September 10, 2012

இல்லாள்களுக்கு இனி மாத சம்பளம்





பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கோமாளித்தனமான மசோதாவை புதிதாக உருவாக்கி வருகின்றதாம்.வீட்டில் சும்மா இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சம்பளத்தொகையை கொடுக்கவேண்டுமாம்.இந்த மசோதா விரைவில் அமைச்சரையில் சமர்ப்பிக்கபட உள்ளது.என்ன கொடுமையடா இது?

கணவர்கள் தங்கள் மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கை துவங்கி தங்கள் சம்பளத்தில் இருந்து 10 முதல் 20 சதவீதத்தை அதில் மாதாமாதம் செலுத்த வேண்டும்.ஏன் துணி துவைக்க இவ்வளவு,சமைக்க இவ்வளவு,பெருக்க இவ்வளவு,பாத்திரம் கழுவ இவ்வளவு,முதியோர்களை கவனித்துக்கொள்ள இவ்வளவு ,குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு ,குழந்தைகளை கவனித்துக்கொள்ள இவ்வளவு என்று தனித்தனியாக நிர்ணயிக்க வேண்டியதுதானே?பெண்களுக்கும் இந்தியப்பண்பாட்டுக்கும் தலைகுனிவைத்தரக்கூடிய இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை எண்ணி நகைப்பதா?அழுவதா?

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திரத் ”இந்த ஆலோசனையை தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முன் வைத்துள்ளன.வீட்டில் பெண்கள் செய்யக்கூடிய வேலையும் பொருளாதார செயல்பாடுதான்.ஆனால் கணக்கில் அடங்குவதில்லை.ஒரு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க கட்டணம் கொடுக்க வேண்டும்,சமையல் செய்ய வெளியில் இருந்து ஆள் வைத்தால் அதற்கு மாத சம்பளம் தரவேண்டும்.எனவே பெண்களுக்கு கணவன் மார்கள் சம்பளம் தந்தால் அது சமூகத்தில் அவர்களுக்கும் அதிகார அடையாளம் கிடைக்கசெய்வதாகும் என்று கூறி இருக்கின்றார்.என்ன அபத்தமான வாதமிது?பெண்களுக்கு அடையாளமே தெரியாமல் போகக்கூடிய திட்டமல்லவா இது.


இந்த புதிய மசோதா பெண்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகையை அரசு நிர்ணயிக்கும். வரைவு மசோதா தயாரானதும், அதை இன்னும் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அரசுதரப்பில் கூறப்படுகிறது.

கணவன் மனைவி உறவென்பது புனிதமானது.அதற்கு சம்பளம் என்று வரையறுத்து இந்தியபண்பாட்டுக்கே பங்கம் விளைவிக்கக்கூடிய இத்திட்டம் கண்டிப்பாக வரவேற்கக்கூடியதில்லை.அலுவலகங்களில் வேலை செய்யாமல் இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு மதிப்பில்லை என்று யார் சொன்னது?கணவனின் முழு வருமானத்தையும் தனக்குக்கீழ் கொண்டு வந்து வரவு செலவுகளை திறம்பட் நிர்வாகம் செய்து,சேமித்து குடும்பவண்டியை திறம்பட ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள்..

வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்.மாத சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருக்கிறேன் என்று பெண்கள் அங்கலாய்ப்பது வேதனையுடன் அல்ல .வேடிகையுடன்தான்.

திருமண உறவென்பது மனதிற்கு சந்தோஷம்,எழுச்சி,உற்சாகம்,மகிழ்ச்சி,நிம்மதி,உத்வேகம்,தன்னம்பிக்கை தரகூடிய புனிதமான உறவு என்பதை அனைவரும் அறிவோம்.உணர்வோம். கணவன் மனைவி ஒற்றுமையாக ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அழகிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி காட்டுவதிலே வெற்றி அடங்கி உள்ளது.கணவர் சம்பாதிக்கும் அல்லது இருவரும் சேர்ந்து சம்பாதிக்கும் வரவை கட்டுக்கோப்பாக நிர்வாகம் செய்து மகிழ்ச்சியான இல்லறத்தை உருவாக்கி அதன் மூலம் நல் மகவை ஈன்று வாழ்தல் மனிதர்களுக்கு கிடைக்கும் பேறு.இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இம்மசோதா உருவாக்குவது மிகவும் அபத்தமானது.

