January 4, 2010

கங்காரு கண்டத்தில் மேற்படிப்பு.


பிள்ளை வெளிநாடு சென்று படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசையுடன் வங்கியில் லட்சகணக்கில் கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து கண்கள் நிறைய கனவுகளுடனும்,மனது நிறைய எதிர்பார்புகளுடனும் இருப்பதில் இன்றைய பெற்றோர் அநேகர் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கின்றனர்.இதுதான் இன்றைய நம் நாட்டுபெற்றோர்களின் நிலை.
இதில் எனக்கு மிகவும் நெருங்கிய ஸ்நேகிதி ஒருவரும் தன் ஒரே மகனை அனுப்பி வைத்து இருக்கிறார்,நேற்று நடந்த நிகழ்வும்,அதனைத்தொடர்ந்து என் ஸ்நேகிதி போன் செய்து என்னிடம் பதட்டப்பட்டதையும் தொடர்ந்து இந்த பதிவு.

ஆஸ்திரேலியாவில் இத்தனை நாள் இனவெறிதாக்குதல் நடந்து பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருந்த பற்பல வருந்ததக்க சம்பவங்கள் இன்று ,பூதாகரம் எடுத்து மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

ஆம்,இந்திய மாணவர் 21 வயதான நிதின் கார்க் என்பவர் கொல்லப்பட்ட செய்திதான்.எத்தனை கனவுகளுடன் அவரது பெற்றோர் மாணவரை படிக்க அனுப்பி வைத்தனரோ?முகம் தெரியாத அந்த பெற்றோரை நினைக்கையில் என் கண்கள் தளும்புகின்றது.

கடந்த மூன்ற ஆண்டுகளாக மாணவர்களை குறி வைத்து தாக்கும் போங்கு இன்று உச்ச கட்டமாகி ஒரு மரணத்தில் வந்து நின்றுஇருக்கின்றது.

அந்நாட்டு காவல்துறையினரின் மெத்தனபோக்கு மட்டுமல்லாமல்,அரசாங்கத்தின் மெத்தனப்போக்கும்,வேடிக்கைப்பார்க்கும் அலட்சியமும் இன்று நம் அத்தனைபேரையும் பதற வைத்து இருக்கின்றது.

உள் நாட்டு மாணவர்கள் தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமோ,வேலைவாய்ப்பில் பாதிப்பு வருமோ என்று அஞ்சியே இவ்வன்முறையில் ஈடு படுகின்றனர்.

குற்றம் செய்யப்பட்ட அந்நாட்டினரை அந்நாட்டு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டணை கொடுத்து மற்றவர்கள் மீண்டும் தவறுகள் செய்யா வண்ணம் கடும் தண்டனை விதிப்பதும் இல்லை.அப்படியே கண்டு கொண்டாலும் ஜெயில் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கி குற்றவாளிகளை பெருக்குவது கண்டிக்கத்தக்கது.

நம் அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்று விடாமல் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.இப்படி நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்கப்படவேண்டும்.இதுவே முதலும்,இறுதியுமாக நடந்த துர்சம்பவமாக இருக்கட்டும்.

கடைசியாக பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்:
இவ்வளவு நடந்தும் ஆஸ்திரேலியா எம்பஸிக்கு பிள்ளையை மேற்படிப்பு சம்பந்தமாகதொடர்பு கொள்வதை பற்றி சிந்தியுங்கள்.அதிகம் முன்கோபமும்,இளமைத்துள்ளலும்,பயமறியாத்தனமும்,அதீத ஆர்வக்கோளாறும்,அசாத்திய துணிச்சலும்,ஹீரோத்தனமும் வாலிப பருவத்தின் ஆரம்பத்திலே சற்று என்ன மிகவுமே அதிகமாக இருக்கும்.இது இயற்கை.இவ்விளைய பருவத்தில் நாம் பெற்றெடுத்த செல்வங்களை,நம் கனவுகளை,நம் இலட்சியங்களை இந்த கரடுமுரடான பயணத்திற்கு உட்படுத்த வேண்டுமா?துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இருப்பதே மேல்.நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.