March 23, 2013

அன்னதானம் அன்னபூரணி


அன்னபூரணியை அவள் வசிக்கும் ஊரில் அறியாதவர்களே இருக்க முடியாது.அனைவரும் அறிந்த அந்த அன்னபூரணி பெரிய ஜமீன் வம்சமோ,அரசியல் குடும்பத்தை சேர்ந்தவளோ இன்ன பிறவோ என்று கற்பனை பண்ணி விடாதீர்கள்.

கஞ்சிப்போடாத சுங்குடி புடவையும்,கழுத்தில் முருக்கு செயினும்,கூடவே கருகமணியும்,மூக்கில் மூன்றுகல் வைர பேசரியும்,வீட்டுக்காரர் கல்யாணதப்போ போட்ட எண்ணெய் இறங்கினாலும் பள பளப்பு குறையாத  ஏழுகல் வைத்த வைரக்கம்மலுமாக ,வைட் அண்ட் பிளேக் ஆகி விட்ட தலையில் பாரசூட் எண்ணெயை சதைக்க தடவி,ஒரு முடிகூட சிலும்பிக்கொள்ளாமல் வழ வழவென தலைசீவி,கொண்டையில் மணக்கும் ஜாதி மல்லி வாசனையை மீறி மூக்கைத்துளைக்கும் மசாலாவின் கதம்ப மணமும்,பார்க்கும் நேரமெல்லாம் அவளது ட்ரேட் மார்க் கரண்டியுமாக காணப்படும் சாதாரண மனுஷிதான்.

அன்னம் என்றால் உணவு,பூரணம் என்றால் முழுமை பெற்றவள் என்ற அர்த்தம் காணும் அன்னபூரணி அவள் பெயருக்கேற்றார் போல் அன்னம் இட்ட கை என்பது அவளுக்கே பொருந்தும்.விருந்தோம்பலும்,உபசரிப்பும் அவளுக்கு கைவந்த கலை.

நான்கு ஆண் குழந்தைக்கு பிறகு தவமா தவம் இருந்து ஐந்தாவதாக பிறந்தவள்தான் இந்த அன்னபூரணி.அவள் பிறந்த நேரம் அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிற்று எனலாம்.ஆசை ஆசையாக இந்த பெயரை பேத்திக்கு வைத்து “எல்லோரும் உன் கையில் இருந்து எல்லாமும் பெற வேண்டும்.உன் கைகள் கொடுக்கும் கைகளாக இருக்க வேண்டும்”என்று மனதார வாழ்த்தி குட்டி பேத்தியை உச்சி முகர்ந்த நேரம் அன்னபூரணியை பொருத்த வரை நல்ல நேரம்தான்.எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறாள்.

அண்ணன் நால்வருக்கும்,அவளுக்குமாக சேர்த்து இலையில் சாதம் பறிமாறும் பொழுது அவளுக்காக இலையில் போடப்படும் அப்பளம் நான்காக உடைக்க பட்டு அண்ணன்மார்கள் இலையில் அமர்ந்து இருக்கும்.விஷேஷ வீடுகளுக்கு சென்றால் இலையில் பறிமாறப்படும் ஜாங்கிரி,மைசூர் பாக் போன்ற இனிப்பை கைகுட்டையில் சுருட்டி எடுத்து வந்து அண்ணன்களுக்கு தந்து மகிழும் பொழுது ஆரம்பம் ஆனது..இதோ  பேரன் பேத்தி எல்லாம் எடுத்து முடித்தும் அந்த சுபாவம் இன்னும் அப்படியே அவளிடம் உள்ளது.

அம்மா தரும் பிஸ்கட்டில் இரண்டினை சாப்பிடாமல் வைத்து இருந்து தெருவில் இவள் தலையைக்கண்டு விட்டாலே வாலை ஆட்டும் சொறி நாய்க்கு பிஸ்கட்டை போட்டு திருப்தி படுவாள்.