தந்தையிடம் சம்பளம் பெறும் தாயைப்பார்க்கும் தனயன் எதிர்காலத்தில் ஒவ்வொன்றுக்கும் தன் பெற்றொர்களிடம் இருந்து பணத்தை எதிர்பார்ப்பான்.கடைக்குபோய் உப்பு வாங்கி வா என்று ஏவினால் உப்பு பத்து ரூபாய் அதனை வாங்கி வர பத்து ரூபாய் என்றாகிவிடும்.இந்த ரீதியில் போனால் வாழ்க்கையின் கட்டுக்கோப்பின் அடித்தளத்தையே ஆட்டம் கொள்ளசெய்துவிடும்.


இப்படியெல்லாம் கோமாளித்தனமான திட்டங்களை அறிவிப்பதை,பரிசீலனை செய்வதை,அமல் படுத்துவதை விட்டு விட்டு
உருப்படியான செயல் திட்டங்களுக்கு உரம் போடும் எழுச்சிதான் ஒவ்வொரு இந்திய இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்புமாகும்.

டிஸ்கி:இந்த பதிவை போட்ட பின்னர் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் இது குறித்து கேட்டேன்.ஏனென்றால் தோழி ஆசியா கூறிய அத்தனை சோகத்தையும் தாங்கிகொண்டு இருக்கும் அடித்தட்டு இல்லத்தரசி அவள்.அவளின் கருத்து

”ஐயே..நூத்துலே இருபது ரூவாயை சம்பளமா தந்துட்டு முடிஞ்சது கதைன்னு அப்பாலே போய்ட்டா..அப்பறம் எங்க வயித்திலே ஈரத்துணியத்தான் கட்டிட்டு அலையணும்”


42 comments:

Asiya Omar said...

//வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்.மாத சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருக்கிறேன் என்று பெண்கள் அங்கலாய்ப்பது வேதனையுடன் அல்ல .வேடிகையுடன்தான்.//
இதை சீரியஸாக எடுத்துக்கிட்டாங்க போல.

எல்லாப் பெண்களும் சுதந்திரமாக இருக்கும் சூழ்நிலை,இந்திய திருநாட்டில் இன்னும் உருவாகலை தோழி.மனைவியை வேலைக்காரியை விட கொடுமையாக நடத்தி, கைச்செலவிற்கு கூட காசு கொடுக்காத கணவர்களுக்காக இத்திட்டம் இருக்கலாம்.அவர்கள் சுயவருமானம் செய்து கையில் வைத்து இருப்பதைக் கூட பிடுங்கிட்டு போய் அழிக்கிற அடித்தட்டு கணவர்களும் இருக்காங்க இல்லையா? எதற்கெல்லாமோ திட்டம் வருது,போகுது,இதனால் சில பெண்களாவது பயன் அடைவார்கள் நல்லது தானே!

என்றாலும் உங்க உணர்வை என் உணர்வாய் நினைத்து மதிக்கிறேன்.அருமையான உணர்ச்சி மயமான படைப்பு.

ஸாதிகா said...

எல்லாப் பெண்களும் சுதந்திரமாக இருக்கும் சூழ்நிலை,இந்திய திருநாட்டில் இன்னும் உருவாகலை தோழி.மனைவியை வேலைக்காரியை விட கொடுமையாக நடத்தி, கைச்செலவிற்கு கூட காசு கொடுக்காத கணவர்களுக்காக இத்திட்டம் இருக்கலாம்.அவர்கள் சுயவருமானம் செய்து கையில் வைத்து இருப்பதைக் கூட பிடுங்கிட்டு போய் அழிக்கிற அடித்தட்டு கணவர்களும் இருக்காங்க இல்லையா? எதற்கெல்லாமோ திட்டம் வருது,போகுது,இதனால் சில பெண்களாவது பயன் அடைவார்கள் நல்லது தானே!/// இருக்கலாம்.ஆனால் இதே அடித்தட்டு இல்லத்தரசிகள் அனைவருக்கும் சரியாக போய் சேருமா?அப்படிகொடுக்க இயலாத,கொடுக்க விரும்பாத கணவர்களும் இருப்பார்கள் தானே?அப்படி இருக்கும் பட்சத்தில் தினம் தினம் காவல் நிலையத்திற்கு புகார்களும் குவியும்,விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுவார்கள்.குடும்ப அமைதி,நிம்மதி குலையும்.ஏற்கனவே அமல் படுத்தப்பட்ட குடும்ப வன்முறை சட்டம் மிகத் தவறாக பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததுதானே.

