February 17, 2012

மைமூன்


ஹாட் பாக்ஸ்கள்,தண்ணீர்பாட்டில்கள்,விரிப்பு,ஸ்நாக்ஸ் டப்பாக்கள் என்று அத்தனையையும் கூடைகளில் தனித்தனியாக அடுக்கி கார் டிக்கியில் கொண்டு வந்து கார் ஓடும் பொழுது சாய்ந்து விடாதவாறு படு ஜாக்கிரதையுடன் டிக்கியுனுள் வைத்து மூடினாள் மைமூன்.

குழந்தைகள் பிக்னிக் போகும் உல்லாச மூடில் உற்சாகமாக கார் கிளம்பப்போகும் தருணத்திற்காக காத்திருந்தனர்.

ஜன்னல் கதவுகளை அடைத்து,அறைகதைவுகளை மூடி ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஹாஜரா.

“மைமூன் மோட்டார் ஸ்விட்ச் ஆஃபில் இருக்கா என்று செக் பண்ணிக்க.போன முறை அப்படித்தான்.மோட்டார் ஓவர் ஃபுளோ ஆகி பக்கத்துவிட்டுக்காரர் போன் செய்து சொன்னதும் லபோ லபோ என்று ஓடி வந்தோம்”

“அதெல்லாம் அப்பவே செக் பண்ணிட்டேன் அக்கா”

“டைம் ஆகிறது .எல்லோரும் கிளம்பறீங்களா?”
அஷ்ரப் துரிதப்படுத்தினான்.

அனைவரும்
வண்டியில் ஏறி அமர வண்டி கிளம்பியது.

சொகுசு வண்டியின் ஏஸியின் ஜில்லிப்பு,அங்கு நிலவிய உற்சாகம்,குழந்தைகளின் ஆர்ப்பாட்டம் எதிலுமே நாட்டம் போகாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மைமூன்.

“என்ன மைமூன்....டல்லா இருக்கே.வீட்டு ஞாபகம் வந்து விட்டதா?”

ஹாஜராவின் கேள்விக்கு சிரித்து மழுப்பினாள்.

பழகி சொற்ப நாட்களே ஆனாலும் மைமூனை ஹாஜராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது.சுறுசுறுப்பு,அமைதியான குணம்,ஏவும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்யும் பாங்கு,குழந்தைகள் அக்கறையுடன் கவனிக்கும் நேசம்,வேலைகளில் உள்ள நேர்த்தி இப்படி எல்லா விதத்திலும் பிடித்த வேலைக்காரியாக அமைந்து விட்டது குறித்து மிகவும் சந்தோஷம்.

கணவர் அஷ்ரப் கூட”ஹாஜரா,நீ முன் கோபக்காரி.அவசரப்பட்டு ஏதும் கோபத்தை அந்த பொண்ணு மீது காட்டி விடாதே.அதையே சாக்காக வைத்து நின்று விடப்போகிறாள்”என்று எச்சரித்திருந்தான்.

ஆனால் அதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் ஹாஜராவுக்கு எல்லா விதத்திலும் மைமூன் பிடித்தவளாகிப்போனாள்.

என்னதான் இத்தனை அனுசரனையாக இருந்தாலும் வீட்டில் உள்ள பண்டங்களை ஒரு பாத்திரத்தில் வைத்து “உன் பிள்ளைகளுக்கு போய் கொடு” என்று கொடுத்தால் வலுகட்டாயமாக மறுத்து விடுவாள் மைமூன்.அதுதான் ஹாஜராவுக்கு குறையாக இருந்தது.நமது திருப்திக்காகவாவது வாங்கிக்கொள்ள மறுக்கின்றாளே என்று விசனப்பட்டுக்கொள்வாள்.

பிக்னிக்காக சென்ற பண்ணை வீட்டிற்கு பிளான் செய்த படி இன்னும் இரண்டு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அங்கிருந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் கும்மாளமிட்டனர்.மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தனர்.பெரியவர்கள் ஒன்றுகூடி அமர்ந்து கொண்டுவந்த தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே அரட்டை அடித்தனர்.

இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தானுண்டு தன் வேலை உண்டென்று வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

இருட்டியதும் அவரவர் வாகனத்தில் எறி அமர்ந்தனர்.

“டாடி..இன்னிக்கு பிக்னிக் ஜாலி .அடுத்த வாரமும் வரலாம்பா”

அஷ்ரபின் கடைக்குட்டி விண்ணப்பம் போட்டான்.

“பிள்ளைகளுக்கு நல்லதொரு எண்டர்டெயிண்மெண்ட்.அடிக்கடி இப்படி கூட்டிட்டு வரணும்ங்க”ஹாஜராவும் மகனுக்கு பரிந்து பேசினாள்.

