற்பனையில் உதித்த சுவாரஸ்யமான பாத்திரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.பாத்திரங்கள் உங்கள் மனதோடு பாத்திரமாகி விட்டார்களா என்று உங்கள் பின்னூட்டம் வழியே கேட்க ஆவல்.
*******************************************************************************************************************************************

பார்வதியா?

அடடா!சொல்லு கலா எப்படி இருக்கே?என்ன ரொம்ப நாள் கழிச்சி போன் பண்றாப்போலே இருக்கு?

எப்படி இருக்கே பாரு?

இருக்கேண்டி.நன்னா இருக்கேன்.எனக்கென்ன குறைச்சல் ?ஆனாக்க..அப்பப்ப இந்த ஒற்றைத்தலைவலிவந்துதான் பாடாய் படுத்துது.ஈகா தியேட்டர் சந்து இருக்கோல்லியா?நேரா [போய் லெஃப்ட் திரும்பினால் பர்ஸ்ட் கட்டிங்க்லேயே ஈ எண்டி டாகடர் இருக்கார்.

எனக்கென்னடி தெரியும்?சென்னை சந்து பொந்தைப்பற்றி?

அட முழுசாக்கேளு முன்னே பின்னே உதவுமோல்லியோ?நல்ல வயசான டாக்டர்தான்.கைராசிக்காரர்.அங்கு போனாக்கா ஒற்றைத்தலை வலி என்ன?ரெட்டை,மூன்று எல்லாமே போயே போய் விடும்.அப்புறம் இந்த பிரஷர் வந்தோல்லீயோ நம்மை இந்த பாடாக படுத்தறது.எங்கம்மா எதைத்தந்தாளோ இந்த ரத்தக்கொதிப்பைமட்டும் மறக்காமல் தந்துட்டாள்..

ஐயோ அப்புறம்?

நாலு படி எறினாக்க அப்படியே மூச்சு வாங்கறது.ஒரு நாளைக்கு ரெண்டு வேளை பிரஷர் மாத்திரை போட்டுண்டு வர்ரேன்.ஒரு வேளை மறந்தாக்கூட அப்படியே பொலபொலான்னு வர்ரதுடி.ஐயோ நாப்பது வயசைத்தாண்டினாலே மனுஷாளுக்கு உபத்ரவம் தாங்க முடியலே.அதுக்கு வேளச்சேரியிலே ஒரு கார்டியாலஜிஸ்ட் இருக்காரு..அந்தாளு என்னன்னா டயட் டயட்ன்னு மனுஷியை பட்டினியா போட்டு கொன்னுடுவார் போலிருந்தது.இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு விட்டுட்டேன்.நம்ம தங்கம் இருக்கால்லிய்யோ?ஞாபக ம் இருக்கா?காமர்ஸ் டிபார்ட்மெண்ட்.குண்டா செவப்பா சுருட்டை முடியோட இருப்பாளே?அவதான்.அவளோட நாத்தானாரோட ஓர்ப்படி பையன் நன்னா பார்க்கறார்.அமிஞ்சிக்கரையிலே கிளினிக் போட்டு இருக்கார்.அப்பல்லொஹாஸ்பிடலுக்கு கூட போயிண்டு இருக்கார்,இப்ப அவரை பிடிச்சுண்டேன்.அது சரி உங்க ஆத்துக்காரர் எப்படி இருக்கார்?

நல்லா இருக்கார்.

ஐயோ என் கதையை கேட்காதே?இத்தனை அவஸ்தைகளையும் உடம்பு பூரா வச்சிண்டு பாடாய் பட்டுண்டு இருக்கேன்.சித்த நாழி நான் தலையை சாய்ச்சிடக்கூடாது.பாரு,பாரூ ன்னு ஒரே கூப்பாடுதான்போ.பாரு அந்த ஈபி கார்டை எடுத்துக்கொடு?வாய் நமநமக்குது கொறிக்க ஏதாவது கொடேன்.மணி ஆறரை ஆகுது காபி கலக்க பில்ட்டர் போடலியோ?அங்கே பாரு ஒட்டடை தொங்குது என்ன பொம்மனாட்டி நீயி இப்படி ஒரே ரோதனை தாங்க முடியலே!

