நிலங்களின் மதிப்பு விண்ணுயரம் உயர்ந்து கொண்டே செல்கிறது.உலக பொருளாதாரம் சரிந்து கொண்டே சென்றாலும்,ரியல் எஸ்டேட்டும்,கட்டுமானத்தொழிலும் வானை எட்டிக்கொண்டே,தங்கத்துக்கு நிகரக பறந்து கொண்டுள்ளது.இது பொதுவாக எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் என்றாலும் வளர்ந்து வரும் சென்னையில் கட்டுமானத்தொழில் இன்னும் கனஜோராக களைகட்டுகின்றது எனலாம்.
மக்கள்தொகை 56.63 லட்சம் கொண்ட விரிவாக்கப்பட்ட சென்னையின் பரப்பளவு 430 சதுரகிலோ மீட்டராகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன் இரவானால் இருளடைந்து இருந்த சில சாலைகள் இன்று ஹார்ட் ஆஃப் சிட்டி ஆகி விட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தாண்டி நசரத் பெட்டை ,மாம்பாக்கம் என்றும்,சோழிங்கநல்லூர் தாண்டி நாவலூர் கேளம்பாக்கம்,திருப்போரூர்,நெமிலி வரையிலும்,வண்டலூர் தாண்டி ஊரப்பாக்கம்,காட்டாங்கொளத்தூர் மறைமலை நகர் என்றும்,தண்டையார் பேட்டை தாண்டி திருவொற்றியூர் எண்ணூர் மீஞ்சூர் பொன்னெரி என்று நகர் விரிவடைந்து கொண்டே செல்வது ரியல் எஸ்டேட் காரர்களுக்கும்,புரொமோட்டர்களுக்கும் லாட்டரி அடித்த கதையாகி விட்டது எனலாம்.
இப்பொழுதெல்லாம் நகருக்குள் சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத்தில் 10 அடுக்கு மாடி குடி இருப்புகளைக்கட்டி விற்று வந்த கதை எல்லாம் அரிதாகிக்கொண்டே உள்ளது.
இன்றைய விலை மதிப்பில் போட் கிளப் பகுதியில் ஒரு சதுர அடி 25000 இல் இருந்து 30000 வரை அடுக்கு மாடி குடி இருப்புகள் விலை போகின்றது.அதே போல் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஐந்து இலக்க எண்களுக்கு குறைவில்லாமல் ஒரு சதுர அடி அடுக்கு மாடி வீடு விற்பனை ஆகிறது.சாமானியர்கள் நகருக்குள் பிளாட் வாங்குவதென்றால் அது கடினமான விஷயமாகிப்போனதால் இப்பொழுதெல்லாம் சென்னையில் புறநகர் பகுதில் அடுக்கு மாடி குடி இருப்புகளை கட்டி கனஜோராக கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
200 குடி இருப்புகள்,300 குடி இருப்புகள் என்று கட்டியது போக இப்பொழுதெல்லாம் 1000 - 2000 வரை அடுக்கு மாடி குடி இருப்புகளை சகல வசதிகளுடன் கட்டி விளம்பரத்துக்காக கோடி கணக்கில் செலவு செய்து பன் மடங்காக லாபம் பார்த்து விடுகின்றனர்.
கால் செய்தால் வீட்டுக்கே குளிரூட்டப்பட வாகனம் அனுப்பி வைத்து அழைத்து செல்வது,கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமோ ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தோற்றத்தில்,படு ஹைபையாக காட்சி தருகிறது.அலுவலகத்திற்குள் நுழையும் முன்பே வாசலில் காவலாளி முன் இருக்கும் நோட்டுப்புத்தகத்தில் விபரங்கள் எழுதுவது,உள்ளே நுழைந்ததும் அங்கு நமக்காக காத்திருக்கும் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் வரிசையாக இருக்கும் அறைகளில் ஒன்றில் கார்ட் பன்ச் செய்து திறந்து உள்ளே அழைத்து சென்று மேஜை மீது மேப்பையும் படங்களையும் விரித்து வைத்துக்கொண்டு வார்த்தை ஜாலம் புரிந்து போணி பண்ணும் திறமையையும்,அங்கிருக்கும் ஊழியர்கள் கோட் சூட் என்று அணிந்து ஆடம்பரம் காட்டி வலம் வருவது,பெரிய திரையில் அவர்கள் கட்டி வரும்,கட்டப்போகும் கட்டுமானங்களின் விபரங்களை அட்டகாசமாக ஒளி ஒலிகாட்சியாக்கி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவது,இதை எல்லாம் கடந்து,சைட்டை பார்க்க செல்லும் பொழுது அலுவலக வளாகத்தில் ஒன்று பார்த்தாற் போல் வரிசையாக அணிவகுத்து நிற்கும் சைட்டுக்கு அழைத்து செல்லும் வாகனங்கள்,சீருடை அணிந்த ஒட்டுநர்கள் என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.