“ஆனால் நம்ம மைமூன் தான் பிக்னிக் வந்து எதிலும் கலந்துகொள்ளாமல் டல் ஆக இருந்தாள்”அஷ்ரப் அனுதாபத்துடன் மைமூனை ஏறிட்டான்.

”நான் எவ்வளவோ சொன்னேன்.உன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டி வா.அதுகளும் பிக்னிக் வரட்டும் என்று.பிடிவாதமாக மறுத்து விட்டாள்”

ஹாஜரா குறைபட்டுக்கொண்டபோழுது வழக்கம் போல் மைமூன் சிரிப்பினையே பதிலாக தந்தாள்.

கார் வீடு வந்து சேர்ந்தது.கொண்டுவந்த பாத்திரங்களை சுத்தப்படுத்தி நேர்த்தி செய்து வைத்து விட்டு”அக்கா..நான் கிளம்பறேன் வீட்டிற்கு”
ஹாஜராவின் உத்தரவுக்காக நின்றாள்.

“கொஞ்சம் இரு”சொல்லிய படி ஃபிரிட்ஜில் அலுமினிய ஃபாயிலில் வைத்து பாக் செய்யப்பட்ட உணவு ஐட்டங்களை ஒரு கவரில் போட்டு கொடுத்தாள்.

“என்னக்கா இது?”

“உன் பிள்ளைகளுக்காக காலையிலே டிபன் பாக்ஸில் வைக்கும் முன் தனியாக எடுத்து வைத்து விட்டேன்.எப்ப எது கொடுத்தாலும் மறுத்து விடுவே.பிக்னிக்காக ஸ்பெஷலா செய்த சாப்பாடு.பிள்ளைகளைத்தான் பிக்னிக் அழைத்து வர மறுத்துட்டே.இதையாவது சாப்பிட கொண்டு போய் கொடு”
பரிவாக நீட்டியவளிடம் வழக்கம் போல் மைமூன் மறுத்ததும் ஹாஜராவுக்கு கோபம் வந்தது.

“என்ன மைமூன்.ஏன் இப்படி இருக்கே.உன் மனசில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கே”

எரிச்சல் மேலிட கேட்டவளை கண்களில் நீர் மல்க பார்த்தாள் மைமூன்.

“அக்கா,என் பிள்ளைகளுக்கு புது உலகத்தை காட்ட வேண்டாம்க்கா.தினுசு தினுசா பண்டங்களை இப்ப போய் கொடுத்தால் தினம் தினம் அதனை எதிர் பார்க்கும்.இதனால் அதுக கவனம் சிதைந்து படிப்பில் நாட்டம் இல்லாமல் போகும்.நீங்க அத்தனை விரும்பியும் நான் பிக்னிக் கூட இந்த காரணத்திற்காகத்தான் அழைத்து வரலே.என் பிள்ளைகள் இப்படியே வளரட்டும்க்கா.கவனம் சிதையாமல் ,குடும்ப கஷ்டம் தெரிந்து நல்லா படித்து முன்னேறனும்.அதற்குத்தான் நான் பாடு படுறேன்.நீங்களும்அல்லாஹ்விடம் என் பிள்ளைகளுக்காக துஆ செய்யுங்க.எனக்கு அது போதும்”

ஹாஜரா விக்கித்து நின்றாள்.பின்னால் நின்று சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்த அஷ்ரபும்தான்.




22 comments:

பிலஹரி:) ) அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ 1ஸ்ட் மூன்:))

பிலஹரி:) ) அதிரா said...

அதென்னது மூனை மை மூன் எனச் சொந்தங் கொண்டாடுறீங்க.. இது கொஞ்சம்கூட நல்லாயில்லே சொல்லிட்டேன்...

“நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை” எங்கட கண்ணதாசன் எப்பவோ சொன்னவர்.. கர்ர்ர்ர்ர்ர் எங்கிட்டயேவா... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்:).

பிலஹரி:) ) அதிரா said...

அடடா... மைமூன் பெயரைச் சொன்னீங்களோ? இதை முன்னமே சொல்லியிருக்கப்பூடாது? கர்ர்ர்ர்ர்:)).

நல்ல தத்துவக் கதை.. விரலுக்குத் தக்க வீக்கம் இருப்பின் மட்டுமே எல்லாம் அழகாக ஓடும்.

பால கணேஷ் said...

குழந்தைகள் ஏங்கத் தொடங்கி விட்டால் பாவம்... படிப்பில் கவனம் செல்லாதுதான். தன்னிலை உணர்ந்த மூன் ‘ஜொலிக்கிறது’. அரிய விஷயத்தை அழகாய் எடுத்தியம்பியது கதை. நன்று தங்காய்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கதை. சிறப்பு.

Asiya Omar said...

