“ஹ்ம்ம்ம்ம்..உருப்படியாக இன்னும் தயிர் செய்யத்தெரியவில்லை”திருமணம் ஆனதில் இருந்து இதுவரை ரங்கமணி இந்த வார்த்தையை ஒரு லட்சத்து ஒன்பதினாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது முறையாவது சொல்லி சொல்லி அதை கேட்டு கேட்டு என் காதும் நான்கு நாளைக்கு முன் வைத்த தயிரைப்போல் புளித்து விட்டது.
“ஆஃப்டர் ஆல் ஒரு தயிர் கூட வைக்கத்தெரிய வில்லை.ஷேம் ஷேம்..என்ன பிளாக்கர் நீங்கள்..?”ஆ ஊ என்றால் என் வலைப்பூவை வம்பிழுக்காமல் இருப்பது மஹா தவறு என்ற குறிகோளுடன் இருக்கும் என் பெரியவர்.
“மா..சப்பை மேட்டர்.இதற்குப்போய் இப்படி டென்ஷன் ஆகறீங்க.பேசாமல் தயிர் செய்யும் விஷப்பரிட்சையில் இறங்காமல் அமுல் தயிர் வாங்கிடுங்க”கூலாக சொல்லும் இளையவர்.
“என்னடி,இன்னிக்காவது உருப்படியா வந்துச்சா?”எதை மறந்தாலும் இதை மறவாது கேட்கும் நட்பு.
”ஐந்து கிலோ பிரியாணி ஆகட்டும்,ரெண்டு கிலோ மாவில் பரோட்டாவாகட்டும் சடுதியில் செய்து விடுவேனாக்கும்.இந்த தயிர்தான் நமக்கு வசப்பட மாட்டேன் என்கின்றது”இப்படி சொல்லி சிறுமூச்சு மற்றும் பெருமூச்சு விட்டு பீற்றிக்கொள்வதோடு சரி.
தயிர் வைப்பதற்கென்றே சைனா மேக் எனாமல் கோப்பை அழகாக இருந்தும் தயிர்தான் அழகில்லாமல் போய் விடுகின்றது என்று எனக்கு மூக்கு முட்ட குறை.
மிகவும் கரிசனத்துடன்,ஜாக்கிரதையுடன் பாலைக்காய்ச்சி தயிருக்கு உரை ஊற்றி வைத்து விட்டு எடுத்துப்பார்த்தால் திப்பி திப்பியாக திரட்டுபால் போன்ற தயிர் என்னைப்பார்த்து பரிதாபமாக விழிக்கும்.
உடனே செல்லை தூக்க வேண்டியது.நட்பிடம் சொல்லி ஆலோசனை கேட்டால் “பாலில் நீர் விட்டாயா?என்ன பால்?கொழுப்பு நீக்கிய பாலா?இன்னிக்கு வந்த பாலா,பால் காய்சும் பாத்திரத்தை வெந்நீர் விட்டு அலம்பினாயா?”கேள்வி கேட்பதில் மருத்துவ நிபுணர் தோற்றார் போங்கள். மறு பக்கத்தில் கேட்காதவண்ணம் மிக ஜாக்கிரதையாக நான் பல்லை கடிப்பது கேட்காமல் இருக்க பிரயத்தனப்பட்டு அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன்.
”அதானே பார்த்தேன்..கஞ்சப்பிசுனாரி.பால் கவரை கழுக தண்ணீர் விட்டாயா.அதான் தயிர் இப்படி திரண்டு வருது”பெரியதாக ஆராய்ந்து விடையை கண்டு பிடித்து விட்ட கர்வம் மறுமுனை நட்பின் குரலில் தெரிந்தது.
“இனி துளி தண்ணீர் சேர்க்காமல் பாலைக்காய்ச்சு”உத்தரவு போட்டுவிட்டாள்.