இதோ தாம்பரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான்
நம்ம சைட் என்று அந்த ”ம்”இல் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் ஒரு அழுத்தம் கொடுப்பார் பாருங்கள்.அப்பொழுதே வீடு நமதாகிவிடும்.
கார் பயணத்தில் அந்த புரமோட்டர் புராணம் பாடி,அவர்கள் ஆற்றி வரும் சேவைகளையும்,திறம் பட அவர்கள் கட்டுமானத்தொழிலில் தமிழகத்தில் செய்து வரும் புரட்சி பற்றியும் விலாவாரியாக விவரித்துக்கொண்டே வரும் பொழுது,அதற்கு கூடவே வரும் ஓட்டுநரும் ஜால்ரா தட்டிக்கொண்டே வருவதை கேட்கும் பொழுது செவி மடுப்பவர்களுக்கு”ஆஹா..வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக எவ்வளவு உழைக்கிறார் ”என்று புளங்காகிதபடவைத்து விடுகின்றனர்.
சொகுசு வண்டி கரடு முரடு சாலைகளில் சர்க்கஸ் வித்தை பண்ணிக்கொண்டு ஒரு வழியாக சைட்டை அடைகின்றது.
“என்ன சார்.தாம்பரத்தில் இருந்து ஐந்தே கிலோ மீட்டர் என்றீர்கள்.எவ்வளவுதூரம் பயணித்து விட்டோம்”என்று கூட வருபவர் கொட்டாவி விட்டால்”சூ..சத்தியம் ,ஐந்தே கிலோ மீட்டர்தான்.இதோ நம்ம சைட் இருக்கும் பகுதியில் இப்பொழுது நூறடி சாலைதான்.இதனை இருநூறடி சாலையாக்கப்போகின்றனர்.”என்று பேச்சை நயம்பட திசை திருப்புவார்.
சைட்டிலும் ஆர்பாட்டமாக ஒரு அலுவலகம்,சகல வசதிகளும் செய்யப்பட்ட மாடல் ஹவுஸ்,குடியிருப்புகளை சாலை வசதிகளுடன்,விளக்கு ஒளியுடன் காட்டும் மினியேச்சர் வீடுகள் என்று பார்ப்போரை விழியகல வைத்து விடுகின்றனர்.
அதோ தூரத்தில் தெரிகிறதே கம்பம் அதற்கு பின்னால்தான் நோகியா கம்பெனி வரப்போகிறது.அதோ அந்தப்பக்கம் பென்ஸ் கார் கம்பெனி வரப்போகிறது,இதோ இந்தப்பக்கம் பெரிய மால் கட்டப்போகின்றர். மகேந்திரா சிட்டி கூட வரப்போகிறது என்று தூரத்தே கையை காட்டி விளக்கம் தரும் பொழுது எதிரில் இருப்பவர் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
கரெக்ட் டைமுக்கு பொசிஸன் கொடுப்பதில் எங்கள் கம்பெனியை அடிச்சுக்கவே முடியாது.ஒரு வேளை தாமதாகி விட்டால் அதற்குண்டான வாடகையை தந்து விடுவார்கள்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமே வராது”சர்க்கரை பாகு தடவிய வார்த்தைகள்.
“நீஙகள் வாடகை பர்பஸுக்கு என்று வாங்கினால் வாடகைக்கு நல்ல ஆட்களை நியமிக்க,வாடகை வசூல் என்று பண்ணித்தரவும் ஆட்கள் இருக்கின்றனர்.நீங்கள் வந்து செல்லும்தொந்தரவே இருக்காது.”
”சுமாராக மூன்று பெட் ரூம் பிளாட்டுக்கு எவ்வளவு வாடகை வரும்”அக்கரையாக கேட்கப்படும் கேள்விக்கு அலர்ட்டான பதிலொன்று வரும்.”முள்ளங்கி பத்தை மாதிரி 20000 ரூபாயை யார் வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பார்கள் சார்.”
