February 28, 2012

அன்றும் இன்றும்.


1.அந்த நாள் உணவென்றால் கம்பங்கூழ்,கேப்பைக்கூழ்.அதனையும் தாண்டி இட்லி தோசை.இப்பொழுது கூழை காட்டி நம் இளைய தலை முறையினரிடம் கேட்டால் “வாட் திஸ் நான் சென்ஸ்” என்று முகம் சுளிப்பார்கள்.பிஸ்ஸா,பர்கர் என்று அயல் நாடு உள் நாட்டினுள் நுழைந்து அமர்க்களம் பண்ணிக்கொண்டுள்ளது.



2.அந்த நாளில் சிறுமிகள் விளையாடுவது மரப்பாச்சி பொம்மைகளைக்கொண்டும்,துணியினால் செய்யப்பட்ட சீலைப்பொண்ணு என்று செல்லமாக அழைக்கும் பொம்மைகளும்தான்.இப்பொழுதுஆயிரக்கணக்கில் செலவு செய்து தன் பிள்ளைகளுக்கு ஹைடெக்கான பார்பி போன்ற பொம்மை வகைகளை வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கின்றனர் இக்கால பெற்றோர்கள்.




3.அந்நாளில் அழுக்குத்துணிகளை மூட்டையில் கட்டிக்கொண்டு குளக்கரைக்கு கூட்டமாக போய் அரட்டை அடித்த படி துவைப்பார்கள்.அரட்டை அடிக்கும் சுவாரஸ்யத்தில் மூட்டை மூட்டையாக துவைத்தாலும் அலுப்பு தெரியாமல் இருக்குமாம். சில வீடுகளில் கொல்லைப்புறம் கிணற்றடியில் துவைக்கும் கல் கண்டிப்பாக இருக்கும்.நின்று கொண்டே துவைத்து பிழிந்து உலரப்போட்டது போக இன்று வாஷிங் மெஷினில் துணியைப்போட்டு கூடவே சலவைத்தூளும் போட்டு ஸ்விட்சை ஆன் பண்ணி விட்டு குஷாலாக ஹாண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இல்லத்தரசிகள் ஷாப்பிங் போய் விட்டு ஆற அமர வீட்டுக்கு திரும்பி துவைத்த துணிகளை உலரப்போடும் இக்கால இல்லத்தரசிகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தானே?



4.வெட்டி வேர் அல்லது நன்னாரி வேரை நசுக்கி துணியில் பொட்டலமாக கட்டி மண்பானையில் போட்டு காய்ச்சிய நீரை பானையில் நிரப்பி, புதுமணலை குவித்து வைத்து அதன் மீது மண்பானையில் வைத்த நீரை சொம்பில் மொண்டு குடித்தால் ஆஹாஹா..இப்பொழுதுள்ள இளையதலை முறையினர் இதனை ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.தென்மாவட்டங்களில் `தணல் அடுப்பில் நெல் உமியை தூவி கிளம்பும் புகை மீது பானையை கவிழ்த்து வைத்து அதனுள் இருந்து வரும் நறுமணத்துடன் கூடிய நீரை இப்பொழுதும் நினைத்துக்கொண்டாலும் நாவில் நீர் ஊறும்.இப்பொழுதோ டிஸ்பென்சரில் பபுள்டாப் கேனை கவிழ்த்து சில்லென்று செயற்கைகுளிர் நீரை குடிக்கும் நிலைமை.



5.அந்நாளில் வீட்டு வாசலிலேயே மரநிழலில் உரலை வைத்து நெல் குத்துவார்கள்.இரண்டு பெண்கள் மாறி மாறி ஹ்ம்ம்..ஹ்ம்ம் என்ற சப்தத்தை வெளிப்படுத்திய படி நெல் குத்துவதை கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு வியர்த்துப்போகும்.இப்பொழுதோ அரிசி ஆலைகள் பெருகி நெல்மணிகளை படத்தில் பார்த்தால்தான் உண்டு.






6.உத்தரத்தில் கயிறு கட்டி அதனுள் சமைத்து வைத்த பொருட்களை ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி பிராணிகளிடம் இருந்தும்,பூச்சிவகைகளிடம் இருந்தும்,வீட்டில் இருக்கும் வாண்டுகளிடம் இருந்தும் பாதுகாத்தார்கள்.இன்றோ அழகுற கப்போர்டுகள் அமைத்து பாத்திரங்களை பாங்காக அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றனர்.