அம்மா ஆசை ஆசையாக பகலுணவுக்கு கட்டித்தரும் எலுமிச்சை சாதம் தயிர் சாதம்,கருவேப்பிலை சாதம் அனைத்தும் பள்ளி உணவு இடைவேளையின் போது இவளது வாயினுள் ஒரு கவளமாவது போய் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

“அம்புஜம்,நெறய வேர்க்கடலை போட்டு அம்மா புளியோதரை செய்து தந்தா.இந்தா சாப்பிடு.கல்பு,உனக்குத்தான் தயிர்சாதம் பிடிக்குமே.நெகு நெகுன்னு கெட்டி தயிர் விட்டு கிளறி இருக்கு தயிர்சாதம் தொட்டுக்க கூடவே ஆவக்காய் ஊறுகாய்.எடுத்துக்கோ.ஐயோ..நம்ம ருக்குவோட அம்மாவுக்கு நாலு நாளா ஜுரம்.அவள் சாப்பாடே எடுத்து வரலே.இன்னிக்கு நான் அவளுக்கு கொடுத்துடப்போறேன்.”இப்படி வாரி வழங்கி விட்டு மூலையில் குவித்த மண் மீது இருக்கும் மண் கூஜாவின் தலை மேல் இருக்கும் அலுமினிய டம்ளரை எடுத்து கூஜாவினுள் இருக்கும் நீரை மொண்டு வயிறு ரொம்ப குடித்து விடுவாள்.அவள் தான் அன்னபூரணி.

இவளது இந்த தயாள குணத்துக்கு வீட்டினர் என்றுமே முட்டுக்கட்டை போட்டதில்லை.ஏனெனில் முன்னர் சொன்னது போல அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிய தருணம்.திருமணம் ஆகி புக்ககம் வந்ததுதான் வசமாக மாட்டிக்கொண்டாள்.

“கடங்காரி,இப்படி ஆக்கித்தட்டியே எம்புள்ளையை கடங்காரன் ஆக்கி விடுவாள்”

“ஆமாமாம்..வண்டி வண்டியாக அப்பன் வீட்டில் இருந்து அரிசியும் பருப்புமாக வருது பாரு.பெரீஈஈய ராஜபரம்பரை ஆட்டம்..ம்கும்..”

“ஏண்டா..மகாதேவா...இப்படி இடிச்சு வச்ச புளியாட்டம் தேமேன்னு இருக்கியே.ஒம்பொண்டாட்டி கொட்டத்தை சித்த அடக்கப்படாதா?”

“ஆத்தாடி..கிள்ளிக்கொடுத்தா அள்ளிட்டு வரும்ன்னு இப்படி ஆக்கி கொட்டுறியா.என்ன அநியாயமா இருக்கு.ஏண்டி இப்படி புத்தி போறது”இப்படி மண்டையைப்போடும் வரை அன்னபூரணி வடிக்கும் சுடுசாதம் கணக்காக சூடாக வந்து விழும் மாமியாரின் வாயில் இருந்து நெருப்புத்துண்டங்கள்.

சும்மா சொல்லக்கூடாது.கைபிடித்த மகாதேவன் இது நாள் வரை அப்படிக்கொடு,இப்படி கொடுக்காதே என்று ஒரு வார்த்தை கூறியதில்லை.

எதிர் வீட்டு சரசு மருமகள் குழந்தை பெற்று இருக்கா.பத்திய சாப்பாடு சமைத்து வைத்து இருக்கேன்.போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.”முகத்தில் வழியும் வியர்வையை முந்தானையால் துடைத்த படி கணவரிடம் சொன்னால் போதும்”சித்த பொறுடி.இதோ ஆஃபீஸுக்கு கிளம்பிவிடுவேன்.காரிலேயே டிராப் பண்ணிடுறேன்.”மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டு “ஜாக்கிரதையா வீடு போய் சேரு”என்று ஆட்டோவுக்கும் சில்லரை கொடுப்பவர்.