“20000 ரூபாயா...?எங்கள் ஏரியாவில் கூட இவ்வளவு வாடகை வராதே.இப்படி புறநகர் பகுதில் தருவார்களா 20000?”கேள்வியை முடிக்கும் முன் டாண் என்று பதில் வரும்.
“கிளப் ஹவுஸ் உண்டா,ஸ்விமிங் பூல் உண்டா,ஏஸி ஜிம் உண்டா?ஹை ஸ்பீட் இண்டர்நெட் உண்டா?மீட்டிங் ஹால் உண்டா?இண்டோர்கேம் ஜோன் உண்டா?இண்டர்காம் வசதி உண்டா?மெயிண்டனென்ஸ் ஸ்டாஃப் உண்டா?ஃபயர் அலார்ம் உண்டா?விசிட்டர் கார் பார்க் உண்டா?ரூஃப்டாப் பார்ட்டி டெரஸ் உண்டா?கவர்ட் கார்பார்க் உண்டா?எலக்ட்ரானிக் செக்யூரிட்டி உண்டா?பவர் பேக் அப் உண்டா?பைப் கியாஸ் கனெக்ஷன் உண்டா?கிரீச் உண்டா?கான்பரன்ஸ் ரூம் உண்டா?ஹெல்த் கிளப் உண்டா?கெஸ்ட்சூட் உண்டா? இதெல்லாம் நாங்கள் தருகின்றோமே சார்”இப்படி அடுக்கிக்கொண்டே கேட்போரை திகைக்க வைத்து விடுகின்றனர்.
இறுதிப்பகுதி அடுத்த பகிர்வில்.
Tweet |
53 comments:
நீங்க சொல்வது அத்தனையும் உண்மை .
96/97 இல் அண்ணா நகரில் 17 டு 21 லட்சம் விற்ற பிளாட்ஸ் விலை இப்ப மயங்கி போகுமளவு ஏறிப்போயிருக்கு .
பில்டர்ஸ் ஒரு வீட்டை வாங்கி அதில் 20 வீடு பிளாட்ஸ் கட்டும் சாமர்த்தியத்தால் அடுக்குமாடி குமிஞ்சிருச்சு சென்னைல ..
தொடருங்கள் ..ஆதங்கத்துடன் நானும் .
ஹைய்யோ..பதிவை படிக்கிறப்பவே தலையை சுத்துதே ஸாதிகா..சிட்டி பக்கம் செட்டில் ஆகணும்னு நினைக்கிறது பகல் கனவா போயிடும் போல இருக்கே.. வேணாம்பா நா வரல்ல ,சீ சீ...இந்த பழம் புளிக்கும்.
இப்ப தங்கம் கிட்ட போகவே முடியாது என்பது போல் நிலம் விலையும் ஏறிட்டே போகுது
இப்ப தங்கம் கிட்ட போகவே முடியாது என்பது போல் நிலம் விலையும் ஏறிட்டே போகுது
வீடு இருக்கட்டும் அதன் தொடர்ப்பில் உள்ள சாலை,கழிவு நீர் மற்றும் மழை நீர் போக வேண்டிய வசதியெல்லாம் பற்றிய விபரம் அரை குறையாகவே சொல்லப்படும்.Swimming pool,Club House and Gym இதற்கெல்லாம் நிர்வாகச்செலவுக்கு மற்றொரு EMI கட்டவேண்டும் ஜாக்கிரதை.
நங்கநல்லூரில் போன வாரம் ஒரு அடுக்குமாடி கட்டிட விலை விவரம் கேட்டேன்.7000/சதுர அடியாம்.
இப்ப எங்க பார்த்தாலும் ப்ளாட் சிஸ்டம் தான்
தனி வீடு என்பது சிட்டியில் நினைத்துகூட் பார்க்க முடியாது
பில்டர்ஸ் ஒரு வீட்டை வாங்கி அதில் 20 வீடு பிளாட்ஸ் கட்டும் சாமர்த்தியத்தால் அடுக்குமாடி குமிஞ்சிருச்சு சென்னைல //உண்மைதான் ஏஞ்சலின்.முதலாவதாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
வேணாம்பா நா வரல்ல ,சீ சீ...இந்த பழம் புளிக்கும்.//ராதா ராணி இந்த வரிகளை படித்து ரசித்து சிரித்தேன்.வரவுக்கு நன்றி.
இப்ப தங்கம் கிட்ட போகவே முடியாது என்பது போல் நிலம் விலையும் ஏறிட்டே போகுது//உண்மை ஜலீலா.உடன் வரவுக்கு நன்றி.