என் உணர்வை மதித்து கருத்திட்ட தோழிக்கு நன்றிகள்.

பால கணேஷ் said...

ஆஹா... வரிக்கு வரி உண்மை ஸாதிகாவின் எழுத்தில். அன்புடன் உரிமையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய குடும்ப உறவில் இந்த கேனத்தனமான யோசனை விரிசலைத்தான் உண்டாக்கும். ஏற்கனவே அதிகரித்து வரும் விவாகரத்துக்ள் மேலும் அதிகரிக்கத்தான் இது வழிவகுக்கும். எந்த ஒன்றையும் பணத்தால் மதிப்பிடுவது என்று துவங்கினால்... நினைக்கவே பயமா இருக்கும்மா.

ஸாதிகா said...

நீங்கள் சொல்லும் கருத்து நூற்றுக்கு நூறு உணமை.
//எந்த ஒன்றையும் பணத்தால் மதிப்பிடுவது என்று துவங்கினால்... நினைக்கவே பயமா இருக்கும்மா// அருமையான வரிகள்.சிந்திக்க்கக்கூடிய வரிகளவை.

அருமையான கருத்து வரிகளுக்கு நன்றிகளண்ணா.

cookbookjaleela said...



//தந்தையிடம் சம்பளம் பெறும் தாயைப்பார்க்கும் தனயன் எதிர்காலத்தில் ஒவ்வொன்றுக்கும் தன் பெற்றொர்களிடம் இருந்து பணத்தை எதிர்பார்ப்பான்.கடைக்குபோய் உப்பு வாங்கி வா என்று ஏவினால் உப்பு பத்து ரூபாய் அதனை வாங்கி வர பத்து ரூபாய் என்றாகிவிடும்.இந்த ரீதியில் போனால் வாழ்க்கையின் கட்டுக்கோப்பின் அடித்தளத்தையே ஆட்டம் கொள்ளசெய்துவிடும்.//

மிகச்சரியாக சொல்லி இருக்கீங ஸாதிகா அக்க்கா/
இப்படி ஓவ்வொன்றிற்கும் காசு கொடுத்தால் தான் என்றால் . உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே..

cookbookjaleela said...

//வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்.மாத சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருக்கிறேன்//
என்று பல பெண்களின் சலிப்பும் ,புலப்பமும் தான் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவர வைத்துள்ளதா?

செய்தாலி said...

நல்ல பதிவு சகோ
இந்த சட்டம் அமல் படுத்தபட்டால் அதன் பின் விளைவுகளை
மிக நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க
அதே சமயம் சகோ ஆமினா வாங்க இறுதியில் சொன்ன விஷயம்
கீழ்தட்டில் இருப்பவர்களுக்கும் பயன் கிடைக்கலாம்

அதுவும் துஸ்பிரயோகம் செய்யபட்டால் நீங்கள் சொன்னதே நிகழும்
இருப்பினும் உங்களின் சிறப்பு கண்ணோட்டம் சற்று யோசிக்க வைக்கிறது சகோ

ஸாதிகா said...

//ஓவ்வொன்றிற்கும் காசு கொடுத்தால் தான் என்றால் . உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே//இத்திட்டம் செயல் முறைபடுத்தபட்டால் இதில்தான் முடியும்.


என்று பல பெண்களின் சலிப்பும் ,புலப்பமும் தான் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவர வைத்துள்ளதா?// அந்த சலிப்பும்,புலப்பமும் வேதனையுன் கூறப்படுவதில்லை ஜலி.வேடிக்கையாககூறப்படுபவை.

ஸாதிகா said...

அதுவும் துஸ்பிரயோகம் செய்யபட்டால் நீங்கள் சொன்னதே நிகழும்
இருப்பினும் உங்களின் சிறப்பு கண்ணோட்டம் சற்று யோசிக்க வைக்கிறது சகோ //அருமையான உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாகித்தந்ததில் மகிழ்ச்சி நன்ரி சகோ செய்தாலி.

mubarak kuwait said...