“வயிற்றுக்கு மட்டும் வஞ்சனை பண்ணக்கூடாது.ஏன் ஜுரம் வந்தவளாட்டம் ரொம்ப டல்லடிக்குது உன் குரல். .சூடா மிளகு ரசம் வைத்து சுள்ளுன்னு ஒரு தொகையல் பண்ணி அப்பளத்தை நொறுக்கிப்போட்டு ஜம்முன்னு சாப்பிடு.என்னது வீட்டுக்கு வர்ரயா..வா வா..பேஷா பண்ணிப்போடுறேன்.”

எதிர் முனையின் பதிலை எதிர் பார்க்காமல் ரிஸீவரை வைத்துவிட்டு அவசர அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்து விடுவாள் மிளகு ரசம் வைக்க.

வீட்டுக்கு வரும் பால்க்காரி,கீரைக்காரி ஒருத்தரையும் விடுவதில்லை.அவர்களும் வயிறு நிறைய இவள் கையால் சாப்பிட்டு விட்டு ”தீர்க்காயுஸாக இரும்மா”என்று வாழ்த்தி விட்டு செல்லும் பொழுது அன்னபூரணியின் முகத்தில் ஒரு அரைசிரிப்பைத்தான் காண முடியும்.

தபால்காரர் தபாலை கொண்டு வந்து தந்து விட்டால் போதும்”என்னப்பா கதிர்வேலு..கொளுத்தற சித்திரை வெயிலில் எப்படித்தான் தெருத்தெருவா சுத்தி அலையறியோ.சித்த பொறு.ஊரில் இருந்து செவ்விளநீர் வந்து இருக்கு.உடைச்சி தர்ரேன்.குடிச்சுட்டு போ.தெம்பா அலைய முடியும்”

“வீட்டுக்கு எலெக்டிரிக்கல் வேலை செய்ய வரும் பையனிடம்”ராமு..அப்பா என்ன செய்றார்.சுகர் எல்லாம் கட்டுக்குள் இருக்கா?என்னது உன் அம்மாவுக்கு மலேரியாவா?அப்ப மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வரலியா.இரு..சார் சாப்பிட வர்ரசே உனக்கும் ஒரு தட்டு போட்டுறேன்.”அன்னபூரணி அம்மாவீட்டுக்கு வேலை செய்யப்போகிறோம் என்றே ராமு பகலுணவு எடுத்து வராமல் இருந்திருக்கும் தந்திரம் இவளுக்கு புரியாது.புரிந்து கொள்ளவும் விரும்பவும் மாட்டாள்.

கணவனும் மனைவியுமென இரண்டே பேர்தான்.இருந்தாலும் தினம் சட்டி சாதமும் சாம்பாரும் கூட்டும் குழம்பும் அன்னபூரணியின் அடுக்களை என்றும் அமர்க்களப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இப்படியாகப்பட்ட அன்னபூரணியின் கணவர் மகாதேவன் திடுமென நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ஊஞ்சலில் சாய்ந்துவிட்டார்.பதறிப்போன அன்னபூரணி சாதுர்யமாக ஆம்புலன்சை வரவழைத்து பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டாள்.விஷயம் கேள்விப்பட்டு அறிந்தவர் அத்தனை பேரும் பதறி அடித்து மருத்துவமனைக்கு வர அட்மிட் ஆகி இருப்பவர் பெரிய வி ஐ பி யா என்று பலர் கேட்டும் விட்டனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் மைல்ட் அட்டாக்.போதுமான சிகிச்சை கொடுக்க வேண்டும்.இன்னும் இரண்டு நாள் கட்டத்துக்கு தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும்”என்று கூறி விட்டனர்.

கணவருக்கு அருகில் இருந்து பணிவிடை செய்து கலங்கிய மனதை தேறுதல் படுத்தி மருத்துவமனையில் வளைய வந்தாள்.