ஏண்டி இதெல்லாம் ஒரூ ரோதனையா?

அட குறுக்கே பேசாதே.இவர் கூட நீயெல்லாம் குடுத்தனம் ஒரு நாள் நடத்திப்பாரு.உனக்கு அவார்டே வாங்கித்தர்ரேன்.அது சரி உன் பையன் எப்படி இருக்கான்?

ஐ பி யெம்மில் வேலைக்கு போயிட்டு இருக்கான்.

மகராசன்.கஷ்டப்பட்டு படிக்க வச்சி இப்ப பிரயோஜனமாக இருக்கோல்லியோ?இங்கே எங்கதையைக்கேளு.படிச்சு முடிச்சி ஒரு கால் செண்டரில் வேலைக்கு போனான்.முள்ளங்கி பத்தையா இருபதாயிரம் வாங்கிண்டு வந்தான் தான்.மொத மாசம் சமபளம் வாங்கி எங்க கால்லே சாஷ்ட்டாங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டு சம்பளக்கவரை கையிலே கொடுத்தாந்தான்.பெற்ற மனம் அப்படியே சந்தோஷத்திலே பூரிச்சு போச்சு.போன மாசம் வர்ரான்.மாலையும் கழுத்துமா?லோகமே தல மேலே விழுந்து போச்சி போ.என்ன பண்றது என் தலவிதி.எங்கே இருந்தாலும் நன்னா இருன்னு தனிக்குடித்தனம் அனுப்பிச்சுட்டோம்.இந்த வெட்ககேட்டை நாலு பேருக்கு சொல்லுவாளோ என்ன.பகவான் எந்தலையில் இப்படி எழுதி வச்சிட்டானே.அது சரி உன் பையனுக்கு வரன் ஏதும் பார்க்கறியோ..இரு இரு ..சொல்லி முடிச்சுடுறேன்.படிச்ச பொண்ணு ,வேலைக்குப்போற பொண்ணு இந்த ரீதியிலே தான் இப்ப உள்ள காலத்துலே மனுஷாள் பார்த்து பாத்து மாட்டுப்பொண்ணு தேடுறா.

இப்ப என்ன தான் சொல்ல வர்ரே?

அட எவ்வளவு நாள் கழிச்சி பேசறோம்.காலேஜ் காலத்திலே ஹாஸ்டல்லே உக்காந்துண்டு நாம பேசாதா பேச்சா என்ன?அடிக்காத அரட்டையா என்ன?பாரு போர் அடிக்குது உன் திருவாயைத்திறவேன்னு பூங்கதவே தாள் திறாவாய்ன்னு பாடுற மாதிரி பாடிய காலமெல்லாம் மறந்துட்டியா?ஆங்..எதிலே விட்டேன்..!ம்ம்..இந்தக்கால மனுஷாள் நல்ல பொம்மனாட்டியா?குடும்பம் எப்படி?கோத்ரம் எப்படி.வீட்டுக்கு அடங்கிப்போறவளா இருப்பாளா ன்னா பாக்கறா.எந்த ஐடி கம்பனியிலே வேலைக்கு போறா?ப்ரமோஷனுக்கு சான்ஸ் உண்டா?சம்பளம் எப்படி இப்படித்தானே கணக்குப்போடுறாங்க.அப்புறம் லபோலபோன்னு அடிச்சுப்பாங்க?இந்த விஷயத்திலே நீ கவனமா இரு.மூத்தவன் எதோ போய்ட்டான் இருக்கற சின்னவனை தக்க வச்சிக்கணும்.நீயும் இந்த விஷயத்திலே கவனமாக இருக்கங்கோசாரமாத்தான் சொல்றேன்.
அதெல்லாம் நம்ம தலை எழுத்துப்பிரகாரம்தான் நடக்கும்.அப்புறம்..
இதையும் கேட்டுண்டுடு.தஞ்சாவூருலே இருக்கச்சே அக்ரஹாரத்திலே மணி மணின்னு ஒரு சமையல்க்காரன் இருப்பானோல்லியோ?ஆத்துலே காரியங்களுக்கு கூப்பிட்டான்னா டாண்டான்ணு வந்துடுவான் .வத்தக்குழம்பு வச்சான்னா அக்ரஹாரமே மணக்கும்.ஞாபகம் இருக்கோல்லியோ?

