May 5, 2014

அறிவீர்களா இவரை - 2


துளசி கோபால்

நான் துளசிம்மாவை அறிமுகப்படுத்துவது பூக்கடைக்கு  விளம்பரம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.(இனி நிறைய பூக்கடைகளுக்கு விளம்பரம் கொடுக்கவுள்ளேன்.)

பதிவுலகில் துளசி கோபாலை அறியாதவர்கள் இருக்க முடியாது.சுமார் 10 ஆண்டுகளாக 2004-இல் இருந்து துளசிதளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகளை எழுதிவருபவர்.இவரது ஸ்பெஷாலிட்டி நாட்டுக்கு நாடு சென்று அதனை அழகாக படமாக்கி பதிவாக எழுதி படிப்பவர்களை அந்த இடத்துக்கே அழைத்து செல்லக்கூடிய திறமை இவரது எழுத்துக்கும்,இவரது கேமராவுக்கும் உண்டு என்றால் மிகை ஆகாது.நியூஸிலாந்தில் வசித்தாலும் சென்னையின் மீதுள்ள அதீத காதல் என்னை வியக்க வைக்கும்.பதிவுகளில் பின்னூட்டங்களில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு பின்னூட்டம் வழியே என் மின்னஞ்சல் கேட்டு இருந்தார்.
கணவருக்கு மணிவிழா சென்னையில் வந்து  நடத்துவதால் அவசியம் கலந்து கொள்ளும் படி ஒரு வித்தியாசமான அழைப்பையும் இணைத்து இருந்தார்.அவர் அன்புடன் அழைத்த விதம் மிகவும் பிடித்துப்போனதால் அந்த நிமிடமே விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

விழா நாளன்று அங்கு சென்று இருந்தேன்.என்னை பார்த்த மாத்திரத்தில் அத்தனை கூட்டத்திலும் என்னை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்ற உபசரிப்பை என்னால் மறக்க முடியாது.எதிர்பாராத அளவு பதிவர்களின் வருகை,இனிமையான கொண்டாட்டம் மனம் நிறைந்த உபசரிப்பு,புதிய அறிமுகங்கள்,மகிழ்ச்சியான இன்முகங்கள்.நாவிற்கினிய விருந்து என்று அந்த நாள் மகிழ்ச்சிகரமாக இருந்தது.அன்றிலிருந்து துளசிம்மாவும் நானும் ஒரு ஈடுப்பாட்டுடனான நட்பு கொள்ள ஆரம்பித்தோம்.அறிவீர்களா இவரை என்ற பதிவுக்கு பல மாதங்களுக்கு முன்னர் கேள்விகள் அனுப்பி இருந்தேன்.அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பதில் எழுத மறந்து இருந்தார்.இன்று ஞாபகம் ஊட்டி நான் மெயில் போட்ட சில மணி நேரங்களுக்குள் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் பதில் அளித்து இருப்பது இதோ....

1.உங்களின் மகத்தான சாதனை எது என்று நினைக்கின்றீர்கள்.

பசங்களை வேணாம் வேணாமுன்னு  வாய் சொன்னாலும், அவன்கள்(!) வந்தவுடன் செல்லம் கொஞ்சி மடிமீது எடுத்து வச்சுக்கும்படி கோபாலைப் பழக்குனதுதான்  என் வாழ்வில் மகத்தான சாதனை.

2.சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?

பூஜை அறைக்கு ஓடிப்போய், வீட்டுலே இருக்கும் எம்பெருமானுக்கு நன்றி சொல்வேன். அடுத்து....?
வேறென்ன உல்லாசமா பதிவு எழுத ஆரம்பிப்பதுதான்:-)

3.சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?

இல்லாமல் என்ன?   இந்தியா என்றால் ஏன் நம்ம மக்கள்ஸ்க்கு  சுத்தமா இருக்கணும். சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சுக்கணும் என்ற அடிப்படை சுகாதாரம் தெரியலைன்னு மனம் நொந்து கொள்வேன்.
அதேபோல அரசியல் வியாதிகளின் நடவடிக்கையும் மனம் வெறுத்துப்போகும் சமாச்சாரம்.

4.மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?

மனித  வாழ்க்கையே  பலசமயம் சுமை போல  இருக்கும்.   ஆனால்....   கண்களால் கண்டு மகிழ எத்தனை கோடி இயற்கை அழகை வைத்தாய் இறைவா   என்று  போற்றி ரசிக்கத் தோணும்.