எதிர்கால சந்தத்யினரை லிவிங் டுகதர் (living together) என்ற முறைக்கு அரசாங்க இழுத்து செல்கிறது, ஏற்கனவே 498A என்ற சட்டம் மிகவும் தவறாக பயன்படுத்த படுகிறது, இந்த சட்டமும் வந்தால் சாதாரண குடிமக்கள் திருமணம் செய்து கொள்வதற்கு பயப்படுவார்கள், இது தவறான வழிமுறைக்கு கொண்டு செல்லும்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

வாருங்கள் சகோ முபாரக்.முதல் வருகைக்கும்,அருமையான கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்.தொடருங்கள்.

Admin said...

நல்லதொரு செய்தியை பகிர்ந்து கொண்டீர்கள்..இதனால் பெண்கள் பயனடைவார்களா?பாதிப்படைவார்களா?என்பதில் யோசனை செல்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

இந்த சட்டம் வராததுக்கு முன்பே கடந்த 10 வருடங்களாக என் முழு சம்பளத்தையும் என் மனைவியிடம் தான் கொடுத்துட்டு வர்றேன் ;-0

ஸாதிகா said...

வருக சகோ மதுமதி.//இதனால் பெண்கள் பயனடைவார்களா?பாதிப்படைவார்களா?என்பதில் யோசனை செல்கிறது.//மேல்தட்டு இல்லத்தரசிகள் மட்டுமல்ல நடுத்தர அடித்தட்டு இல்லதரசிகள் கூட பாதிப்படைவார்கள்தான்.இப்பொழுது டிஸ்கி போட்டு இருக்கிறேன்.பாருங்கள்.இது குறித்து வீடு திரும்பல் மோகன் குமார் சார் போன்றோர் சில இல்லத்தரசிகளை பேட்டி கண்டு தன் தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.நன்றி.

ஸாதிகா said...

இந்த சட்டம் வராததுக்கு முன்பே கடந்த 10 வருடங்களாக என் முழு சம்பளத்தையும் என் மனைவியிடம் தான் கொடுத்துட்டு வர்றேன் ;-0//அட்ரா சக்கை...உங்களுக்கு நன்றி கூறிக்கொண்டு பாராட்டுகிறேன் சிபி தம்பி.

ஹுஸைனம்மா said...

//கணவனின் முழு வருமானத்தையும் தனக்குக்கீழ் கொண்டு வந்து வரவு செலவுகளை திறம்பட் நிர்வாகம் செய்து,சேமித்து//

அதானே, முழு சம்பளத்தையும் வாங்கிட்டு இருக்கவங்ககிட்ட 20% மட்டும் கொடுத்தா கோவம் வரத்தானே செய்யும்!! :-D :-D :-D :-D :-D

அக்கா, நம்மைப் போல மேல்தட்டு மக்களுக்கு இது கோவப்பட வைப்பதாய் இருக்கும். ஆனா, இச்சட்டம் அடித்தட்டு பெண்களை மனதில் வைத்துச் செய்யப்பட்டதாக எனக்கு தெரிகிறது.

அடித்தட்டு ஆண்கள் சம்பாதிக்கும் பணம் ஏழைப் பெண்களின் கையில் 20% போய்ச் சேர்ந்தாலே அவர்கள் குழந்தைகளின் பசியை ஓரளவு போக்கிக்கொள்ள முடியும். அதுவும் கிடைக்காததால்தானே அப்பெண்களும் கல்லும், மண்ணும் சுமந்து அல்லாடுகிறார்கள்.

நாகர்கோவிலில் blue-collar jobs - அதாவது பெயிண்டர், பிளம்பர், கொத்தனார் போன்ற வேலைகளுக்கு ஒரு நாள் கூலி 500 - 550 வரை. வேறுவழியின்றி இவ்வளவு கொடுக்க ரெடியாக இருந்தாலும், (தமிழகம் முழுதுமே) இந்த வேலைகளுக்கு ஆள் கிடைப்பது சுலபம் இல்லை. காரணம்? அதீத சம்பளத்தின் காரணமாய் இரண்டு மூன்று நாள் வேலைபார்த்தால் போதும், அந்த வாரம் அந்த ஆணின் குடி உட்பட்ட செலவுக்குப் போதும். குடும்பத்திற்குச் சோறுபோடத்தான் மனைவியும், அரசு தரும் இலவசங்களும் இருக்குதே!! இவர்களைக் கண்டிக்கவாவது இச்சட்டம் பயன்படலாம் என்ற நப்பாசை உண்டு என்னிடம். ஆனால், செயலபடுத்துவதை கண்காணிக்கப் போவது யார், எப்படி என்பதற்கான பதில்கள்தான் இந்த சட்டம் பயன்தருமா இல்லையா என்று சொல்லும்.