நட்பு சொன்னதை அப்படியே பின் பற்றி தயிர் தோய்த்தால் இந்த முறை தயிருக்கு மேலே ஒரு இன்ச் அளவுக்கு தண்ணீர் நின்றது.மறுபடி அதே இலவச ஆலோசனைக்கு போனேன்.”ஏகப்பட்ட கேள்விகளுக்கு பிறகு பால் நல்ல சூடாக இருக்கும் பொழுதே உரை ஊற்றி விட்டாய்.இனி பக்குவமாக பதமாக உரை ஊற்று”என்ற அட்வைஸை ஏற்று மறுதடவை நட்பு சொன்ன பிரகாரம் கை பொறுக்கும் சூட்டில் பால் இருக்கும் பொழுது உரை விட்டேன்.
ம்ம்ஹும்...இப்பொழுதும் திருப்தி இல்லை”மா..நெஸ்லே தயிருக்கு அடிக்காதும்மா”மகனின் திருப்தி இன்மை.
“பாலில் சூட்டின் அளவு பார்க்க கை விட்டாயா”என்ற கேள்விக்கு என் பதில் ஆமாவாக இருக்க “அதான்.தயிர் இப்படி உனக்கு டிமிக்கி கொடுக்கிறது”என்ற பதில் கிடைத்தது.
தயிர் செய்ய வேண்டி செல்போனுக்கு இவ்வளவு தண்டம் அழத்தேவை இல்லை என்று தோன்றியது.யூ டியூபில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்து அதன் பிரகாரம் செய்தும் பலனில்லை.
இந்த தயிரை மறந்து நிம்மதியாக ஒரு மத்தியானப்பொழுதில் குட்டியாக தூக்கம் போட்டதை செல் போன் அழைத்து தூக்கத்துக்கு பங்கம் வைத்தது.
“இப்பதான் ஞாபகம் வந்தது.ஆமா தயிருக்கும் பாலில் உரை ஊற்றி விட்டு என்ன செய்வாய்?”
தூக்ககலக்கத்தில் எரிச்சலுடன் பதில் சொன்னேன்.”மூடி வைத்து விடுவேன்”
“கலக்க மாட்டாயா?”
“கலக்கவா”
“ஆமாம்.உரை ஊற்றிய பின் ஒரு ஸ்பூனால் நன்றாக கலக்க வேண்டும்.இதை ஃபாலோ பண்ணாததால் தான் உனக்கு தயிர் சரியாக வரவில்லைபோலும்”
அன்றே அந்த தயிர்த்தோழி..ஓஓ..ஸாரி உயிர்த்தோழி சொன்ன படி ஸ்பூனால் நன்கு கலக்கினேன்.அதென்னவோ தெரியவில்லை.எனக்கும் தயிருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
திப்பி திப்பியான தயிர்,தண்ணீர் நிற்கும் தயிர்,புளிப்பில்லாத தயிர்,புளித்துப்போன தயிர் இப்படி விதம் விதமாக தயிர் செய்து வந்தேனே தவிர உருப்படியாக தயிர் செய்ய துப்பில்லாமல் போனது.
ஓரளவுக்கு பெரியவரும்,சின்னவரும் கிண்டல்களை குறைத்துக்கொண்டு அந்த தயிரை உபயோகிக்க பழகிக்கொண்டார்கள்.ஞாபகம் வரும் பொழுதெல்லாம் ரங்கமணியும் தயிரை பற்றிய வினா எழுப்பி என் ரோஷத்தை கிளறி வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம்.ஒரு வழியாக ஏதோ சுமாராக தயிர் தோய்க்க கற்றுக்கொண்டு இப்பொழுதெல்லாம் நக்கல் நையாண்டி இல்லாமல் தயிரை சாதத்தில் விட்டும்,லஸ்ஸியாகவும்,உப்பு சேர்த்தும்,இல்லை அப்படியேவும் சாப்பிட பழகி விட்டனர்.