சிந்திக்க வைத்த சிறுகதை.
//ஹாஜரா விக்கித்து நின்றாள்.பின்னால் நின்று சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்த அஷ்ரபும்தான்.//
நானும் தான் விக்கித்துப் போனேன்.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பதிவு.

Angel said...

.//கவனம் சிதையாமல் ,குடும்ப கஷ்டம் தெரிந்து நல்லா படித்து முன்னேறனும்.//

கதை அருமை ,மூச்சுவிடாமல் படித்து முடிச்சேன் சாதிகா .
மைமூன் மட்டுமில்லை நாம் எல்லோருக்குமே இது பொருந்தும் .பிள்ளைகளுக்கு கஷ்ட நஷ்டம் சொல்லி வளர்த்தல் பிற்காலத்தில் நல்லது

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் பிள்ளைகள் இப்படியே வளரட்டும்க்கா.கவனம் சிதையாமல் குடும்ப கஷ்டம் தெரிந்து நல்லா படித்து முன்னேறனும்.அதற்குத்தான் நான் பாடுபடுறேன்.

நீங்களும்அல்லாஹ்விடம் என் பிள்ளைகளுக்காக துஆ செய்யுங்க.
எனக்கு அது போதும்”//

அவள் சொல்வதும் சரியே!

நல்ல கதை. சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Interesting read.Luv ur short story

ஜெய்லானி said...

நான் ஜாமூன்ன்னு படிச்சிட்டு வந்தா ..க...தை.... ஹி..ஹி... :-)))

ஜெய்லானி said...

//athira said...

அதென்னது மூனை மை மூன் எனச் சொந்தங் கொண்டாடுறீங்க.. இது கொஞ்சம்கூட நல்லாயில்லே சொல்லிட்டேன்...//

நல்ல வேளை நான் மட்டும்தான் தப்பா படிச்சிட்டு வந்தேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன் ஐ...ஜாலி..ஜாலி.... :-)))

ஜெய்லானி said...

உங்க கிட்டே இருந்து சீக்கிரமே ஒரு நாவல் புக் எதிர் பார்க்கலாம் போலிருக்கு ...அழகான கதை :-)

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான கதை

இப்ப உள்ள வேலைக்காரிகள் கிடைபப்தை சுற்றி செல்பவரிடையே இப்படி ஒரு கதை படித்ததும் ஒரு வித்தியமாகவே இருக்கு ஸாதிகா அக்கா

நம்பிக்கைபாண்டியன் said...

கம்பீரமான வேலைக்காரி! நல்ல கதை!

குறையொன்றுமில்லை. said...

கதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள். குழந்தைகளுக்கு சின்ன வயசிலேந்தே நல்லது பொல்லாத்தது தெரிந்து வளர்க்கனும் என்பதை அழகா சொல்லி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

படம் அருமை.

நான் ச்சின்னப்பிள்ளையா இருந்தப்போ ஒரு கதை படிச்சேன்: ஒரு வசதியானவங்க, தன் பிள்ளை ஆப்பிள் சாப்பிடும்போது வீட்டிற்கு அருகில் இருக்கும் வசதியில்லாத பிள்ளைகளின் கண்ணில்படாதவாறு வீட்டிலிருந்து சாப்பிடச் சொல்வார். ஏன்னு கேட்டதற்கு, “ஒரு நாள் ரெண்டு நாள் நாம் ஆப்பிள் கொடுப்போம், பிறகு? அது அவர்கள் மனதில் ஏக்கத்தையும், விரக்தியையும் விதைக்கலாம். அவர்களின் தன்னம்பிக்கையும் சுயகௌரவமும்கூட பாதிக்கப்படும்” என்பார்.

வளர்ந்தபின், ஹதீஸ்களிலும் இதேபோன்ற கருத்தை வாசித்தேன்: “உங்களிடம் இரண்டு பழம் இருந்தால் அண்டைவீட்டுக் குழந்தைக்கும் கொடுங்கள். ஒன்று மட்டுமே இருந்தால், உங்கள் குழந்தைகளை வீட்டினுள் அமர்ந்து உண்ணச் சொல்லுங்கள்” என்று.

இந்தக் கதை “உள்ளதைக் கொண்டு திருப்திப் படு” என்ற பாடத்தையும் சொல்கீறது.

Yaathoramani.blogspot.com said...

அருமையான கதைக் கரு
அதைச் சொல்லிச் சென்ற விதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

enrenrum16 said...

ஹாஜராவிடமிருந்தும் மைமூனிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நல்ல கதைக்கா.

Marc said...

அருமைப்பதிவு வாழ்த்துகள்

Mahi said...

நல்லா இருக்கு ஸாதிகாக்கா! கருத்துள்ள கதை!

புல்லாங்குழல் said...

படிப்பினையூட்டும் கதை. வாழ்த்துக்கள்.