July 18, 2011

அந்தநாள் ஞாபகம்:))


தங்கை அதிரா அன்புடன் அழைத்த தொடர் பதிவிது.அதீஸ்..புயல் வேகத்தில் பதிவிட்டு விட்டேன்.

என்னுடன் ஆரம்பகாலம் தொட்டே படித்து வந்த இரு தோழிகள் அடுத்தடுத்து
மிக இளம் வயதில் துர்மரணத்தை சந்தித்தது
இன்னும் என் ஆழ் மனதில் மாறாத வடுவாக பதிந்துள்ளது.
மர்ஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)எனக்கு முன்னரே திருமணமாகி திடுமென கேஸ் வெடித்த
விபத்தில் மாண்டு போனவள்.
நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்தவளை
இப்பொழுது நினைத்தாலும் கண்கள் குளமாகும்.அவள்
கணவர் அவளது சொந்த தங்கையையே திருமணம் செய்து கொண்டு அவளுக்கும் நீண்ட காலமாக
குழந்தை இல்லாமல் இப்பொழுது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கின்றாள்.
இஸ்லாமியர்கள்
அதிலும் எங்களூர்க்காரர்கள் ஒரு ஆசிரமத்துக்கு சென்று குழந்தையை தத்தெடுப்பது என்பது
அபூர்வம்.ஆனால் இவள் அந்த முறையில் தத்தெடுத்து வளர்க்கும்
குழந்தையைப்பார்க்கும் பொழுது எனக்கு குழந்தையின் முகம் மர்ஜாவின் ஜாடையில் இருப்பதைப்போன்றே தோன்றும்.

என் தம்பியின் திருமணத்திற்காக இந்த நண்பியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன்.
(வாசலில் காலிங்க் பெல் ஸ்விட்ச் இல்லை)எந்த ஒரு சப்தத்தையும் காணாது நண்பியின் பெயர் சொல்லி அழைத்து தட்டும் பொழுது
அவளது தாயார் சோகமாக கதவை திறந்து விட்டவர் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் இருந்ததை
கண்டு எங்கே அவள்என்று கேட்டதற்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
சென்றவாரம்தான் தூக்கு போட்டு இறந்ததை
அவர் விவரித்ததும் எனக்கு உடம்பே வெல வெலத்து விட்டது.

டிராஜடியாக இரண்டு அனுபவங்களை படித்து கனத்துப்போன மனங்களுக்கு
காமெடியான இரண்டு அனுபவங்கள்.

நாண்காவது வகுப்பில் படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.இவளும் நானும் மிகவும்
நெருங்கிய தோழிகள்.நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்து வீட்டிலேயே வைத்திருந்த
ஐம்பது ரூபாயைப்பற்றி இவளிடம் தம்பட்டம் அடிக்கப்போய் வைத்தாளே ஆப்பு.
(அப்போதெல்லாம் 50 ரூபாய் என்பது பெரிய தொகைங்க)கடனாக கொடு .
அப்புறமாக கொடுத்து விடுகின்றேன் என்று சொன்னதை நம்பி கொடுத்து விட்டு
திரும்ப வாங்குவதற்குள் நான் பட்டபாடு.பணத்தை எப்படி எல்லாம் கொடுக்காமல்
டிமிக்கி கொடுக்கலாம்
என்பதில் அவள் கில்லாடியாக இருந்தால் பணத்தை எப்படி வாங்குவது என்பதில் செம கில்லாடியாக
நான் இருந்து இறுதியில் ஹெட்மாஸ்டர் ரூம் வரை எங்கள் பிரச்சினை சென்று கடைசியில்
வசூல் செய்து விட்டுத்தான் ஓய்ந்தேன்.ஆனால் பிரண்ட்ஷிப் அப்போ கட் ஆனதுதான்.
இப்பொழுது கண்டாலும் அவள் முகத்தை திருப்பிக்கொள்கின்றாள்.