இப்படியாக தயிர் கதை பிரச்சினை இன்றி ஓடிகொண்டிருக்க எனக்கும் பெருத்த நிம்மதி.அன்று தயிர் பாத்திரத்தை திறந்த சின்னவர்”என்னம்மா,தயிர் ஜவ்வு மிட்டாய் போல் இழுக்குது”பெரிய குண்டை தூக்கி போட நான் அலறி அடித்துக்கொண்டு போய் ஸ்பூனால் தயிரை தூக்கி பிடித்தால் ஆம் ஜவ்வு மிட்டாயேதான்.
அலசி ஆராய்ந்து அலட்டிக்கொண்டிருக்காமல் உருப்படியாக கொஞ்சம் உரை ஊற்ற மட்டும் தயிரை வைத்துக்கொண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாயை அரைத்து கலந்து மசாலா மோர் செய்து தயிரை வீணாக்காமல் காபந்து பண்ணி திருப்தி பட்டுக்கொண்டேன்.
அடுத்த நாள் இரவு தயிருக்கு உரை ஊற்றி மூடி வைத்து விட்டு முதல் வேளையாக காலையில் எழுந்ததுமே தயிர் பாத்திரத்தை திறந்து பார்த்தால் வெள்ளைவெளேரென்ற தயிர் என்னைப்பார்த்து சிரித்தது.அப்பாடா என்று திருப்தி பட்டுக்கொண்டேன்.மத்தியானம் சின்னவரும்,பெரியவரும் சாப்பிட வரும் பொழுது இந்த மஹா கனம் பொருந்திய இந்த தயிர் என்னை பார்த்து இளிக்கப்போவதை அறியாமல்.
பொரியல் குழம்பு ரசம் என்று வரிசைபடுத்தாமல் சாதத்தை தட்டில் போட்டதுமே தயிரை விடும் பழக்கம் என் வாரிசுகளுக்கு.தயிரை ஸ்பூனால் எடுத்தால்..அவ்வ்வ்வ்வ்வ்...நேற்றைப்போலவே தயிர் ஜவ்வு மிட்டாய்தான்.கலரைப்பார்த்து நம்பிய இந்த தயிர் இப்படி காலை வாரி விட்டதே..எரிச்சலுடன் மகன்களின் கிண்டல் தொனிகள் காதில் விழுந்தாலும் பொருட்படுத்தாது பிரட் முட்டையை பகலுணவாக சாப்பிட வைத்துவிட்டேன்.
சுண்டக்காய்ச்சிய பால்,அதனை பதமாக ஆற விட்டு ஈரம் இல்லாத கரண்டியை விட்டு நன்கு கலக்கி “தயிரப்பா!இந்த முறையாவது மானத்தை வாங்காதேப்பா”என்று முணுமுணுத்தவாறு தயிர்பாத்திரத்தை மூடி வைத்து விட்டு,காலையில் அதீத ஆரவத்துடன் முன் ஜாக்கிரதையுடன் ஸ்பூனை கழுகி எடுத்துக்கொண்டு பய உணர்வுடன் தயிரினுள் விட்டுப்பார்த்தால் ஈவு இரக்கம் இல்லாமல் மீண்டும் அதே ஜவ்வு மிட்டாய் தயிர் என்னை திகைக்க வைத்தது.
“என்னம்மா தொடர்ந்து மூன்று நாட்களாக ஜவ்வு மிட்டாய் தயிராகவே வருகிறது”மகனின் முணுமுணுப்பு.
“இப்படி சதி பண்ணுதே இந்த தயிர்.நான் எங்கே போய் முட்டிக்கொள்ள”என் குரலில் உலகமகா வேதனை பிளஸ் வெறுப்பு.
“வாவ்..நான் இந்த ஜவ்வு மிட்டாய் தயிருக்கான காரணத்தை கண்டு பிடித்துவிட்டேன்”மகனின் உற்சாகக் குரல்
“மா...முதல் நாள் உள்ள தயிரையே உரைக்கு ஊற்றினீர்களா?”