5.விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

எழுத்தைப் பற்றிய  நியாயமான விமரிசனம் என்றால், குட்டு வாங்கிக்க என் தலை ரெடி. ஆனால் விமரிசனம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல், அருவருப்பான  சொற்களில் வசவு  எல்லாம் மனவேதனையைத் தரும்:(

6.முதன் முதல் வலைப்பூவுக்கு எப்படி வந்தீர்கள்.வலைப்பூ எப்படி எப்போது அறிமுகமானது?

முறுக்கைத் தேடிப்போய்  எழுத்தில் வீழ்ந்தவள் நான்!  ஒரு சமயம்.... ( அப்போதுதான்  இணையத்தில் தமிழ் இருப்பதைக் கண்டுபிடித்து(!!) அதில் திளைத்துக் கொண்டுஇருந்த நேரம்) முறுக்கு என்ற சிறுகதையை சிலாகித்து ஒரு அன்பர் எழுதி இருந்தார். இது மரத்தடி குழுமத்து சமாச்சாரம்.  முறுக்கு கிடைக்கலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தவள்,  இதற்காகவே யாஹூ ஐடி எடுத்து, அங்கே மரத்தாண்டை போய் விசாரிச்சேன்.  பிரபு ராஜதுரை என்பவர்  முறுக்கை அனுப்பி வைத்தார்.  புது உலகம் என் முன் விரிந்தது!  மரத்தடி  குழுமத்தில் அங்கமாகி  வெறும் கருத்துப் பரிமாற்றங்களோடு  என் பொழுதுகள் போயின.

சாம்பாரைப் பற்றிய ஒரு மடலில்  என்னுடைய சாம்பார் விஸ்தரிப்பை ( ஐயோ...சுருக்கமா எழுத எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறேனோ?)  எழுதப்போக,  அப்போ மரத்தடி ஓனரா இருந்த மதி .கந்தசாமி அவர்களால் , மரத்தடி .காம் என்ற தொகுப்பில் அது வெளிவந்ததும் எனக்குத் தலைகால் புரியலை.  இதுலே குழும  நண்பர்கள் எல்லோரும் எனக்கு எழுத வருதுன்னு சொல்லிட்டாங்க!!!!

ஆஹா.... சும்மா ஆடுன குரங்குக்குக் காலில் சலங்கை கட்டிவிட்டது போல் ஆச்சு. ஊக்குவித்த நண்பர்களைக் கதறடிச்சிட்டேனாக்கும், என் தொடர் எழுத்தால்:-) இது நடந்தது  2004 மார்ச் மாதம் தொடங்கி!  எழுத்துரு எல்லாம் திஸ்கியில்.  நம்ம  முத்து நெடுமாறன்  அவர்கள் முரசு அஞ்சல் என்ற எழுத்துருவை அளித்து உதவினார்.

அப்போதான் சிலமாதங்கள் கழிச்சு, நம்ம காசி ஆறுமுகம்,  தமிழ்மணம் தொடங்கினார்.  ஓடிப்போய்ப் பார்த்தேன்:-)  கூட்டுக்குடும்பமான  மரத்தடியில் இருந்து  தனிக்குடித்தனமா  ஆரம்பிச்சதுதான் துளசிதளம். 2004  செப்டம்பர். அப்போ  என்  எழுத்துக்கு வயசு அரை!   காசி ஆறுமுகம் அவர்களின் உயிரை வாங்கி கலப்பையைப் பிடிக்கக் கற்றது முதல் புதுப்  பிறவியானேன்:-)

7.இதுவரை எந்த ஒரு பிளாக்கரும் செல்லாத அளவுக்கு நாடுகள் பல கண்டு விரிவாக கட்டுரைகளும் படங்களுடன் வலைப்பூவில் பகிர்ந்து விட்டீர்கள். சென்ற நாடுகளில் பிடித்த நாடு.செல்வதற்கு ஆசைப்படும் நாடு?