7.மரவேலைப்பாடுகள் கொண்ட கலை நயமிக்க ஓட்டைகள் உள்ள பலகை தயாரித்து இதனையும் உத்தரத்தில் கயிற்றினால் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள்.இதில் உள்ள ஓட்டைகளில் மர கரண்டிகள்,மத்து போன்றவற்றை மாட்டி வைக்கலாம்.இப்பொழுதோ குட்டியூண்டு ஸ்டாண்டில் டசன் கணக்கில் ஸ்பூன்களை மாட்டி வைத்து ஒரு ஓரமாக அடக்கமாக அமர்ந்து இருக்கின்றது இந்நாளைய ஸ்பூன்ஸ்டாண்ட்.




8.தானியங்களை தோலெடுக்க கல்லால் ஆன எந்திரம் அதன் கைப்பிடி மரத்தில் இருக்கும்.எந்திரத்தின் உச்சியில் உள்ள பள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களை போட்டு மரக்கைபிடியை பிடித்துக்கொண்டு சுற்றும் பொழுது தானியங்களின் தோல் அகலும்.திரித்த தானியங்களை முறத்தால் புடைத்து பயறு வேறு தோல் வேறு என்று பிரிப்பார்கள்.இன்றோ தோலெடுத்து பள பளக்க பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து வரும் பொழுது திரிகை காணாமல் போவது நியாயம்தானே?




9.மண்பானையில் தயிரை வைத்து மத்தால் கடைந்தால் வெண்ணெய் வரும்.
மண்பாணையை இரண்டு பாதங்களுக்கும் இடையில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் திரட்டுவார்கள்.மரத்தினால் செய்யப்பட்ட வித விதமான மத்துகள் பார்க்க கலை நயத்துடன் இருக்கும்.இப்பொழுதோ பித்தானை அழுத்தினால் சடுதியில் மோரும் வெண்ணையும் பிரிந்து வேலையை சுலபமாக்கி விட்டது.





10.மாலை வேளை வேலைகள் ஓய்ந்து அக்கடா என்று ஓய்வு எடுக்க முடியாமல் ஊற வைத்த உளுந்தையும் அரிசியையும் கை கையாக நீர் தெளித்து அரைத்து எடுத்தால்த்தான் மறுநாள் காலை டிபன் செய்ய முடியும்.இடது கையால் குழவியை ஆட்டிகொண்டே வலதுகையால் லாவகமாக அரிசியைத்தள்ளிக்கொண்டே அரைக்கும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இப்பொழுதோ அடுப்பில் குக்கர் இருக்க,தவாவில் சப்பாத்தி சுட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் ஓடும் கிரைண்டரை கவனித்தால் போதும்.மறுநாள் சுடச்சுட மல்லிகை இட்லி கெட்டி சட்னியுடன் பேஷாக சாப்பிடலாம்.


11.செய்த பதார்த்தங்கள் சூடாகவும்,மொறுமொறுப்பு குறையாமலும் இருக்க பனை ஓலைகளால் ஆன பெட்டிகளை தயாரித்து உணவுப்பொருட்களை வைத்திருப்பார்கள்.வெள்ளை நிற பனை ஓலையில் கலர் கலராக வண்ணம் தோய்த்து அழகுற டிஸைன் போட்டு இருப்பார்கள்.இன்னும் கொஞ்சம் ரிச் ஆக வேண்டுமென்றால் ஜரிகைகளால் பொட்டு போல் செய்து பதித்து இருப்பது கண்களைக்கவரும்.ஹாட்பாக்ஸ் தோன்றியதும் பனைஓலைப்பெட்டிகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.பெட்டி முடைபவர்களும் காணாமல் போய் விட்டனர்.