“ஆமாம்.”
“அதானே பார்த்தேன்.அவரைப்போட்டால் துவரையா முளைக்கும்.”
“அட சின்ன குட்டிக்கு சூப்பராக பழமொழியெல்லாம் எல்லாம் வருது..”
“ஜவ்வு மிட்டாய் தயிரை உரைக்கு விட்டால் கெட்டித்தயிரா கிடைக்கும்? ஜவ்வு மிட்டாய் தயிர்தானே கிடைக்கும்.எப்ப தயிர் நல்லா வரலியோ அப்பவே புதுசா வேறு தயிர் வாங்கி உரை ஊற்ற வேண்டும்.இது கூட தெரியலே..ஹாஹ்ஹாஆஆஆஆஆ..”சின்னவர் சிரிப்பில் பெரியவர் மட்டுமல்ல என்னவரும் சேர்ந்து கொண்டார்.
அட..இப்படியும் இருக்கா?இது நமக்கு தோணாமல் போச்சே.ம்ம்ம்ம்...எல்லாம் சரிதான்.சின்னவர் சொன்ன பழமொழிதான் என்னை இன்னும் யோசிக்க வைத்துக்கொண்டுள்ளது.
Tweet |
51 comments:
ஆஹா.. ஆஹா நானும் கொஞ்சம் அட்வைஸ் கொடுக்கலாம் என்றால் ஏற்கனவே பல பேர் சொல்லியாச்சு.. ம்ம்ம்..... இனியாவது ஓழுங்கான தயிரில் உரை ஊற்றுங்க...
தயிரைப்பற்றி நன்றாகக் கடைகடைன்னு கடைந்து எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
[அந்தக்காலத்தில் தயிர் கடைய உரி என்றும் மத்து என்றும் ஏதேதோ பயன் படுத்துவார்கள்.]
பதிவு கோடை வெயில் வருவதை நினைவூட்டுகின்றன...
தொடர வாழ்த்துகள்...
அடக் கொடுமையே! தயிரில் இத்தனை விதமா? அந்த ஜவ்வு தயிர் ரெசிப்பி எனக்கு வேணுமே!
எங்க வீட்டில் அவங்க, நீ ப்ளாக்கிற்கு சமைக்கிறியா? எனக்கு சமைக்கிறியான்னு கிண்டல் அடிப்பாங்க,ஆ ஊன்னா ப்ளாக்கை இழுத்திடறாங்க..பா.
நல்ல சுவாரசியமான பகிர்வு,இந்த தயிர்க்காரம்மா கதாபாத்திரம் சூப்பர்..லொள்ளு.
நீங்க அப்பாவி சகோவா இருக்கீங்க....நாம பண்ன தயிர் எப்படி வந்தாலும் நாம புதுமாதிரியான தயிர் தாயாரிச்சு இருக்கிறதா சொல்லனும் ஒவ்வொரு தடவையும் அப்படியும் அவந கிண்டல் பண்ணினா நீங்க எல்லாம் புதுமையை விரும்பாத பழங்க கால கிழடுகள் என்று அவர்களை கிண்டல் பண்ணி உங்களுக்கு கடை தயிர்தான் இனிமேல் என்று சொல்லி விடணும்
அதானே பார்த்தேன்.அவரைப்போட்டால் துவரையா முளைக்கும்.”//
சின்னவர் சொன்ன பழமொழி நன்றாக இருக்கே!
ஜவ்வு மிட்டாய் தயிரா?..
என்ன ஒரு சோதனை...!
ஆஹா.. ஆஹா நானும் கொஞ்சம் அட்வைஸ் கொடுக்கலாம்//அவசியம் தரமான தயிர் தயாரிப்பது எப்படி என்று ஒரு பதிவை தேத்தி விடுங்கள் பாயிஜா.