நான் படித்த பள்ளிக்கு என் ஒன்றுவிட்ட தாத்தாதான் கரஸ்பாண்டண்ட்.அதனால் பள்ளிக்கே
செல்லமாக ஒரு குரூப் அலையும்.அதில் நானும் ஒருத்தி.முதலாம் வகுப்பு படிக்கும் பொழுது
பள்ளிக்கூடம் வேண்டாம்
என்று அழிச்சாட்டியம் பண்ணியவள் தொடர்ந்து மூன்று வருடங்களாக இதே அலைப்பரைதான்.
என்னை பள்ளியில் சென்று விட்டு வரும் மாமா முறை உள்ளவரை பள்ளியில் வகுப்பறை வாசலிலேயே
இறுத்திக்கொள்வேன்.நான் அசந்த நேரம் அவர் எஸ்கேப் ஆகி விட்டால் அழுது ஆர்ப்பாட்டம்தான்.இதனால்
இரண்டாவது மூன்றாவது பீரியடில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.அப்பொழுது என் தோஸ்த்துகளின்
முகங்களை பார்க்கவேண்டுமே.பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.
ஆனால் என்னால் இந்த அழுகுணி ஆட்டத்தை ரொம்ப நாள் தொடர முடிய
வில்லை.மாஸ்டரின் பிரம்புக்கு பயந்து பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டேன்.

என்னுடைய இளம் பிராயத்து தோழிகள் பலரும் என்னைத்தொடர்ந்து
சென்னையிலே ஒருவர் பின் ஒருவராக செட்டில் ஆகி விட்டனர்.ஆங்காங்கே தனித்தனியாக
சந்தித்துக்கொண்டாலும் எல்லோரும் ஒன்றாக ஒரு முறை,ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும்
என்ற எனது ஆவல் எப்பொழுது நிறைவேறப்போகின்றதோ?
அதே போல் எங்கள் சில நண்பிகள் தொடர்பு விடுபட்டு அவர்களை சந்திக்கும் ஆவல் மிகுதியாக
உள்ளது.வழிதான் தெரிய வில்லை.அவர்களை எல்லாம் கண்டுபிடித்து எப்பொழுது சந்தித்து அளாவளவும் வாய்ப்பு
கிடைக்கப்போகின்றதோ?







33 comments:

GEETHA ACHAL said...

உங்களுடைய நினைவுகள் அருமை...முதல் இரண்டு படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது..

எனக்கு உங்களை மாதிரியே ஸ்கூலில் படிக்கும் பொழுது நடந்தது....ஆனா காசிற்கு பதிலாக ஹீரோ பென் கொடுத்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம்...

ராமலக்ஷ்மி said...

தோழிகளின் மறைவு வருத்தம் தருகிறது. கொடுத்த கடனைத் திருப்பி வசூலித்த திறமைக்கு பாராட்டுகள்:)!

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா

தோழிகளின் மரணம் மிக்க வருத்தத்தை அளித்தது.

பள்ளி நினைவுகள் அருமை...!!! உங்க கிட்ட தான் டீயூசன் வரணும்”கொடுத்த பணத்த எப்படி சாமர்த்தியமா வாங்கணும்ங்குறத கத்துக்குறதுக்கு

Yaathoramani.blogspot.com said...

நல்ல பதிவு
நல்ல நட்பை நாம் இழந்தும் இருக்கலாம்
நல்ல நண்பர்கள் இறந்தும் இருக்கலாம்
இப்போது ஏன் நண்பர்களாய் இருந்தோம் என
வருந்தக் கூடிய நண்பர்கள் அருகில் தொடர்ந்தும் இருக்கலாம்
கடைசியாய் சொல்லி இருக்கிற நண்பர்களை
நண்பர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை
முதலில் சொல்லியுள்ள இப்போதுஇல்லாத நண்பர்களே
நாம் உயிரோடு இருக்கிறவரை நமக்கு உண்மையான நண்பர்கள்
நல்ல சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

நண்பர்கள் மரணம் மிகவும் கொடுமையானது

மனோ சாமிநாதன் said...

நட்பின் மரண‌ம், நண்பர்களின் மரணத்தை விடவும் கொடியது. நல்ல நண்பர்கள் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ப‌திவு சிற‌ப்பாக‌ இருக்கிற‌து ஸாதிகா!

