டீச்சர் போட்ட ஸ்டார் மார்க்கை
நோபல் பரிசாய் ஏற்றெண்ணி
மனமகிழ அன்னையிடம்
காட்டி மகிழும் தனயனவன்
கூட இரண்டு மார்க்கெடுத்தால்
ஒரு சதம் எட்டி இருப்பாயே
தாயவள் தாரக மந்திரமிது
கொண்டவன் ஆசையாய் வாங்கி வந்த
காஞ்சிப்பட்டை விரித்திட்டு
விழி அகல பார்வை யிட்டு
மேலும் அகலமாய் சரிகை என்றால்
ஏற்றமாய் இன்னும் இருக்குமென
பதி பத்தினி சொன்ன வார்த்தையிது
மலடி என்று பட்டமிட்டு
மனதை வாட்டி வதைத்ததினால்
இறைவா எனக்கொரு கருவைத்தான்
உண்டாக்கித்தருவாயென தினம்தினமும்
அழுது இறையிடம் இறைஞ்சியதால்
அன்னைக்கு மகளொன்று பிறந்து விட்டாள்
மகனை பெற்றால் நன்றன்றோ
எத்தனை நன்றாய் இருந்திருக்கும்
சுற்றி இருப்போர் கருத்திட்டர்
நமக்கென வீடொன்று வேண்டுமென
நங்கையவள்தான் தலைவனிடம்
நச்சரித்து தினம் தினம் கேட்டு வைக்க
கடனை உடனை வாங்கியவன்
அழகாய் அடுக்குமாடியில் ஒன்றினையே
அமர்த்தி மனையாளை குடிபெயர்த்தான்
புத்தம் புதிய வீட்டிளவள்
பவிசாய் பதவிசாய் இருந்து கொண்டு
பவ்யமாக கேட்டு வைத்தாள்
தரையோடு வீடென்றால்
இன்னும் கெளரவம் கிடைத்திடுமே
அறுபது வயது போதுமென்று
அதற்கு மேல் வாழ்ந்தால் நன்றன்று
என்பது அவனது கருத்தன்றோ
அகவை அறுபது நெருங்கியதும்
இன்னும் இருபது வருடம் வரை
வாழ்ந்தால் இனிக்கும் வாழ்க்கை என்று
ஏக்கம் மனதினில் வந்தன்றோ
| Tweet |