“மகாதேவன் சார்.பிரஷர் சுகர் இப்படி ஒன்றுமே இல்லையே.எப்படி இப்படி..இப்ப எப்படி இருக்கீங்க?”ஆஃபீஸில் வேலை பார்க்கும் நண்பரின் குரல் கேட்டு விழித்தவர் “வாங்க ராஜாமணி சார்.இறைவன் புண்ணியத்தில் பிழைத்து எழுந்துவிட்டென்.எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன் அருள் முதல் காரணமாக இருந்தாலும் என் மனைவியின் தயாள குணமும் அவள் தாலி பாக்கியத்தை நீடிக்க வைத்து விட்டது."சிரிப்பு பொங்க மகாதேவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கூட அருகில் இருந்த அன்னபூரணியை ஒன்றும் செய்து விடவில்லை.

“வாங்க அண்ணே.செளக்யமா?இந்த அளவுக்கு இவரை காப்பற்றித்தந்த அந்த இறைவனைத்தான் புகழ வேண்டும்.வேகாத வெயிலில் டூ வீலரில் வந்து இருக்கீங்களே கேண்டீனில் ஜூஸுக்கு சொல்லி இருக்கேன் .சாப்பிடுட்டு போங்க”

“அட..அதெல்லாம் இப்ப எதுக்குமா”

“பரவா இல்லை அண்ணே..ராஜாமணி அண்ணே சின்ன உபகாரம் பண்ணவேணும்.ஒரு அரை மணி நேரம் இருக்கீங்களா”

“அதுக்கென்னம்மா..இன்னிக்கு லீவுதானே தாராளமா இருக்கேன்”

“என்னங்க..வீட்டுக்கு போய் உங்களுக்கு கஞ்சியும் துகையலும் செய்து எடுத்துட்டு வர்ரேன்.கூடவே பக்கத்து வார்டு பிரம்மச்சாரி பையன் பைக் ஆக்ஸிடெண்டில் காலை முறித்துட்டு படுக்கையில் இருக்கான்.கேண்டீன் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது என்று நர்ஸிடம் சொல்லிட்டு இருந்தான்,பாவம்.வயசுப்பையன்.நாக்குக்கு ருசியா கொஞ்சம் வத்தக்குழம்பும்,பீன்ஸ் பொரியலும் பண்ணி சித்த நேரத்தில் சாதமும் வடிச்சு எடுத்து வந்துடுவேன்.ராஜாமணி அண்ணே..நீங்களும் இங்கிருந்து மந்தவெளி வரை வெயிலில் டூவீலரை ஓட்டிட்டு போகணும்.கூடவே உங்களுக்கும் சேர்த்து ஒரு டிபன் பாக்சில் எடுத்துட்டு வர நாழி ஆகாது.சாப்பிட்டுட்டு மொள்ளமா போலாம்.தோ வந்துடுறேன்..”அவசரமாக ஜோல்னாபையை தோளில் மாட்டிகொண்டு கிளம்பிய அன்னபூரணியை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜாமணி.

50 comments:

பால கணேஷ் said...

அன்னபூரணி மாதிரி புண்ணியவதிகள் இருப்பதால்தான் இன்னும் மழை பொழிகிறது. பெயருக்கேற்ப வாழ்கிற கதாப்பாத்திரம் மனதில் பச்சென்று ஒட்டிக்கிட்டதும்மா. வழக்கம் போல ‘கேரக்டர்’ வரிசையில் மீண்டும் ஸாதிகா ஸிக்ஸர் அடிச்சுட்டீங்க!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கேண்டீன் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது என்று நர்ஸிடம் சொல்லிட்டு இருந்தான், பாவம்.வயசுப்பையன்.நாக்குக்கு ருசியா கொஞ்சம் வத்தக்குழம்பும், பீன்ஸ் பொரியலும் பண்ணி சித்த நேரத்தில் சாதமும் வடிச்சு எடுத்து வந்துடுவேன். ராஜாமணி அண்ணே.. நீங்களும் இங்கிருந்து மந்தவெளி வரை வெயிலில் டூவீலரை ஓட்டிட்டு போகணும். கூடவே உங்களுக்கும் சேர்த்து ஒரு டிபன் பாக்சில் எடுத்துட்டு வர நாழி ஆகாது.சாப்பிட்டுட்டு மொள்ளமா போலாம்.தோ வந்துடுறேன்.. ”அவசரமாக ஜோல்னாபையை தோளில் மாட்டிகொண்டு கிளம்பிய அன்னபூரணியை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜாமணி.//

ராஜாமணி மட்டுமல்ல நானும் மிகவும் வியப்புடனும், பிரமிப்புடனும் தான் அன்னபூரணியைப் பார்க்கிறேன்.