அய்யோ ! ஸாதிகா சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவைப் பார்த்தால் வயிற்றில் புளியைக் கரைப்பது போல் இருக்கும்.என் கணவர் சென்னையில் 90 களில் நான்கு வருடம் வேலைப் பார்த்தப்பவே அதன் நெருக்கடி பிடிக்கலைன்னு நெல்லைப் பக்கம் மாற்றல் வாங்கி வந்தார்.அப்ப இப்ப கேட்கவும் வேண்டுமா?சும்மா சுற்றி பார்க்க வந்தப்பவே அங்குள்ள நிலைமையைப் பார்த்து வாயைப் பிளந்தேன்.
சென்னை என்று சொன்னாலே ஏன் அவருக்கு எரிச்சல் வருதுன்னு இப்ப தான் தெரியுது..அவசியமான பகிர்வு.
தொடருங்க தோழி.
இதற்கெல்லாம் நிர்வாகச்செலவுக்கு மற்றொரு EMI கட்டவேண்டும் ஜாக்கிரதை.//உண்மைதான் சகோ வடுவூர் குமார்.ஒரு ஸ்கொயர் பீட்டுக்கு 2.50 மெயிண்டன்ஸ் சார்ஜ் வசூலிக்கின்றனர்.1500 சதுர அடி பிளாட்டுக்கு மாதம் 3750 ரூபாய் மெயிண்டன்ஸ் செலவு வந்து விடும்.முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
இப்ப எங்க பார்த்தாலும் ப்ளாட் சிஸ்டம் தான்
தனி வீடு என்பது சிட்டியில் நினைத்துகூட் பார்க்க முடியாது//அதுதான் புரநகர் பக்கம் மகக்ள் வெள்ளம் பாய்ந்தோடுகின்றது ஜலீலா.
வயிற்றில் புளியைக் கரைப்பது போல் இருக்கும்.//அதற்காக இந்த பதிவில்லை தோழி ஆசியா:) கருத்துக்கு மிக்க நன்றிப்பா.
ஆளுக்கு ஒரு வீடு என்று மக்களின் ஆசையை இவர்கள் நன்கு பயன் படுத்திக் கொள்கிறார்கள். சென்னை என்று சொல்லி கூட்டிபோய் மதுராந்தகம், செங்கல்பட்டு வரை சென்னை என்பார்கள்
நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு ஸாதிகா.
உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன கட்டுரை !
அருமை !
தொடர வாழ்த்துகள்...
வாங்குவதா வேண்டாமா , என்ன சொல்ல வருகிறீர்கள் ?
நான் இப்போது என் பெண்ணுக்கு வீடு வாங்க
சமீபத்தில்தான் பல ஏரியாவும் பல பில்டர்களையும்
சந்தித்து வந்தேன்.தங்கள் பதிவு படிக்க
அதனை மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து
பார்ப்பது போல இருந்தது
பயமுறுத்துவது போல இருந்தாலும் பயனுள்ள பதிவு
நிஜத்தைச் சொல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 6
நானும் சென்னைக்கு வரமாட்டேனே! அவ்வ்வ்வ்வ்... :)
சென்னை என்றில்லை, கோவையிலும் இதே கதைதான். எங்கு பார்த்தாலும் அபார்ட்மென்டுகள் முளைத்துக் கொண்டிருக்கின்ற என்பதே வேதனையூட்டும் உண்மை ஸாதிகாக்கா!
அடுத்த பதிவினை வெளியிடுங்க, காத்திருக்கிறோம்.
akka en comment tai kaanam?<3
sako...
ippave kannai kattuthu...
இன்றைட நாட்டு நடப்பை அழகாக சுவைபட [முள்ளங்கி பத்தைபோலவே] எழுதி அசத்தியுள்ளீர்கள்.
எல்லாமே உண்மை தான். ஆங்காங்கே நடப்பது தான்.
வாங்குவோர் வாங்கிக்கொண்டும், விற்போர் விற்றுக்கொண்டும், யோசிப்போர் யோசித்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
சைட்டைப்பார்க்க கூட்டிச் செல்லப்படுவோருக்கு ஏ.ஸி. கார் போன்ற ராஜ உபசாரம் நடப்பது என்னவோ உண்மை தான். அட்வான்ஸ் தொகை தரும்வரை இந்த உபசாரங்கள் தொடரும்.