கண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்பதே உண்மை.  அதிலும் இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்  காணாதது  இமயமலை அளவு!   விடுமுறை, பயணம் என்று  நினைத்தவுடன், சென்னைதான் மனசில் முதலில் வந்து வரிசையில் நிற்கிறது.  சென்னைக்கும் எனக்கும் ஒரு லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப்  எப்போதும் உண்டு:-)

செல்வதற்கு ஆசைப்படும் நாடு..........  இந்தியாதான்.  முணங்கிக்கொண்டே  சுற்றிப் பார்ப்பேன்:-) இந்தியாவைப் பொறுத்தவரை,  எத்தனை  மாநிலங்களோ.... அத்தனை நாடுகள் என்ற கணக்குதான். வெறும் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் மக்களுடைய உணவுப்பழக்கம், உடை, மொழி, கோவில்களின் அமைப்புகள்,  நடனம் நாட்டியம் என்ற கலைசம்பந்தப்பட்டவைகள் எல்லாம்  அடியோடு வேறாக அல்லவா இருக்கிறது!!!!

8.வலைப்பூவில் உங்கள் எழுத்துக்களை கணவர் படித்து விமர்சனம் செய்வாரா?

ஆரம்பகாலத்தில் என்னவோ கிறுக்குகிறாள் (கிறுக்கி) என்றுதான் இருந்தார். தலை நீட்டுவதில்லை. எனக்கும் நல்லதாப்போச்சு. நான் உண்டு என் எழுத்து உண்டுன்னு இருந்தேன்.   2006 ஆறாம் ஆண்டு சென்னையில்  உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் (இப்போது அது செம்மொழிப் பூங்கா!) பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.  கணவர் கோபாலும் உடன் வந்தார்.  அப்போது அங்குவந்த பதிவுலக நண்பர்கள்,  துளசிதளம் வாசிப்பீர்களா என்று கேட்டதும்  இவர்  'ஙே'  !!!

அதன்பின்  நியூஸி திரும்பி வந்தபின்  சில பதிவுகளை வாசித்தவர், தனக்கு  பதிவு வெளியிடுமுன் ப்ரீவ்யூ  வேணும்  என்று ஆசைப்பட்டார். ஆஹா.... நம் எழுத்தின் சுவை ஆளை இழுக்குதேன்னு மகிழ்ந்து போய்  வெளியிடுமுன் வாசிக்கக் கொடுத்தேன்.  ஆனால்......  இது ஏனிப்படி? அது ஏன் இப்படின்னு  ஆரம்பிச்சவுடன், முழிச்சுக்கிட்டேன். இது வேலைக்காகாது. இனிமேல்பதிவு வெளியிட்டவுடன், மற்ற வாசகர்களில் நீங்களும் ஒருவராக இருந்து 'கொல்லுங்கள்'  என்றேன்:-)

இப்போதும்  பதிவுகளை வாசிக்கிறார். ஆனால்............  காலையில் வாசிச்சது,மாலையில் நினைவு இருக்காது:(


இன்னும் ஏதாவது உங்களை பற்றி..

சொல்லிக்கொள்ள ஒன்றும் பெருசா இல்லை.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நாலாவது அநேகமா இந்த புத்தக விழா சமயம் வரலாம்.  எழுத்து இல்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற உணர்வே எப்போதும் இருக்கிறது.  காலை எழுந்தவுடன் கணினி என்றுதான் விடியல்.
எழுதவந்தபின் நான் பெற்ற இன்பங்களைப் பட்டியல் இட்டால்...முதலில் வருவது  சகபதிவாளர்களாகிய நண்பர்கள். அடுத்தும் அவர்களே . அதற்கடுத்தும்  அவர்களே. நட்பு வட்டம் நாளொரு பொழுதும் விரிந்து வருவது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது என்பதே உண்மை!

எனக்கு உங்களையெல்லாம் விட்டா...யாரிருக்கா? நேக்கு யாரைத்  தெரியும்?

வாய்ப்பு அளித்ததோழி ஸாதிகாவுக்கு என்  அன்பும் நன்றியும்.

வணக்கம்.

41 comments:

பால கணேஷ் said...

இணைனயம் எனக்குத் தந்த ஒப்பற்ற வரங்களில் ஒன்று துளசி டீச்சரின் நட்பு. அவரைப் போல (பாதி) உலகம் சுற்ற ஆசை இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாததால் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்துப் புயல் எப்போது மையம் கொள்ள ஆரம்பித்தது என்பது மட்டும் எனக்குத தெரியாமல இருந்தது. இப்போ புரிஞ்சிடுத்து. நன்றி துளசி டீச்சர்!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதில்கள்.