12.வீடென்றால் ஒரு கொல்லைப்புரம் இருக்கும்.கொல்லைப்புறம் இருந்தால் அங்கு பாய்லர் அடுப்பு இருக்கும்.அதிகாலையிலேயே தண்ணீர் கொதிக்க வைத்து நீரை விளாவி வைத்து வீட்டினர் குளிக்க வெந்நீர் தயாரிப்பதுதான் இல்லத்தரசிகளின் முதல் வேலை.இப்பொழுதோ கொட்டாவி விட்டு கொண்டே ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்து விட்டு மேலும் பத்து நிமிடம் இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் உள்ளதே...!



13.தாத்தா,தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் மனிதர்கள் நடக்கும் பொழுது சரட்சரட் என்று சப்தம் ஒலிக்கும்.நல்ல பர்மா தேக்கினால் செருப்பு வடிவில் செய்யப்பட்ட மிதியடியில் நடுவே வசதிக்கேற்ப செம்பு பித்தளை,வெள்ளி பிடிகளால் அலங்காரம் செய்து இருக்கும்.வெள்ளிப்பிடி போட்ட மிதியடி அணிந்தவர்கள் மேல்மட்டத்தினர் என்று கொள்ளலாம்.அந்த செருப்பை இப்பொழுது அணிந்து கொண்டு நடப்பதென்றால் அது சர்க்கஸ் வித்தையாகிவிடும்.
தோட்டத்தொழிலாளிகள் பனை மட்டையை செருப்பு வடிவில் கத்தரித்து பனை நாரினால் செருப்பின் வாரை செய்து அணிந்து இருப்பார்கள்.கண்ணாடி பெட்டியினுள் கண்களை கவர உட்கார்ந்திருக்கும் அலங்கார செருப்பு வகைகளை வாங்கி அணியும் நமக்கு பலங்கால செருப்புகள் வியப்பை தரும்.



14.விருந்தினர்கள் வந்து விட்டால் அழகாக சுருட்டி மூலையில் நிறக வைத்திருக்கும் பாயை உதறிப்போட்டு ,விரித்து விருந்தினர்களை அமரச்செய்வார்கள்.வண்ணம் தீட்டி டிஸைன் செய்யப்பட்ட கோரைப்பாய்கள்.ஓலைப்பாய்கள் என்று விதம் விதமாக வலம் வந்த காலம் போய் ,உட்கார்ந்ததும் மனுஷனை உள்வாங்கிக்கொள்ளும் ஷோபாக்களை வரவேற்பு அறைகளை அலங்கரிக்கும் காலம் காலத்தின் வண்ணக்கோலம்தானே?



15.நாண்கு ஐந்து மனிதர்கள் கூட தாராளமாக உள்ளே அமரும் விசாலமான பெட்டகங்களில் இருந்து சிறிய சைஸ் பெட்டகங்கள் வரை அந்த காலத்தில் பிரசித்தம்.பெரிய பெட்டகங்களின்சாவியே அரை அடி நீளம் இருக்கும்.
கனமான அந்த பெட்டகத்தை கில்லாடி திருடர்கள் கூட எளிதில் திறக்க இயலாதவாறு உறுதித்தன்மையுடன் இருக்கும்.இதில்தான் ஆடை,அணிகலன்கள்,விலை உயர்ந்த பொருட்களை வைத்து பாதுகாத்தனர் நம் முன்னோர்கள்.இன்றோ பில்ட் இன் கப்போர்டுகள் வலம் வந்து எளிதாக்கி விட்டன.



16.மூன்று கற்களை முக்கோண வடிவில் வைத்து அதன் மீது பானை வைத்து சுள்ளிகளை வைத்து எரித்து சமைத்தார்கள்.பிறகு மண் அடுப்பை புதைத்து விறகால் சமைத்தார்கள்.காலத்தின் பரிமாணம் இன்று வழவழப்பான கிரானைட் மேடையில் ஹாப்ஸ் பொறுத்தி இது அடுக்களைதானா என்று வியக்கும் அளவிற்கு மாற்றங்கள் புகுந்து விட்டன.