[அந்தக்காலத்தில் தயிர் கடைய உரி என்றும் மத்து என்றும் ஏதேதோ பயன் படுத்துவார்கள்.]//வி ஜி கே சார் தயிரை மத்தால் கடைந்தால் மோர் ஆகிவிடுமே.அப்புறம் எப்படி தயிர் மத்து என்கின்றார்கள்.இது எனக்கு புரியாத புதிர்.வருகைக்கு நன்றி சார்.
பதிவு கோடை வெயில் வருவதை நினைவூட்டுகின்றன...
தொடர வாழ்த்துகள்...//அட ஆமால்ல.கோடை வருது,இனி மசாலா மோர்,லஸ்ஸி,நீர்மோர் என்று எப்படிப்பட்ட தயிரிலும் அசத்திவிடலாம்.வருகைக்கு நன்றி சகோ சேக்கான நிஜாம்.
அடக் கொடுமையே! தயிரில் இத்தனை விதமா? அந்த ஜவ்வு தயிர் ரெசிப்பி எனக்கு வேணுமே!//அட..என்ன தோழி ரெஸிப்பி கேட்கறீங்க.எப்படி கொடுக்க முடியும்.அதுவா அமைஞ்சுடுதே.வரும்காலத்தில் அதே ஜவ்வு தயிர் வந்தால் உரை தயிரை அல் ஐனுக்கு பார்சல் பண்ணிவிடுகிறேன்.அந்த தயிரில் நீங்கள் தயிர் தயார் செய்தால் ஜவ்வுமிட்டாய் தயிர் ரெடி ஆகிடும்.அவரைப்போட்டால் துவரையா முளைக்கப்போகிறது.
நல்ல யோசனை தந்து இருக்கிங்க அவர்கள் உண்மைகள்.உஙகள் தங்கமணி இப்படி எல்லாம் சொல்லி தயிர் தந்து அதை நம்பி விடுறீங்க.ஆனால் இங்கே பசங்க கலாட்டா பண்ணி விடுகின்றார்கள்.நெற்றி பொட்டுக்கு நேரே ஆட்க்காட்டி விரலை சக்கரம் போல் சுற்றிக்காட்டியே என்னை கலக்கி விடுவாரகள்.ஐ மீன் ரீல் விடாதீங்கம்மா என்று:(
கோமதிம்மா ,பழமொழிதான் நல்லா இருக்கு தயிர்தான் நன்றாக இல்லையே:(
ஜவ்வு மிட்டாய் தயிரா?..//சாந்தி ஜவ்வு மிட்டாய் தயிருக்கு உரை வேண்டுமா?மும்பைக்கு கொரியரில் அனுப்பி விடவா?:)
என்ன ஒரு சோதனை...!//தனபால் சார்.நீங்கள் பகடிக்கு சொன்னீர்களோ இல்லையோ.ஆனால் நிஜமாலுமே சோதனைதான்.
ஜவ்வு மிட்டாய் தயிர்....சூப்பர்!
எட்டு வயதாகும் என் மகள் இதுவரை தயிர் சாப்பிட்டதில்லை....:)) அந்த பாத்திரத்தை கூட தொடமாட்டாள்...:)
குளிர்காலத்தில் தில்லியில் தயிர் உறைய படாத பாடு பட்டிருக்கிறேன். என் தோழிகளுக்கு நன்றாக வருகிறது என்பார்கள். என் கை புளிக்காது என்பதால் ஆகாதோ தெரியாது. உறை ஊற்றும் போது கையால் நான் தொடக் கூட மாட்டேன்...:)
இங்கு திருச்சியில் எப்ப ஊற்றினாலும் உறைந்து விடும்...அதனால் பிரச்சனையில்லை.
ஆதி நீங்க கொடுத்து வச்சவங்க.உங்களுக்குத்தான் தயிர் நன்றாக வருதே.அதென்ன .பொண்ணு தயிர் சாப்பிட மாட்டாள் என்கின்றீர்கள்.என் பசங்களுக்கு தயிர் இல்லாமல் பகல் உணவு இல்லை.