மூளைச்சலவை செய்யப்படும்.
நல்ல பகிர்வு. தொடருங்கள்.
விட்டா... இந்தப் பக்கம் ஹார்பர் வருது, அந்தப் பக்கம் ஏர்போர்ட் வருதுன்னு கூடச் சொல்வாங்க. அப்படி ஒரு பேச்சு சாமர்த்தியம். 200, 300 குடியிருப்புகள் உள்ள ப்ளாட்ல, அசோஸியேஷன் வெச்சு, தண்ணி சரியா வரலை, பார்க்கிங் வசதி சரியா இல்லைன்னு மீட்டிங் போட்டு அடிச்சுக்கிட்டு ரணகளமாக்கிக்குவாங்க உறவை. எல்லாத்தையும் விரிவா எழுத ஆரம்பிச்சா பல பாகங்கள் போகும்னு நினைக்கிறேன் இது. நிதர்ஸனத்தைத் தொட்டு எழுதற தங்கையோட அடுத்த பகுதிக்காக ஆவலோட வெயிட்டிங்.
இதனை பற்றி தான் நானும் தினம் தினம் யோசிகின்றேன்...
எப்படி தான் இப்படி எல்லாம் விலை ஏறிவிட்டது ...ஆனால் மக்கள் வாங்கி கொண்டு தான் இருக்கின்றாங்க..அதனால் தான் Builders எல்லாம் இன்னும் கூடுதலாக விலையினை ஏற்றிவிடுகின்றாங்க...
நேற்று நான் போட்ட கமெண்ட் எங்க போச்? காக்கா தூக்கிப்போயிடுச்சா? இப்ப, இப்ப இல்லே எப்பவுமே மிடில் க்ளாஸ் காரங்களுக்கு சொந்தவீடு ஒரு கனவாகவே இருந்திருக்கு. இப்ப கனவு கூட காணமுடியாது போல இருக்கே?
ஸாதிகா..இவ்வளவு விஷயம் இருக்கா... நினைக்கவே த்ரில் படம் பார்க்கிற மாதிரி விலைவாசியால் அடுத்தடுத்து நடந்துபோகும் நடக்கப்போகும் வாழ்க்கை நிலையை எண்ணி அதிச்சியாக இருக்கு...:(
ஆளுக்கு ஒரு வீடு என்று மக்களின் ஆசையை இவர்கள் நன்கு பயன் படுத்திக் கொள்கிறார்கள். சென்னை என்று சொல்லி கூட்டிபோய் மதுராந்தகம், செங்கல்பட்டு வரை சென்னை என்பார்கள்//கோமதிம்மா நன்றாக உள்ளது உங்கள் பின்னூட்டம்:) நன்றியம்மா.
// கருத்துக்கு மிக்க நன்றி சேக்கனா M. நிஜாம் .
வாங்குவதா வேண்டாமா , என்ன சொல்ல வருகிறீர்கள் ?//சகோ எஸ் எஸ் கே அடுத்த பகிர்வு வரை சற்று பொறுத்து இருங்களேன்.கருத்துக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி ரமணி சார்.நீங்களும் தங்கள் அனுபவங்களை தங்களின் எழுத்து நடையில் பகிரலாமே?ஓட்டுக்கும் நன்றி.
வருகைக்கு மிக்க நன்றிமகி.
பாயிஜா உங்கள் கமெண்ட் வரவில்லையே.
சகோ சீனி கருத்துக்கு மிக்க நன்றி.
ஆவ்வ்வ்வ் ஸாதிகா அக்கா.. தலைப்பைப் பார்த்ததும் “கீரை வாங்கலியோ கீரை” என்பது போல் நினைப்பில, சென்னையில வீடுகள் மலிஞ்சிட்டுதாக்கும், ஒரு 3,4 வீட்டை வாங்கி விடலாம் இப்பவே:) என ஓசிச்சுக் கொண்டு இங்கின ஓடிவந்தால்ல்.. ..ஙேஙேஙேஙேஙே:)
ஹைய்யோ!!!!! சொன்னது அத்தனையும் சத்தியம்!
அப்ப ஒரு 7 வருசத்துக்கு முன்னே.....
http://thulasidhalam.blogspot.co.nz/2006/05/blog-post_11.html
லோகமந்தா ஸ்பீடே:-))))
நடை சூப்பர்ம்மா ஸாதிகா.
நண்பர் வீடு அடையார்லே. விக்கணுமாம்.