மிகவும் அருமையான அழகான படைப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள்.

Unknown said...

கண் கலங்கி விட்டது இந்த பதிவை படித்ததும்.

இளமதி said...

அருமை ஸாதிகா... நல்ல கற்பனை. அழகிய வசனநடை. அப்படியே கதாபாத்திரங்களை மனக்கண்னில் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.

மனதை கனக்கவைத்துவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்னம் என்றால் உணவும்,பூரணம் என்றால் முழுமை பெற்றவள் என்ற அர்த்தம் காணும் அன்னபூரணி அவள் பெயருக்கேற்றார் போல் அன்னம் இட்ட கை என்பது அவளுக்கே பொருந்தும். விருந்தோம்பலும்,உபசரிப்பும் அவளுக்கு கைவந்த கலை.//

அழகான பெயர் விளக்கம். அசத்தல். ;))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“வயிற்றுக்கு மட்டும் வஞ்சனை பண்ணக்கூடாது.ஏன் ஜுரம் வந்தவளாட்டம் ரொம்ப டல்லடிக்குது உன் குரல். .சூடா மிளகு ரசம் வைத்து சுள்ளுன்னு ஒரு தொகையல் பண்ணி அப்பளத்தை நொறுக்கிப்போட்டு ஜம்முன்னு சாப்பிடு.என்னது வீட்டுக்கு வர்ரயா..வா வா..பேஷா பண்ணிப்போடுறேன்.”//

அற்புதமான வர்ணனை. பாராட்டுக்கள்.

RajalakshmiParamasivam said...

நிஜமாகவே அன்னபூரணி அற என்று ஒருவர் உண்டா? இல்லை கற்பனை கதாபாத்திரமா?

கண்களில் நீர் வரவழைக்கும் பதிவு.....
உணர்ச்சி வசத்தால் .

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு அன்னபூரணி போல் யாராவது இருப்பார்களா என்று நினைக்கவும் தோன்றுகிறது...

மனம் கவர்ந்த... கணக்க வைத்த பகிர்வு...

பகிர்வுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதேபோல ஒரு சிறுகதை நான் எழுதியிருந்தேன்.

தலைப்பு: அன்ன்மிட்ட கைகள்

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_14.html

நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கோ.


Asiya Omar said...

அன்னபூரணி!இது வரை எழுதிய கதாபாத்திரங்களில் மிகவும் மனதை தொட்ட பகிர்வு.இதுவரை பகிர்ந்த கதாபாத்திரங்கள் 10 -மே முத்துக்கள் தான்..தொடருங்கள்,உங்கள் கதாபாத்திரங்களின் பரமவிசிறி நான் என்று உங்களுக்கே தெரியும்..

சாந்தி மாரியப்பன் said...

அருமை.. அருமை. அசத்தலான மனுஷிதான்.

கோமதி அரசு said...

ஸாதிகா, அன்னபூரணியை அழகாய் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
அவ்வளவு அழகாய் காதாபாத்திரம் மனதில் ஒட்டிக் கொண்டது.

என் அம்மாவின் நினைவு வந்து விட்டது யார் வீட்டுக்கு வந்தாலும் முதலில் கேட்கும் கேள்வி சாப்பிட்டீர்களா? தினம் யாராவது சாப்பிட ரெடியாக உணவு இருக்கும்.
அக்கம் பக்கத்து வீட்டுக்கரர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் எங்கள் வீட்டிலிருந்து உணவு போகும்.
கதை மிக அருமை. அன்னபூரணி பெயர் விளக்கம் அருமை. நிறைய கதை எழுதுங்கள்.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

Unknown said...