இமா க்றிஸ் said...

இந்த மாதிரி எல்லோரையும் பழங்கதைகளை அசை போட வைத்தமைக்கு நிரூபனுக்கும் அதிராவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ;)

இனிமையோ அல்லவோ இளமைக்காலத்து நட்பினை இரைமீட்பது சுகமாகத்தான் இருக்கிறது.

ஸாதிகா இடுகையைப் பார்க்க எனக்கும் சிலது ஞாபகத்துக்கு வருகிறது. முடிகிற போது எழுதுகிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆ...ஸாதிகா அக்காஆஆஆஆ இம்முறையும் வடை போச்சே..... கொஞ்சம் நில்லுங்கோ... இப்பத்தான் எழும்பினனான்... ரீ குடிச்சிட்டு வந்து படிக்கிறேன்.....

முற்றும் அறிந்த அதிரா said...

//அதீஸ்..புயல் வேகத்தில் பதிவிட்டு விட்டேன்.//

மியாவ் மியாவ் ஸாதிகா அக்கா... நல்லவேளை, நான் அண்டாட்டிக்காவுக்குப் புறப்படமுன் பதிவிட்டு விட்டீங்கள்... இப்பதிவால் பழைய நினைவுகளை மேலே மிதக்க வைக்க நல்ல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கு.

முடிந்தவரை நினைவுகளைச் சொல்லிட்டீங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

அதெப்படி, உங்கள் நண்பி இறந்ததை உங்களுக்கு அறிவிக்காமல் விட்டார்கள்?

குழந்தையைத் தத்தெடுப்பது நல்ல விஷயமே, அவர்கள் நல்ல முடிவையே நேர காலத்தோடு எடுத்திருக்கிறார்கள்.

காலம்போனபின், குழந்தையைத் தத்தெடுத்திருக்கலாமே என எண்ணிக் கவலைப்பட்ட முதியோரையும் பார்த்திருக்கிறேன். பெற்றால்தான் குழந்தையா... குழந்தையிலிருந்து வளர்த்தாலே அது எம் குழந்தைபோலத்தானே.

முற்றும் அறிந்த அதிரா said...

விரைவில்
சென்னையில்
நண்பிகளோடு
ஸாதிகா அக்கா தலைமையில்
மட்டின் புரியாணி
மட்டின் குருமா
அவித்த கோழி முட்டை
பிளஸ்(+)
சிப்ஸ் அண்ட் இட்லி:)))உடன் கெட்டு கெதர் நடக்க
வழி அமைச்சுக் கொடு
ஆண்டவனே....

ஊசிக்குறிப்பு:
பென்குயின் முட்டை வேணுமெண்டால், ஓடரை இப்பவே தாங்க:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//இமா said...

இந்த மாதிரி எல்லோரையும் பழங்கதைகளை அசை போட வைத்தமைக்கு நிரூபனுக்கும் அதிராவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ;)

ஸாதிகா இடுகையைப் பார்க்க எனக்கும் சிலது ஞாபகத்துக்கு வருகிறது. முடிகிற போது எழுதுகிறேன்.//

சும்மா மச மச எனப் பேசிக்கொண்டிருக்காமல், ஓடிப்போய் கட கடவென எழுதிப்போடச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா... மீ த எஸ்......கேஏஏஏபூஊஊஊஊஊஊஊ:)))

ஜெய்லானி said...

நண்பர்களின் பிரிவே கஷ்டமாக இருக்கும் போது அவர்களின் மரணம் ...?
நட்பின் வலி பிரிவின் போதுதான் தெரியும் .

இரண்டாவது படிக்கும் நமக்கே முடியாமல் இருக்கும் போது . அதை நேரில் கண்டவரின் நிலை மிககொடூரம் .

நினைவலைகள் ...!!

ஜெய்லானி said...

நீங்க ஸ்கூலுக்கெல்லாம் போய் இருக்கீங்களாஆஆஆ..சொல்லவேஏஏ இல்லை ...!! :-)))))))))

Menaga Sathia said...