வந்து பாரு ..என் பொண்ணு..

அடடா,லலிதா வை மறந்தே போய்ட்டே.நன்னா இருக்கோலீயோ?பூஞ்சையா இருப்பாளே?சதை பிடிச்சிண்டிருக்காளா?அவளுக்கு முடி அப்படியே உன் மாமியாரைக்கொண்டு இருக்குமே?சாட்டையா நீளமா?அப்படியே மெயிண்டன் பண்றால்லியோ.இந்தக்காலத்து பசங்க ஷாம்பூ ஹேர் வாஷ் கண்டிஷனர்,கலரிங் இப்படி எதோதோ தலையிலே தடவிண்டு அநியாயப்படுத்துதுகள்.அப்படியே விட்டுடாதே.நம்ம காலத்துலே தலை மயிர் இப்படி இருக்காதான்னு ஆசைப்பட்டோம்.எங்கே வந்தது.கொத்துமல்லிகாட்டு சைசிலே..இப்ப அதுவும் தேஞ்சி கழுதை தேய்ஞ்சி கட்டெறுப்பான கதையா ஆகிப்போச்சு.

அவளுக்குத்தான் இப்ப..

என்ன அவளுக்கு ராசாத்தியாட்டம் வளர்த்தே.அவள் வயசுக்கு வர்ரதுக்கு முன்னரே 60 பவுன் நகை சேர்த்தே.இப்ப குறஞ்சது 200 சவரனாவது தேத்தி இருப்பே..இன்னிக்கு சவரன் விக்கற விலையிலே 200 பவுன் கணக்குபோட்டு பாரு.என்னை பற்றி யெல்லாம் உன் பொண்ணு விசாரிப்பாளோ?இந்த பார்வதம் மாமியை நன்னா ஞாபகம் இருக்குமோல்லியோ?

அதத்தான் சொல்லவர்ரேன்.

இரு இரு முடிச்சுடுறேன்.குறுக்காலே பேசினாக்க என்ன பேசினோம்ங்கறது மறந்துடுமோல்லீயோ?அப்ப நம்ம காலத்திலே கணமும் எனமுமா நகைங்க செய்தோம் இப்ப அப்படியா ?லைட் வெயிட்,ஆண்டிக்,குந்தன்,பிளாட்டினம்ன்னு காசை கரியாக்குதுகள்.நீ கெட்டிக்காரி அப்படி யெல்லாம் போகமாட்டே..எப்பவும் இப்படியே இருந்துடுவோன்னு பகவான் கிட்டக்க வரனா வாங்கிண்டு வந்தோம்.நாளைப்பின்னெ நகைகள் உதவனுமோல்லியோ?வித்தாக்க பல்க்கா பைசா திரும்ப கிடைக்க வேண்டாம்.

பாரு..பாரு நான் சொல்ல வர்ரதை சித்த கேளேன்.

ஆங் இப்பதான் ஞாபகத்திற்கு வர்ரது.உன் நாத்தானார்..அதான் கடைசி கடைக்குட்டி.எப்ப பாரு வாய்தொணதொணன்னு பேசிண்டே இருப்பாளே?நாம கூட பகவான் இவளுக்கு வாயைப்படச்சிட்டுத்தான் மத்த அங்கங்களைபடச்சான்னு நம்ம சாரு கூட சொல்லுவாளே?அதான்.தண்ட பாணி ..அதான்ப்பா.. மளிகைக்கடை வச்சிண்டிருந்தாரே..கடைத்தெருவிலே அதே தண்ட பாணி அவரோட நாட்டுப்பொண்ணு..