பார்ட்டி என் ஆர் ஐ ன்னதும் கால் விலைக்குப்பேரம் பேச வர்றாங்கப்பா:(
இங்கும் இதே நிலைதான். உயர்ந்து கொண்டே செல்கிறது.
நடப்பை மிக அருமையாகக் காட்டியிருக்கிறீர்கள் ஸாதிகா. தொடருங்கள்.
ஏதோ ஒரு விசு படத்தில் இதே மாதிரி சைட் சீயிங் காட்சி இன்று வருவது நினைவுக்கு வருகிறது. விலைகள் பற்றிய விவரங்கள் படிக்கையில் கண்ணில் பூச்சி பறக்கற மாதிரி இருக்கு!
அருமையான நடையில் அளித்த பின்னூட்டத்திற்கு நன்றி வி ஜி கே சார்.
விட்டா... இந்தப் பக்கம் ஹார்பர் வருது, அந்தப் பக்கம் ஏர்போர்ட் வருதுன்னு கூடச் சொல்வாங்க.//கஞ்ணேஷண்ணா உங்களுக்கே உரித்தான நகைசுவை நடையில் பின்னூட்டம்..சூப்பர்.நன்றிண்ணா.
.ஆனால் மக்கள் வாங்கி கொண்டு தான் இருக்கின்றாங்க.//ஆம் கீதா ஆச்சல்.இது மட்டுமல்லா..எதுவாகினும் விலையைப்பார்க்காமல் மக்கள் வாங்கிக்கொண்டேதான் இருக்காங்க.கருத்துக்கு நன்றி.
நேற்று நான் போட்ட கமெண்ட் எங்க போச்?//கமெண்ட் வரவில்லையே பூந்தளிர்.கருத்துக்கு நன்றி.
கருத்துக்கு நன்றி இளமதி.அதிர்ச்சி வேண்டாம்.அந்தளவு மக்களின் வருமானமும் பெருகி விடும்.
“கீரை வாங்கலியோ கீரை”//அதீஸ் தெருவில் கூவி விற்காதது ஒன்றுதான் குறை.கருத்துக்கு நன்றிப்பா.
பார்ட்டி என் ஆர் ஐ ன்னதும் கால் விலைக்குப்பேரம் பேச வர்றாங்கப்பா:(//அட இப்படியும் இருக்கா துளசிம்மா!!!கருத்துக்கு நன்றிம்மா.
கருத்துக்கு நன்றி மாதேவி.
கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
//ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் நம்ம சைட் என்று அந்த ”ம்”இல் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் ஒரு அழுத்தம் கொடுப்பார் பாருங்கள்.அப்பொழுதே வீடு நமதாகிவிடும்.// :)
திருடனுங்க பேசாமல் கொள்ளையடிக்கிறாங்க.... இவங்க பேசிப்பேசியே ....
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா! சமீபத்தில் தான் இதே விபரங்கள், ஊரை ஏமாற்றும் பிரமோட்டர்களைப்பற்றிப் படித்தேன். சென்னையில் இருக்கும் என் தோழியும் அவ்வப்போது இந்த நிலவரங்களையெல்லாம் சொல்வார்கள். இப்போது நீங்கள்! வாங்குபவர்கள் எல்லோரும் மிக ஜாக்கிரதையாகத்தான் எல்லாவற்றையும் பரிசோதித்து வாங்க வேண்டும்!
ம்ம்.. சரி, சரி.. எந்த பிலடர்ஸ்கிட்ட மாட்டுனீங்க நீங்க? அனுபவம் பலம்ம்ம்மாஆஆஆ இருக்கே!! :-)))))
கருத்துக்கு மிக்க நன்றி பானு.
மனோ அக்கா கருத்துக்கு மிக்க நன்ரி.இதன் அடுத்த பகுதியையும் படித்துப்பாருங்கள்.
ம்ம்.. சரி, சரி.. எந்த பிலடர்ஸ்கிட்ட மாட்டுனீங்க நீங்க? அனுபவம் பலம்ம்ம்மாஆஆஆ இருக்கே!! :-)))))//அவ்வ்வ்வ்வ்....என்னை வாருவதற்கே கண்களில் விளக்கெண்ணை விட்டு காத்திருக்கும் தங்கச்சி ஹுசைனம்மா வாள்க... வாள்க...(கீபோர்டில் இப்போதைக்கு இஸட் வேலை செய்யவில்லை.)என் அடுத்த பதிவைப்பாருங்க ஹுசைனம்மா.
Post a Comment