ஸாதிகா said...

அவரைப் போல (பாதி) உலகம் சுற்ற ஆசை இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாததால் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். //உங்களுக்கும் உலகை சுற்றி வரும் பிராப்தம் இருந்தால் சுற்றலாம் கனேஷண்ணா.அப்படி சுற்றி படம் எடுத்து பதிவாக்கி உங்கள் வலையில் பதிய தங்கையின் வாழ்த்துக்கள்.உடன் வரவுக்கு நன்றி.

ஸாதிகா said...

உடன் வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

Avargal Unmaigal said...

துளசி இலை உடம்புக்கு நல்லது என்று சொல்லுவார்கள். அது போலத்தான் இந்த துளசி என்ற பதிவரும் (நல்லவர்)போலிருக்கிறது.உங்களின் நல்ல நட்புக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

Subramaniam Yogarasa said...

சுவையான கேள்விகள் &பதில்கள்.வாழ்த்துக்கள்!

Ramani S said...

தங்கள் அறிமுகமும்
துளசி மேடம் அவர்களின் சுய அறிமுகமும்
(பதில் வாயிலாக )மிக மிக அருமை
நான் அவர்கள் எழுத்தின் ரசிகன் என்பதால்
பதிவு கூடுதல் சுவையாக இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 3

Anonymous said...

வணக்கம்

அவர்களின் வலைத்தளம் பற்றி அறிந்திருக்கேன் இருந்தாலும் விரிவான தகவல் கிடைத்துள்ளது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பதில்கள் அம்மாவின் பதிவுகளைப் போலவே... வாழ்த்துக்கள்...

Seeni said...

சுவையான கேள்விகள் &பதில்கள்.வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

ஹைய்யோ!!! நன்றி ஸாதிகா. (ஆமாம்..... நன்றிக்கு வேறொரு சொல் உண்டா?)

@பாலகணேஷ்.

ஆக்சுவலா உலகை முழுசுமா இடம் வந்தேனாக்கும், கேட்டோ! என்ன ஒன்னு..... கோபாலுக்கும் மகளுக்கும் அதிகநாள் லீவு எடுக்க முடியாத காரணத்தால் எல்லா இடங்களையும் இறங்கிப்பார்க்க முடியலை:(

ஜஸ்ட் ஆறே வாரத்தில் வெறும் 12 நாடுகளைத்தான் பார்த்தோம்.

உங்க நல்லகாலம், இது நான் பதிவராகுமுன்:-)))))

பின்னூட்டமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றீஸ்.

கோமதி அரசு said...

ஸாதிகா, முதலில் உங்களுக்கு நன்றி.
துளசிகோபால் அவர்களின் பதில்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

ஸ்கூல் பையன் said...

போகும் இடமெல்லாம் போட்டோ எடுத்துத்தள்ளி விடுவது துளசி டீச்சரின் வழக்கம். அவரது பதிவுகளில் பெரும்பாலும் படங்களே நிறைந்திருக்கும், ஆனால் அவை யாவும் பல செய்திகள் தந்திடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

சுவையான பதில்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

சுவையான பதில்கள்

இராஜராஜேஸ்வரி said...

கலகலப்பான சுவாரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

ஹுஸைனம்மா said...

ஆஹா, இது எப்போவுலேர்ந்து? நல்ல முயற்சி அக்கா. பாராட்டுகள்.

துளசி டீச்சர் நமக்கெல்லாம் “முன்னோர்கள்” மாதிரி!! நான் பார்த்து வியக்கும் பதிவர். இத்தனை வருஷம் கழிச்சும் டெம்ப்போவை இழக்காம இருக்காங்களே, ஆச்சரியம்தான். :-)))))

Angelin said...

மிக அருமையான அழகான சுவாரஸ்யமான பேட்டி ஸாதிகா !
துளசி அம்மா எழுத்துக்கள் அப்படியே அவரோடு நாம அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தரும் .

Geetha Sambasivam said...

அருமையான பேட்டி. உலகம் சுத்தினது இல்லைனாலும் இந்தியாவைச் சுத்தி இருக்கேன். அதிலே இன்னமும் வடகிழக்கும், தென்மேற்கும் போகலைங்கற வருத்தம் இருக்கு. :)))

ஸாதிகா said...