17.முன்பெல்லாம் மதிய உணவு உண்ட பின் சிறு தூக்கத்திற்கு பிறகு முதல் வேலையாக வீட்டில் இருக்கும்கெரஸின் விளக்குகளை சுத்தப்படுத்தி திரியை நெம்பி விட்டு,கெரஸின் நிரப்பி தயாராக வைத்திருப்பார்கள்.இருட்ட ஆரம்பித்ததும்,விளக்குகளை எல்லாம் நெருப்பிட்டு எரியச் செய்து வீட்டு திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு அறையாக வைத்து வெளிச்சத்தை உண்டாக்குவார்கள்.இந்த வெளிச்சத்தில்த்தான் படிப்பு,சமையல் எல்லாம்.இப்பொழுதோ ஸ்விட்ச் போர்டுக்கு போய் ஸ்விட்சை ஆன் செய்யக்கூட பொழுதில்லாமல் இருந்த இடத்தில் உட்கார்ந்த படி ரிமோட் மூலம் விளக்குகளை ஆன் செய்து இருப்பிடத்தை ஜகஜோதியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றோம்.



18.பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகள் விதிக்கு வீதி கிடைக்கும்.வியர்க்கும் பொழுது முகத்திற்கு எதிரே விசிறியை வைத்து வீசி காற்று வாங்கிக்கொள்வார்கள்.கணவர் தூங்கும்வரை வீசி விட வேண்டியது எழுதப்படாத சட்டம்.அதே போல் குழந்தைகளை தூங்க வைக்க அக்கால இல்லத்தரசிகள் கை வலி எடுக்கும் வரை விசிறிக்கொண்டே இருப்பார்களாம்.இப்பொழுதோ பொத்தானை தட்டினால் ஏஸியின் ஜில்லிப்பு அறை முழுக்க பரவி பரவசப்படுத்துகின்றதே.


40 comments:

Asiya Omar said...

அன்றைய காலம் வேறு இன்றைய காலம் வேறு என்று உபயோகிக்கும் பொருட்கள் மூலம் அழகாக சித்தரித்து விட்டீர்கள்.படமும் பகிர்வும் அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு ஸாதிகாக்கா.. அந்த கால மக்களிடம் இருந்த சுறுசுறுப்பு ஆற்றல் எல்லாம் இப்போதுள்ளவர்களிடம் இருப்பது சந்தேகம்தான். கம்பங்கூழும் கஞ்சியும் குடித்து ஆரோக்கியமாக இருந்தவர்கள் எங்கே?.. வேகமாக இயங்கும் உலகில் நாமளும் வேகமாக இயங்குகிறோம் என்ற பெயரில் கண்டதையும் சாப்பிட்டு ஆஸ்பத்திரியும் வீடுமாக அலையும் நம்மவர்கள் எங்கே?.. பழைய நினைவுகள் நினைப்பதற்கு மட்டுமே.. :((

அந்த காலத்தையும் இந்த காலத்தையும் புட்டுபுட்டு வச்சீங்க.. இனி வருங்காலம்?..

Angel said...

அன்றும் இன்றும் அருமையா சொல்லியிருக்கீங்க ஸாதிகா.
அன்று ,.இப்ப இருப்பதுபோல ஹெல்த் க்ளப்ஸ் /ஜிம் //எதுவுமேயில்லை தேவையும் இல்லை ..
இன்று எல்லாமே சுலபமா ஆனதால் நோய்களும் ஈசியா உடலில் நுழையுது .ஆனா அந்த ஸ்டூல் (ஹீல்ஸ் )இன்னமும் என்னாலே அந்த மாதிரில்லாம் போட்டுட்டு நடக்க முடியாது

Menaga Sathia said...

அன்றும்,இன்றும் அழகா படத்தோட சொல்லியிருக்கீங்க..பல பொருட்களை உங்க பதிவின் மூலம் தான் ஞாபகம் வருது.பகிர்வுக்கு நன்றிக்கா!! வித்தியாசமா எழுதுவதில் உங்கலுக்கு நிகர் நீங்கதான்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

என்னதான் இருந்தாலும் என் பக்கம் இப்போதைக்குத்தான்:). அந்த பேகரைப் பார்த்த பின்பும் கேழ்வரகுக் கஞ்சிதான் சூப்பர் எனச் சொல்லுவனோ?:)) நோ சான்ஸ்ஸ்:))...