உண்மை நீங்க சொல்லுறது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. எங்களுக்கு வெளிநாட்டில் நாங்களே உறை ஊற்றி தயிர் வைப்பதே இல்லை. சரியே வராது. ஆனாலும் ரொம்பவே ஆசைதான் நாமளே செய்து சாப்பிடனும்னு. ஆனா எங்கை... சரியே வராதே. குளிர் நாட்டில அதுக்கெல்லாம் ஆசைப்படாம வாங்கிக்கிறதுதான்.
ஆனாலும் உங்க அனுபவம் அடப் பாவமேன்னு இருந்தாலும் உங்க டயலாக் வாசிச்சு சிரிச்சேன். ரசிச்சேன்...:)
ஆஹா இந்த தயிருக்கு பின்னால இவ்வளவு கதையா...நானும் இப்பதான் தயிர் சரியா செய்ய கத்துக்கிட்டேன்...அதை பற்றி பதிவு விரைவில் போடுகிறேன்...உங்க சின்னவர் சொன்ன பழமொழி சூப்பர்ர்ர்ர்...எனக்கும் தயிர் இல்லாமல் சாப்பாடு இல்லை...
சில நேரங்களில் உரை ஊற்றினால் ஜவ்வு மிட்டாய் தயிர் போல்தான் என் வீட்டிலும் வரும். பழமொழி நல்லா.இருக்கு... கூடவே விதை ஒன்னு போட்டா செடி ஒண்ணா முளைக்கும் பழமொழியும் ஞாபகத்திற்கு வருகிறது.
தயிர் புராணம் அருமை! எப்படித் தயிர் நன்றாகச் செய்வதுன்னு எங்கம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேம்மா.
தயிர் வைக்கிறதுல இவ்வளவு விசயமிருக்கா.. ம்ம்ம் :)
உங்க டயலாக் வாசிச்சு சிரிச்சேன். ரசிச்சேன்...:)//மிக்க மகிழ்ச்சி இளமதி.நன்றி.
அதை பற்றி பதிவு விரைவில் போடுகிறேன்//சீக்கிரம் போடுங்க மேனகா.:)
விதை ஒன்னு போட்டா செடி ஒண்ணா முளைக்கும் பழமொழியும் ஞாபகத்திற்கு வருகிறது.//இதுவும் சூப்பர் ராதா ராணி.கருத்துக்கு நன்றி.
எப்படித் தயிர் நன்றாகச் செய்வதுன்னு எங்கம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேம்மா.//கண்டிப்பா சொல்லுங்க கணேஷண்ணா.கருத்துக்கு நன்றி.
தயிர் வைக்கிறதுல இவ்வளவு விசயமிருக்கா.. ம்ம்ம் :)//ம்ம்..எவ்வள்வோ விஷயம் இருக்கு ஸ்டார்ஜன்.கருத்துக்கு நன்றி.
ஹ்..ம்.. எங்க அம்மாவும் வீட்டிலேயே தான் இன்றுவரை தயிர் வைப்பாங்க... நல்ல்லா இருக்கும்ம்ம்ம்.... அம்மாவையும் அவங்க தயிரையும் தேடுதே... அவ்வ்...
அக்கா, தயிர் ரெசிபி போடலேன்னாலும் பரவாயில்லை (இல்ல.. போட வேண்டான்னு சொல்லல...) ஒரேயொரு பிரியாணி ரெசிபி போட்டுடுங்க...:)
தயிர் இவ்வளவு தூரம் சோதனை வைக்கின்றதா :)
"அவரைபோட்டால் துவரையா முளைக்கும்" சரியாகத்தான் கேட்டிருக்கார்.