முதல் பாராவில் தோழிகளைப்பற்றி படித்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு...விரைவில் எல்லா தோழிகளையும் சந்திக்க வாழ்த்துக்கள்,பதிவும் சிறப்பாக இருக்குக்கா....

vanathy said...

நல்ல பதிவு. மரணம் எப்போதும் கொடுமையானது.

நட்புடன் ஜமால் said...

முழுதும் படித்தாலும் ...

அந்த தாயின் அழுகையை விட்டு வெளியே வர இயலவில்லை ...

மாய உலகம் said...

அந்த நாள் ஞாபகத்தை பதிவில் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்...

உங்களது நண்பிகள் ஒருவேளை வலைப்பதிவில் ஒரு நாள் வரலாம்( வழி வளை தளமாககூட அமையலாம்) மீண்டும் உங்கள் தோழிகள் உங்களை சந்திக்க...வாழ்த்துக்கள்....

எல்லாப்புகழும் இறைவனுக்கே...

ஸாதிகா said...

//ஹீரோ பென் கொடுத்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம்//இப்படி நிறைய அனுபவம் எனக்கும் உண்டு கீதா.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்கம்நன்றி ராமலக்ஷ்மி.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் ஆமினா.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அழகானதொரு கவிதை சொல்லியே பின்னூட்டி விட்டீர்கள் ரமணிசார்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

ராஜபாட்டை உங்கள் கருத்துக்கு நன்றி.இன்று உங்கள் வலையை பார்த்து பின்னூட்டமும் போட்டு விட்டேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா.

ஸாதிகா said...

உண்மைதான்.அந்த நாளை அசைப்பொட வைத்ததற்கு பாராட்டத்தான் வேண்டும் அவர்களை.கருத்துக்கு மிக்க நன்றி இமா

ஸாதிகா said...

//ஊசிக்குறிப்பு:
பென்குயின் முட்டை வேணுமெண்டால், ஓடரை இப்பவே தாங்க:)).
// அதீஸ் டைனோஸர் முட்டை கிடைக்குமா?உற்சாகமாக வந்து பின்னூட்டங்கள் போடுவதற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லானி நினைவலைகளையா மிக கொடூரம் என்றீர்கள்..?

//நீங்க ஸ்கூலுக்கெல்லாம் போய் இருக்கீங்களாஆஆஆ..சொல்லவேஏஏ இல்லை ...!! :-)))))))))

// உங்களைப்போல் மழைக்கு மட்டும் ஸ்கூல் பக்கம் ஒதுங்கியவள் இல்லை ஜெய்லானி.மழை கோடை,பனி எல்லாகாலத்துக்கும் பள்ளிக்கு சென்றவளாக்கும்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக நன்றி வானதி.

ஸாதிகா said...

புத்திரசோகம் என்பது கொடுமையானது.இறைவன் தான் அனைவரையும் இந்த கொடுமை வராமல் காக்க வேண்டும்.கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஜமால்

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மாய உலகம்.

M.R said...

நட்புகளை இழக்கும் பொழுதே நமக்கு மனசு வலிக்கும் ,அதிலும் நட்பு கொண்டவர்கள் இறந்து போனால் மனம் நிலை கொள்ளாது தவிக்கும்.

புதியதாய் ஒரு நட்பு கிடைத்தாலும் ,ஒரு நட்பு பிரிந்தாலும் நமக்கு இறந்து போன நட்பு கண் முன்னே வந்து போகும் .

பிற்பகுதியில் நகைச்சுவை பதிவிட்டாலும் ,முற்பகுதி தான் நினைவில் நிற்க்கும் சகோ.

பகிர்வுக்கு நன்றி .

ஹுஸைனம்மா said...

அக்கா,

அய்ய, ஸ்கூலுக்குப் போக அழுவுனீங்களா நீங்க? நானெல்லாம் ஸ்மார்ட் தெரியுமா? எல்.கே.ஜி. முத நா மட்டும்தான் ’லைட்டா’ அழுதேன்!! ;-))))))))