என்னைப்பொறுத்து அந்தக் காலத்தை பார்த்து ரசிக்கத்தான் முடியுது, ஆனா பிடித்தது இந்தக்காலம்தான்...:).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

சூப்பராகத் தொகுத்திருக்கிறீங்க, ஆனா பேகருக்குப் பதில் கே எவ் சி போட்டிருக்கலாமெல்லோ ஸாதிகா அக்கா:). கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//

கொடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்:)) அதுக்கெதுக்கு ஸாதிகா அக்கா முறைக்கிறா:))

Mahi said...

ஹ்ம்ம்...நல்லாப் பெருமூச்சு விடவைக்கிறாங்கப்பா!! :)

நல்ல பதிவு ஸாதிகாக்கா! நீங்க சொல்லிருக்க பெரும்பாலான பொருட்கள் எங்க வீட்டிலும் இருந்திருக்கு. உத்தரத்தில் தொங்கும் உரியில் பெரும்பாலும் பால் கிண்ணமும், தயிர் கிண்ணமும்தான் இருக்கும். அப்படி உயரத்தில் தொங்கினாலும் பூஸார்கள் அவ்வப்பொழுது வந்து கிண்ணங்களைத் தள்ளிவிட்டு பால்/தயிரை கபளீகரம் பண்ணிருவாங்க!

அப்புறம் அந்த திரிக்கை (எங்க ஊர்ல ராய்க்கல்-னு சொல்லுவோம்.) அதிலே நிறைய பருப்பு வகைகள், சோளம் எல்லாம் திரித்து புடைப்பதும் சிறு வயதில் பார்த்திருக்கேன். இது எல்லாமே எங்க சித்தி ஊரில. அப்பல்லாம் எங்க வீடு டவுன்,அது கிராமம்!:) ஆத்துக்கு துணி துவைக்கப் போயிருக்கோம். அரப்பு இலை பறிச்சு வந்து சித்தி அரப்பு இடிப்பதைப் பார்த்திருக்கோம்.

உலக்கைல மாவு இடிச்சு அம்மா அதிரசம் செய்வாங்க,பச்சைமாவு செய்வாங்க.க்ரைண்டர் வாங்குமுன் சிலகாலம் ஆட்டுக்கல்லில் மாவு அரைச்சு இட்லி சுட்டிருக்கோம்.:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு.

நன்றாக படங்களுடன் கூடிய ஒப்பீடு.

என்ன தான் AC FAN INVETTOR எல்லாமே இருந்தாலும் அடிக்கடி நேரும் POWER CUT பிரச்சனைகளால் நாங்கள் இப்போதும் ஆளுக்கொரு ஓலை விசிறிகளையும், டார்ச் லைட்களையும் எங்கள் பக்கத்திலேயே எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகவும் சிரத்தையுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

பால கணேஷ் said...

அன்றைக்கும் இன்றைக்குமான கால மாற்றத்தைஅ அழகான படங்களின் மூலம் ரசனையா சொல்லியிருக்கம்மா. விஞ்ஞான வளர்ச்சியினால பல விஷயங்கள்ல வசதிகளை அனுபவிக்கறது வாஸ்தவம்தான். ஆனா அன்றைய விஷயங்களுக்குப் பின்னால நிறைய உடலுழைப்பும் தேவைப்பட்டதால இலவச இணைப்பா ஆரோக்கியமும் அக்காலப் பெண்களிடம் இருந்துச்சு. விஞ்ஞான வசதிகளால நாம இழந்த விஷயம் இதுதான்னு தோணுது சிஸ்! அருமையான பகிர்வு!

Yaathoramani.blogspot.com said...

அசத்தல் ஒப்பீடு அசத்தல் பதிவு
மிகச் சிறந்த பதிவைத் தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள
முயற்சியும் எளிமையான அழகான விளக்கங்களும்
மனத்தைக் கொள்ளை கொண்டன
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

பழையவற்றைப் பார்க்கவே ஆசையாக உள்ளது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள். அவை தான் திறம் என்பது சொல்லியா தெரிய வேண்டும்! பகிர்விற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு.

ஒவ்வொன்றையும் ரசித்தேன். அதுவும் அந்த திரிகைக்கல்!!! நோ ச்சான்ஸ்.....

அம்மியை விட்டுட்டீங்களே ஸாதிகா?

குறையொன்றுமில்லை. said...