வரதட்சணை சட்டம் போல, பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தைப்போலவே தவறாகப் பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகம்.

இந்தச் சட்டத்தைவிட, இலவசங்களை முறைப்படுத்துவதும், டாஸ்மாக்கை ஒழிப்பதும் செய்தாலே பெண்களுக்கு நிம்மதி மீண்டு வரும்.

ஸாதிகா said...

பொறுமையாக அமர்ந்து நீளமாக கருத்திட்டமைக்கு நன்றி ஹுசைனம்மா.

சம்பளம் வாங்கிக்கொண்டு இச்சட்டத்தினை பார்த்த பின்னர் 20% மட்டும் கொடுத்து விட்டு அப்படியே அதான் கவர்ண்மெண்ட் சொன்ன பிராகாரம் சம்பளம் தந்துவிட்டோமே என்று சொலிவிட்டு போய்கொண்டிருந்தால் மிச்சம் மீதி இருக்கிற 80% எங்கே போகும் நிச்சயம் டாஸ்மாக் போகும்.குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பமும் சோகமும் அதன் பின் நடக்கும் பின் விளைவுகளை கற்பனை செய்து பாருஙக்ள்.கூடவே புதிதாய் இணைத்திருக்கும் டிஸ்கியையும் பாருங்க்ள்.

//இந்தச் சட்டத்தைவிட, இலவசங்களை முறைப்படுத்துவதும், டாஸ்மாக்கை ஒழிப்பதும் செய்தாலே பெண்களுக்கு நிம்மதி மீண்டு வரும்.//இதனை நான் 100% ஆமோதிக்கின்றேன்.

Yaathoramani.blogspot.com said...

அடக் கடவுளே
இது என்ன புதுக் குழப்பம்
எல்லாவற்றையும் பணத்தால் அளக்கத் துவங்கினால்
குடும்பம்,உறவு,புனிதம், இப்படி மதிக்கத் தக்க
வார்த்தைக்ளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் அல்லவா
போய்விடும்
சிந்திக்கத் தூண்டும் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 8

mohamed salim said...

இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது சில குடும்பங்களில் கணவன் சம்பளத்தை மனைவியடம் கொடுக்காமல் அடம்பர செலவு செய்து மனைவியை அன்றாட அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு கஷ்டபடுதுகிறர்கள்..


இளையராஜாவின் ஓவியம் மிக அருமை

Unknown said...

வார்த்தைக்கு வார்த்தை உங்கள் உனர்ச்சிகள் புரிகிறது, உங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கு புரிந்தது இந்த நாட்டு தலைவர்களுக்கு புரியவில்லையே.. இப்படி குடும்பத்தலைவிகளுக்கு சம்பளம் கொடுத்து அவமானம் படத்த வேண்டாம்.. அழகான குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.. பகிர்வுக்கு நன்றி அக்கா

திண்டுக்கல் தனபாலன் said...

இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று, இன்னும் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் திட்டம்...

ஜீவன்சிவம் said...

ஆளும் காங்கிரசின் கோமாளிதனங்களில் இதுவும் ஓன்று. உருப்படியாக நாட்டிற்கு ஒன்னும் பண்ண துப்பில்ல வீட்டிற்கு பண்ண வந்துட்டானுங்க...

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் வேடிக்கையான செய்தி! பெண்களை முன்னேற்ற இது கடுகளவும் உதவாது! எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் கோமாளித்தனமாக!

இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



ஹுஸைனம்மா said...

//சம்பளம் வாங்கிக்கொண்டு இச்சட்டத்தினை பார்த்த பின்னர் 20% மட்டும் கொடுத்து விட்டு அப்படியே அதான் கவர்ண்மெண்ட் சொன்ன பிராகாரம் சம்பளம் தந்துவிட்டோமே//

இல்லை அக்கா; வீட்டுச் செலவுபோகத்தான் மனைவியின் கையில் 20% கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டம். இது மனைவியின் கையில் (இருக்க விட்டால்) சேமிப்பாக இருக்கும். ஒன்றுமே தராமல் போவதற்கு, சட்டத்தின் கட்டாயத்தினால் இந்த 20%-ஆவது கிடைக்குமே என்றுதான் சொல்ல வருகீறேன்.