பாரு தலைக்கு மேலே வேலை இருக்கு.நான் சொல்ல வர்ரதை கேளேன்.

அட மனுஷாள்ன்னா வேலை இல்லாமல் என்ன?இப்ப பாரு இத்தனை வருஷம் கழிச்சு நீ போன் போட்டு இருக்கே.எத்தனை சந்தோஷமா இருக்கு.பழசெல்லாம்நினைவுக்கு வந்து மனசைப்போட்டு பிசையறதோல்லியோ?பழசெல்லாம் ங்கறப்போதான் ஞாபகத்திற்கு வர்ரது.பழைய துணிகளை எல்லாம் என்ன பண்றே?கூவிண்டு வர்ர பாத்திரக்காரணுக்கு போட்டுறியா?இப்ப கிலோ கணக்கிலே எடை போட்டு வாங்கி பணமா கொடுத்துடுறான்.நம்ம பாமா இல்லே பாமா?கருப்பா,திவ்யமா இருப்பாளே?சரசக்கா பொண்ணு இப்ப எங்க ஏரியாவிலேதான் இருக்கா..

ஐயோ பாரு நான் என்ன சொல்ல வர்ரேனா

தோ முடிச்சுறேண்டிமா.நீ பழைய கலா இல்லேடி.நான் இனிக்க பேசினாக்க என்னை சுற்றி வட்டமா உக்காந்துண்டு என் வாயை பார்த்துண்டு இருந்த காலமெல்லாம் மலை ஏறிப்போச்சு.நம்ம ஸ்நேகிதம் எப்பாற்பட்ட ஸ்நேகிதம்..எப்படி இருந்தோம்.அக்ரஹாரமே நம்ம நட்பைப்பார்த்து மூக்கிலே கை வைக்கும்.

நான் இல்லேங்கலே..இப்ப உனக்கு எதுக்கு போன் பண்ணேன்னா..

ஆங் போன்ன்னு சொன்னதும் ஞாபகம் வர்ரது.இந்தக்காலத்து பசங்களைப்பார்த்தியோன்னா...

ஐயோ..பாரு..பார்வதி. .

கதா பாத்திரங்கள் தொடரும்

November 1, 2009

ஸாதிகா சமையல்கள்







http://www.arusuvai.com/tamil/experts/7679 - ஏனைய சமையல் குறிப்புகள்

http://www.arusuvai.com/tamil/node/9788 - ஃபுரூட்ஸ்&நட் ஸாலட்

http://www.arusuvai.com/tamil/node/9326 - கேரமல் ஸ்பாஞ் கேக்

http://www.arusuvai.com/tamil/node/9050 - கைமா கொத்துப்பரோட்டா

http://www.arusuvai.com/tamil/node/8969 - ஈஸி மட்டன் பிரை

http://www.arusuvai.com/tamil/node/9241 - லேயர் முர்தபா

http://www.arusuvai.com/tamil/node/12764 -கிரில்ட் சிக்கன்

http://www.arusuvai.com/tamil/node/12701 -- ஸ்பிரிங் ரோல்

http://www.arusuvai.com/tamil/node/12605 - கருவாட்டுக்குழம்பு

http://www.arusuvai.com/tamil/node/9734 - செஸ்வான் பிரைட் ரைஸ்

http://www.arusuvai.com/tamil/node/9161 - பட்டர் பிஸ்கட்

http://www.arusuvai.com/tamil/node/12271 - காலிபிளவர் மஞ்சூரியன்

http://www.arusuvai.com/tamil/node/9333 - பாதாம் அல்வா

http://www.arusuvai.com/tamil/node/8994 - சைனீஷ் ஸ்ப்ரிங்க் ரோல்