அன்றைய காலம் வேறு இன்றைய காலம் வேறு என்று உபயோகிக்கும் பொருட்கள் மூலம் அழகாக சித்தரித்து விட்டீர்கள்.படமும் பகிர்வும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான பகிர்வுகள்...

புதிய சாதனங்கள் இல்லாமல் இப்போது கற்பனை செய்ய்க் கூட சலிக்கிறதே!

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா உடன் கருத்துக்கு.

ஸாதிகா said...

பழைய நினைவுகள் நினைப்பதற்கு மட்டுமே.. :((//

உண்மைதான் ஸ்டார்ஜன் .கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஆனா அந்த ஸ்டூல் (ஹீல்ஸ் )இன்னமும் என்னாலே அந்த மாதிரில்லாம் போட்டுட்டு நடக்க முடியாது//
எனக்கு மட்டும் என்னவாம்.கூகுளில் இருந்து எடுத்து போட்ட படங்கள் அவை.கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

வித்தியாசமா எழுதுவதில் உங்கலுக்கு நிகர் நீங்கதான்.//
இப்படி எல்லாம் சொல்லி என்னை மேலும் மேலும் எழுததூண்டும் தங்கை மேனகாவிற்கு இனிய நன்றிகள்.

ஸாதிகா said...

என்னைப்பொறுத்து அந்தக் காலத்தை பார்த்து ரசிக்கத்தான் முடியுது, ஆனா பிடித்தது இந்தக்காலம்தான்...:).//நான் சொல்லாமல் விட்டதை பூஸ்ஸம்மா சொல்லி விட்டீர்கள்.

பேகருக்குப் பதில் கே எவ் சி போட்டிருக்கலாமெல்லோ //பூஸுக்கு பிடித்த கே எஃப் சி பற்றி தனிப்பதிவாக போட்டு விட்டால் போச்சு.(கே எஃப் சி க்கு போக பணத்துக்கு வேட்டு வச்சிவிட்ட பூஸ் கர்ர்ர்ர்ர்ர்...

/உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//

கொடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்:)) அதுக்கெதுக்கு ஸாதிகா அக்கா முறைக்கிறா:))//
இது இப்பதான் பூஸ் கண்களில் பட்டதோ?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி பூஸ்.

ஸாதிகா said...

ஹ்ம்ம்...நல்லாப் பெருமூச்சு விடவைக்கிறாங்கப்பா!! :)
//

எதுக்கு மகி பெருமூச்சு???இந்த படங்களும் பகிர்வு மகியின் பழைய நினைவுகளை கிளறி விட்டதுமாலாமல் அதனை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்தது குறித்து மிக்க சந்தோஷம் மகி.

ஸாதிகா said...

என்ன தான் AC FAN INVETTOR எல்லாமே இருந்தாலும் அடிக்கடி நேரும் POWER CUT பிரச்சனைகளால் நாங்கள் இப்போதும் ஆளுக்கொரு ஓலை விசிறிகளையும், டார்ச் லைட்களையும் எங்கள் பக்கத்திலேயே எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறோம்.//

வை கோ சார் ,ஒண்ணு சொல்லுறேன்.பற்களை கடிக்காதீங்க.ஊரெல்லாம் பவர் கட் பவர் கட் என்று புலம்புகின்றனர்.இதற்கு முன் பவர் கட் படுத்தியதுதான் .இப்பொழுது பவர் கட் ஆரம்பித்த நேரம் எங்கள் பகுதியில் இதுவரை பவர் கட்டே இல்லை.வி ஐ பி ஏரியாவாக இருப்பதால் அப்படியோ என்னவோ?அதனால் இப்போதைக்கு எங்கள் வீட்டில் கை விசிறிகள் எல்லாம் பரண் மீது தூங்குகின்றது.தொடர் கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஹுஸைனம்மா said...

அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிகளை வாங்கித் தந்த பயத்துல, நீங்களே அந்தக் காலத்துல என்னென்ன பயன்படுத்துனாங்கன்னு பாத்துவச்சு, இப்பவே பழகிக்கிடுவோம்னு நினைச்சுகிட்ட மாதிரி இருக்கு?? :-)))))

ஸாதிகா said...