Intha annapoorni ai parkum pooluthu ennaku enga amma +amma family than gabaham varuthu.. tharumam thalai kaakum thakka samayathil athu uyri kaakum.. daily nammmala samaithu kodukamudavillai endaralum veyiill alaithu varum post man ku oru cup morre kodupathey mika periya tharmam thaan. Padikum pooluthu kangal kalakuhirathu akka

Anonymous said...

பால கணேஷ் said...
அதையே வழிமொழிகிறேன் ஒரே மூச்சில் வாசித்தேன் எழுத்து நடை மிக நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கேரக்டர்’ வரிசையில் மீண்டும் ஸாதிகா ஸிக்ஸர் அடிச்சுட்டீங்க!//வரிகளை படிக்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் ஏற்படுகிறது.மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

கேரக்டர்’ வரிசையில் மீண்டும் ஸாதிகா ஸிக்ஸர் அடிச்சுட்டீங்க!//வரிகளை படிக்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் ஏற்படுகிறது.மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

கேரக்டர்’ வரிசையில் மீண்டும் ஸாதிகா ஸிக்ஸர் அடிச்சுட்டீங்க!//வரிகளை படிக்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் ஏற்படுகிறது.மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

வரிக்கு வரி ரசித்து படித்து பின்னூட்டி ஊக்கப்படுத்தும் வி ஜி கே சாருக்கு நன்றி.

ஸாதிகா said...

கண் கலங்கி விட்டது இந்த பதிவை படித்ததும்//அந்தளவு உண்ர்ச்சிபூர்வமாகவா எழுதி இருக்கிறேன்.உங்கள் வரிகளில் மகிழ்ச்சி இந்திரா சந்தானம்.

ஸாதிகா said...

நகைச்சுவையாக எழுதியே மனதை கனக்க செய்து விட்டேனா இளமதி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வி ஜி கே சார் உங்களுக்கு பின்னூட்ட சக்கரவர்த்தி என்ற பட்டம் கொடுக்கலாம் சார்.ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் தொடர் பின்னூட்டங்களைக்கண்டு.

ஸாதிகா said...

நிஜமாகவே அன்னபூரணி அற என்று ஒருவர் உண்டா? இல்லை கற்பனை கதாபாத்திரமா? //முழுக்க முழுக்க என் கற்பனைதான் ராஜலக்‌ஷ்மி பரமசிவம்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நிஜமாகவே அன்னபூரணி அற என்று ஒருவர் உண்டா? இல்லை கற்பனை கதாபாத்திரமா? //முழுக்க முழுக்க என் கற்பனைதான் ராஜலக்‌ஷ்மி பரமசிவம்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

திண்டுக்கல் தனபாலன் said...
இன்றைக்கு அன்னபூரணி போல் யாராவது இருப்பார்களா என்று நினைக்கவும் தோன்றுகிறது...

மனம் கவர்ந்த... கணக்க வைத்த பகிர்வு...
//கஷ்டம்தான் திண்டுக்கல் தனபாலன்.முந்தாநாள் எதேச்சையாக ஒரு சீரியல் பார்த்தேன்.அதில் வீட்டுக்கு விருந்துக்கு கணவர் அழைத்து வந்த குடும்பத்தை மிகவும் அவமானப்படுத்தி வீட்டுத்தலைவி பேசினாள்.வந்த அக்குடும்பத்தினர் சாப்பிடாமலேயே சென்று விட்டனர்.இப்படியுமா பெண்கள் இருப்பார்கள் என்று நினைக்கத்தோன்றியது.அநத கேரக்டருக்கு ஆபோசிடாக ஒரு கதா பாத்திரத்தை உருவாக்கினேன்.அவள்தான் அன்னபூரணி.

ஸாதிகா said...

எற்கனவே அந்த சிறுகதையை படித்து நெகிழ்ந்து இருக்கிறேன் வி ஜி கே சார்.

ஸாதிகா said...

,உங்கள் கதாபாத்திரங்களின் பரமவிசிறி நான் என்று உங்களுக்கே தெரியும்..//மகிழ்ச்சி ஆசியா.கருத்துக்கு மிக்க அன்றி.