துளசி இலை உடம்புக்கு நல்லது என்று சொல்லுவார்கள். அது போலத்தான் இந்த துளசி என்ற பதிவரும் (நல்லவர்)போலிருக்கிறது//பின்னே:)வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி Subramaniam Yogarasa

ஸாதிகா said...

துளசிம்மாவின் ரசிகர் என்று குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ரூபன்.

ஸாதிகா said...

ரசித்து வாழ்த்தி கருத்திட்ட திண்டுக்கல் தனபால் சாருக்கு நன்றி

ஸாதிகா said...

நன்றி சகோ சீனி.

ஸாதிகா said...

துளசிம்மா வந்துவிட்டீர்களா?மிக விரைவில் பதிலை அனுப்பித்தந்த உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

ஸாதிகா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்ரி சகோ கரந்தை ஜெயக்குமார்

ஸாதிகா said...

பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

இதுன் இரண்டாவது ஹுசைனம்மா.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

அதிலே இன்னமும் வடகிழக்கும், தென்மேற்கும் போகலைங்கற வருத்தம் இருக்கு. :)))//விரைவில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோ கீதா சாம்பசிவம்.மிக்க நன்றி கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

துளசி அம்மா எழுத்துக்கள் அப்படியே அவரோடு நாம அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தரும் .
//உண்மைதான் ஏஞ்சலின்.கருத்துக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

துளசி கோபால் ஜோடியின் படம் சூப்பர் ஸாதிகா. இன்னும் பல்லாண்டு எழுத்துப் பணி செய்ய இறைவனை வேண்டுகிறேன். அழகான கேள்விகள் .தெளிவான பதில்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.துளசியை எத்தனை பாராட்டினாலும் தகும். அதற்கு உதவியாக இருக்கும் எடிட்டர் கோபாலுக்கும் பாரட்டுகள் இங்கே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இப்படி ஒரு அனுபவம் வாய்ந்த அருமையான பதிவரை அறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு முதலில் மிக்க நன்றி ஸாதிகாக்கா. துளசி அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள். தங்கள் இருவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

துளசி கோபால் அவர்கள என் பிளாக் பக்கமும் எப்பவாவது வருவார்கள். நானும் முடிந்த போது சென்று அவர்கள் பிளாக் பார்த்து இருக்கிறேன்., அதில் டோனட் மேக்கரில் வெளிநாடுகளில் எல்லோரும் எண்ணை குறைவாக உளுந்து வடை சுடுகின்றனர், அதில் நான் முதல் முதல் பார்த்தது துளசி கோபால் வலையில் தான்..

Jaleela Kamal said...

துளசி கோபால் அவர்கள என் பிளாக் பக்கமும் எப்பவாவது வருவார்கள். நானும் முடிந்த போது சென்று அவர்கள் பிளாக் பார்த்து இருக்கிறேன்., அதில் டோனட் மேக்கரில் வெளிநாடுகளில் எல்லோரும் எண்ணை குறைவாக உளுந்து வடை சுடுகின்றனர், அதில் நான் முதல் முதல் பார்த்தது துளசி கோபால் வலையில் தான்..

Jaleela Kamal said...

இந்த பதிவின் மூலம் துளசி கோபால் அவர்களை பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்சி

துளசி கோபால் அவர்கள என் பிளாக் பக்கமும் எப்பவாவது வருவார்கள். நானும் முடிந்த போது சென்று அவர்கள் பிளாக் பார்த்து இருக்கிறேன்., அதில் டோனட் மேக்கரில் வெளிநாடுகளில் எல்லோரும் எண்ணை குறைவாக உளுந்து வடை சுடுகின்றனர், அதில் நான் முதல் முதல் பார்த்தது துளசி கோபால் வலையில் தான்..

Jaleela Kamal said...

இந்த பதிவின் மூலம் துளசி கோபால் அவர்களை பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்சி

துளசி கோபால் அவர்கள என் பிளாக் பக்கமும் எப்பவாவது வருவார்கள். நானும் முடிந்த போது சென்று அவர்கள் பிளாக் பார்த்து இருக்கிறேன்., அதில் டோனட் மேக்கரில் வெளிநாடுகளில் எல்லோரும் எண்ணை குறைவாக உளுந்து வடை சுடுகின்றனர், அதில் நான் முதல் முதல் பார்த்தது துளசி கோபால் வலையில் தான்..

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்