//அவரை போட்டால் துவரையா முளைக்கும்//
//சின்னவர் சொன்ன பழமொழிதான் என்னை இன்னும் யோசிக்க வைத்துக்கொண்டுள்ளது.//
அப்ப என்ன சொல்ல வர்றீங்க? சின்னவர் உங்களை மாதிரியே சூட்டிகையா இருக்கார்னா? (கரெக்டா பாயிண்டப் பிடிச்சேனா? ஹா... ஹா...)
ஆனாலும் அக்கா, என்ன இருந்தாலும், (என்னை மாதிரி) ஒரு பிரியாணி சரியா வரலை, இந்த பாதாம்கீர் சரியா வரலைன்னு சொன்னா ஒரு அந்தஸ்தா, பந்தாவா இருக்கும். எப்பேர்ப்பட்ட உங்களை, ஆஃப்டரால் ஒரு தயிர் படுத்தி எடுக்குதே!! :-)))))
அவரை போட்டால் துவறையா முளைக்கும்.யோசிக்க வைக்கும் பழமொழி.
நன்றாகவே தயிரை ஒரு பதிவே ஆக்கி விட்டீர்கள்..
முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வந்து படித்தேன்.
பதிவு ஸூப்பர்.
ராஜி
தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வைத்தது ஸாதிகா!
எங்க ஊரில் குளிர் காலத்தில் தயிர் தோயவே தோயாது.
இப்போதெல்லாம் உரை குற்றியபின் காப்பி ஆற்றுவது போல இரண்டு பாத்திரங்களில் ஆற்றிவிட்டு வைக்கிறேன். தோய்ந்து விடுகிறது.
நகைச்சுவையுடன் எழுதியதற்கு பாராட்டுக்கள்!
பானு நான் அங்கு வந்த பொழுது வேண்டமட்டும் தயிர் சாப்பிட்டுவிட்டேன்.அதன் சுவை இன்னும் நாக்கில் நிற்கிறது.
அக்கா, தயிர் ரெசிபி போடலேன்னாலும் பரவாயில்லை (இல்ல.. போட வேண்டான்னு சொல்லல...) ஒரேயொரு பிரியாணி ரெசிபி போட்டுடுங்க...:)
இதோ,உங்களுக்காக நான் போட்ட பிரியாணி
இரால் ரெஸிப்பி போட்ட நீங்க ஒரு பிரியாணி ரெஸிப்பி போடக்கூடாதா?
வாங்க மாதேவி.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
அப்ப என்ன சொல்ல வர்றீங்க? சின்னவர் உங்களை மாதிரியே சூட்டிகையா இருக்கார்னா? (கரெக்டா பாயிண்டப் பிடிச்சேனா? ஹா... ஹா...)//ம்ம்ம்..அங்கே இருந்து கொண்டு ரெடி மேட் தயிரை சப்புக்கொட்ட சாப்பட்டிக்கொண்டு இதுவும் பேசுவீர்கள்.இன்னுமும் பேசுவீர்கள்.
. எப்பேர்ப்பட்ட உங்களை, ஆஃப்டரால் ஒரு தயிர் படுத்தி எடுக்குதே!! :-)))))//அட..இப்ப காலரை தூக்கி விட்டுக்கொண்டேனாக்கும்!!நன்றி ஹுசைன்மம்மி
முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி.தொடர்ந்து வாருஙகள்.
தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வைத்தது ஸாதிகா!//என் பதிவு உங்களை சிரிக்க வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.இப்ப வயிற்று வலி குணமாகி விட்டதா ரஞ்சனிம்மா:)
கருத்துக்கு நன்றிம்மா.
சுவாரஸ்யமாய் சொல்லியுள்ளீர்கள்:). இளஞ்சூடான பாலில் உறைஊற்றிக் கலக்கி பாத்திரத்தை ஹாட் கேசில் வைத்துப் பாருங்கள். வருடக் கணக்காக நான் பின்பற்றும் முறை. இந்த ஊர் குளிருக்கு சிலர் இரவு மைக்ரோவேவ் உள்ளே (ஆன் செய்யாமல்) பாத்திரத்தை வைத்துக் காலையில் எடுப்பதுண்டு.