ஆனா அன்றைய விஷயங்களுக்குப் பின்னால நிறைய உடலுழைப்பும் தேவைப்பட்டதால இலவச இணைப்பா ஆரோக்கியமும் அக்காலப் பெண்களிடம் இருந்துச்சு. விஞ்ஞான வசதிகளால நாம இழந்த விஷயம் இதுதான்//

உண்மை கணேஷண்ணா.வந்திருக்கும் பின்னூட்டங்களும் இதனையே பிரதிபலிக்கின்றன.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

மிகச் சிறந்த பதிவைத் தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள
முயற்சியும் எளிமையான அழகான விளக்கங்களும்
மனத்தைக் கொள்ளை கொண்டன
மனம் கவர்ந்த பதிவு//உற்சாக பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

அம்மியை விட்டுட்டீங்களே ஸாதிகா?//படங்கள் அதிகமாக இருந்ததால் அடுத்த பாகமாக போடலாம் என்றுள்ளேன் சகோ துளசி கோபால்.அடுத்த பதிவில் நிச்சயம் அம்மி இருக்கும்.

ஸாதிகா said...

மிக்க நன்றி லக்‌ஷ்மி மேம்.

ஸாதிகா said...

புதிய சாதனங்கள் இல்லாமல் இப்போது கற்பனை செய்ய்க் கூட சலிக்கிறதே!// ஹா ஹா ..எல்லோருக்கும் அப்ப்டித்தான்.நன்றி இராஜஇராஜேஸ்வரி.

ஸாதிகா said...

அக்கோவ், என்னாச்சு? ஊருக்கு வந்த அண்ணன், மண்சட்டிகளை வாங்கித் தந்த பயத்துல, நீங்களே அந்தக் காலத்துல என்னென்ன பயன்படுத்துனாங்கன்னு பாத்துவச்சு, இப்பவே பழகிக்கிடுவோம்னு நினைச்சுகிட்ட மாதிரி இருக்கு?? :-)))))///

யம்மாடி ஹுசைனம்மா இந்த பின்னூட்டம் போட எமிரேட்ஸ் பேலஸில் ரூம் போட்டு யோசித்தீர்களா?இல்லை புர்ஜுல் அரபில் ரூம் போட்டு யோசித்தீர்களா?என்னே கற்பனை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Mahi said...

/எதுக்கு மகி பெருமூச்சு???/நான் ரசித்த அந்த நாட்கள் இனி மீண்டும் வராதே என்ற ஆதங்கத்தில் வந்த பெருமூச்சு! :)

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

என்றும் புதுமை பதிவு அது தான் ஸாதிகா அக்கா.

நான் பதிவ படிக்கல
பிற்கு வருகிறேன்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

Mrs.Mano Saminathan said...

அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள‌ வித்தியாசங்களை அழகாக சித்தரித்திருக்கிறீர்கள் ஸாதிகா! மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளுமே மாறியிருக்கும்போது, மற்ற‌வைகள் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை!!

ஸாதிகா said...

/நான் ரசித்த அந்த நாட்கள் இனி மீண்டும் வராதே என்ற ஆதங்கத்தில் வந்த பெருமூச்சு! :)//

விளக்கத்திற்கு நன்றி மகி.

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்ரிதென்காசித் தமிழ்ப் பைங்கிளி.

ஸாதிகா said...

மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளுமே மாறியிருக்கும்போது, மற்ற‌வைகள் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை!!//சரியாகச்சொன்னீர்கள் மனோ அக்கா.கருத்துக்கு மிக்க நன்றி1

Vijiskitchencreations said...

சூப்பரா தொகுத்து ப்ழய கால இந்த யந்திர படங்கள் எல்லாம் எப்படி கிடைத்தது? கூகிலில் தேடினாலும் சிலது கிடைப்பதில்லை.
அந்த கால அழகும் அழகுப் பொருட்களும் இந்த கால பேஷனும் பற்றி எழுதுவிங்க என்று வெயிட்டிங். யூ ஆர் தி
Gr8 ஸாதிகா.

கோமதி அரசு said...

அன்று, இன்றும் அருமையான தொகுப்பு .படங்கள் எல்லாம் அருமை,

மின்சார தட்டுபாடால் மெள்ள மெள்ள பழமைக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன் ஸாதிகா.