Ahila said...

கணவன் மனைவி மகன் மகள் போன்ற நம் உறவுகள் எல்லாம் பாரம்பரியத்தின் அடிப்படையில் தானே இயங்கி கொண்டிருக்கிறது. இதில் பணம் என்கிற ஓன்று அமைச்சரின் மூளையில் எப்படி முளைத்தது?

நாம அப்பப்போ அடுக்களையில் நின்னு 'எனக்கு என்ன மரியாதையை இருக்கு. சம்பளம் இல்லாத வேலைகாரிதானே' புலம்புவோம்தான்...அதுக்காக நம் தியாகங்களுக்கு விலையா?

நம் மண்ணின் பெருமையே நம் பெண்களின் தியாகத்தில்தான் இருக்கு. ஸாதிகா நீங்க சொன்ன மாதிரி ஊர்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு கலாச்சார சிர்கேடுக்கு வழிவகை பண்ணுவாங்க போல இருக்கே....

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா ரொம்ப சரியாதான் சொல்லி இருக்கே. எங்க காலங்கள் எல்லாம் சுகமாகத்தானே இருந்தது. எந்த மனைவியும் எந்த கணவனிடமும் சம்பளமெல்லாம் எதிர்பார்த்ததே இல்லியே. இன்னிக்கு சாப்பாடு சூப்பர்னு ஒருவார்த்தை புருஷன் சொல்லிட்டாலே ஏதோ ராஜ்ஜியம் கிடைத்த சந்தோஷம் வரும்.எல்லாத்தையும் காசை வைத்து பார்க்க கூடாது.அப்புறம் உறவு முறை அன்பு பாசம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லாம்லெ போகும்

ஸாதிகா said...

எல்லாவற்றையும் பணத்தால் அளக்கத் துவங்கினால்
குடும்பம்,உறவு,புனிதம், இப்படி மதிக்கத் தக்க
வார்த்தைக்ளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் அல்லவா//உண்மைதான் ரமணி சார்.கருத்துக்கு நன்றி.

Menaga Sathia said...

இதனால் என்ன பின் விளைவுகள் வருமோ தெரியல?? உங்க கருத்தை அழகா சொல்லிருக்கீங்க...எந்த நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இருப்பதாக தெரியவில்லை,இந்தியாவுக்கு என்ன ஆச்சு???

பிலஹரி:) ) அதிரா said...

என்ன ஸாதிகா அக்கா உண்மையாவோ?:) நான் தமிழ் நாட்டுக்கு வரப்போறேன்ன்ன்ன்ன்:)) என் கணவர் பவுன்ஸ்சில கட்டோணுமாக்கும்.. அவ்வ்வ்வ்வ்:)).

அப்போ வேலைக்குப் போகும் பெண்களாயின்?..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கணவன் மனைவி ஒற்றுமையாக ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அழகிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி காட்டுவதிலே வெற்றி அடங்கி உள்ளது.

கணவர் சம்பாதிக்கும் அல்லது இருவரும் சேர்ந்து சம்பாதிக்கும் வரவை கட்டுக்கோப்பாக நிர்வாகம் செய்து மகிழ்ச்சியான இல்லறத்தை உருவாக்கி அதன் மூலம் நல் மகவை ஈன்று வாழ்தல் மனிதர்களுக்கு கிடைக்கும் பேறு//

;)))))

சிந்திக்க வைக்கும்
அருமையானதொரு அலசல்.
பாராட்டுக்கள்.

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமையான பதிவு ஸாதிகா! வாழ்த்துக்கள்!!

அன்பும் ஆதரவும் இணைந்த இல்லறம் வியாபாரமாக்குவதற்கான வழிமுறை தான் இது! ஏற்கனவே அருமையான விஷயங்கள் பலவும் வியாபாரமாகி விட்டது! இல்லற வாழ்க்கையும் பலரிடையே கருத்து வேற்றுமையால், ஈகோ பிரச்சினைகளால், தாழ்வு மனப்பான்மைகளால், ஆதிக்க உனர்வுகளால் விவாகரத்து வரை வந்து முடிந்திருக்கின்றன! இந்த சட்டம் ஒன்று தான் பாக்கி! உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் பொட்டில் அடித்த மாதிரி நிதர்சன வாழ்க்கையை அருமையாக கூறியிருக்கிறார்!!