ஆவ்வ்வ் தயிரில ஒரு சரித்திரமே படைத்து விட்டீங்கள்.. தயிரில உவ்ளோ விஷயமிருக்கா.. காதைக் கொண்டு வாங்கோ ஒரு ரகசியம் சொல்லோணும் நான்ன்... :))..
நான் அம்மாவுக்குத் தெரியாமல் தயிர் செய்யோணும் என வெளிக்கிட்டு.. பச்சைப் பாலுக்கு, உறை போட்டு ஃபிரிஜ்ஜில ஒளிச்சு தயிராக விட்டனானாக்கும்.. 2,3 நாளில் ஒரு வித மணம் வரத்தொடங்க அம்மா கேட்டா.. என்ன அது? என்று.. அகப்பட்டுக் கொண்டேன்ன்.. :)
அப்படியே கொட்டிப்போட்டு கை விட்டதுதான்.. இங்குதான் ஒரு பவுண்டுக்கே ஒரு ரின் கிடைக்குதே சூப்பரா, பிறகென்ன கவலை என விட்டாச்சு:)
Well written, Akka. Here the same story. Never made yogurt by myself in my whole life. Always end up with something.
தயிர் செய்வதா.... அட!
தயிர்த் தோழி - உயிர்த்தோழி..... ஹா...ஹா...! ஆமாம், இது அவ்வளவு கஷ்டமான விஷயமா!
உங்கள் பக்கத்தை மின் அஞ்சலில் பெற வசதி செய்யவில்லையா?
தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?
உங்கள் தயிர் பதிவை ,
சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்
தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?
உங்கள் தயிர் பதிவை ,
சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்
முன்பு நோன்பு காலத்தில் தினம் உரை ஊற்றுவோம்
பால் பவுடரில் செய்தால் நல்ல கட்டியாக வரும் துபாய் வந்த புதிதில் வெளியில் வாங்க பிடிககாமல் பால் பவுடரில் செய்து கொண்டு இருந்தேன்
ஆனால் இப்ப இங்கு துபாயில் தடிக்கி விழுந்தால் கட்டி தயிர் கிடைக்கும் .
பல பிராண்டுகளிம் கிடைக்கிறது.
உரை ஊற்றும் அவசியம் இல்லை
ராமலக்ஷ்மி நீங்கள் நல்ல ஐடியாகவாக கொடுத்திருக்கீங்க நன்றி.
நான் அம்மாவுக்குத் தெரியாமல் தயிர் செய்யோணும் என வெளிக்கிட்டு.. பச்சைப் பாலுக்கு, உறை போட்டு ஃபிரிஜ்ஜில ஒளிச்சு தயிராக விட்டனானாக்கும்.. 2,3 நாளில் ஒரு வித மணம் வரத்தொடங்க அம்மா கேட்டா.. என்ன அது? என்று.. அகப்பட்டுக் கொண்டேன்ன்.. :) //ஹா ஹா அதீஸ் நீங்கள் தயிர் செய்த விதம் சிரிப்பு சிரிப்பா வருது.ஏதோ கொஞ்சம் ஆறுதல் பட்டுகொண்டேன்.
கருத்துக்கு மிக்க நன்றி வான்ஸ்
உங்கள் பக்கத்தை மின் அஞ்சலில் பெற வசதி செய்யவில்லையா?//எப்படி வைக்க வேண்டும் என்று தெரியவில்லையே ஸ்ரீராம்.சிரித்து ரசித்தமைக்கு நன்றி.
கண்டிப்பாக கலந்து கொள்ள முயற்சிக்கின்றேன் பாயிஜா.அழைப்புக்கு நன்றி,
சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்//சமையல் ராணி ஜலீலா சிரித்து சிரித்து படித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஜலி.
Post a Comment