Kanchana Radhakrishnan said...

அருமை.. அருமை.

ஸாதிகா said...

மிக்க நன்றி அமைதிச்சாரல்.

ஸாதிகா said...

என் கற்பனையில் உதயமான கதாபாத்திரம் உங்கள் மனதில் ஒட்டிகொண்டதில் மகிழ்ச்சி கோமதிம்மா.இக்கதாபாத்திரம் உங்கள் தாயாரை நினைவூட்டியது குறித்து சந்தோஷம்.நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

Unknown said...

அருமை ஸாதிகா. நம்ப பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டிகள்ளாம் இப்படி வரவங்க போறவங்களுக்கு போட்ட சாப்பாடு தான் நாம் இப்ப நல்லா இருக்கறதுக்குக் காரணம்.

நல்ல நடை. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

அன்ன பூரணி மனத்தில் நிலைத்து நிற்கின்றாள்.

சென்னை பித்தன் said...

பிரமிப்புடன் பார்த்தது ராஜாமணி மட்டுமல்ல;நானும்தான்---அன்னபூரணியையும் அவளைப் படைத்த சாதிகாவையும்!

ராமலக்ஷ்மி said...

அழகான நடையில் அன்னப்பூரணியை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள் ஸாதிகா.

பூ விழி said...

மனதை கனக்கவும் குளிரவும் வைத்த படைப்பு அருமையான ஆக்கம் கொடுத்தற்கு நன்றி

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜே மாமி.தொடர்ச்சியா வரணும்:)

ஸாதிகா said...

மாதேவியின் மனதில் அன்னபூரணி நிலைத்து விட்டது குறித்து மகிழ்ச்சி நன்றி மாதேவி.

ஸாதிகா said...

பெரிய வார்த்தைகளால் பாராட்டி உள்ளீர்கள் சென்னை பித்தன் ஐயா.உஙக்ளைப்பொன்ற அனுபவம் மிக்க பதிவர்களின் பாராட்டு மகிழ்வை அளிக்கின்றது.இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆரவமும் கூடுகிறது.மிக்க நன்றி.

ஸாதிகா said...

அழகான நடை என்று அவதானித்த்து கருத்திட்ட ராமலக்‌ஷ்மிக்கு நன்றி

ஸாதிகா said...

அன்னபூரணி கதாபாத்திரம் பூவிழியின் மனதை கனக்கவும் குளிரவும் வைத்து கூறிய கருத்துக்கு மிக்க நன்றி.

Yaathoramani.blogspot.com said...

mika mika arumai manam nekikizhach seithathu thangal padaippu vaazhthukkal

Yaathoramani.blogspot.com said...

tha.ma 9

Radha rani said...

அன்னபூரணி சாதாரண மனுஷிதான்...ஆனாலும் மருத்துவ மனையில் அவளின் வீட்டு காரரை பார்த்து வி.ஐ.பியான்னு கேக்குற அளவுக்கு காரணம் அவளின் கருணை மனமும், தயாள குணமும்தான்..இந்த மாதிரி மனுஷாளை பார்க்கறது இப்ப ரொம்ப அபூர்வமா இருக்கு. மனதை தொட்ட கதையம்சம்..அருமை ஷாதிகா.

ஸ்ரீராம். said...

இப்படிப் பட்ட மனிதர்களால்தான் மழை பெய்கிறது. நானும் ஓரிரண்டு பேரை இப்படி சந்தித்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அருமையான படைப்பு ஸாதிகா! வாழ்த்துக்கள்!!

ஷைலஜா said...

அன்னபூரணிகள் இப்படி நிறைய வரணும் அருமையான படைப்பைத்தந்த ஸாதிகா வாழ்க!

Mahi said...

Unbelievable character! Still people like Annapoorani are out there, that's why the world is running!

ADHI VENKAT said...

இப்படிப்பட்ட மனுஷிகள் இருப்பதால் தான் உலகம் இயங்கிக்கிட்டு இருக்கு...

அருமையான கதையமைப்பு. நல்ல நடை. பாராட்டுகள்.