பிலஹரி:) ) அதிரா said...

ஸாதிகா அக்கா.. கணவர் சம்பளம் முழுவதையும் மனைவியிடம்தான் கொடுப்பார், ஆனா இந்த 20 வீதம் என்பது, மனைவிக்கே மட்டுமுரிய பொக்கட் மணிமாதிரி... அப்படித்தான் நான் புரிஞ்சுகொண்டேன் அது தப்பா?

Easy (EZ) Editorial Calendar said...

இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

MARI The Great said...

குடும்பத்தலைவர்கள் மனைவியின் தியாகத்தை உணர்ந்து அவர்களாகவே இதனை செய்தால் சரி.. அரசாங்கம் கட்டாயப்படுத்தும்...கணவனுக்கு மனைவியின் மீது வெறுப்பு உண்டாகி எதிர்விளைவுகள் தான் உண்டாகும்!

கோமாளித்தனமான திட்டம்! எதிர்க்கவேண்டிய ஒன்று!

Kanchana Radhakrishnan said...

இது ஒரு கோமாளித்தனமான திட்டம் என்பதில் ஐயமில்லை..
மனைவியின் பாசம், அன்பு இவற்றிற்கு விலை உண்டா?
அவள் பெற்றெடுக்கும் மகவுகளுக்கு...அவள் ஊட்டும் தாய்ப்பால்,சேவை ஆகிய தாய்மைக்கு விலை ஏது?
மொத்தத்தில் குடும்பத்தில் விலை மதிப்படமுடியா சேவையை ஆற்றுவது இல்லாளென்றி வேறு யார்?
கடமைக்கு அலுவலகத்தில் பணியாற்றி, மாத சம்பளம் பெற்று..குடும்பத்திற்கு உழைக்கும் குடும்பத்தலைவன் மனைவிக்கு ஒரு சம்பளம் என வழங்கினால்..அக்குடும்பம் பாசமற்ற ஒரு மெக்கானிக்கலாக மாறிவிடாதா?.
ஆமாம்..வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்கள் குடும்பத்திற்கு உழைப்பதில்லையா? அவர்களுக்கும் இத் திட்டத்தில் சம்பளம் உண்டா?
ஒருசமயம் மொஹிந்தர் அமர்நாத்..கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியை 'A bunch of jokers' என வர்ணித்தார்..
அவர் கூறிய கூற்று இந்த ஐடியாவைக் கொடுக்கும் அமைச்சர், அதிகாரிகளுக்கும் பொருந்தும்.

சசிகலா said...

பணம் ஒன்று மட்டுமே இல்லாளுக்கு கொடுத்து பெருமை படுத்துவதாகது என்பது என் கருத்து. அருமையான படைப்பு சகோ இல்லாள் என்பளை இல்லத்தின் அங்கமாய் இருக்கிறாள் என்று எண்ணமே சிறந்தது.

ஸாதிகா said...

கருத்திட்ட

முஹம்மது சலீம்

பாயிஜா

திண்டுக்கல்தனபாலன்

ஜீவன் சிவம்

சுரேஷ்

ஹுசைனம்மா

அகிலா

லக்‌ஷ்மிம்மா

மேனகா

அதிரா

வி ஜிகே சார்


மேனகா

வரலாற்றுசுவடுகள்

காஞ்சனா ராதாகிருஷ்ணன்

சசிகலா

அனைவருக்கும் அன்பின் நன்றிகள்.

அ. வேல்முருகன் said...

கூறுகெட்ட அரசாங்கம் வேறு எப்படி சிந்திக்கும்

RajalakshmiParamasivam said...

ஸாதிகா,
உங்கள் தயிர் பதிவைப் படித்தேனா?
இன்று உங்கள் வலையை அப்படியே சற்று மேய்ந்து கொண்டிருந்தபோது ,இந்தப் பதிவின் தலைப்பை பார்த்ததும் ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன்.
முடிவில் ............
உங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம்.

அருமையான் பதிவு.
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
நானும் உங்களைத் தொடர்கிறேன்.

ஸாதிகா said...

நன்றி சகோ வேல்முருகன்

ஸாதிகா said...

உங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம்.//வரிகளில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ராஜலக்‌ஷ்மி பரமசிவம்.